தீர்க்கதரிசனமிக்க தலைமைத்துவத்தை நாடி நிற்கும் இலங்கை! (கட்டுரை)

‘சிங்கப்பூரின் அபிவிருத்திக் காலகட்டத்தில் அந்நாட்டு மக்கள் ஜனநாயக சுதந்திரங்களை அனுபவித்தார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும். மிகவும் இறுக்கமான ஒரு கட்டுக்கோப்புக்குள் தெளிவாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலக்கினை நோக்கி சிங்கப்பூரை இட்டுச்செல்ல லீ குவான்யூவின் தலைமைத்துவம் பாரிய பங்கினை ஆற்றியது’

அரசன் எவ்வழியோ குடிமகனும் அவ்வழியே என்று ஒரு முதுமொழி நம்மிடையே வழக்கில் உண்டு. தொழிலாளர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மனப்பாங்கு கீழைத்தேய சமூகங்களில் காணப்படும் ஒரு மரபுரிமையாகவும் பார்க்கப்படுகிறது. “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ” என்று கேள்வி கேட்கும் தைரியம் அத்தகைய சமூகங்களில் ஒருசிலருக்கே உண்டு. நாடுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் பண்புகளுக்கு ஏற்ப சாம்ராச்சியங்கள் கட்டியெழுப்பப்பட்டமையும் உண்டு. அவ்வாறே தலைமைத்துவக் குறைபாடுகளால் வீழ்ந்துபோன நாடுகளும் உண்டு.

இன்றைய ஜனநாயக பாரம்பரியங்களுடன் கூடிய நாடுகளிலும் கூட தலைமைத்துவம் என்பது மிகவும் முக்கிய ஒரு தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. தலைமைத்துவங்கள் பல வடிவங்களில் காணப்பட்ட போதிலும் சிலவகையான தலைமைத்துவப் பண்புகள் ஒருநாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் உயிர்நாடியாகச் செயற்பட முடியும். சில வெற்றிகரமான நாடுகளில் இத்தகைய தலைமைத்துவங்கள் அதிகாரத் தலைமைகளாக (Authoritarian Leadership) கட்டளை வழங்கும் தலைமைகளாக, சொல்வதைச் செய்யும் அதிகாரத்தை மட்டுமே நம்பியிருக்கும் தலைமைகளாக இருந்துள்ளமையை நாம் அவதானிக்கலாம்.

இலங்கைத் தலைவர்கள் கூட சிலாகித்துப் போற்றும் சிங்கப்பூரின் சிற்பி லீ குவான்யூ மலாய் கட்டமைப்பிலிருந்து சிங்கப்பூர் உதைத்து வெளியேற்றப்பட்டபோது ஏற்பட்ட வலியை பொருளாதார சாதனையாக மாற்றிக் காட்டினார். குடிதண்ணீருக்குக் கூட அண்டை நாட்டை நம்பியிருந்த சிங்கப்பூரை குறுகிய காலத்திற்குள் பொருளாதார வல்லமைமிக்க ஒரு நாடாக மாற்றிக் காட்டினார். ஆனால் அந்த மாற்றம் அதிகாரமிக்க ஒரு தலைமைத்துவத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரின் அபிவிருத்தி காலகட்டத்தில் அந்நாட்டு மக்கள் ஜனநாயக சுதந்திரங்களை அனுபவித்தார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும். மிகவும் இறுக்கமான ஒரு கட்டுக்கோப்புக்குள் தெளிவாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலக்கினை நோக்கி சிங்கப்பூரை இட்டுச்செல்ல லீ குவான்யூவின் தலைமைத்துவம் பாரிய பங்கினை ஆற்றியது. தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆட்சியைப் பேண விமர்சகர்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டன. கட்டாய இராணுவ சேவை போன்ற விடயங்கள் மக்களின் விருப்பு வெறுப்புகளை பெரிதும் பாதித்தன. ஆயினும் தீர்க்க தரிசனம் உள்ள (Visionary Leadership) தலைமைத்துவத்தின் காரணமாக சிங்கப்பூர் வளர்ச்சிப் பாதையில் பயணித்தது.

