TNA நலிவடைந்து வரும் தேர்தல் வாய்ப்புகளை மேம்படுத்தும் முயற்சியா? (கட்டுரை)

இந்தப் பாராளுமன்றம் பிரச்சினைக்கு என்ன தீர்வென்பதை நன்கு அறியும். பிரச்சினைக்கான தீர்வை எப்போதும் அது தெரிந்தே வைத்திருக்கிறது. ஆனால் அந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்குத் தங்களிடம் துணிச்சல் இல்லை என்பதை உறுப்பினர்கள் அடிக்கடி வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ உட்பட எமது சகல தலைவர்களும் இந்தப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்னவென்பதை நன்கு அறிவார்கள். ஆனால் உரத்துப் பேசுகின்ற சொற்ப எண்ணிக்கையினரான பிற்போக்குவாதச் சக்திகளுக்கு முன்னால் இந்தத் தலைவர்கள் எல்லோரும் அடிபணிந்து விடுகிறார்கள்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எமக்கிருக்கும் இயலாமையே சமாதானமானதும், வளம் மிக்கதுமான இலங்கை ஒன்றை உருவாக்குவதில் காணப்பட்டிருக்கும் தோல்வியின் மையமாக விளங்குகின்றது. இலங்கை நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. தொடர்ந்தும் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. சகல இலங்கையர்களுக்குமான நீதியானதும், சமத்துவமானதுமான இலங்கையொன்றை உருவாக்கும் வரை நெருக்கடிகள் தொடரவே செய்யும்

கடந்த வாரம் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் புதிய அரசியலமைப்பின் அவசியம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களினால் முன்மொழியப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்க் கூட்டமைப்பின் நலிவடைந்து வரும் தேர்தல் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்று கருதப்படுகிறது.

ஆனால் அடிப்படையில் அந்த விவாதம் பலவீனமானதும், பயனற்றதுமான ஒரு முயற்சியாகப் போய் விட்டது. ஏனென்றால் உத்தேச புதிய அரசியலமைப்பின் முக்கியமான அம்சங்கள் ஒவ்வொன்று தொடர்பில் மக்கள் சமூகத்தின் சகல பிரிவினராலும் வெளிப்படுத்தப்பட்ட பல்வேறு அபிப்பிராயங்களையும், தெரிவுகளையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு சபையின் வழிகாட்டல் குழுவின் நிபுணர்களின் அறிக்கையை மையப்படுத்தியதாக விவாதம் அமையவில்லை.

விவாதம் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை வழங்கக் கூடியதான புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை குறித்ததாகும். இந்த விவகாரம் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற 1994 ஆம் ஆண்டு தொடக்கம் அடிக்கடி நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது.

கடந்த வாரத்தைய விவாதம் எம்.பிக்களின் கவனத்தைப் பெரிதும் பெறவில்லை. இரு நாட்களும் சபை பெரும்பாலும் வெறிச்சோடியே கிடந்தது.

விவாதத்துக்கான தேவை:

இந்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே விரும்பியது. கூட்டமைப்பு 2018 பெப்ரவரி உள்ளூராட்சித் தேர்தல்களில் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பகுதிகளில் கணிசமான அளவிற்கு செல்வாக்கை இழந்திருந்தது. 2013 வடமாகாணசபைத் தேர்தலிலும், 2015 பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும் போது உள்ளூராட்சித் தேர்தல்களில் அது பெற்ற வாக்குகள் கடுமையான அளவிற்கு வீழ்ச்சி கண்டிருந்தன. இதற்கு பெருமளவிற்குக் காரணமாக இருந்தது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கணிசமான அளவு அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்குக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் முன்னேற்றம் காண முடியாமல் போனமையே ஆகும்.

கூட்டமைப்பின் இந்த இயலாமை மன்னிக்க முடியாத ஒன்றாகத் தமிழ் மக்களால் கருதப்படுகின்றது. ஏனென்றால் உத்தியோகபூர்வமாகக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த போதும் கூட, ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் நேசஅணி போன்றே செயற்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மிகவும் நெருக்கமான ஒரு உறவைப் பேணி வந்திருக்கிறார்கள்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கவோ அல்லது வழிக்குக் கொண்டு வரவோ உறுதியான அரசியல் நடவடிக்கை எதனையும் முன்னெடுப்பதில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு இருக்கின்ற இயலாமையையே வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள்.

