நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்காமல் ஜனாதிபதித் தேர்தல் ஆணையை மீறும் செயல்!! (கட்டுரை)

இந்த அரசாங்கம் பல தடவை தடம் புரண்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பல தடவை தூக்கி நிறுத்தியது. புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியுறக் கூடாதென்பதற்காகவே கூட்டமைப்பு அவ்வாறு செய்தது என்று கூறினார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன். தினகரன் வாரமஞ்சரிக்கான செவ்வியில் புதிய அரசியலமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவுற்றிருந்தால் தற்போது வெற்றி மீது வெற்றி வந்து ஆட்சியாளர்களை ஆட்கொண்டிருக்கும். அதனை சாத்தியமற்றதாக்கியது யார் என்று கேள்வி எழுப்பினார். அவரது பேட்டி வருமாறு….

கேள்வி:- இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முட்டுக்கொடுத்து, தமிழ் மக்களை தொடர்ச்சியாக புறக்கணிப்பதாக மாற்று தமிழ்த் தலைமைகளும், ஏனைய கட்சிக்காரர்களும் விமர்சிக்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் ஐக்கிய தேசிய கூட்டமைப்புக்கு முட்டுக்கொடுத்து அதனைப் பாதுகாக்கின்றது?

பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலத்தில் மாகாண ஆளுநர்களுக்கான கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நானும், சம்பந்தன் ஐயாவும் போனோம். அக்கூட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் வரவில்லை. மிகுதி 7மாகாணங்களுக்கான முதலமைச்சர்களும்,மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர்களும் அக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்தார்கள். அதிகாரப் பரவல் தொடர்பில் தமிழ்த் தலைமைகளின் அக்கறையை பாருங்கள். அந்த மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் அன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஆட்சியின் பிடியில் இருந்தவர்கள். அப்போது ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் இருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலும் இருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கையில்தான் ஆட்சி அதிகாரம் இருந்தது.

13ஆவது திருத்தச் சட்டத்திலே உள்ள முழுமையான காணி அதிகாரம் எங்களுக்கு வேண்டுமென்று அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினார்கள். அது போதாது, எங்களுக்கு நிதி அதிகாரம் கூடுதலாக கிடைக்கப்பெற வேண்டும் என்று உரக்கச் சொன்னார்கள். காணி அதிகாரம் கூடுதலாக கிடைக்கப்பெற வேண்டும் என்று ஆவேசமாக கேட்டார்கள். ஆளுநருக்கு இருக்க வேண்டிய அதிகாரங்களை குறைத்து விடுங்கள் என்று கேட்டார்கள். அப்போது வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரெட்ண ஆளுநரே வேண்டாம் என்று சொன்னார். அந்தப் பதவிகளை ஒழித்து விடுங்கள் என்று சொன்னார். அதுவும் இடம்பெற வாய்ப்பில்லாமல் போயுள்ளது. இவ்வாறான சிக்கல் நிறைந்த பாதையில்த்தான் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியாக காய்நகர்த்த வேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது.

வடக்கும், கிழக்கும் வரவில்லை. நாங்கள் சகோதர சிங்கள மக்களுக்குச் சொன்னோம். இந்த அதிகாரப்பகிர்வு கேட்பது யார்? ஏதோ வடக்கு, கிழக்கு பிரிந்து போவதாக நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சொன்னோம். மிகுதியாக உள்ள 7மாகாண சபைகளும் அதிகாரப்பரவலாக்கம் கேட்டு நின்றன. அரசியலமைப்பு வரைபிலே உள்ளடக்கப்பட்டுள்ள அல்லது சொல்லப்பட்டுள்ள விடயங்களை தெற்கிலே உள்ள மாகாண சபைகள் கேட்கவில்லை. அந்தந்த மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் வட, கிழக்கும் வழங்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு வேண்டும். அது நிறைவேற்றப்பட வேண்டும். இறுதியிலே பொதுஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அப்போது நிறைவேற்றப்படும். இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஈடுபட்டது. அர்ப்பணிப்புடன் உழைத்தது.

2010 ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ எங்களுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை புறந்தள்ளிவிட்டு, பேச்சுவார்த்தை மேசையைவிட்டு, திடீரென்று வெளியேறினார். அவர் விலகியது எங்கள் விடயங்களில் மாத்திரமல்ல. நாட்டில் உள்ள அனைத்து விடயங்களிலும் ராஜபக்ஷ தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டார்.

