காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம்!! (கட்டுரை)

இந்தியாவின் புதிய வரலாறு, சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு தொடங்குகிறது.
ஒரு மாநிலத்தை, இந்தியாவுடன் இணைப்பதற்காக அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகை, இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அரசமைப்பின் பிரிவு 370இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கு, பாரதிய ஜனதாக் கட்சி, ஜனசங்க காலத்திலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

குறிப்பாக, “காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த, டொக்டர் ஷ்யாம் பிராசாத் முகர்ஜி, இராஜினாமாச் செய்தார். அவர் தொடங்கிய பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில், ‘அரசியல் சட்டப் பிரிவு 370 இரத்து’ என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகவே கொடுத்து வந்திருக்கிறது.

இரண்டு எம்.பிக்கள் மட்டுமே பெற்ற நேரத்திலும், இப்போது ஆட்சிக்கு வந்த நேரத்திலும் அந்த வாக்குறுதியில் உறுதியாக இருந்திருக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.

பா.ஜ. கட்சிக்கு இத்துடன் ஐந்து முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதலில் அமரர் வாஜ்பாய், 1996இல் 13 நாள்கள் மட்டுமே பிரதமராக இருந்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால், இராஜினாமாச் செய்தார்.

பின்னர் 1998இல், அக்கட்சி மீண்டும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பா.ஜ.கவின் அடிப்படைக் கொள்கைகளான, ‘அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது’, ‘370 ஆவது பிரிவை நீக்குவது’, ‘பொதுச் சிவில் சட்டம்’ போன்றவற்றைச் செயல்படுத்த இயலவில்லை.

பின்னர் 1999இல், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த போதும், அப்போதிருந்த பிரதமர் வாஜ்பாய் ஆட்சி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சி நீடித்தது. அந்த முறையும் இந்த அடிப்படைக் கொள்கைகளை அமுல்படுத்த, அக்கட்சிக்கு வாய்ப்பு இல்லை. ‘கூட்டணிக் கட்சிகள் தேவை; தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ என்ற வியூகத்தின் அடிப்படையில், இந்த மூன்று அடிப்படைக் கொள்கைகளும் இல்லாத ஒரு பொதுச் செயற்றிட்டத்தை, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கி, அந்தச் செயற்றிட்டத்தின்படிதான் செயல்படுவோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் அறிவித்தார்கள்.

சென்னையில், 1999இல் நடைபெற்ற ஒரு பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், ‘சென்னைப் பிரகடனம்’ என்று அறிவித்து, “தேசிய ஜனநாயக கூட்டணியின் செயற்றிட்டமே, எங்களது செயற்றிட்டம்; பா.ஜ.கவுக்கு என்று தனியாக ஒரு செயற்றிட்டம் இல்லை” என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த அளவுக்கு அக்கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டியிருந்ததாலும் அரசமைப்பின் பிரிவு 370 உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்றுவதில், ஆர்வம் காட்டவில்லை. மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோசி போன்றவர்களுக்கு எல்லாம், தனிப்பெரும்பான்மை என்ற ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான், நான்காவது முறையாக, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த போது, தனிப்பெரும்பான்மையுடன் பிரதமரானார் நரேந்திரமோடி. ஆனால், அந்தத் தனிப் பெரும்பான்மை, மக்களவையில் இருந்தது; மாநிலங்களவையில் அவர் எதிர்பார்த்த தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முழுக்க முழுக்க, மதசார்பற்ற கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளின் பலம்தான், மாநிலங்களவையில் அதிகமாக இருந்தது. இரண்டு அவைகளிலும் நிறைவேற வேண்டிய சட்டமூலங்களுக்கு ஆதரவு திரட்டுவதில், பா.ஜ.கவுக்கு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா ஆகிய இருவருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது.

ஆகவே, 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், இக்கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், இரத்தாகும் சட்டமூலத்தைக் கொண்டு வருவதில் தயக்கம் காட்டியது. இப்போது ஐந்தாவது முறையாக, ஆட்சிக்கு வந்திருக்கும் பா.ஜ.கவின் பிரதமர் நரேந்திரமோடி, முழுக்க முழுக்க மக்களவையில் தனிப்பெரும்பான்மையும் மாநிலங்களவையில் சட்டமூலங்களுக்கு ஆதரவு திரட்டும் அளவுக்குக் கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட்டார்.

அதன் விளைவுதான், முதலில் மாநிலங்களவையில் காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவைக் குடியரசுத் தலைவர் ஆணை மூலம் இரத்து செய்தார். அதற்கான தீர்மானத்தை, முதலில் மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

மாநிலங்களவையில், இந்தச் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் கொறடாவே அறிவித்து, பதவியை இராஜினாமாச் செய்தமையானது, மற்றைய மாநிலக் கட்சிகளை மிரள வைத்தது.

வடஇந்திய மாநிலங்களில், சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இன்னும் அம்மக்கள் மத்தியில் பசுமையாகவே இருக்கின்றன. பாகிஸ்தான் மீதான, தாக்குதலுக்குப் பிறகு, அந்த மாநிலங்களில் உள்ள மக்கள், “இந்தியாவைக் காப்பாற்ற நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்” என்று, தீர்க்கமாக நம்புகிறார்கள்.

