தமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்!! (கட்டுரை)

ஆடிப்பட்டம் தேடி விதை என பல முது மொழிகள் எமது வழக்கிலுண்டு. பொதுவாக ஆடி மாதம் மழைக்காலம் எனவும் அந்தமாதம் விதைக்கும் விதை அதிக பலனைத்தரும் என்பதும் எனது முன்னோர்சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நவீன காலத்து விஞ்ஞானிகளுக்கு நிகராக முன்னைய பாட்டன் பூட்டன் காலத்து முது மொழிகள் பல உண்டு. அந்தக் கணிப்பின் அடிப்படையிலும் பெரும் அறிவியல் தத்துவங்களே இருந்தன. இந்த வருடம் கடும் வெப்பம் நிலவுகிறது. மழை ஆங்காங்கே சிறு துாறலை ம்ட்டும் போட்டுக் கடந்து கொண்டிருக்கிறது. எங்காவது மழை பெய்கிறதாம் என்று கேட்க ஆவலாக இருக்கிறது. இந்த மழை எமதூருக்கு வர இன்னும் நாளெடுக்கும் என்று நான் சொன்னதற்கு பக்கத்து வீட்டு அம்மாள் கோபித்துக் கொண்டாள்.

உன்ர கருநாக்கை வச்சுக் கொண்டு சும்மா இரணை என்றாள்.

இரண்டு மூன்று நாட்களாக எனது வீட்டின் தென்முகமாக வானத்தில் மின்னுகிறது. அந்த மின்னலைப்பற்றி அறுபது வருடங்களுக்கு மேலாக எனக்கு தெரியும் என் பாட்டன் சொன்னதுதான். அதற்கு கொழுக்கழத்தி மின்னல் என்று பெயர் உழவர்கள் உழவுக்காலம் முடிந்ததும் கலப்பையில் உள்ள கொழுவை கழற்றி வைத்துவிடுவர் அது கலப்பையோடு இருந்தால், துருப்பிடித்து கலப்பைக் குற்றியையும் இற்றுப்போக வைத்துவிடும். இப்போதைக்கு உழவு வராது என்றால் கொழுவை கழற்றி வைப்பர். இந்த தெற்கத்தி மின்னல் மழை தொலைவுக்கு போவதை குறிப்பதால். அவர்கள் கொழுவை கலப்பையிலிருந்து அகற்றி விடுவர்.

ஆதலால் இது கொழுக்கழற்றி மின்னல். ஆயிற்றா பங்குனிமாதம் பாரிய வெயிற்காலம் இப்போதுதான் சூரியன் கீழே இறங்கி வருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். என்பாட்டனுக்கு அது தெரியுமோ தெரியாது. அவர் சொல்வார்.

இந்த பங்குனிமாசம் பகல் வழி நடப்பவரை பார்த்திருந்தாலும் பாவம் என்று வாகனங்கள் இல்லாத காலம் அது. இந்த பங்குனியிலும் மாதம் மும்மாரி உண்டு. அந்த மூன்று மழைக்குமே பெயர்களும் உண்டு. வனவாசிகளாக காடழித்து கழனி உருவாக்கிய காலம் அது. முதல் மழை கூழாச்சருகொதுக்கி கூழா மரங்கள் பாரிய நிழலை தருபவை. இந்த நிழல்பற்றியே பல நாட்டார் பாடல்கள் உண்டு. இலையுதிர் காலத்தில் அதன் சருகுகள் மிக அடர்த்தியாக நிலமெங்கும் பரவியிருக்கும். இந்த முதல் மழை பெரு வெள்ளமாகி அந்த சருகுகளை ஒதுக்கி அள்ளிச் சென்றுவிடும். இப்போது சருகுகளில் வாழ்ந்த உண்ணிகள் மனிதர்களையும் விலங்குகளையும் பற்றிக்கொள்ளும் மீதமுள்ள சருகுடன் உண்ணிகளையும் அள்ளிச் செல்லும் மழை உண்ணிகொல்லி அடுத்ததாக இந்த இரண்டு மழைகளும் நனைத்துப்போட்ட புத்துகளில் உடும்புகள் முட்டையிடும். உடும்புகள் முட்டையிடும் பருவகாலம் பங்குனி சித்திரைதான். தமது கால்களால் மண்ணைப் பறித்து குழி செய்து அதில் முட்டைகளை இட்டு மூடிவைக்கும் இந்த அப்பாவிப்பிராணி. அந்த கால்களின் கீறல்களை வைத்தே வேட்டைக்காரர்களும் கீரியும் முட்டையோடு உடும்பையும் கைப்பற்றி விடுவர். ஆதலால் அந்த மழைக்கு உடும்புகொல்லிமழை என்று பெயர்.