18ஆவது சீர்திருத்தத்தைச் செய்து எத்தனை தடவையும் தான் ஜனாதிபதியாக வரலாம் என்பதாக மாற்றினார். தனக்கு ஏற்றாற்போல் மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களையும் ஒடுக்கத் தொடங்கினார். இவ்வாறு ஒடுக்கத் தொடங்கியபோது நாங்கள் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து நாட்டிலே சுபீட்சத்தையும், மக்களின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு கருமம் ஆற்றினோம். சுமார் இரண்டரை வருடங்கள் வினைத்திறனுடன் செயற்பட்டு நாட்டில் மூவின மக்களுக்கும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தோம். சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி சுக்கு நூறாக உடைந்து வீழ்ச்சி கண்டது. மக்களின் எண்ணம் நிறைவேறியது.

சோபித தேரர் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பை உருவாக்கி போராடிய போது அவர்களுடன் இணைந்து போராடினோம். நானும் சம்பந்தன் ஐயாவும் அவருடைய விகாரைக்கு இரு தடவைகள் போனோம்.பேசினோம்.சிங்கள மக்களின் முற்போக்கு சத்திகளுடன் இணைந்து மாற்றத்தை நாட்டிலே உருவாக்கினோம். கொடுங்கோல் ஆட்சி பறிக்கப்பட்ட சந்தோசம் மக்களிடம் ஏற்பட்டது. அதன் பிற்பாடு இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக வந்தன.இது முக்கியமானதாகும்.

ஆட்சியில் இருப்போர், தீர்மானங்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அதனை எதிர்த்து தீர்வை இல்லாமல் செய்வது வழக்கமாக இருந்தது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா காலத்திருந்து சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க காலம் வரையும் நடந்தேறியுள்ளது. அன்று இரண்டு கட்சிகளும் ஒன்றாக வந்த போது ஒரு ஒளிக்கீற்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் கண்களில் பிரகாசமாய் தென்பட்டது. நாங்கள் சேரவில்லை.சேர்ந்து ஆட்சி அமைக்கவில்லை. அந்த அரசாங்கம் முன்நகர்வதற்கான ஒத்துழைப்பை பெரியளவு கொடுத்தோம்.விஷேடமாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஒத்துழைப்பு கொடுத்தோம். அதனை முழுமையாக கொடுத்தோம். அவ்வாறு கொடுத்திருக்க கூடாதா…? அவ்வாறு கொடுத்திருந்ததால் எங்களுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு வரைபு வந்துள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை கண்டு பிடித்து வருகின்றோம்.

கேள்வி:- தற்போது அரசியலமைப்புக்கு என்ன நடக்கின்றது?

பதில்:-நாங்கள் சர்வதேச பேராதரவுடனும், ஆலோசனையின் பேரிலும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்துடன் பயணிக்கின்றோம். தமிழ்தேசிய வாதம் பேசுபவர்கள் அது இல்லை இது இல்லையென்று பலகுறைபாடுகளை கண்டுபிடிக்கின்றார்கள்.ஆனால் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி நாட்டிலே அரசியல் புரட்சி வெடித்தது. கடும்போக்குடைய சிங்களவர்கள் என்ன சொன்னார்கள். வருகின்ற 7ம் திகதி புதிய வரைபு வரவிருந்தது. அதைத் தடுப்பதற்காகத்தான் ஒக்டோபர் புரட்சியை ஏற்படுத்தினோம் என்றார்கள். அதை தடுத்தால்தான் நாடு இரண்டாயிருக்கும். இரண்டு பகுதிகளிலும் அதிருப்தி இருக்கின்றது. எங்களுடைய அபிலாஷைகள் யாப்பிலே இல்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். நானே அதைச் சொல்லியிருக்கின்றேன். ஆகையால் அது பிரயோசமானதா? அல்லது அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறைமை அங்கே இருக்கின்றதா? ஆம் அங்கே இருக்கின்றது. மத்திய அரசாங்கம் மீண்டும் எடுத்துக்கொள்ளாத வகையில் தேவைப்பாடுகள் உள்ளதா? உள்ளது. ஆம். சீர்செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மாகாண சபையை பயன்படுத்துவதில் மத்திய அரசாங்கம் தலையீடாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?ஆம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..ஆம் அதுதான் சமஸ்டி குணாதிசயம்.

நாங்கள் அரசியல்யாப்பு உருவாக்க முயற்சியை முற்று முழுமையாக கைவிடவில்லை. அமெரிக்க இராஜங்க செயலாளர்கள், உயரதிகாரிகள் இலங்கைக்கு வந்திருந்தார்கள். நானும் சம்பந்தன் ஐயாவும் அவர்களை சந்தித்து பேசினோம். அவர்களுக்கு தெளிவாக தெரிவித்தோம். உங்களுடைய நாட்டிலே 2014ஆம் ஆண்டு நாங்கள் வருகைதந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அந்த முடிவின் அடிப்படையில்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வந்தார்கள். முதலிலே பிரகடனத் தீர்மானங்கள் இரண்டு வருடங்கள், அதற்குப் பிற்பாடு சர்வதேச விசாரணைகளோடு இணைந்த தீர்மானங்கள், என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,என்பன இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் செய்யப்பட்டவை. இதனை முன்னகர்த்திய அமெரிக்கா, இன்று இலங்கையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இன்று அமெரிக்க இராஜங்க செயலாளர்கள் ஐ.நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கவில்லை. அன்றைய தீர்மானங்கள் இல்லாவிட்டால் நாட்டிலே இவ்வாறு நடந்திருக்காது. ஆனால் முக்கிய விடயங்கள் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை. அவற்றை எவ்வாறு செய்ய வைப்பதுதான் என்பது தமிழ்தேசிய கூட்டமைப்பின் சவாலும்,பலமும் ஆகும். தந்திரோபாயமாக காய் நகர்த்துகின்றோம். நாங்கள் அனைத்து இனங்களுடனும் நல்லிணக்கத்துடன்பேசி நாட்டிலே உள்ள மக்கள் நிம்மதியாகவும், சமாதானத்துடனும் வாழ்வதற்காக சர்வதேச ஒத்துழைப்புடன் அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் நாட்டிலே இதுகுறித்து பிரதானமாக அரசியல் தெளிவு இருக்கவில்லை. இச்சூழ்நிலையில் நாங்கள் எங்களுடைய விடயத்தை எப்படி முன்னகர்த்துவது நாங்கள் தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகள் நாட்டின் ஆட்சியாளர்களுக்குத் தெரியும். அரசியல் யாப்பு உருவாக்கத்தினால் நாட்டில் உள்ள அனைவருக்கும் பயன் கிடைத்திருக்கும். தமிழ்தேசிய கூட்டமைப்பில் எந்த தவறும் இல்லை.நாட்டிலே தேர்தல்கள் வரப்போகின்றது. எங்களுடைய அரசியல் யாப்புக்கு குந்தகம் விளைவிக்காமல் பாதுகாத்து முறையாக நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கும். அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு கேடு வரக்கூடாது , கேடுவரக்கூடாது என்று செயற்பட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.இனிமேல் நாங்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பி மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். அவ்விடயத்தில் விரக்தி தமிழ்மக்களிடம் இருக்கின்றது. இந்த அரசாங்கத்துடன் போராடினோம். இவ் அரசாங்கம் பல தடவை தடம் புரண்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பல தடவை தூக்கி நிமிர்த்தியது.

கேள்வி:- கோத்தாபய ராஜபக்ஷ, தான் தமிழ் மக்களின் ஆதரவின்றி வெற்றி பொறுவதாகத் தெரிவித்துள்ளார் இதனை சாத்தியமான விடயமாக நீங்கள் பார்க்கின்றீர்களா?

பதில்:- அவர் அவ்வாறு சொன்னாரா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. தமிழ் மக்களுக்கு அபிலாசைகள் இருக்கின்றன. அதனையும் நான் நிறைவேற்றுவேன் என்றும் ஏதோ சொல்லியிருக்கின்றார். அவர் தமிழ் மக்களின் ஆதரவின்றி நிச்சயமாக வெல்லமுடியாது அதனால்தான் முதலில் அவர் அவ்வாறு கூறியிருந்தாலும் தற்போது அவரின் நிலைப்பாட்டை மாற்றியமைத்துள்ளார் போல் தெரிகின்றது.

கேள்வி:- ஜக்கிய தேசியக்கட்சி சார்பாக சஜித், கருஜயசூரிய இருவரில் யார் போட்டியிட்டால் யார் கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து வெற்றிபெறுவார் என நினைக்கின்றீர்கள் ?

பதில்:- ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை தீர்மானிப்பது அது உட்கட்சி விவகாரம் ஆகும். இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது. அதில் தாக்கம் செலுத்தும் படியான கருத்துக்களை நாங்கள் தெரிவிக்க முடியாது.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பீர்களா இல்லையா?

பதில்:-நாங்கள் யாரை ஆதரிப்பது, யாரை ஆதரிக்காமல் விடுவது என்றோ யாரையும் ஆதரிப்பதா என்ற எந்த தீர்மானத்தையும் கூட இன்னும் எடுக்கவில்லை.

கேள்வி:- அவ்வாறென்றால் மஹிந்த அரசாங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினை கொண்டு வந்ததாக நீங்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தீர்கள். ஆகவே மஹிந்த சார்பாக களமிறங்கும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பீர்களா இல்லையா என தெரிவிக்க முடியாதா?

பதில்:-அழுத்தம் திருத்தமாக நாங்கள் சரியான நேரத்தில் சரியான கருத்தினை வெளியிடுவோம் அந்த நேரம் இப்போதில்லை .

கேள்வி: உங்களது கோரிக்கைகளுக்கு கோத்தபாய ராஜபக்ச ஆதரவளித்தால் ஆதரவு வழங்குவீர்களா?

பதில்:- நான் ஏற்கனவே சொன்னது போன்று ஆதரவு வழங்குவதா? இல்லையா என்ற தீர்மானங்கள் எல்லாவற்றிக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கட்டும். எல்லா கட்சிகளும் தங்களின் கொள்கைகளை முன்வைக்கட்டும். நாங்கள் அனைத்து கட்சி வேட்பாளர்களுடனும் பேசுவோம் அதன் பின்னர் நிதானமான ஒரு முடிவினை எடுப்போம்.

கேள்வி:- கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் மனோ கணேசன், தயா கமகே உடன் உலங்கு வானூர்தியில் வந்து அரசாங்கத்தின் முடிவினை அறிவிக்கும் போது, தங்களுக்கு எதிராக ஓர் எதிர்ப்பு ஏற்பட்டது. இது திட்டமிடப்பட்ட சதி என நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

பதில்:-இதனை திட்டமிட்ட சதியாக நான் பார்க்கவில்லை. மக்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை சிலர் உண்ணாவிரதமாக வடிவமைத்திருந்தார்கள். அவர்களிடத்தில் போய் நிலைப்பாட்டை கூறினேன். அவ்வாறு கூறவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அதனையே நான் மேற்கொண்டேன். அந்த சூழ் நிலையை தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தியிருக்கலாம். என்னைப்பற்றி சிந்திக்கப் போவதில்லை எங்களுக்கு இருக்கின்ற பொறுப்பினை நாங்கள் நிறைவேற்றுவோம்.

கேள்வி:- தற்போதய நல்லாட்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு யாப்பின் நிலைப்பாடு என்ன?

பதில்:- 1994ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இந்த பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச் செயலாகும்.

எனவே தற்போது ஆராயப்பட வேண்டிய விடயம் யாதெனில், மக்கள் ஆணையை மீறுகின்ற இந்த நடவடிக்கையிலே பங்குபெறுவதா என்பதும் மேற்குறிப்பிட்ட பின்னணியில் தேர்தல் நடைமுறையானது நியாயபூர்வமானதா என்பதுமேயாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது அவை அனைத்தும் கிடப்பிலே போடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 வருடங்களாக புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் விளைவாக பல்வேறு தீர்வு திட்டங்கள் முன்மொழியப்பட்டன. ஆனால் அவற்றுள் எதுவும் முன்னெடுத்து செல்லப்படவில்லை. எனவே தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல. மாறாக ஒரு புதிய அரசியலமைப்பே ஆகும். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவேண்டுமாகவிருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு அரசியல் அமைப்பு ஊடாக உறுதிசெய்யப்பட வேண்டும். ஒக்டோபர் புரட்சியின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைதியாக இருந்திருந்தால் அதனால் பாதிக்கப்படபோவது தமிழ் மக்களே.

Comments (0)
Add Comment