தமிழ்ச்சனங்களின் காதுகளில் பூச்சுற்றும் தமிழ்த் தலைமைகள்!! (கட்டுரை)

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்பந்தன் பேசும்போது எல்லோரும் வெளியேறி விட்டார்கள். அமைச்சர்கள் கூட அங்கே இருக்கவில்லை. அரசாங்கத்துக்கு வந்த நெருக்கடியில் எல்லாம் கூட்டமைப்பு எவ்வளவு உதவியாக இருந்தது? அப்படிக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என்றால் இப்ப இந்த அரசாங்கமே இருக்காது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சம்பந்தனை இப்படி அவமானப்படுத்தியிருக்கக் கூடாது…” என்று கோபம் தொனிக்கக் கவலையை வெளிப்படுத்தினார் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர்.

புதிய அரசியலமைப்பை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் உரையாற்றியபோதே இவ்வாறு அரசாங்கத்தரப்பினர் அவரை அவமானப்படுத்தும் விதமாக வெளியேறியிருந்தனர்.

அவரைப் பொறுத்தவரையில் அவருடைய கவலையும் கோபமும் நியாயமானது.

சம்பந்தன் தட்டந்தனியாக நின்று எழுபத்தியிரண்டு நிமிடங்களாகப் புதிய அரசியலமைப்பைப்பற்றிப் பேசினார். இதைப்பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அதேவேளை இப்படியான நிலைக்குக் காரணம் சம்பந்தனுடைய அணுகுமுறையும் அரசியல் முறைமையும்தான் என்று கோபமும் வருகிறது.

இதற்கு இன்னொரு நண்பர் இன்னொரு விதமாக விளக்கமளிக்கிறார். “மற்றவர்கள் பேசும்போது அதைக் கேட்க விரும்பாததைப்போலச் சம்பந்தன் கண்களை மூடிக் கொண்டு நித்திரை கொள்வார். அதற்குப் பதிலாக சம்பந்தன் பேசுவதைக் கேட்க விரும்பாமல் எல்லோரும் வெளியேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான்” என.

இப்படித் தமிழ்ச்சமூகமே பல்வேறு விதமாகக் கொதித்துக் கொந்தளித்துப் போயிருக்கின்றனர்.

இல்லையென்றால் சம்பந்தனுடைய பேச்சைக் கேட்கவே விரும்பாமல் வெளியேறிச் சென்ற அரசாங்கத்தினரைத் தொடர்ந்தும் பாதுகாத்தே தீருவோம் என்று சொல்லுவார்களா?

இதற்கு மேல் நாம் இதைப்பற்றி என்னதான் சொல்ல முடியும்?

ஆனால், இந்த விடயம் தமிழ் மக்களுக்கு எரிச்சலையும் சினத்தையுமே ஏற்படுத்துகிறது. காரணம், கூட்டமைப்பின் கண்மூடித்தனமான ஐ.தே.க (ரணில்) விசுவாசம் கூட்டமைப்பையும் சம்பந்தனையும் மட்டுமல்ல, தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியலைப் பலவீனப்படுத்தியிருக்கிறது.

தமிழ் மக்கள் தங்களுடைய ஆதரவை இப்படி அடகு வைப்பதற்கும் அவமானப்படுவதற்கும் கூட்டமைப்புக்கு வழங்கவில்லையே. அவர்கள் ஆதரவளித்தது அரசியல் வெற்றிகளைப் பெறுவதற்காகவே. அரசியல் மதிப்பை உண்டாக்குவதற்கே. அரசியல் பெறுமானங்களை உற்பத்தி செய்வதற்காகவே. இதையிட்டு புளொட்டின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். அதன் தலைவருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் புலன்கள் எதுவும் வேலை செய்யாது. ஆனால் எப்பொழுதும் உணர்ச்சிகரமாக இயங்குவதாகக் காட்டும் ரெலோவின் நிலைப்பாடு என்ன? சிறிகாந்தாவின் சத்தத்தையே காணவில்லை. சிவாஜிலிங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

இவ்வளவுக்கும் மிகக் காலம் தாமதித்தே புதிய அரசியலமைப்பு விவகாரத்தை மீளப் பேச முன்வந்திருக்கிறது கூட்டமைப்பு. இது வீழ்ச்சியடைந்திருக்கும் தன்னுடைய அரசியல் ஸ்தானத்தை மீள்நிலைப்படுத்துவதற்கான முயற்சியே என்பது எல்லோருக்குமே விளங்கும். ஏனெனில் இன்னும் மூன்று நான்கு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. அதனை அடுத்தது ஜனாதிபதித்தேர்தல் வரும். அப்பொழுது இந்த விவகாரமெல்லாம் அடிபட்டு விடும். இதைப்பற்றித் தெரியாமல் சம்பந்தன் பேசவில்லை. தெரிந்து கொண்டுதான் இந்த நாடகத்தை ஆடுகிறார்.

இது கூட்டமைப்பின் மீதான – சம்பந்தன் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டல்ல. இது மறுக்க முடியாத உண்மையின் பாற்பட்ட வரலாற்றுக் குற்றச்சாட்டு.

ஏனென்றால் புதிய அரசியலமைப்பைப் பற்றிப் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் கூட்டமைப்புத் தவிர்த்திருந்தது. அப்பொழுது அப்படிச் பேசியிருந்தால் அது அரசாங்கத்துக்கு நெருக்கடியை உண்டாக்கும். அந்த நெருக்கடியானது தமது (கட்சி) நலனையும் பாதிக்கும் என்பதால் அடக்கி வாசித்தது. இப்பொழுது தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் அரசியற் தவறுகளின் நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளார் சம்பந்தன்.

புதிய அரசியலமைப்பைப் பற்றிப் பேசப்போகிறோம் என்று அரசாங்கத்துக்குச் சொல்லாமல் கூட்டமைப்பு பேச வந்திருக்க நியாயமில்லை. அப்படிச் சொல்லாமல் பேச வந்ததாக அது சொல்லுமாக இருந்தால் அது சுத்தப் பொய்யாகும். ஆகவே சம்பந்தன் புதிய அரசியலமைப்பைப்பற்றிப் பேசப்போகிறார் என்று அரசாங்கத்துக்குத் தெளிவாகவே தெரியும். அப்படித் தெரிந்து கொண்டே அரசாங்கத்தரப்பு திட்டமிட்டு இதைப் புறக்கணித்திருக்கிறது.

அப்படியென்றால் இதனுடைய அர்த்தம் என்ன?

சம்பந்தன் அரசியலமைப்பற்றிப் பேசும்போது சபையில் இருந்தால் ஆளுந்தரப்பின் – அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டியிருக்கும். அதாவது சம்பந்தனுடைய நியாயங்களுக்கும் கோரிக்கைகளுககும் பதிலளிக்க வேண்டியிருக்கும். அந்தப் பதில் தமக்குத் திருப்தியளிக்கவில்லை என்றால் சம்பந்தன் கோவிப்பார். சம்பந்தனுக்குத் திருப்தியளிக்குமென்றால் அது சிங்கள மக்களுக்கு எதிரானது என்று அதை எதிர்த்தரப்புகள் காண்பித்து விடும். எனவே இது எந்த வகையிலும் அரசாங்கத்துக்கு – ஐ.தே.கவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய சங்கதி. இந்த அச்சத்தின் காரணத்தினால்தான் அரசாங்கத்தரப்புத் தந்திரமாக வெளிநடப்புச் செய்திருக்கிறது. ஆக இது புதிய அரசியலமைப்பையும் அதை வலியுறுத்தும் சம்பந்தன் உள்ளிட்ட சிறுபான்மையினத்தினரையும் இந்த அரசாங்கம் எந்தளவுக்கு மதிக்கிறது? ஏற்றுக்கொள்கிறது என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது.