அதன் வெளிப்பாடுதான், வட மாநிலங்களில், பா.ஜ.க தேர்தல் வெற்றி பெற்றது என்று சொல்வதை விட, சுனாமி போல் வெற்றி பெற்று, அதிக இடங்களை, வட மாநிலங்களில் ஜெயித்தது. அசுர பலத்தில் இருக்கும் பா.ஜ.கவை முறைக்க, எந்தக் கட்சிகளும் தயாராக இல்லை.

குறிப்பாக, காஷ்மிர் விவகாரத்திலோ, பாகிஸ்தான் விவகாரத்திலோ மத்திய அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக வாக்களித்தால் தேர்தலில் நம்மை, மக்கள் துடைத்து எறிந்து விடுவார்கள் என்ற அச்சம் அனைத்துக் கட்சிகள் மத்தியிலும் உருவானது.

அதன் எதிரொலிதான், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதனால், மூன்று முக்கிய அடிப்படை கொள்கைகளில் ஒன்றான, ‘காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இரத்துச் செய்தல் என்ற முதல் வெற்றியை மாநிலங்களவையில் எவ்வித சிரமும் இன்றி, பிரதமர் மோடி பெற்றார். மக்களவையில் இதன் வெற்றி ஏற்கெனவே முடிவாகி விட்ட ஒன்று. விளைவு, அரசமைப்பின் 370ஆவது பிரிவு, இரத்துச் செய்யப்பட்டு விட்டது. இனி எஞ்சியிருக்கும், இரண்டு அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதாகும். இன்னொன்று, பொதுச் சிவில் சட்டத்தை, இரத்துச் செய்வதாகும்.

அயோத்தி வழக்கு, தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. அதன் மீதான தீர்ப்பு வெளிவந்ததும், இராமர் கோவில் கட்டும் விவகாரம் சூடுபிடிக்கும்.

பொதுச் சிவில் சட்டத்தைப் பொறுத்தமட்டில், ‘முத்தலாக் இரத்து’ போன்ற சட்டமூலங்களை நிறைவேற்றியிருப்பது, அதன் முன்னோட்டம்தான். ஆகவே, மீதியிருக்கும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளையும் பா.ஜ.க நிறைவேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அரசியல் ரீதியாக, மதசார்பின்மை ஒரு சித்தாந்தமாகவும் இந்துத்துவா இன்னொரு சித்தாந்தமாகவும் இந்திய அரசியலில் எதிர்எதிர் திசையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இருக்கும் வரை, மதசார்பின்மை என்ற இலக்கை நோக்கி, அக்கட்சி சென்றாலும், அவ்வப்போது வாக்கு வங்கிக்காக ‘நவீனத்துவ இந்துத்துவா கொள்கை’களையும் அக்கட்சி கடைப்பிடித்தது என்றே சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி, இராமர் கோவில் கட்ட, ‘கரசேவை’ அனுமதித்தது, மண்டல் ஆணைக்குழுவுக்கு எதிராகப் போராடியது, ராகுல் காந்தி சிவாலயங்களுக்குச் சென்றது என்று பல்வேறு விடயங்களைப் பட்டியலிடலாம்.

ஆனால், பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் மதசார்பின்மை மற்றும் இந்துத்துவா என்ற இரட்டை நிலைப்பாட்டுக்கு மவுசு இல்லை. காங்கிரஸ் கட்சியை, இந்துத்துவா வாக்காளர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விட்டது.

‘ரபேல்’ விமானம் வாங்கியது பற்றிப் பேசியது, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்துக் கேள்வி எழுப்பியது, பொருளாதாரத்தில் பின்தங்கிய, முற்பட்ட வகுப்பினருக்குப் பத்துச் சதவீத இடஒதுக்கீடு பற்றிக் கேள்வி எழுப்பியது போன்றவை, காங்கிரஸ் கட்சியைத் தேசப்பற்றின் மீது ஆர்வமாக இருக்கும் வாக்காளர்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது.

படு தோல்விடைந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சி, முத்தலாக்’, ‘காஷ்மிர்’ ‘போன்ற சட்டமூலங்களின் வாக்கெடுப்பில், தன்கட்சி எம்.பிக்களையே கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாத கையறுந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. பலவீனமடைந்த காங்கிரஸ் கட்சியை நம்பி, வேறு மாநிலக் கட்சிகள் அணி வகுக்கத் தயாராக இல்லை.

ஆகவே, இதுதான் சரியான தருணம் என்று யோசித்து, முடிவு எடுத்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியும் அக்கட்சியை நம்பியிருக்கும் கூட்டணிக் கட்சிகளும் திக்குமுக்காடும் வகையில், பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.

மக்கள் அளித்த வாக்கு, பிரதமர் மோடிக்கு இந்தப் பலத்தைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம், காங்கிரஸ் கட்சி எழுதிய சுதந்திரப் போராட்ட வரலாறு, இப்போது புத்தம் புதிதாகத் திரும்ப எழுதப்படுகிறது.

இந்த வரலாற்றுப் புத்தகத்தில், காஷ்மிருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து என்பது, முதல் அத்தியாயம். பிற அத்தியாயங்கள் இனித் தொடருவதற்குத் தடை ஏதும் இல்லை.

Comments (0)
Add Comment