மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் நடந்தது என்ன? (கட்டுரை)

கடந்த ஏப்ரல் 21இல் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதல் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை சின்னாபின்னமாக்கிவிட்டன. அத்தோடு அவை உயிரழிவு, உடமை அழிவு. மனக்கிலேசம், விரக்தி, வெறுப்பு என்பவைகளை மனித சமூகத்தின் மத்தியில் தோற்றுவித்துவிட்டன.

இந்த நிலையில், இதனைக் கட்டி எழுப்பவேண்டிய பாரிய பொறுப்பு சமூக முன்னோடிகளுக்கும், ஆர்வலர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் இருக்கின்றது. இதனை சகலரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது கட்டியெழுப்பப் படாவிட்டால் அந்த விரக்தியும் வெறுப்பும் வளர்ந்து மட்டக்களப்பில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அழித்துவிடும்.

குண்டு வெடிப்பும் அதனோடு இணைந்த பயங்கரவாதமும் நிறைவுற்று நாலு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், அவை தோற்றுவித்த சமூகங்களுகிடையிலான, வெறுப்பும் விரக்தியும் அழித்தொழிக்கப்படவில்லை. அதன்பிதன் பிற்பாடு வருகின்ற சம்பவங்கள் அதற்கு நீரூற்றி உரம் போட்டு வளர்க்கிறதேயன்றி. அதனை மாற்றியமைப்பதாக இருக்கவில்லை என்பது எமது பகுதி புத்தி ஜீவிகளின் கருத்தாக இருக்கிறது

அவை, எதுவாக இருந்தாலும், அவை, மனங்களைவிட்டு அகலாது. அவை உணர்வோடு சம்பந்தப்பட்டவை. தீயவைகளையும், மனதுக்கு வேதனை தருபவைகளையும் மறந்துவிட வேண்டும் என்று இலகுவாக சொல்லிவிடலாம். ஆனால், அவை அவ்வளவு இலகுவானதல்ல.

வளரப்போகின்ற குழந்தைகள், வளர்த்துவிட்ட முதியோர்கள், உதவிக்கரம் நீட்டிய பெருந்தகைகள் என்று எத்தனையோ பேர் நாடு முழுவதும் இந்த பயங்கரவாதிகளினால் உடல் சின்னாபின்னமாகி இறந்துவிட்டார்கள்.

யாராவது இறந்தால் அவரது சொந்தங்களும் பந்தங்களும், அழுவாா்கள் புலம்புவார்கள், இறந்தவரின் உடலைப் பொறுப்பெடுத்து நல்லடக்கம் செய்வார்கள். ஆனால், சீயோன் தேவாலயத்தில் எஞ்சியிருந்த ஒரு தலைக்கும் காலுக்கும் யாருமே உரிமை கோரவில்லை. உரிமை கோராத உடற்பாகங்கள் பயங்கரவாதியினுடையவை என்பதை யாரும் இலகுவாய் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த நிலையில், அந்த உடலுறுப்புக்களைப் புதைக்க வேண்டிய பொறுப்பு போதனா வைத்திய சாலைக்கும், அரசாங்க அதிபருக்குமானது. போதனா வைத்திய சாலையின் பிரேத அறையிலேதான் இது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அரசாங்க அதிபர் இந்த மாவட்டத்தின் தலைமை நிர்வாகி.

உரிமை கோரப்படாத உடல்களை நீதிமன்ற உத்தரவின்றி யாரும் எதுவும் செய்ய சட்டத்தில் இடமில்லை. இந்த நிலையிலேதான் பயங்கரவாதம் தொடர்பான உடல்கள் உரிமை கோரப்படவில்லை. இதனை அடக்கம் செய்ய வேண்டும் என பொலிஸார் நீதி மன்றத்தை நாடியிருந்தனர். அந்த வழக்கு இலக்கம் B 401/ 19. நீதி மன்றம் அப்பொறுப்பை மாவட்ட அரசாங்க அதிபரின் பொறுப்பில் விட்டுவிட்டது. அரசாங்க அதிபர் அப் பொறுப்பை அப்பகுதிக்கான பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் ஒப்படைத்தார். பிரதேச செயலாளரது நடவடிக்கையில்தான் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் உடலுறுப்புக்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இஃது ஓர் இந்து மயானம். இந்துக்களின் இறந்த உடல்கள் மாத்திரமே இங்கு புதைக்கப்பபடலாம். இந்துக்களின் இறுதி ஊர்வலம், இந்துக்களின் இறுதிக்கிரியைகள் என்பன இங்ேக நடைபெறுவது வழக்கமானதொன்று. இதைத்தவிர ஏனைய மதத்தவர்களின் பூதவுடல்கள் இங்கு புதைக்கப்படுவதுமில்லை எரிக்கப்படுவதுமில்லை.

அப்படியான ஓர் இடத்தில் இஸ்லாமியர் ஒருவரின் உடலைப் புதைக்கலாமா? என்ற கேள்வி இந்து சமயத்தவர்களின் மத்தியில் தோன்றுவதில் யாதொரு தப்புமில்லை. ஒருவரது கேள்விக்கு ஆதாரங்கள் தோன்றுவதற்காக நியாயமான காரணங்கள் முன்வைக்கப்படும் போது, அதனை பிழையெனக் கூறமுடியாது.

