இம்ரானின் அமெரிக்க விஜயம் இந்திய நட்புறவை தகர்க்குமா? (கட்டுரை)

தென்னாசிய அரசியலில் மிகவும் நீண்ட விவகாரமாக அமைந்திருப்பது காஷ்மீர் பிரச்சினையாகும். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினை முதல் இன்றுவரை தீர்வின்றி காணப்படும் விடயமாக இது அமைந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்குமிடையிலேயே பல யுத்தங்களும் நூற்றுக்கணக்கான மோதல்களும் எதிர்கொள்ளப்பட்டிருந்தன. இன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மைய நிலங்களில் ஒன்றாக காஷ்மீர் காணப்படுகிறது. அரசியல் தீர்மானங்களும் போர்களும் அந்தப்பிரதேச மக்களின் இயல்பான வாழ்க்கையையும் சுமூகமான வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகிறது. இந்திய இராணுவத்தினதும் பாகிஸ்தான் இராணுவத்தினதும் வளர்ச்சிக்கும் அழிவுகளுக்கும் மையமான நிலமாக காஷ்மீர் விளங்கியது என்பது கவனிக்கப்படவேண்டியதாகும். அசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு துண்டுகளாக காஷ்மீர் பிரிக்கப்பட்டாலும் இரு நாடும் அந்நிலத்தை தமது இருதய பகுதியாக கருதி செயல்பட்டுவருகின்றன. இக்கட்டுரையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் காஷ்மீர் விவகாரத்திற்கான மத்தியஸ்தம் ஏற்படுத்தியுள்ள அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள் அரசமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவரது விஜயத்தில் அமெரிக்க ஜனாதிபதியை 22.07.2019 சந்தித்தார். அப்போது உரையாடப்பட்ட விடயங்களில் முக்கியமாக பயங்கரவாதம், பொருளாதாரம் மற்றும் காஷ்மீர் விடயம் என்பன அமைந்திருந்தன. அதில் ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் இம்ரான் கானுடன் உரையாடும் போது அண்மைய ஜி-20 மகாநாட்டில் தாம் இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் அப்போது மோடி தம்மிடம் காஷ்மீர் விவகாரத்திற்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென கோரிக்ைக விடுத்ததாகவும்குறிப்பிட்டார்.

ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் இன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சகம், பிரதமர் மோடி காஷ்மீர் விடயத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு ட்ரம்பைக் கேட்கவில்லை எனவும் காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளிடையேயான அமைதிப் பேச்சுக்கள் மூலமே தீர்வு காணமுடியும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது என்றும் பாகிஸ்தான் எல்லை கடந்த பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பேச்சுக்கே இடமில்லை என்றும், இது இந்தியாவின் இறைமைப் பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் ட்ரம்ப் இன் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளது. அதாவது காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா பாகிஸ்தான் எனும் நாடுகளுக்கிடையிலான விடயம். இதில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணவேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புகிறது. அதற்கான உதவிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செய்ய விரும்புகிறார். பாகிஸ்த்தான் தனது எல்லைப் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிரான நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பட்சத்தில், இரு நாட்டுக்குமிடையிலான பேச்சுக்கள் வெற்றிகரமாகத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சர்வதேச நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புகிறோம்.

இரு நாடுகளுக்கு மிடையிலான பதற்றமான சூழல் தணிவதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்போம். பேச்சுவார்த்தைக்கு ஏதுவான சூழல் உருவாக நாங்கள் உதவியாக இருப்போம் எங்களின் முக்கியத்துவம் தீவிரவாதத்தை எதிர்ப்பதாகும் இதனைத் தான் ட்ரம்ப் தெரிவித்தார்.

இப்பகுதியில் ட்ரம்ப் தரப்பிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களில் ஓர் இடத்திலாவது காஷ்மீர் விடயம் ெதாடர்பில் மோடியுடன் உரையாடவில்லை என்று குறிப்பிடப்படவில்லை. அதே நேரம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்து அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. அதாவது காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென எங்களிடம் கேட்டால் நாங்கள் உதவத் தயார் அதைத்தான் ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார் எனக் குறிப்பிட்டார். எனவே ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது அமெரிக்கா இந்த விடயத்தில் மறுப்புத் தெரிவிக்காதது அதிக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்த முக்கிய அம்சம் ட்ரம்பை சந்தித்த பின்பு தொலைக்காட்சிச்சேவை ஒன்றிற்கு இம்ரான் கான் வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட விடயம். காஷ்மீர் விடயத்தில் இரு நாடுகளும் ஒருபோதும் பேச்சுவார்த்தையில் தீர்வுகாண முடியாது. இதற்கு முன்பு பல தலைவர்கள் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர். அத்தகைய பேச்சுக்களில் முன்னேற்றம் இருந்த போதும் முடிவில் இரு நாட்டுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த விடயத்தில் இந்தியா தான் முன்னோக்கி வரவேண்டும். காஷ்மீர் விடயத்தில் இரு நாட்டுக்குமான பேச்சுவார்த்தையில் அமெரிககா முக்கிய பங்காற்ற வேண்டும். மத்தியஸ்தம் செய்வதில் ட்ரம்ப் நிச்சயம் முக்கிய பங்கு வகிப்பார் இந்த முயற்சியை அவர் செய்தால் 130 கோடி மக்களும் நிம்மதி அடைவார்கள். அவர்களது பிரார்த்தனைகள் பலிக்கும். இந்தியா அணுவாயுதத்தை கைவிட்டால் பாகிஸ்தானும் கைவிடும். காரணம் இரு நாட்டுக்குமான அணுயுத்தம் சுயஅழிவுக்குத்தான் வழியமைக்கும். கடந்த 70 ஆண்டுகளில் அயல்நாடுகளாக இருந்த போதும் பண்பட்ட நாகரீகமான நட்பு நாடுகளாக இல்லை. காரணம் காஷ்மீர் விவகாரம் மட்டுமே என்றார். உலகில் சக்திவாய்ந்த நாடாக திகழும் அமெரிக்கா தான் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.