மாகாணசபைத் தேர்தல்கள் அல்லது ஜனாதிபதித் தேர்தல் வெகு விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தையாவது புதுப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவினதோ அல்லது அரசியலமைப்பு வரைவு தொடர்பான நிபுணர் குழுவினதோ அறிக்கையை விவாதிக்கவில்லை. மாறாக அதிகாரப்பரவலாக்கலின் அவசியம் குறித்தும், ஏனைய சர்ச்சைக்குரிய அரசியலமைப்புப் பிரச்சினைகள் குறித்துமே விவாதம் நடந்தது.

புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் நேரக் கூடிய பாரதூரமான விளைவுகள் பற்றி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எச்சரிக்கைத் தொனியில் பேசிய பிறகு உரையாற்றிய நிதியமைச்சர் மங்கள சமரவீர, கடந்த காலத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் குறித்தும், சிறுபான்மை இனத்தவர்களுடனான அதிகாரப் பகிர்வு குறித்தும் பேசிய ஒவ்வொரு தலைவரும் பிறகு ஒருசில பிற்போக்குவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கிய வரலாற்றை வரிசைக் கிரமமாக நினைவுபடுத்தினார். இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான பிரதான அரசியல் பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினை இருந்து வந்ததை விளக்கிக் கூறிய மங்கள சமரவீர, நாசகாரத்தனமான விளைவுகள் ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

‘பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க சிறுபான்மை இனத்தவர்களுடன் நல்லிணக்கத்தைக் காண்பதற்கு முயற்சி செய்ததன் காரணமாகவே கொல்லப்பட்டார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படும் என்ற அச்சத்தின் விளைவாகவே 1972 சதிமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. எமது கல்விமான்களும், அறிவுஜீவிகளும் கூறியிருப்பதைப் போன்று உள்நாட்டுப் போர் சிறுபான்மை இனத்தவர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டதன் நேரடி விளைவேயாகும்.

‘தாக்கிவிட்டு ஒளிந்து கொள்ளும் கெரில்லா நடவடிக்கையாகத் தொடங்கிய போராட்டம் முழு அளவிலான உள்நாட்டு யுத்தமாக மாறியதற்கு ஒரே காரணம் கறுப்பு ஜுலை என்பது எம் எல்லோருக்கும் தெரியும். அதேபோன்றே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களும் அளுத்கம மற்றும் திகனவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இடம்பெற்றவையே. விசாரணைகள் இன்னமும் நடைபெற்று வருகின்ற போதிலும், இந்த வன்செயல்கள் சில முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதமயப்படுத்துவதில் பங்காற்றியது என்பதில் சந்தேகமில்லை.

‘புதிய அரசியலமைப்புக்கள் எண்ணற்ற குழுக்கள் மற்றும் முடிவற்ற விவாதங்கள் எல்லாம் இடம்பெற்ற போதிலும் கூட இன்னமும் நாம் இன்று எமது அரசியலிலும், சட்டத்திலும் பெரும்பான்மை இனவாதம் ஆழக்கால் ஊன்றியிருப்பதையே காண்கிறோம். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எமக்கிருக்கும் இயலாமையே சமாதானமானதும், வளம் மிக்கதுமான இலங்கை ஒன்றை உருவாக்குவதில் காணப்பட்டிருக்கும் தோல்வியின் மையமாக விளங்குகின்றது. இலங்கை நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. தொடர்ந்தும் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. சகல இலங்கையர்களுக்குமான நீதியானதும், சமத்துவமானதுமான இலங்கையொன்றை உருவாக்கும் வரை நெருக்கடிகள் தொடரவே செய்யும்.

இந்தப் பாராளுமன்றம் பிரச்சினைக்கு என்ன தீர்வென்பதை நன்கு அறியும். பிரச்சினைக்கான தீர்வை எப்போதும் அது தெரிந்தே வைத்திருக்கிறது. ஆனால் அந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்குத் தங்களிடம் துணிச்சல் இல்லை என்பதை உறுப்பினர்கள் அடிக்கடி வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ உட்பட எமது சகல தலைவர்களும் இந்தப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்னவென்பதை நன்கு அறிவார்கள். ஆனால் உரத்துப் பேசுகின்ற சொற்ப எண்ணிக்கையினரான பிற்போக்குவாதச் சக்திகளுக்கு முன்னாள் இந்தத் தலைவர்கள் எல்லோரும் அடிபணிந்து விடுகிறார்கள்.

