சமூக நலன்களை இலக்காக கொண்ட பாடசாலை அபிவிருத்தி திட்டம்!! (கட்டுரை)

உலகில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியை அடுத்து குறிப்பாக குடும்ப வாழ்க்கையின் பொருளாதார சுமையைக் குறைக்க வேண்டுமாயின் பெண்களும் கட்டாயம் தொழில் புரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது. இதனால் அதுவரை காலமும் பெரும்பாலும் பிள்ளைகளை வளர்த்தெடுத்து அவர்களை பராமரிப்பதற்கென மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் குடும்ப வாழ்க்கை தொழிலின்பால் பெரிதும் செலவிட நேர்ந்ததால் அவர்களின் பராமரிப்பில் தாய்ப்பாலினால் போஷிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பிள்ளைகளை தாய்ப்பாலுக்கு நிகரான செயற்கைப் பாலைக் கொண்டு வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு விடை தேடும் வகையில் போஷாக்குத் துறை சார்ந்த நிபுணர்களும் விஞ்ஞானிகளும் தாய்ப்பாலுக்கு நிகரான முறையில் செயற்கைப் பாலை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டதன் விளைவாகவே குழந்தைகளுக்கான செயற்கைப் பால் உருவானது. இந்த சாத்தியப்பாட்டை அடுத்து இதே பாணியைப் பின்பற்றி சில நாடுகள் பசும்பாலுக்குப் பதிலாக பால்மாவையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தன.

பரிபூரண போஷாக்குமிக்க இயற்கைப் பசும்பாலை அதற்குரிய உயரிய விலையைக் கொடுத்து கொள்வனவு செய்வதற்கு தகுந்த பொருளாதார சக்தி இல்லாத வறிய மக்களுக்கு பசும்பாலுக்கு நிகரான ஓர் உற்பத்தியினை பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கமென இவ்வுற்பத்தியாளர்களே வெளியிட்டிருக்கும் அவர்களின், உற்பத்தி பற்றிய இக்கருத்து அவர்களது உற்பத்தியின் தரத்தை மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. ஆகையால் இந்த உண்மையை அறிந்த பின்னரும் தொடர்ந்தும் பால்மா வகைகளின்பால் சிறுவர்களை ஈர்க்க வைப்பதற்குப் பதிலாக அதற்கான மாற்றுவழிகளை நாடுவதே சாலச் சிறந்ததாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் சில தசாப்தங்கள் பின்னோக்கி சென்று பார்க்கின்றபொழுது அநேகமான தாய்மார் தமது பிள்ளைகளுக்கு தேவையான அளவு தாய்ப்பாலை ஊட்டி அவர்களை போஷித்துவந்த போதிலும் தற்போது வேலைப்பளு காரணமாக தமது குழந்தைகளை தாய்ப்பாலுக்கு பதிலாக பால்மாக்களைக் கொண்டு வளர்க்கும் ஒரு புதிய கலாசாரத்திற்கு அவர்கள் மாறியிருக்கின்றமை தெரியவருகின்றது. இதன் நேரடி தாக்கமாகவே ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்ற குறை போஷாக்கு நிலை இனங்காணப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களின் கல்வி கற்கும் ஆற்றலும் அவர்களின் படைப்புத்திறனும் உயர்ந்த அளவில் இருக்க வேண்டுமாயின் அவர்களுக்கு தகுந்த போஷாக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதற்கான ஒரு தீர்வாகவே ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பசும்பாலை வழங்கும் தேசிய திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய வறுமைக்கோட்டில் இருக்கும் பிரதேசங்களைச் சேர்ந்த ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஏற்கனவே போஷாக்கு உணவுத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வந்தபோதிலும் அத்திட்டத்தின் மூலம் மாத்திரம் பாடசாலை மாணவர்களிடையே காணப்படுகின்ற போஷாக்கு குறைப்பாட்டினை நிவர்த்தி செய்வது இயலாத காரியமாகவே இனங்காணப்பட்டிருக்கின்றது.

கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்படும் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் போஷாக்கு பற்றிய மதிப்பீட்டு தரப்படுத்தலுக்கமைய மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு உணவைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை, அந்த நிலையை விட சற்று தேர்வடைந்த ஆயினும் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடிய மாணவர்களை இலக்கு வைத்தே இத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் ஆரம்ப கட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 900 பாடசாலைகளில் 06 இலட்சம் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பசும்பால் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கையை இலங்கை முழுவதிலுமுள்ள 17 இலட்சம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் கிடைக்கும் வகையில் விஸ்தரிக்க வேண்டுமாயின் அதற்கு தற்போது இருக்கின்ற உள்நாட்டு பசும்பால் உற்பத்தியின் தொகையினை பெருமளவு அதிகரிக்க வேண்டியிருக்கின்றது. அத்தோடு பால் உற்பத்தியைப் பெற்றுத்தருகின்ற பசுக்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெருமளவில் அதிகரிக்க வேண்டிய கட்டாயத் தேவையும் காணப்படுகின்றது.

அத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் இந்த நாட்டின் அனைத்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும் பசும்பாலை பெற்றுக்கொடுப்பதை சாத்தியமானதாக மாற்றிக்கொள்வதற்கான சாத்தியப்பாடு இருக்கவே செய்கின்றது. தேவையான பசுக்களை உகந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல், சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு தேவையான புல் உள்ளிட்ட உணவு வகைகளை நியாயமான விலையில் பசும்பால் உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், உற்பத்தியாளர்களின் பாலை சுகாதார முறைப்படி பால் பக்கட் தயாரிப்பாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டம் ஆகியன சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் இப்பசும்பால் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாக இருக்கும் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையச் செய்வது என்பதையும் எளிதில் அடையக்கூடியதாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட சமூக மற்றும் பொருளாதார நன்மைகளுக்கு அப்பால் இத் திட்டத்தின் மூலம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒரு ஒழுக்கக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

அதற்கமைய தமக்கு கிடைக்கப்பெறும் பால் பக்கற்றில் குறிக்கப்பட்டிருக்கும் காலாவதியாகும் திகதியை அவதானித்த பின்னர் ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கமைய பாலை வெளியே சிந்தாது பால் பக்கற்றில் உரிய இடத்தில் உறிஞ்சு குழாயை செலுத்தி பாலைக் குடித்ததன் பின்னர் பக்கற்றை அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் கத்தரிக்கோலால் இரண்டாக வெட்டிய பின் தண்ணீர் விட்டுக் கழுவி நீரை உலர விடுவதற்கான இடத்தில் வைத்தல் வேண்டும். அவ்வாறு உலர வைத்த பக்கற்றுக்களையும் பாலை குடிப்பதற்காக உபயோகித்த உறிஞ்சு குழாயையும் வகுப்பறைக்கு பால் பக்கற்றுக்கள் கொண்டு வரப்படும் காட்போட் பெட்டிகளில் அடைத்து மீள்சுழற்சிக்காக அனுப்பிவைத்தல் வேண்டும். இந்த செயற்பாட்டினை ஒவ்வொரு சிறாரும் தமது பொறுப்பாகவும் கட்டாயக் கடமையாகவும் உணர்ந்து இடைவிடாது முன்னெடுக்கும் பட்சத்தில் அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் ஓர் சாதகமான தாக்கத்தையும் வாழ்க்கைப் பழக்கத்தையும் ஏற்படுத்தும்.

ஜப்பான் நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் பால் பக்கற்றுக்களை மீள்சுழற்சி செய்யும் செயற்பாடே இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஜப்பானில் பாடசாலை மாணவர்கள் தமக்கு வழங்கப்படும் உணவை குழுக்களாக பிரிந்து சிறந்த முறையில் பரிமாறி உண்ணும் அதேவேளை, உணவை உட்கொண்டதன் பின்னர் தத்தமது பாத்திரங்களையும் உணவு பரிமாறப்பட்ட பாத்திரங்களையும் தாமாகவே கழுவி சுத்தம் செய்து உரிய இடத்தில் வைப்பதோடு உணவு உட்கொண்ட வகுப்பறையை சுத்தம் செய்வதற்கும் பழகியிருக்கின்றனர்.

அதேபோன்று ஜப்பான் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தத்தமது பாடசாலைகளில் மலசலகூடங்களையும் சுத்தம் செய்து சுகாதாரத்தைப் பேணும் வகையில் பராமரிக்கக் கற்றுக்கொடுத்து அதனை பராமரிக்கும் பொறுப்பும் அவர்களிடமே வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் மலசலகூட சுத்திகரிப்புக்கென பிரத்தியேக ஆளணியோ, மேலதிக செலவினமோ இன்றி அந்நாட்டின் பாடசாலை மலசலகூடங்கள் சுத்தம் செய்யப்படுவதையும் இத்தருணத்தில் நம் நாட்டு மாணவர்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

எடுத்ததற்கெல்லாம் அரசாங்கத்தின் மீது குறை கூறுவதற்குப் பதிலாக கிடைக்கின்ற வாய்ப்புகளை வைத்து வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எமது மாணவ சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும் கிடைத்திருக்கின்ற மற்றுமோர் அரிய வாய்ப்பாக பாடசாலை மாணவர்களுக்கான பசும்பால் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இச்சமூக நல அபிவிருத்திக் கருத்திட்டத்தின் ஆக்குநராகிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பாகும்.

Comments (0)
Add Comment