எனவே இங்கு நிகழும் விடயங்களைப் பாரத்தால் அமெரிக்க_ இந்திய உறவுக்கு அதிக சிக்கலை இம்ரான் கான் ஏற்படுத்திவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அது மட்டுமன்றி அணுவாயுதம் பற்றிய விடயத்தை முதன்மைப்படுத்தியுள்ளார்.

ட்ரம்புக்கும் மோடிக்குமான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினரான ராகுல் காந்தி கோருவது போல் வேறு எதனை ட்ரம்ப் க்கு மோடி தெரிவித்துள்ளார் என்பதிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் இந்திய அமெரிக்க உறவில் பெரும் விரிசலுக்கான களமாக இம்ரான் கானின் அெமரிக்க விஜயம் மாறியுள்ளது. இதனை அமெரிக்கர்களும் விரும்புவது போல் அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் அறிக்கை அமைந்துள்ளது. மோடியைக் காப்பாற்றுவதற்கு பதில் அவரை காட்டிக் கொடுப்பது போல் அறிக்கை அமைந்துள்ளது. மோடி- ட்ரம்ப் உறவு அவ்வளவு அன்னியோன்னியமானது.

இலங்கை விடயத்தில், இந்தியாவின் அணுகுமுறை மாறுவது தொடர்பில் சில அவதானிப்புகள் கடந்த வாரம் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அமெரிக்க எதிர்ப்பும் எச்சரிக்கையும் கலந்த ஆலோசனையினை இந்திய வெளியுறவுக்கு வழங்கியுள்ளார். தென்னாசிய பாதுகாப்பில் இந்தியா அதிக அக்கறை கொள்ள வேண்டும் என்றும், இலங்கையை இந்தியா தனித்து கையாளவேண்டும் என்பதோடு ரஷ்யாவுடனான உறவை கைவிடாது செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமன்றி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இனிவரும் காலத்தில் From Non- Alignment to Multi- Alignment என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அத்தகைய ஆலோசனைக்கு இணங்க இந்தியா இலங்கை விடயத்தில் சில அடிகளை எடுத்து வைத்துள்ளது.

அதற்கு பதிலளிப்பதாக அமெரிக்க நடவடிக்கை அமைந்துள்ளது. இந்தியாவின் மிக பிரதான எதிரி நாடான பாகிஸ்தானை அழைத்தது மட்டுமல்லாது இரு நாட்டுக்குமான மையப் பிரச்சினையான காஷ்மிர் விடயத்தை முதன்மைப்படுத்தியிருக்க வேண்டும் என்பதாகவே உள்ளது.

இது ஒரு இராஜதந்திர நகர்வாகவே அமைந்துள்ளது. இதனை புரிந்து கொண்டால் இந்தியாவுக்கு இலாபகரமானதாகும். அது தென்னாசியாவுக்கே ஆரோக்கியமான அரசியலை ஏற்படுத்தும் ஆற்றல் உடையதாக அமையும். அமெரிக்காவின் நடவடிக்கை இந்தியாவினது வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

எனவே, மிக எளிமையாக இம்ரான் கான் அமெரிக்காவுக்கு சென்று மிக அதிகமான வாய்ப்புக்களை பாகிஸ்தானுக்கு உருவாக்கிவிட்டார். அதே நேரம் இவரது விஜயம் இந்தியாவுக்கு என்றுமே மறக்க முடியாத செய்தியை தந்துள்ளது.

மீண்டும் ஒரு பிராந்திய பகைமைக்கு அத்திபாரம் இட்டதாகவே அமையவுள்ளது.

இதற்காக, அமெரிக்கா இந்தியாவுடனான வாய்ப்புக்களை இழந்துவிடாது உறவை பேணும். ஆனால் இந்தியாவை எப்படியும் கையாளலாம் என்ற கணக்கை அெமரிக்கா போட்டுள்ளது போல் தெரிகிறது. இதன் பதில் அமெரிக்க- -இந்திய வர்த்தகப் போரில் ஆரம்பமானது. பின் ஈரான் விடயத்தில் இந்தியா, அமெரிக்காவின் எந்த பதிலையும் எதிர்பராது செயல்பட்டது. அதனாலேயே மோடி மீது இத்தகைய நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment