பலிக்கடாவாக்கப்படும் மக்களின் நிலைமை!! (கட்டுரை)

ஜூலை 08ம் திகதி திங்கட் கிழமை. இடம் கொழும்பு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அன்று காலை அதன் தலைமை உணவு மற்றும் ஔடதங்கள் பரிசோதகர் அமித் பெரேராவுக்கு அவரின் உணவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தகவலொன்று கிடைத்தது. அதில் களனி பிரதேசத்திலுள்ள களஞ்சிய மொன்றில் காலாவதியான உணவு வகைகளுக்கு மீண்டும் லேபலிடப்படுவதாக முறையிடப்பட்டது. அமித் பெரேரா உடனடியாக கம்பஹா காரியாலயத்துக்கு அறிவித்து, அதனை விசாரிக்க விசாரணைக்குழுவொன்றை அனுப்பி வைத்தார்.

அந்த சுற்றிவளைப்புக்கு சென்ற அதிகாரிகள் களனியில், அமித் பெரேராவை தொடர்பு கொண்டு காலாவதியான உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக மருந்து தயாரிப்பும் நடைபெறுவதாக தெரிவித்தார்கள். தலைமை உணவு மற்றும் ஔடத பரிசோதகர் அமித் பெரேரா. உணவு மற்றும் ஔடத பரிசோதகர்களான சீ.எஸ். குருசிங்க, மஹிந்த சிறிகுமார ஆகியோருடன் அந்த இடத்திற்கு சென்றுள்ளார். மாலை 4.00மணிக்கு அவர்கள் அவ்விடத்தை சென்றடைந்துள்ளார்கள். நான்கு மாடி கட்டடத்தில் அமைந்திருந்த அந்த களஞ்சியசாலையிலிருந்து காப்ஸ்யூல்கள், சிரப் வகைகள், இயந்திரங்கள், லேபல்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த இடம் ஏற்கனவே மருந்து உற்பத்தி செய்யப்படும் இடமாகும். மருந்து தயாரிக்க தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள் அனைத்தும் தேசிய ஔடத அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த இடமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2004ம் ஆண்டுடன் அதற்கு அனுமதி காலம் நிறைவடைந்திருந்தது. அதன் பின் அதனை அவர்கள் புதுப்பித்திருக்கவில்லை ஏதோ ஒரு காரணத்தால் வியாபாரம் நட்டமடைந்துள்ளது என விபரங்களை கூறினார் அமித் பெரேரா. அந்த வியாபாரம் ஒருபொறியியலாளரொருவருக்கு சொந்தமானது. அவர் 58வயதானவர். அவருடைய மருந்து உற்பத்தி வியாபாரம் நட்டமடைந்ததால் அவர் தனது கடையை விற்றுவிடத் தயாராகியுள்ளார். ஆனால் அவரது நண்பரான பாமசி உரிமையாளர் ஒருவர் விற்க வேண்டாமென கூறி கடன்தொகையொன்றையும் பெற்று கொடுத்துள்ளார். அங்குதான் அவர் தவறு செய்துள்ளார். அந்த உதவிக்கு பிரதியுபகாரமாக குறிப்பிட்ட பாமஸி வலையமைப்பில் காணப்பட்ட காலாவதியான மருந்துகளின் காலாவதித் திகதிகளை மாற்றி புதிய லேபல்களை ஒட்டி மீண்டும் தயாரிக்கும் பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை நிறைவேற்றியுள்ளார்.

அதன்பின்னர் அவருக்கு மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், சிரப்போன்ற மருந்து வகைகள் தயாரிக்கும் உப ஒப்பந்தம் மருந்து தயாரிக்கும் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தால் ஒப்படைக்கப்பட்ட மருந்துகளை உற்பத்திசெய்த போது இவருக்கு ஒரு யோசனை தோற்றியுள்ளது.

அந்த மருந்துகளை தமது நிறுவனத்துக்கும் உற்பத்தி செய்து கொள்வதாகும். ஆகவே தனக்கும் ஏனைய நிறுவனங்களுக்குமான மருந்துகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளார். அப்போதே அவர் தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகாரசபையிடம் சிக்கியுள்ளார்.

அமித் பெரேரா தலைமையிலான அணியினருடன் கம்பஹா மாவட்ட காரியாலய உணவு மற்றும் ஔடதங்கள் பரிசோதகர்கள், சட்டத்தரணி பீ.ஆர். டபிள்யூ. பண்டார, ஏ.எம்.ஜே. மியாஸ், பீ.எம். கருணாரத்ன ஆகியோர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை செவ்வாய்க்கிழமை மாலை வரை மேற்கொண்டிருந்தார்கள்.