இதே பாணியிலான தலைமைத்துவத்தை நாம் கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோனேஷியா, தென்கொரியா போன்ற நாடுகளிலும் காணலாம். இந்த நாடுகளில் காணப்பட்ட அதிகாரத் தலைமைத்துவங்கள் சிங்கப்பூரைப் போலன்றி இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக நேர்ந்தது. சிங்கப்பூர் இந்நாடுகளில் இருந்து வேறுபடக் காரணம் அங்கு மேலே சொன்ன அதிகாரத் தலைமைகள் மேற்கொள்ளும் இலஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றன அங்கு ஏற்படாமையே ஆகும். லீ குவான்யூவின் தலைமைத்துவம் இவற்றை ஒழிப்பதையும் ஒழுக்கம் சட்டத்திற்கு கட்டுப்படும் சமூகத்தை உருவாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டது.

இவ்வாறு மக்கள் மத்தியில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு நாட்டை முன்னோக்கிப் பயணிக்க வைக்கும் ஆளுமைமிக்க, கவர்ச்சிகரமான அல்லது ஜனரஞ்சகமான தலைமைத்துவங்கள் (Charismatic Leadership) நாடுகளில் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

ஒரு தீர்க்கதரிசனமிக்க தலைமைத்துவமானது ஒரு நாட்டை எங்கே கொண்டு செல்ல வேண்டுமென தெளிவான ஒரு இலக்கினைக் கொண்டிருக்க வேண்டும். அதில் தனது சொந்த விருப்பு வெறுப்புகளையோ கட்சி அரசியலையோ முதன்மைப்படுத்தி நாட்டை பாதாளத்தில் தள்ளிவிடக்கூடாது. அத்தகைய தலைமைத்துவம் சவால்களை ஏற்பதாகவும் ஏற்படக்கூடிய இடர் அபாயங்களை சந்திக்கும் தைரியம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். மாறாக பிரச்சினைகள் ஏற்படும்போது அதிலிருந்து தப்பிக்க எத்தனிக்கும் ஒன்றாக இருக்கக்கூடாது.

அத்தோடு ஆட்சிமுறையில் உள்ள தனக்கு கீழே உள்ளவர்களின் கருத்துகளுக்கு செவிமடுப்பதாகவும் அவர்களுடைய நியாயங்களைப் புரிந்து செயற்படுவதாகவும் இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவன் தனது குழுவினருக்கு செவிமடுப்பவராகவும் இருக்க வேண்டும். அக்குழுவினால் சுயவிருப்பின் பேரில் பின்தொடர வேண்டுமேயன்றி அதிகாரப் பிரயோகக் கட்டுப்பாட்டினால் அல்ல.

தீர்க்கதரிசனமிக்க தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கும் (Taking Responsibility) பண்பினைக் கொண்டிருக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கான பொறுப்பை சுற்றியிருப்பவர்கள் மீது சுமத்திவிட்டு தான் தப்பித்துக்கொள்ளும் வகையில் ‘ஆமை தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப்போல’ தனது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள முயலும் ஒன்றாக இருக்க முடியாது. மாறாக தனது செயலுக்கான பொறுப்பை வெளிப்படையாக ஏற்று தனது நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமையவேண்டும்.

ஒரு தீர்க்கதரிசனமிக்க தலைவர் ஒரு நாட்டை அது தற்போதுள்ள நிலையிலேயே வைத்துக்கொண்டு மக்களை சந்தோஷப்படுத்திக்கொண்டு காலத்தை ஓட்ட முடியாது. தற்போதுள்ள நிலையை மாற்றியமைத்து நீண்டகாலத்தில் நிலைத்திருக்கக்கூடிய முன்னேற்றகரமான தொலைநோக்கை நோக்கி நகர்வதே ஒரு தீர்க்கதரிசனமிக்க தலைமைத்துவமாக இருக்கமுடியும். அத்தகைய தீர்க்கதரிசனமுள்ள ஒரு தலைவர் சிறந்த பேச்சாற்றலைக் கொண்டிருப்பது அவசியம்.

