புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும் !! (கட்டுரை)

2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும்.

‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது.

புதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்லாட்சி அரசாங்கம், தனது முதலாவது ஆண்டில் பயணித்த திசையே, புதிய அரசமைப்பைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டது.

இரண்டாவது ஆண்டில், புதிய அரசமைப்பின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் யாப்புச் சீர்திருத்தங்கள் பற்றியும், சர்வசன வாக்கெடுப்பு நடத்துதல் எனும் முன்மொழிவு, ஒரு துர்ச்சகுனமாகும். அத்தகைய செயன்முறை, தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடைய சட்டவாக்கம் எதையும், நீர்த்துப்போகச் செய்யும் வஞ்சகமான ஒரு அணுகுமுறையாகும். இதுவும் எமக்கு, விளங்கியதாகத் தெரியவில்லை.

கடந்த நான்காண்டுகளில், தேசியப் பிரச்சினையைக் கனதியாகக் கையாளும் முயற்சிகள், அந்நியக் குறுக்கீடு பற்றிய விவாதங்களாக முடங்கும் அபாயம் மெய்யானது. இதைச் சரிவரத் தமிழ்த் தலைமைகளும் கையாளவில்லை.

இவ்வாண்டின் தொடக்கம் வரை, தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசமைப்பின் சாத்தியம் பற்றிப் பேசினார்கள். இது அறியாமையால் நிகழ்ந்தது என்று நான் நம்பவில்லை; இது அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு.

இது அறியாமையால் நிகழ்ந்தது என்று நாம் நம்புவோமாயின், அரசியல் ஞானசூனியங்களைத் தெரிவு செய்த தவறுக்கு, எமக்கு இதைவிடக் கொடுந்தண்டனை அவசியம்.

புதிய அரசமைப்புகான சகல கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. அத்தோடு சேர்த்து, ‘தமிழ் மக்களுக்கான தீர்வு’ என்று கூட்டமைப்பினர் கூறிவந்த கதைகளும் முடிவுக்கு வந்துள்ளன. இப்போது வினா யாதெனில், எதனடிப்படையில் தமது விருப்புக்குரிய ஜனாதிபதி வேட்பாளருக்கு கூட்டமைப்பினர் ஆதரவு திரட்டப்போகிறார்கள் என்பதுதான். அடுத்த, ஐ.தே.க வேட்பாளருக்கே, கூட்டமைப்பினர் வாக்குக் கேட்டப் போகிறார்கள் என்பது, எல்லோரும் அறிந்த இரகசியம்.

இலங்கையின் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளன. அரசியல் தீர்வு என்பதன் பெயரால், ஆடப்பட்ட ஆட்டங்களையும் ஏமாற்றங்களையும் தமிழ் மக்கள் நன்கறிவர்.

இதில், பல நாடகங்கள் தமிழ்த் தலைமைகளின் துணையுடன் அரங்கேறின என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக, வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஒருவரால், வெற்றிபெற முடியாது.

இலங்கையின் சிங்களத் தேசிய மனோநிலை, அவ்வாறானதொரு நிலையை அடைந்துள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக, ஓர் உத்தரவாதத்தை இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களும் தரப்போவதில்லை.

இதன் பின்னணியில், யாருக்கும் ஆதரவு அளிக்காமல், ஒதுங்கியிருக்க தமிழ் அரசியல் தலைமைகள் தயாரா என்பதே இப்போதுள்ள வினா. ஆனால், அவ்வாறு நிகழாது என்பதையும், இங்கு கூறிவைக்க விரும்புகிறேன்.

அதிகாரம், இன்னோர் அதிகாரத்தின் துணையைத் தேடும். அதிகாரம், மக்கள் நலன் சார்ந்ததல்ல; தமிழ் அரசியல் தலைமைகளிகளின் அதிகாரத்துக்கான அவா, இன்னொருமுறை அரசியல் தீர்வின் பெயரால், புதிய அரசமைப்பின் பெயரால், தமிழ் மக்களின் எதிர்காலத்தை அடகுவைக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும், மக்களுக்கு நன்மை இல்லை. எந்த ஆட்சியும் தன்னைக் காக்க, அடக்குமுறையை வலுப்படுத்தும். ஜனநாயக விரோத நோக்கத்துடன் பயணிக்கும். இதை எதிர்வுகூறுவது தீர்க்கதரிசனமல்ல.

அடுத்த தேர்தல்கள் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்காது. எனவே, மக்கள் மாற்று வழியைத் தொடரவேண்டிய வேளை இது. மக்கள், ஜனநாயகத்துக்கேற்ற மாற்று அரசியல் பாதையை உருவாக்க, கடுமையாக உழைக்க வேண்டும்.

Comments (0)
Add Comment