அங்கு காணப்பட்ட மருந்துவகைகள் ஒரு இடத்துக்கு கொண்டு வரப்பட்டு அந்தக் கட்டடம் யாரும் உட்புகாதவாறு சீல் வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் 15பேர் வேலை செய்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் எந்தவொரு நடவடிக்கை குறித்தும் எதுவித ஆவணங்களோ அறிக்கைகளோ பேணப்படவில்லை. அதற்கு காரணம் சட்ட விரோதமாக அந்த நிறுவனத்தை உரிமையாளர் நடத்தியமை ஆகும்.

தற்போது அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள்.

* அனுமதி பத்திரமின்றி மருந்து உற்பத்தியில் ஈடுபட்டமை.

* தேசிய ஔடத தயாரிப்பு அதிகார சபையில் பதிவு செய்யாமல் மருந்து உற்பத்தி செய்தமை.

* காலாவதியான மருந்துவகைகளின் திகதியை மாற்றி மீண்டும் புதிதாக தயாரித்தமை.

* மதுப் பிரியர்கள் பாவிக்கும், இந்நாட்டில் பாவிக்கப்படாத பிரபல வலி நிவாரணி ஒன்று அங்கு காணப்பட்டமை.

* மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக லேபல் ஒட்டியமை.

அந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மீண்டும் லேபல் ஒட்டப்பட்ட காலாவதியான உணவுகள் கம்பஹா மாவட்ட உணவு மற்றும் ஔடத பரிசோதகர்களால் நகரசபை பரிசோதர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மருந்து வகைகள் தொடர்பான சட்ட நடவடிக்கையை தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகாரசபை மேற்கொள்ளும்

அங்கு காணப்பட்ட மருந்துகள், லேபல்கள், உறைகள் காப்ஸ்யூலை நிரப்புவதற்கு முன்னர் உள்ள வெற்று உறைகள், காலாவதியான பல மருந்துகளையும் நாம் கைப்பற்றினோம். மருந்து வகைகளில் சிறுவர்களுக்கான இருமல் மற்றும் ஒவ்வாமைக்காக பெற்றுக் கொடுக்கப்படும் இரண்டு சிரப் வகைகள், நோயெதிர்ப்பு மருந்துவகை, விட்டமின் மாத்திரைகள், பல வகையான விற்றமின் சிரப்புகள் என்பன காணப்பட்டன.

தற்போது எமக்கு இந்த மருந்துகள் இலங்கையில் எந்தெந்த இடங்களுக்கு சென்றுள்ளது என்பதனைக் கண்டறிந்து அவற்றை மீளப் பெறுவதே அவசியமான விடயமாகும். பிரச்சினை என்னவென்றால் இந்த மருந்துகள் எவையென்பதை தொலைகாட்சியூடாக தெரியப்படுத்தினால் அவற்றை விற்பனை நிலையங்களில் இருந்து அகற்றி மறைத்து விடுவார்கள் அப்போது எமக்கு உடனடியாக சென்று கைப்பற்ற முடியாது. எவ்வாறாயின் எம்மிடம் இந்த மருந்து உற்பத்திக்கு பாவிக்கப்பட்ட வர்த்தகநாம எண் (Brand Number) உள்ளது.

அதேவேளை நாம் நாடு பூராவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் இலங்கை பூராகவும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என அமித் பெரேரா தெரிவித்தார்.

தற்போது களனியில் சட்ட விரோதமான முறையில் நடத்தப்பட்டுவந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் அண்ணளவாக 2கோடி பெறுமதியானவையாகும்.

இந்த உரிமையாளரிடம் தகவல்களை பெற வேண்டியுள்ள போதும் அதனை தொடர்ந்து செய்ய முடியாதுள்ளது. ஏனென்றால் அவர் அண்மையில் தான் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் வெகுவிரைவில் நாம் தகவல்களை பெறுவோம். பிரச்சினை அதுவல்ல. இந்த மருந்து உற்பத்தி நிறுவனம் விநியோகித்த மருந்துகளை பாவித்த மக்களின் நிலைமையை எண்ணினால் தான் கவலையாகவுள்ளது. இவர்களின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களே ஏமாற்றப்படுகின்றார்கள்.

வாழ் நாள் பூராவும் நோயினால் வருந்துபவர்கள் பொதுமக்களே. அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயம் பற்றி கூற ஒருவருமில்லை. கேட்கவும் யாருமில்லை.

பணத்தை முதன்மையாகக் கொண்டு சமூகத்தில் மனிதாபிமானமற்ற செயல்களால் பலிக்கடவாக்கப்படும் மக்களின் நிலைமையை அந்த கடவுள் ஒருவரே அறிவார்.

Comments (0)
Add Comment