அப்போதுதான் தனது கனவுகளை மக்களுக்கு முறையாகவும் விளக்கமாகவும் எடுத்துச் செல்ல முடியம். சில தலைவர்கள் பிறப்பிலேயே அத்தகைய திறன்களைக் கொண்டிருப்பார்கள். அவர்களது உடல் அமைவுகள், புன்னகை, கண் தொடர்பு, கேள்வி கேட்கும் தன்மை போன்றன அவர்களை கவர்ச்சிகரமான (Chrismatic) தலைவர்களாக மாற்றிவிடும் ஆளுமைமிக்க பிரபலமிக்க தலைமைத்துவங்கள் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துபவராகவும் கருணையுள்ளம் வாய்ந்தவராகவும் நம்பிக்கையுடன் செயற்படுபவராகவும் சுயமாகவே செயற்படுபவராகவும் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் பன்முகப் புலமை கொண்டவராகவும் இருப்பது அவசியம்.

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மேலே சொன்ன தலைமைத்துவங்களில் எவற்றைக் காணமுடிகிறது என்ற வினா தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. அடிப்படையில் அரசியலுக்குள் நுழைபவர்களின் தலைமைத்துவம் பற்றி பாரிய பிரச்சினைகள் உள்ளன. அடிப்படைக் கல்வித்தகுதி, சமூக அக்கறை, அரசியல் சிந்தனை முதிர்ச்சி போன்ற மிகப்பெரிய கேள்விக்குறிகள் உள்ளன.

பணம், அதிகாரம், கட்டப்பஞ்சாயத்து அடிதடி போன்றவற்றில் முன் நிற்பவர்களோ அல்லது போதைப்பொருள் வர்த்தகர்களின் பினாமிகளோ அதிகளவில் அரசியலுக்குள் நுழைகின்றனர். அரசியலை ஒரு வியாபாரமாகப் பார்க்கின்றனர். ஒரு அடிப்படை அரசியல்வாதியாக பிரதேச சபையில் போட்டியிடவே பெருமளவில் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. தேசிய மட்டத்தில் அரசியலில் ஈடுபட கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டி ஏற்படும். இந்நிலையில் போட்ட பணத்தை உழைத்துக்கொள்வதே பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்படுவது தவிர்க்க முடியாது. அது தவிர அரசியல் நெருக்கடிகளின்போது கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு அரசியல்வாதிகள் விலை பேசப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலத்தில் இலங்கையில் பதிவாகியமையை எவரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.

இன்னும் சிறிது காலத்தில் இலங்கை தேர்தல்களைச் சந்திக்க இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் தீர்க்கதரிசனமிக்க தலைவர்களையோ ஆளுமைமிக்க தலைமைத்துவங்களையோ காண்பது அரிதாக உள்ளது. இலங்கையின் ஜனரஞ்சக தலைமைத்துவங்கள் பெரும்பாலும் அதிகாரத்தினை பிரயோகிப்பவனவாகவோ அல்லது சண்டித்தனத்தின் மூலம் ஜனரஞ்சகமானதாக காட்டிக்கொள்வதாகவோ மட்டுமே இருந்துள்ளன.

எதிர்வரும் காலங்களிலும் நாட்டுக்கான துரதிருஷ்டியுடன் செயற்படும் ஆளுமைகளை தெரிவு செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவர். இவர்களும் முன்னுள்ள தெரிவுகள் மிகச்சிறந்த முதன்மைத் தெரிவுகளாக இருக்காது. மாறாக இரண்டாவது, மூன்றாவது அல்லது அதைவிட குறைந்த மட்டத்தில் உள்ள ஒரு அபேட்சகரையே மக்கள் சிறந்த தெரிவாக தெரிவுசெய்ய வேண்டி ஏற்படும். இது முதிர்ச்சியான ஒரு ஜனநாயக நாடாக கருதப்படும் இலங்கையின் ஒரு சாபக்கேடாகவே பார்க்கப்பட வேண்டியிருக்கும்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments (0)
Add Comment