‘பௌத்தர்களுக்கு முஸ்லிம்கள் பயப்படாத, தமிழர்களுக்குச் சிங்களவர்கள் பயப்படாத, கிறிஸ்தவர்கள் அமைதியாக வழிபாடு செய்யக் கூடிய இலங்கை, உண்மையில் ஐக்கியப்பட்டதொரு இலங்கை இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற குறிப்பிட்ட சில உறுப்பினர்களுக்கு ஆபத்தானதாகத் தெரிகிறது என்பதைக் கவலையுடன் கூறிக் கொள்கிறேன்’ என்று நிதியமைச்சர் தனது நீண்ட உரையில் கூறினார்.

விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, விரைவில் பதவியிலிருந்து இறங்கப் போகின்ற தற்போதைய அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படக் கூடாது என்றும், அடுத்து வரப் போகின்ற அரசாங்கத்திடமே அரசியலமைப்பு உருவாக்க முயற்சி ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக் குறித்தும், மக்களிடம் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகாரம் பெறப்படாமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் குறித்தும் நீண்ட நேரம் பேசிய ராஜபக்ஷ, தாங்கள் அரசியலமைப்பு வரைவு ஒன்றைத் தயாரிக்கப் போவதாகவும் அதனை மக்களின் அங்கீகாரத்துக்காகச் சர்வசன வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பிக்கப் போவதாகவும் கூறினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்த 19 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஆதரவைப் பெறுவதற்காக 20 ஆவது திருத்தமொன்றும் கொண்டுவரப்படும் என்று நம்பிக்கையூட்டியதன் மூலமாகத் தனது தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

’19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக சில மாதங்களில் இன்னொரு திருத்தம் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி கூறினார். அந்த உறுதிமொழியை நம்பி 20 ஆவது திருத்தத்தை எதிர்பார்த்த வண்ணமே 19 ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றினோம்’ என்று கூறிய ராஜபக்ஷ, பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை அடையாளங்காட்ட 19 ஆவது திருத்தம் தவறி விட்டது என்று குற்றஞ்சாட்டினார்.

புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு அரசியலமைப்புச்சபை மற்றும் வழிநடத்தல் குழு ஆகியவை ஏற்படுத்தப்பட்டதைக் கண்டனம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த வருடம் ஜனவரியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணம் நாட்டைப் பிளவுபடுத்தும் என்று குறிப்பிட்டார்.

‘அரசியலமைப்புச் சபையில் வழிநடத்தல் குழுவிடமிருந்து வந்த ஒரு அறிக்கை என்று கூறிக் கொண்டு பிரதமர் கடந்த ஜனவரியில் பாராளுமன்றத்தில் ஆவணமொன்றைச் சமர்ப்பித்தார். அது அரசாங்கத்தின் அறிக்கையல்ல. ஆனால் நிபுணர்களின் அபிப்பிராயத்தை உள்ளடக்கியிருக்கிறது என்று அவர் கூறினார். இந்த நாட்டை 9 அரைச் சுயாதீன அரசுகளாகப் பிரிப்பதற்கும், தனியான பொலிஸ் அதிகாரங்களை நிறுவுவதற்கும் வழிவகுக்கும் அந்த அறிக்கையை நாம் எதிர்க்கிறோம். மாகாணங்களுக்குப் பரவலாக்கப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசாங்கம் திரும்ப எடுத்துக் கொள்வதை தடுக்கின்ற ஏற்பாடுகள் அந்த அறிக்கையில் இருந்தன. அந்த அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனாலும், அரசாங்க சார்பற்ற அமைப்புக்களைச் சேர்ந்த ஒரு குழுவினாலும் கடந்த இரண்டரை வருட காலமாகத் தயாரிக்கப்பட்டது என்ற வதந்திகள் உள்ளன’ என்றும் ராஜபக்ஷ கூறினார்.

ராஜபக்ஷவைப் பொறுத்தவரை ’13 பிளஸ்’ என்று அறியப்பட்ட அவரது யோசனையே சிறந்தது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதை அவரது அன்றைய உரையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. தான் பிரேரித்த ’13 பிளஸ்’ நாட்டை 9 மாகாணங்களாகப் பிரிக்கும் நோக்குடனானது அல்ல. மாறாக மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இரண்டாவது சபையொன்றை நிறுவும் நோக்குடனானதே என்றும், அது மத்தியில் அதிகாரத்தைப் பகிர்வதே தவிர நாடு பிளவுபடுவதற்கு வழிவகுக்கக் கூடியதாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment