ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்!! (கட்டுரை)

2020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது.

ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர்.

இது, மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழுகின்றன.

இதன் பின்புலத்தில், சில விடயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. சில கேள்விகளையும் கேட்ட வேண்டியுள்ளது.

ஜே.வி.பியானது, தோற்றத்தில் இடதுசாரிக் கட்சி என்பதில் ஐயமில்லை.

அதன் தலைமையிருந்தோரின் அரசியல் தோற்றுவாய்கள், கொம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு பிரிவுகளிலும் இருந்தன. அதன் அதி முக்கியமான தலைவர் ரோஹண விஜேவீர, மாக்ஸிய லெனினியக் கொம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து> தனது மாக்ஸிய விரோதப் பேரினவாதச் செயற்பாடுகளுக்காக> 1966இல் வெளியேற்றப் பட்டவர் என்பது முக்கியமானது.

விஜேவீரவின் பேரினவாதமும் தொழிலாளி வர்க்க விரோதமும் போக, ஜே.வி.பியின் இனத்துவேஷம் பிரதான முதலாளியக் கட்சிகள் இரண்டினதையும் மீறும் விதமாக அமைந்ததை மலையகத் தமிழர் பற்றிய அதன் நிலைப்பாடு சுட்டிக் காட்டியது.

ஜே.வி.பியின் உள்ளார்ந்த பேரினவாதமும் இந்திய விஸ்தரிப்புக் கொள்கையின் கரங்கள் என அது கருதிய மலையக மக்களை, நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்ற கருத்தும் இருந்தது.

1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, ஜே.வி.பி முற்று முழுதாகப் பேரினவாதத்தின் மூலமே தன்னை வளர்க்க முயன்றது. 1987 இலங்கை-இந்திய உடன்படிக்கையையும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும், ஜே.வி.பி முற்றுமுழுதாகச் சிங்களப் பேரினவாத நோக்கிலேயே எதிர்த்தது.

அத்துடன், 1988-89 காலத்தில், ஐ.தே.க அடக்குமுறை ஆட்சிக்கு எதிரானது என்று சொல்லப்பட்ட அதன் கிளர்ச்சியின் போது, ஜே.வி.பி பல இடதுசாரித் தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் இலக்குவைத்துத் தாக்கியது. முக்கியமான சில தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

1994இல் சுதந்திரக் கட்சியின் எழுச்சி, ஜே.வி.பியின் புத்துயிர்ப்புக்கு உதவியது.

எனினும், தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளை, ஜே.வி.பி. எதிர்த்தே வந்தது.

நாடாளுமன்ற அரசியலில், ஜே.வி.பி தன்னை மூன்றாவது சக்தியாக, ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் மாற்றான ஓர் அணியாக வளர்க்க முற்பட்டபோது, அது வேண்டிநின்ற துரித வளர்ச்சிக்கு அதன் பேரினவாத அரசியல் உதவும் அளவுக்கு, மக்கள் மத்தியிலான வெகுசன இடதுசாரி அரசியல் உதவாது என்பதால், பேரினவாத நோக்கில் அதிகாரப் பரவலாக்கத்தை எதிர்ப்பதை அது முக்கியப்படுத்தியது.

1990களின் ஈற்றுப் பகுதியில் உருவான சிஹல உருமய, பின்னர் ஜாதிக ஹெல உறுமயவாகத் தீவிரமான பேரினவாத்தை முன்னெடுத்த போது, ஜே.வி.பியும் ஹெல உறுமயவின் ஆதரவுத் தளமான நகர்ப்புறச் சிங்கள நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை வெல்ல முயன்றது. அதனால், அதன் அரசியல் பேரினவாதத்தில் மேலும் அமிழ்ந்தது.

2002இல் அமைதிப் பேச்சுகள் தொடங்கிய நாள் முதலாக, 2009இல் போர் முடியும் நாள்வரை, ஜே.வி.பி போர் மூலம் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்கடிப்பதையே தன்னுடைய முக்கியமான கொள்கையாக்கியது.

ஜே.வி.பியும் ஜாதிக ஹெல உறுமயவும் ஆதரித்த ஒரு போரை, மிகக் கொடிய முறையில் இந்தியாவினதும் சீனாவினதும், மேற்குலகினதும் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் வென்ற பிறகு, ஜே.வி.பிக்கோ ஜாதிக ஹெல உறுமயவுக்கோ அந்த வெற்றியில் பங்கு கோர இயலாதபடி ராஜபக்‌ஷ அவ் வெற்றிக்குப் பூரண உரிமை கொண்டாடலானார்.

அதன் பயனான விரக்தி, ஜே.வி.பியை சரத் பொன்சேகாவுடன் நெருக்கமாக்குமளவுக்குப் போனது.

அதேவேளை, மாற்று இடதுசாரிக் கட்சி ஒன்றாக உருவாகக்கூடிய சக்திகளை, ‘சிங்களப் புலிகள்’ என்று முத்திரை குத்தி ஓரங்கட்டுவதிலும் ஜே.வி.பி தீவிரமாகப் பங்களித்துள்ளது.

இந்தப் பின்னணியில், ஜே.வி.பியை ஆதரிக்கக் கோருவோரிடம் சில கேள்விகள்:

1. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன?

2. அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் ஜே.வி.பி என்ன சொல்கிறது?

3. இலங்கையில் வாழும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்க ஜே.வி.பி தயாரா?

4. வடக்கு, கிழக்கில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள், குடிகொண்டுள்ள இராணுவத்தினர், அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் ஆகியவை பற்றிய ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன?

5. நடந்து முடிந்த போரில், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக ஜே.வி.பி ஏற்றுக்கொள்கிறதா?

6. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கள் கடந்தகால நடத்தையை சுயவிமர்சன ரீதியில் ஆராய்ந்து தவறுகளை ஏற்றுக்கொள்ள அநுர குமார தயாரா?

இந்தக் கேள்விகளுக்கு முதலில் மழுப்பல் இல்லாத தெளிவான பதில்கள் வரட்டும். அதன்பிறகு சிறுபான்மையினரின் ஆதரவு பற்றிப் பேசலாம்.

Comments (0)
Add Comment