ஆனால் இதற்குப் பிறகும் இந்த அரசாங்கத்தின் காலையே இந்தத் தரப்புகள் இறுக இறுக இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன என்றால்…!

சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்புக்கும் உத்தரவாதங்களுக்கும் அடிப்படையானது அரசியலமைப்பு உருவாக்கம் அல்லது திருத்தமே. ஆனால், அதையே செய்ய முடியாது அல்லது அதைச் செய்வதற்குத் தயாரில்லாமல் பின்னடிக்கும் அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஆதரிப்பது எதற்காக?

அப்படியென்றால் எந்த அடிப்படையில், யாருடைய நலனுக்காக இவர்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும் காலம் கடந்து முயற்சி எடுத்தாலும் சம்பந்தனுடைய கோரிக்கையைத் தாம் ஆதரிப்பதாக மனோ கணேசனும் றவூப் ஹக்கீமும் சொல்லியிருக்கின்றனர். புதிய அரசியலமைப்புத் தொடர்பில் கடைசி முயற்சியாக தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மாநாட்டைக் கூட்டுங்கள் என்று சம்பந்தனிடம் கோரிக்கையை விடுத்துள்ளார் மனோ கணேசன். ஆனால் இதைச் சாதமாக எடுத்துக் கொள்வாரா சம்பந்தன் என்பது கேள்வியே. ஏனெனில் சம்பந்தனிடம் அப்படியான அரசியல் ஒழுக்கம் இதுவரையிலும் இருந்ததில்லை.

அப்படியென்றால் இதற்கு அடுத்து இந்த விடயத்தில் கூட்டமைப்பு எத்தகைய அணுகுமுறையை – நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது?

இதேவேளை எதிர்த்தரப்பான மகிந்த ராஜபக்ஸவும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாகவே பேசியிருக்கிறார். 13 பிளஸூக்குத் தான் ஆதரவளிப்பதாகக் கூறுகிறார் மகிந்த ராஜபக்ஸ. அதேவேளை மாகாணங்களுக்கான அதிகாரம் என்பது இந்த நாட்டை ஒன்பது துண்டுகளாகச் சிதறடித்து விடும் என்று அச்சமும் தெரிவிக்கிறார். அப்படியென்றால் என்னதான் செய்வது?

மொத்தத்தில் அரசியற் தவறுகளை அறுவடை செய்யும் நிலையில்தான் மக்களும் உள்ளனர். கட்சிகளும் உள்ளன. தலைவர்களும் உள்ளனர். இதில் எவர் ஒருவர் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுகிறாரோ அவர் தப்பித்துக் கொள்வார். எந்தக் கட்சி மக்கள் நலனை அக்கறையாக எடுத்துக் கொண்டு செயற்படுகிறதோ அந்தக் கட்சியை மக்கள் ஆதரிப்பர். நெருங்குவர். இதற்கு அண்மைய உதாரணம் மனோ கணேசனும் தமிழ் முற்போக்குக் கூட்டணியுமாகும்.

தெற்கிலும் மலையகத்திலும் மட்டுமல்ல வடக்குக் கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் மனோ கணேசனின் அரசியற் செயற்பாடுகள் என்று மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பற்றிப் பலரும் கவனத்திற் கொண்டு மதிப்புடன் பேசத்தொடங்கியிருப்பதைக் காண்கிறோம். அரசியலில் கூட்டமைப்பினரும் கீழிறங்குவதையும் மனோ கணேசன் மேலுயர்வதையும் கூடப் பார்க்கிறோம். ஆனால் இருவரும் ஐ.தே.க அரசாங்கத்தையே ஆதரிப்பதையும் காண்கிறோம்.

வித்தியாசமும் வேறுபாடும் என்னவென்றால் மனோ கணேசன் அரசாங்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறார். வெளிப்படையாக அரசாங்கத்தில் பங்கேற்று அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளார்.

