விக்கி – சம்பந்தன் பனிப் போரின், புதிய தொனிப்பொருள்: அபிவிருத்தியா, அரசியல் தீர்வா?..!! (கட்டுரை)

வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைய, ஒரு மாதத்துக்குச் சற்று அதிகமான காலமே இருக்கும் நிலையில், அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், அவரை அப்பதவியில் அமர்த்திய அரசியல் அமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முறுகல் நிலை, மேலும் ஒருபடி, முன்னோக்கிச் சென்றுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில், கலந்து கொள்வது தொடர்பாகவே, தற்போது இருசாராருக்கும் இடையே, பிரச்சினை உருவாகி இருக்கிறது.

நேற்று முன்தினம் (27), செயலணியின் இரண்டாவது கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாது எனக் கூறி, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, கடந்த 22ஆம் திகதி, அவசரக் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், 23ஆம் திகதி கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது, அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஏற்கெனவே, ஏறத்தாழ இரண்டு வருடங்களாக முதலமைச்சர், தான் கூட்டமைப்பின் உறுப்பினர் அல்ல, என்பதைப் போல்த்தான் செயற்பட்டு வருகிறார்.

அவர், ‘தமிழ்த் தேசியப் பேரவை’ என்ற பெயரில், தனியானதோர் அமைப்பையும் உருவாக்கி இருக்கிறார். கூட்டமைப்பின் செயற்பாடுகளைப் பகிரங்கமாகவே விமர்சித்தும் வருகிறார்.

கூட்டமைப்பின் சில தலைவர்களும் முதலமைச்சரைப் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்கள். அவர் கூட்டமைப்பின் வேட்பாளராகவன்றி, மற்றோர் அரசியல் கூட்டணியின் வேட்பாளராக, அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது, களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார முன்னேற்றத்தை விட, அரசியல்த் தீர்வே மிக முக்கியமானது என்பதால், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 எம்.பிக்களும் வடக்கு, கிழக்கு மாகாணச் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறே விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்தில், குறிப்பிட்டு இருந்தார்.

கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதற்காக, அவர் முன்வைக்கும் காரணம் மிக முக்கியமானது. ஆனால், இது ஒன்றும் புதிய கருத்தல்ல; இதற்கு முன்னரும், தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட, பல தமிழ்த் தலைமைகள் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளன.

ஏன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் கூட, 2012ஆம் ஆண்டு, மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14ஆவது மாநாட்டின் போது, இக்கருத்தை முன்வைத்திருந்தார்.

அதுமட்டுமல்லாது, மக்கள் விடுதலை முன்னணி உட்பட, பல இடதுசாரி அரசியல் கட்சிகளும் ஒரு காலத்தில், பொருளாதார காரணங்களை விட, அரசியல் காரணங்களை முதன்மையாகக் கருத வேண்டும் என்று வாதிட்டன.

மேலும், சில இடதுசாரிகள், மக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவதையே விரும்பினர். ஏனெனில், அப்போதுதான், மக்களைத் தம்பக்கம் ஈர்த்துக் கொள்ளலாம் என, அக் கட்சிகள் கருதின. எனவே, இது ஒரு நீண்ட காலத் தத்துவார்த்தப் போராட்டமாகும்.

ஆனால், பொருளாதார அபிவிருத்தி, அரசியல் நோக்கத்தைப் பாழாக்கிவிடும் என, வாதிட்ட புலிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் மற்றும் கட்சிகள், பின்னர் பொருளாதார காரணங்களுக்கு முதலிடத்தைக் கொடுத்தமையும் அரசியல் தீர்வைப் பிற்படுத்தியமையும் கவனிக்கத் தக்கதாகும்.

உதாரணமாக, 1985 ஆம் ஆண்டு, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் ஆயுதக் குழுக்கள், முதல்முறையாக அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன், இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பூட்டான் தலைநகர் திம்புவில் சந்தித்த போது, நேரடியாகவே இருசாராரும், அரசியல் பிரச்சினைகளை ஆராய முற்பட்டனர்.

‘திம்புக் கோட்பாடுகள்’ எனப்படும் நான்கு அம்சத் திட்டம், தமிழ்த் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியத்தையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே, அந்தக் கோட்பாடுகளின் சாராம்சமாகும்.

ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 1989ஆம் ஆண்டு, புலிகள், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த போது, புலிகளின் இந்த நிலைப்பாடு மாறியிருந்தது.

மக்கள் பெரிதும் போரால்ப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய புலிகள், புனர்வாழ்வுப் பணிகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். அதற்காக, இடைக்கால நிர்வாக சபையொன்றை நிறுவ வேண்டும் என்பதே புலிகளின் வாதமாகியது.

ஆனால், இரு சாராரும் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தை, அடுத்த போருக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் காலமாகப் பாவிக்க முற்பட்டமையால், அப்பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை.

அதன்பின்னர், 1994ஆம் ஆண்டு, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்துடன், புலிகள் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல், 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, அதற்காக, இரு சாராருக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருந்தது.

அந்தக்கால கட்டத்தில், அரசாங்கத்தின் தலைமைக்கும், புலிகளின் தலைமைக்கும் இடையே, சுமார் 40 கடிதங்கள் பரிமாறப்பட்டன. அவற்றிலும், அரசியல்த் தீர்வு குறித்து ஆராயப்படவில்லை. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்மக்களின், அன்றாட வாழ்க்கையை, மேம்படுத்துவதற்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு, அரசியல் தீர்வை ஆராய முடியாது என்பதே, புலிகளின் வாதமாகியது. 1994ஆம் ஆண்டு டிசெம்பர் 20ஆம் திகதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுருத்த ரத்வத்தை, புலிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘போருக்குக் காரணமான அரசியல் காரணங்களை ஆராய்ந்து, அவற்றுக்கு அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டும், என எழுதியிருந்தார்.

அதற்குப் புலிகளின் தலைவர் பிரபாகரன், டிசெம்பர் 22ஆம் திகதி அனுப்பிய பதிலில், ‘அரசியல் காரணங்களை ஆராயுமுன், மக்களுக்குப் போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பரிகாரம் காண வேண்டும்’ என எழுதியிருந்தார்.

இறுதியில், அந்தப் பேச்சுவார்த்தைக் காலமும், போர் ஆயத்தங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கப்பல்களைப் புலிகள் தாக்கி, போரை மீண்டும் ஆரம்பித்தனர்.

அதன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்ததன் பின்னர், 2002ஆம் ஆண்டு, புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே, மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்போதும் புலிகள், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே முதலிடத்தைக் கொடுத்தனர். அதற்காகப் புலிகள் இடைக்கால நிர்வாக சபையொன்றைக் கோரினர். இடைக்கால சுயாட்சி அதிகார சபை (Interim Self Governing Authority-ISGA) என்ற பெயரில் அதற்கான திட்டமொன்றையும் புலிகள் முன்வைத்திருந்தனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபை, பற்றிய திட்டத்தை, அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் முன்னரே, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திக்காக, உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பங்களிப்பில், இரண்டு சர்வதேச மாநாடுகள் நடைபெற்றன.

ஒன்று, ஜப்பானின் டோக்கியோ நகரிலும் மற்றையது, அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலும் நடைபெற்றன.

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வொஷிங்டன் நகரில் நடைபெற்ற மாநாட்டில், புலிகள் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. புலிகள், அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டு இருந்தமையே அதற்குக் காரணமாகியது. அதையே, அம்முறை பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக, புலிகள் காரணமாகக் காட்டினர்.

2003ஆம் ஆண்டு, ஜூன் மாதம் புலிகள் கலந்து கொண்ட டோக்கியோ மாநாடு, பாரியதொரு மாநாடாகும். அதில் 22 நாடுகளும் சுமார் 50 சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டன.

சமாதானத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு, இலங்கைக்கு 450,000 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்க, அங்கு தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு முன்னர், அரச பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிகளும் ஒன்றிணைந்து, அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்த, ‘வடக்கு, கிழக்கு மனிதாபிமான மறுவாழ்வுக்கான உப குழு’ (Sub Committee on Humanitarian Rehablitation in the Noth and East-SIHRN) என்ற பெயரில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
அதன் பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களைப் பட்டியல் போட்டனர். தேவை மதிப்பீடு (Needs Assesment) என அது அழைக்கப்பட்டது.

