காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்; இன்று 29ஆவது ஆண்டு!! (கட்டுரை)

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்; இன்று 29ஆவது ஆண்டு ஷுஹதாக்கள் தினம்

காத்தான்குடியில் 03.08.1990அன்று இரண்டு பள்ளிவாயல்களில் 103முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 29வருடங்கள் நிறைவு பெறுகின்றன.இன்றைய தினத்தை இங்குள்ள முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டித்து வருகின்றனர்.

காத்தான்குடி பள்ளிவாசல்களில் புலிகள் நடத்திய தாக்குதலிலேயே இந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

1990ம் ஆண்டு இலங்கையில் மிக மோசமான காலப் பகுதியாகும். யுத்த மேகங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சூழ்ந்திருந்தன. மரணபீதியும் இனமுரண்பாடும் நிறைந்து காணப்பட்டன. இந்தக் காலப் பகுதியில்தான் காத்தான்குடி பள்ளிவாசல்களில் படுகொலைகளும் இடம்பெற்றன.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு தமது சொந்த ஊரான காத்தான்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் மற்றும்அவர்களது உறவினர்கள் உட்பட ஏராளமானோர் புலிகளினால் குருக்கள்மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலரும் அடங்குகின்றனர்.

இச்சம்பவம் இனநல்லிணக்கத்திற்கு மோசமான ஒரு விளைவை ஏற்படுத்தியிருந்த நிலையில், மற்றொரு மிக மோசமான மிலேச்சத்தனமான சம்பவமாக பள்ளிவாயல் படுகொலைகள் இடம்பெற்றன.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், அதே பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகியவற்றில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர்.

பள்ளிவாசலுக்குள்ளே 103பேரும், பின்னர் 21பேருமாக மொத்தம் 124பேர் இச்சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்டனர்.03.08.1990இரவு இவ்விரண்டு பள்ளிவாசல்களிலும் புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புலிகள் நடத்திய குண்டுத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகளினால் 103முஸ்லிம்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். அன்று வெள்ளிக்கிழமை இரவு புனித இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும், சிறியவர் பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூச் செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்த போது, புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத் தாக்குதலையும் நடத்தினர்.

இதன் போது பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. புலிகள் பள்ளியினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் தெரிந்து கொண்டார்கள்.பலர் படுகாயங்களுடன் பின்னர் மரணமடைந்தார்கள்.இப்பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வந்த சிலரை உள்ளே அவசரமாகச் செல்லுங்கள் என பள்ளிவாசலுக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக பலர் இன்றும் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாசல் எங்கும் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டது.மரண ஓலங்கள் எங்கும் கேட்டன. தந்தை, மகன், ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று சகோதரர்கள் என்றெல்லாம் உறவுமுறையான பலரும் இதில் உயிரிழந்ததுடன் இன்னும் பலர் படு காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட புலிகள் தப்பித்துச் சென்றதையடுத்து குடும்ப உறவினர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இவ்விரண்டு பள்ளிவாயலையும் நோக்கிச் சென்று உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரையுமே காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து காயமடைந்வர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் அவர்கள் பின்னர் மட்டக்களப்பிலிருந்து இலங்கை விமானப் படையினரின் விமானத்தின் மூலம் அம்பாறை மற்றும் கொழும்பு போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலர் வைத்தியசாலைகளிலும் உயிரிழந்தனர்.

இச் சம்பவத்தில் குடும்பத் தலைவன் உயிரிழந்ததால் அக்குடும்பத்தினரே தமது குடும்பத்தை கொண்டு செல்வதற்கு கஷ்டப்பட்டனர். இளம் வயதில் விதவைகளான பல பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள் என இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் பல சோக வரலாறுகள் இருக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து பல மாதங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ஊனமுற்று வாழும் பலர் இன்றும் இதன் சாட்சிகளாக இருக்கின்றனர். இன்னும் உடம்பில் குண்டுச் சன்னங்களுடன் வாழும் சிலரும் இருக்கின்றனர்.

இச்சம்பவத்தில் ஊனமுற்று வாழும் ஒருவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

“1990ம் ஆண்டு ஓகஸ்ட் 3ம் திகதி எனது தாயைப் பார்ப்பதற்காக நான் தாயின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. 58நாட்கள் நிரம்பிய குழந்தையும் எனக்கிருந்தது. அப்போது பள்ளிவாசலில் அதான் சொல்லப்பட்டு தொழுகை ஆரம்பமாகியது. எனது தாயார் ‘தொழுகை ஆரம்பமாகி விட்டது. அவசரமாக பள்ளிக்கு சென்று தொழுது விட்டு வாருங்கள்’ என அனுப்பினார்.

அப்போது நான் மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு வந்தேன். பள்ளிவாசலின் முன்வளவில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் நின்று கொண்டிருந்தார். நானும் அவரும் அவ்விடத்தில் பேசிக்கொண்டு நின்றபோது அந்த வீதியினால் ஆயுதம் தரித்த சிலர் வரிசையாக வருவதைக் கண்டேன். அச்சம் அடைந்த நாங்கள் அவசரமாக வுழூச் செய்து கொண்டு பள்ளிக்குச் சென்று தொழுகையில் இணைந்து சுஜுது செய்யும் போது பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

தொழுகையில் இருந்த பலர் சரிந்து விழுவதைக் கண்டேன். நானும் காயங்களுடன் விழுந்து விட்டேன். எனது வயிற்றுப் பகுதியில் சிறுவன் ஒருவனும் விழுந்து கிடந்ததைக் கண்டேன்.

சில நிமிடங்களின் பின்னர் நான் உட்பட காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அம்பாறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ேடாம். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு பல மாதங்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று இன்று ஊனமுற்றவனாக வாழ்ந்து வருகின்றேன்.

பள்ளிவாசல் சம்பவத்திற்கு முன்னர் சுயமாக தொழிலில் ஈடுபட்டு தொழிலில் முன்னேற்றமாக காணப்பட்ட நான், இன்று ஊனமுற்றவனாக, பாரிய தொழில் எதுவும் செய்ய முடியாதவனாக இருக்கின்றேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

இவரைப் போன்று பலர் இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றனர். இந்த வகையில் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும். இந்த இரண்டு பள்ளிவாசல்களிலும் இன்றும் இதன் அடையாளங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. ஆண்டு தோறும் ஓகஸ்ட் 3ம் திகதி ஷூஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

2004ம் ஆண்டு நடைபெற்ற ஷுஹதாக்கள் தினத்தின் போது, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் மற்றும் ஏறாவூர் படுகொலைச் சம்பவம் உட்பட முஸ்லிம்கள் மீதான படுகொலைகளின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக இந்த தினத்தை தேசிய ஷுஹதாக்கள் தினமாக ‘ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம்’ பிரகடனம் அறிவித்திருந்தது.

கடந்த கால யுத்தம் இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இந்த பள்ளிவாசல்களில் இடம்பெற்ற படுகொலைகள் சம்பவம் ஒரு மிகப் பெரிய சான்றாகும். இலங்கையில் கடந்த கால இனமுரண்பாடுகள் இனிமேலும் தொடராதவாறு பாடுபடுவது நம் அனைவரின் கடமையாகும். இனநல்லிணக்கம் சீர் குலையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

Comments (0)
Add Comment