மனோ அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிக்கிறார். எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கிறார். நெருக்கடியைக் கொடுக்க வேண்டிய இடத்தில் நெருக்கடியைக் கொடுக்கிறார். இதுதான் சாணக்கிய அரசியல். அவரே சொல்வதைப்போல தேவைக்கேற்ப ஆதரவாளராகவும் எதிர்த்தரப்பு ஆளாகவும் செயற்படுகிறார்.

ஆனால், கூட்டமைப்பினரோ எப்போதும் ரணிலையும் அவருடைய அரசாங்கத்தையும் பாதுகாப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார். அரசாங்கத்தை அளவுக்கு அதிகமாக நியாயப்படுத்துகின்றனர். ரணிலுக்குத் தலையிடி என்றால் பதறிப்போகின்றனர். இதுதான் சனங்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதனுடைய இன்னொரு வெளிப்பாடே சம்பந்தனுடைய புதிய அரசியலமைப்பைப் பற்றிய பாராளுமன்ற உரையும். அதாவது தமிழ்ச்சனங்களுக்குக் கணக்குக் காட்டும் முயற்சி.

இதில் இரண்டு வகையான உத்திகளைச் கூட்டமைப்பினர் கையாள முற்படுகின்றனர்.

1. மனோ கணேசன் போன்றவர்கள் ஏற்படுத்துகின்ற நெருக்கடியிலிருந்து ரணிலைக் காப்பாற்றுவது. அதாவது, தமிழர்களுக்குச் சாதகமான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என சிங்கள மக்களிடம் கேள்வி எழுந்தால், அப்படியெல்லாம் இல்லை. இது நீதிமன்ற நடவடிக்கையே தவிர, அரசியல் ரீதியானதல்ல என்று காட்டுவதற்கு.

2. அரசியல் தீர்மானமாக இவற்றை மாற்ற முடியாதவாறு நீதிமன்ற விவகாரமாக முடக்கி வைத்திருப்பது.

ஆக மொத்தத்தில் தானும் செய்யாமல் மற்றவர்களையும் உருப்படியான காரியங்களைச் செய்ய விடாமல் தடுக்கும் வேலை இது.

ஆனால், இதைச் சனங்கள் உணராத விதமாக தான் இலவசமாக வழக்குப் பேசுவதாகக் காண்பிக்கிறார் சுமந்திரன். நஞ்சை இலவசமாகக் குடிக்கக் கொடுப்பதைப் போன்ற காரியம் இது.

இதற்குப் பிறகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்கட்சியும் ஈழத்தமிழருடைய அரசியலின் விடிவெள்ளியாகச் செயற்படும் என்று யாராவது கனவு கண்டால் அதை விட முட்டாள் தனம் வேறில்லை.

அரசியல் தீர்மானங்களைச் சரியாக எடுத்திருந்தால் அல்லது தீர்மானங்களை எடுப்பதற்கு முயற்சித்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். இப்படி நீதிமன்றப் படிகளில் ஏறி இடைக்காலத் தடை உத்தரவு என்ற சில்லறைத் தீர்வுகளைப் பெற வேண்டி வராது.

இதைத்தான் முன்னரும் தமிழ்த் தலைவர்கள் செய்தனர். தங்களுடைய அரசியல் பணிகளைச் செய்யாமல் அவர்கள் பிரபல சட்டத்தரணிகளாகவே புகழ் பெற்றனர்.

அரசியற் தலைவர்களாகச் செயற்பட்டிருந்தால் பல விடயங்களில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் அரசியல் என்பது வித்தை அல்ல. அது ஒரு விளைவு. ஆகவே தமிழ்ச்சனங்களின் காதுகளில் பூவைப்பதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக – அரசியல் ரீதியாகச் செயற்பட்டு தீர்வைக் காண முயற்சியுங்கள்.

Comments (0)
Add Comment