உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடு என்பது வெறும் மாயை மட்டுமே! (கட்டுரை)

இவ்வருடம் ஜுலை முதலாம் திகதி உலக வங்கியானது இலங்கையை ஒரு உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடாக தரமுயர்த்தி அட்டவணைப்படுத்தியது. அதாவது இலங்கை இனிமேலும் ஒரு வறிய நாடல்ல என்பதே இதன் கருத்தாகும்.

உலக வங்கியானது உலகிலுள்ள நாடுகளை அவற்றின் டொலர் பெறுமதியிலான தனக்குரிய மொத்த தேசிய வருமான (GNT)த்தின் அடிப்படையில் வகுப்பாக்கம் செய்து நான்கு பிரதான வகுதிகளாக வருடாவருடம் ஜுலை மாதம் அப்பட்டியலை வெளியீடு செய்கிறது. இதன்படி உலக நாடுகள் பின்வரும் வகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. குறைந்த வருமானம் பெறும் நாடுகள்

2. கீழ் மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடுகள்

3. உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடுகள்

4. உயர்மட்ட வருமானம் பெறும் நாடுகள்

2019 ஜுலை முதலாம் திகதி வெளியிடப்பட்ட பட்டியல் 2018ம் ஆண்டு நாடுகளின் தனக்குரிய மொத்த தேசிய வருமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டில் உலகவங்கி வெளியிட்ட பட்டியலுக்கு ஆதாரமாக அமைந்த வருமான வகுதிகளும் இவ்வருடம் அது இற்றைப்படுத்தப்பட்ட விதமும் கீழேயுள்ள அட்டவனையில் காட்டப்பட்டுள்ளன.

2018 ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலின் படி இலங்கையின் தனக்குரிய மொத்தத் தேசிய வருமானம் 3840 டொலர்களாக இருந்தது. எனவே அதனால் நடுத்தர உயர்மட்ட வருமான நாடு என்ற அந்தஸ்தைப் பெற முடியவில்லை. ஆனால் 2019ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி இலங்கையின் தலைக்குரிய மொத்தத் தேசிய வருமானம் (2018 ஆண்டு தரவு) 4060 டொலர்களாக மதிப்பிடப்பட்டது. இதன்படி 3996 டொலர்கள் என்னும் மட்டத்தை விஞ்சியதால் உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடு என்றும் அந்தஸ்தை இலங்கை அடைந்துள்ளது. இலங்கையோடு இணைந்து ஜோர்ஜியா, கோசோவோ ஆகிய நாடுகளும் அந்த அந்தஸ்துக்கு முன்னேறியுள்ளன.

இவ்வாறு வருமான மட்டத்தரவரிசையில் முன்னேறுவதன் மூலம் ஒரு நாடு பெருமையடைய முடியும். என்றாலும் அதன் உண்மையான நிலை குறித்து விமர்சனங்கள் பலவுண்டு. ஒரு நாடு கீழ்மட்ட நடுத்தர வருமான நாடு என்ற அந்தஸ்தை எட்டிய உடனேயே சர்வதேச ரீதியில் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இழக்க நேரிட்டது. குறிப்பாக சர்வதேச நிறுவனங்கள் வழங்கும் சலுகைக் கடன்கள் மானியங்கள் பொருளுதவிகள் போன்றவற்றை முற்றாக இழக்க நேரிடும். தற்போது மேல்மட்ட நடுத்தர வருமான நாடு என்னும் அந்தஸ்தை எய்தினால் எஞ்சியிருந்த அற்பசொற்ப சலுகைகளையும் முற்றாக இழக்க நேரிடும்.

வளர்முகநாடுகளாக பார்க்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் GST+ போன்ற சலுகைகளை இழக்க நேரிடலாம். சர்வதேச நிதிச் சந்தையில் சந்தை அடிப்படையிலான கடன்களையே பெறமுடியும். அவற்றின் வட்டி வீதங்கள் உயர்வாகவும் மீள் செலுத்தும் காலம் குறைவாகவும் இருக்கும். இதனால் கடன் தேவைளுக்காக சீனா போன்ற கந்து வட்டி கந்தன்களிடம் கையேந்த நேரிடும். சர்வதேச நிதி நிறுவனங்களாகிய உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற வளர்ந்த நாடுகளாக இவற்றை பார்ப்பதால் திட்டக் கடன்களை வழங்க தயக்கம் காட்டலாம். அவற்றின் செயற்றிட்டங்கள் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கே முன்னுரிமை வழங்கும்.

எனவே நாம் ஒரு உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடாக முன்னேறி விட்டோம் என்று அதிகம் மகிழ்ச்சியடைய முடியாது. சட்டியில் நீர் நிரப்பப்பட்டு அடுப்பில் வைக்கப்பட்டு தீமூட்டப்பட்ட நிலையில் அதில் விடப்பட்ட நண்டு ஆரம்பத்தில் நீரின் வெதுவெதுப்பான சூட்டில் ஆனந்த நீச்சல் போடுவது போன்றது தான் இந்த அற்ப சந்தோசமும்.

விழித்துக் கொண்டு உடனடியாக செயற்படாவிட்டால் அபாயம் காத்திருக்கிறது. ஏதோ 36 டொலர்கள் அதிகம் பெற்ற காரணத்தினால் உயர்மட்ட நடுத்தர வருமான அந்தஸ்து என்ற வகுதிக்குள் வந்தாகி விட்டது. ஆயினும் அடுத்த கட்டமாகிய உயர்மட்ட வருமானம் பெறும் நாடாகமாற வேண்டுமாயின் 12, 375 டொலர்களை விட அதிகம் பெற வேண்டும். இது ஏற்பட நீண்டகாலம் செல்லும். எனவே நடுத்தர வருமான நாட்டு அந்தஸ்து பொறிக்குள் சிக்கி சின்னாபின்னமடைய நேரிடும். இதனைத் தவிர்க்க முடியாது மறுபுறம் தலைக்குரிய மொத்த தேசிய வருமானம் ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ பொருளாதார மேம்பாட்டையோ அல்லது அந்த நாட்டின் சமூக நலனையோ சர்வதேச ரீதியில் அதன் அந்தஸ்தையோ வெளிப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. மாறாக அது பருமட்டான ஒரு அளவை மாத்திரமே.

ஒரு நாட்டின் உழைத்த மொத்த வருமானத்தை அந்நாட்டின் ஒரு ஆண்டு சனத்தொகையினால் பிரிப்பதன் மூலம் தலைக்குரிய மொத்த தேசிய வருமானம் பெறப்படுவது ஐக்கிய அமெரிக்க டொலர்களில் அது வெளிப்படுத்தப்படுகிறது.

அதாவது மொத்தமாக நாட்டின் வருமானத்தில் ஒவ்வொருவரும் பெறும் பங்கு எவ்வளவு என்பதை அது குறிப்பிடுகிறது. அன்று பிறந்த குழந்தைக்குரிய பங்கும் இதில் உள்ளடங்கும்.

2019 வகுப்பாக்கத்தின் படி இலங்கையின் தலைக்குரிய மொத்த தேசிய வருமானம் 4060 டொலர்களாகும். இன்றைய டொலர் நாணய மாற்று மதிப்பீட்டின் படி இலங்கை ரூபாவில் இதன் பெறுமதி சுமார் 714560 ரூபாவாகும். இதனை மாதாந்த அடிப்படையில் நோக்கினால். 59,546 ரூபாவாகும். அதாவது சராசரியாக இலங்கையரொருவர் கிட்டத்தட்ட 60000 ரூபாவை மாதாந்த வருமானமாகப் பெறுகிறார் என்பது இதன் கருத்தாகும். ஆனால் அப்படிப்பட்ட சமமான வருமானப் பங்கீடு இலங்கையில் இருக்கிறதா?

இலகு மொழியில் கூறுவதாயின் இலங்கையில் உழைக்கப்படும் தேசிய வருமானத்தில் அரைவாசிக்கும் மேற்பட்ட அளவினை மிகச் செல்வந்த மேட்டுக் குடிகளாகிய சமூகத்தின் 20 வீதமானோர் ஆண்டு அனுபவிக்கின்றனர். அதேபோல மிக வறிய, பஞ்சப் பரதேசிகளாகிய சமூகத்தின் 20% மானோர் 5 சதவீத வருமானப் பங்கினையே பெறுகின்றனர். ஆகவே வருமானப் பங்கீட்டில் மிகமோசமான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன.

இலங்கையின் குடித்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளனர் இன்னும் 600,000 பேரை அதில் இணைத்துக் கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஒரு உயர் மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடாக பரிணமித்ததாயின் சமூர்த்தி நிவாரணங்கள் குறைய வேண்டுமேயன்றி அதிகரிக்க கூடாது. பிராந்திய ரீதியிலான வறுமை கடும் வறுமை என்பதாகக் காணப்படுகின்றது. ஒருபோதும் இல்லாதவாறு பட்டினிச் சாவுகளும் அண்மைக்காலத்தில் நிகழ்ந்துள்ளன.

வறுமைக் குறிகாட்டிகள் முன்னேற்றங்களைக் காட்டுவதாக எடுத்துக் கொண்டாலும் இன்னும் நாட்டில் பாதிக்கப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் கணிசமான தொகையினர் உள்ளனர். குறிப்பாக யுத்த பூமிகளாக விளங்கிய பகுதிகளில் இத்தகைய சூழல் அச்சம் நிலவுகிறது.

மறுபுறம் சர்வதேச ரீதியில் ஒரு நாட்டின் சமூக பொருளாதார அந்தஸ்தை காட்டும் ஒரு குறியீடாக ஒரு நாட்டின் கடவுச் சீட்டுக்கு உள்ள ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையைக் குறிப்பிடலாம்.

உள் நுழைவு அனுமதிகளை (வீசா) இலவசமாக வழங்க வெளிநாட்டவர்களை “வாங்கோ வாங்கோ” என்று இலங்கை கூவிக் கூவி அழைக்கிறது. எனினும் 30 மைல் தூரத்தில் உள்ள இந்தியாவுக்கு இலங்கை கடவுச் சீட்டு உள்ளவர்களால் உள் நுழைவு அனுமதியை இலவசமாக பெறக்கூடியதாக இல்லை. மேலும் இலகுவாகத்தான் அங்கே செல்ல முடியுமா? எந்த நாட்டில் இலங்கைக் கடவுச் சீட்டு மதிப்போடு நோக்கப்படுகிறது?

ஆகவே உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற அந்தஸ்து வெறுமனே ஒரு மாயை மட்டுமே.

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை,
கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments (0)
Add Comment