ஆடிமாதமும் பெருவெள்ளம் பெய்யும் காலமாக இந்திய மக்கள் கருதுவார்கள் ஆடிப்பெருக்கு என அந்த வெள்ளத்துக்கே பெயர் ஆனால் இப்போது அங்கும் பெரும் வரட்சியே நிலவுகிறது. காடுகள் மட்டுமல்ல காட்டு வாழ்க்கையும் தகர்ந்து போய் விட்டது. என்றாலும் நாமே நமது தலையில் வாரிக் கொட்டிக் கொண்டதுதான் இந்த மண். காடுகளை அழித்தோம் கழனிகளையும் கட்டடக்காடுகளாக்கினோம். இப்போது மழைக்கும் நீருக்கும் ஏங்குகிறோம்.

பொதுவாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஆடிமாதம் கிரகணம் பிடித்த மாதம்தான். கலவரங்கள் அழிவுகள் சண்டைகள். ஏன ரத்தம் தோய்ந்த நாட்களை தந்தது இந்த ஆடிமாதம்தான். தொடர்ச்சியாக பல ஆடிமாதங்களில் நான் எனது குடும்பத்தினருடனும் ஊரவர்களுடனும் அகதியாக அலைந்திருக்கிறேன். தங்கிடமின்றி மர நிழல்களில் சமைத்து உண்டிருக்கிறோம். இரவில் பாதுகாப்பு என கருதி பல குடும்பங்கள் ஒன்றாக கலந்து உறங்கியிருக்கிறோம். ஆண்களின் மத்தியில் பெண்களும் பெண்களின் மத்தியில் ஆண்களும் உடைமாற்றிக்கொள்ளவும் படுத்துறங்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆண்பெண் வேறுபாடின்றி ஒரே கிணற்றில் சுற்றிவர நின்று ஏக காலத்தில் பல கயிறுகளுடன் வாளிகளை எறிந்து நீரள்ளி குளித்திருக்கிறோம். குளித்துக் கொண்டிருக்கும்போதே கிணற்றுநீர் தீர்ந்து போக ஊறும்வரை காத்திருந்து குளித்து முடித்திருக்கிறோம்.

ஆயிரம் சாத்திரங்கள் கூறும் தமிழ்இனம் புதிதாக பூப்படைந்த பெண்ணையும் பிரசவித்த தாயையும்கூட தனிமைப்படுத்தாமல் கூடிவாழ்ந்த நாட்கள் அவை. ஒரே அறை கொண்ட பத்துக்குப் பத்தடி வீட்டில் இல்லை, குடிலில் முதலிரவும் நடந்தது. பிரசவமும் நடந்தது. காலங்கள் மாறலாம் இந்த நினைவுகளின் சான்றாக வாழும் சந்ததியை எப்படி மாற்றப்போகிறோம். இப்போதும் ஆடி பிறந்தது. சோமசுந்தரப்புலவர் சொன்னது போல வாசக் கொழுக்கட்டை அவிக்கவும், கூழ்காய்ச்சி அயலாருடன் கலந்து உண்ணவும் மிக கலகலப்பாகத்தான் இருக்கிறோம்.

இனி என்ன? அம்மன்கோவில்களில் அலங்கார உற்சவங்களும் தொடங்கும். கொடியேற்றங்களுடன் குதூகலிப்போம். ஆலயங்களில் கணவனை இழந்த பெண்களும்கூட வரலட்சுமிக்கு நோன்பிருந்து புத்தாடைகட்டி பூசைசெய்ய ஆயத்தமாகிவிடுவாள். அந்த மனமாற்றம் மகிழ்ச்சி ஒன்றுதான் அவர்களுக்கு கொடுத்து வைத்ததாக எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வாழ்கிறோம். வாழ முயற்சிக்கிறோம். இழப்புகள் நிரந்தரமல்ல மீண்டெழவும் ஆடி வகை செய்யும். மனதில் உறுதி வேண்டும்.

Comments (0)
Add Comment