அதனை நடைமுறைப்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கு மறுவாழ்வு நிதியம் (North-East Rehabilitation Fund-NERF) என்றதொரு நிதியம் உருவாக்கப்பட்டது. அது, எத்தகைய உயர் மட்ட நிதியமாகக் கருதப்பட்டதென்றால், அதை உலக வங்கியே மேற்பார்வை செய்தது.

இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால், வடக்கு, கிழக்கு பகுதிகளின் நிலைமை எவ்வாறு மாறியிருக்கும் என்பதை, ஊகித்துக் கொள்ள முடியும்.

இன்று, அபிவிருத்திப் பணிகளும் அரசியல் தீர்வுக்கான போராட்டத்தோடு, சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், போர் முடிவடைந்த ஆரம்ப காலத்தில், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், ஒரு மாயை என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.

2012ஆம் ஆண்டு மே மாதம், மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14ஆவது மாநாட்டின் போது, உரையாற்றிய சம்பந்தன், “எமது மக்களின் வாழ்வாதாரநிலை, ஏற்றுக் கொள்ளத்தக்க நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பது உண்மை. ஆனால், அதற்காக அரசாங்கம் கொண்டுவரும், அபிவிருத்தி என்னும் பொறியில், நாம் விழுந்துவிடக் கூடாது. அது தமிழ் மக்களின் இருப்பையே, அழித்துவிடும் கொடிய பொறி; ஒரு மரணப் பொறி” என்றார். இன்று அவர் மாறிவிட்டார்.

லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்று, அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முற்படுவதை, 1960களிலும் 1970களிலும் விமர்சித்த மக்கள் விடுதலை முன்னணி, அதன் மூலம் மக்கள் சோஷலிஸத்துக்கான போராட்டத்தில் இருந்து, திசைதிருப்பப்படுவதாகக் கூறினர்.

அக்காலத்தில், வேறுசில இடதுசாரிக் குழுக்கள், மக்கள் கஷ்டப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள், சோஷலிஸத்தை நாடி வருவார்கள் என்றும், ஆனால், அரசாங்கத்தில் இணைந்துள்ள இடதுசாரி அமைச்சர்களின் சீர்திருத்தவாத நடவடிக்கைகளால், மக்கள் திசைதிருப்பப்படுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினர்.

அந்த இடதுசாரிக் கட்சித் தலைவர்களை, சீர்திருத்தவாதிகள் என்றும், புரட்சிவாதிகள் அல்ல என்றும் மக்கள் விடுதலை முன்னணியினரும் அந்த ஏனைய குழுக்களும் விமர்சித்தனர். அவர்கள், மார்க்ஸியவாதத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் எனவும் கூறினர்.

ஆனால், அதே மக்கள் விடுதலை முன்னணி, 2004ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட போது, விவசாய அமைச்சராக இருந்த, அக்கட்சியின் தற்போதைய தலைவர் அநுர குமார திஸாநாயக்க, 10,000 குளங்களைப் புனரமைக்கும் திட்டமொன்றை ஆரம்பித்தார். ஆனால், அவர்கள் குறுகிய காலமே, அரசாங்கத்தில் இருந்தனர்.

தமிழ் மக்களின் இன்றைய பிரச்சினையை, நடைமுறை ரீதியாகப் பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, மக்களின் அரசியல் போராட்டத்தை மழுங்கடித்துவிடும் என்று ஏற்றுக் கொண்டாலும் அந்த அரசியல் தீர்வு, எக்காலத்தில் கிடைக்கும் என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது.

எத்தனை தசாப்தங்களாகத் தமிழ் தலைவர்கள் அரசியல் தீர்வை கேட்கிறார்கள்? இன்னும் எத்தனை தசாப்தங்கள் அதற்காகக் காத்திருக்க வேண்டி வரும்? அதுவரை, வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறக்கூடாதா? இது தான் யாதார்த்தம்.

சம்பந்தன் கூறுவதைப் போல், அரசியல் தீர்வை தமிழ் மக்கள் நெருங்கிவிட்டார்கள் என்றால், விக்னேஸ்வரன் கூறுவதைப் போல் பொருளாதார அபிவிருத்தியை ஒத்திப் போடலாம்.

Comments (0)
Add Comment