நீதிமன்று பொருத்தமான இடத்தில்தான் புதைக்கச் சொல்லியிருக்கிறதே தவிர, அஃது எந்த மயானம் என்று தீர்ப்பில் குறிப்பிடவில்லை. அதுமட்டுமின்றி அதனைப் புதைக்கும் செலவு அரச செலவாகவே இருக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது.

ஆகையால், அரசாங்க அதிகாரிகளே பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றம் பகிரங்கமாகக் குறிப்பிடாமல் விட்டாலும், அஃது அரசாங்க அதிகாரிகள் அவ்வாறு செய்வார்கள் என்று கருதியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. அரசாங்க அதிகாரிகள், இந்த உடல் எந்த மதத்திற்கு உரியவருடையது என்பதை ஆராய்ந்து, அப்படியான ஒருவரது உடல் உறுப்புக்களை அதே மதத்தைச் சார்ந்த மயானத்திலல்லவோ அடக்கம் செய்திருக்க வேண்டும் என்று கருத்து கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

மற்றைய உயிர்களுக்குப் பயங்கரவாத நிகழ்வின் ஊடாக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியவர்களை நாம் இஸ்லாமியர்களாக ஏற்க மாட்டோம். ஆதலால், அவர்களது உடலை எமது மையவாடியில் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என முஸ்லீம்ககள் கூறிவிட்டார்கள்.

கிறிஸ்தவ சமயத்தினரும் எங்களது தேவாலயத்தை உடைத்து உயிரழிவை ஏற்படுத்திய அதே பயங்கரவாதியை எமது மயானத்தில் புதைப்பது எவ்வாறு பொருந்தும் என்கிறார்கள். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், சமயத்தவர்களும் இதற்கு ஒப்புதல் அளிப்பதாகவில்லை.

இந்த நிலையில், பிரதேச செயலாளரால் என்ன செய்ய முடியும்? நீதி மன்றத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் விட்டால், அது வேறொரு ஆக்கினையை கொண்டுவரப்போகிறது. இதையெல்லாம் யோசித்துவிட்டே. பிரதேச செயலாளர் வாசுதேவன் ”கள்ளியங்காட்டு இந்து மயானத்தில்” அதை புதைப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. அவர் நீதிமன்றத்திற்கு தப்பியது உண்மைதான். அதைவிட ஆபத்து இன்னொரு வகையில் காத்திருக்கிறது என்பதை கணக்கிட்டுப் பார்க்கவில்லை என்பது அவரது நிர்வாக பலவீனத்தையே புலப்படுத்துகிறது.

அதாவது, பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள், மட்டக்களப்பு, கள்ளியன் காட்டு இந்து மயானத்தில் பயங்கரவாதி அஸாத்தின் உடற்பாகங்களைப் புதைத்தமை பிழையானது. அதை உடனே தோண்டி அகற்ற வேண்டும் என்று வீதியிலும் கள்ளியன் காட்டு மயான வாசலிலும் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்துவது அவரவருக்குள்ள தனித்தனி உரிமைகள்.

இஃது ஒரு புறமிருக்க இந்த உடல் உறுப்புக்களைப் புதைப்பதற்குப் பிரதேச செயலாளர் வாசுதேவன் கையாண்ட முறைகளில் பல தவறுகள் இருப்பதை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் சுட்டிக்காட்டியிருந்தார். முதலாவதாக ஓர் உடல் உறுப்பை மயானத்தில் புதைக்க வேண்டுமாயின் சம்பந்தப்பட்டவர் முதலில் மயானத்திற்குள் பிரவேசிப்பதற்கான முன் அனுமதியை மாநகரசபையிடம் பெறவேண்டும். புதைப்பதற்கான நிலத்திற்கு அவரால் வாடகைப்பணம் செலுத்தியிருக்க வேண்டும். இவை யாவும் அரச செலவாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தாலும், இது தொடர்பான சில விண்ணப்பங்களை அவர் சமா்ப்பித்திருக்க வேண்டும். இவைகளை அவர் செய்யத் தவறிவிட்டார். இவைகள் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் எப்படி மயானத்திற்குள் உட்புக முடிந்தது என்ற கேள்வி இங்கே உருவாகியுள்ளது.

இந்த உடலுறுப்புக்களோடு பாதுகாவலுக்குச் சென்ற பொலீஸாரின் மிரட்டலுக்கு மயானத்தில் இருந்த ஊழியர்கள் மசிந்துவிட்டனர் என்பதுதான் உண்மை. மாநகர முதல்வர் சரவணபவன் இவைகளை இப்போது குற்றச்சாட்டுகளாக்கிவிட்டார். ஓர் அரச அதிகாரி இன்னோர் அரச நிறுவனத்தின் நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்திருத்தல் வேண்டுமல்லவா?

வாசுதேவன் இலங்கை நிருவாக சேவையில் முதலாம் வகுப்பைச் சார்ந்தவர். சட்டத்தரணி பரீட்சையில் சித்தியெய்தியவர். அப்படியான ஒருவருக்கு இச்செயற்பாடுகள் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இவைகள் யாவுமே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாக மாநகர முதல்வரால் முன்வைக்கப்படுகிறது.

மாநகர முதல்வர் பிரதேச செயலாளரில் குற்றம்காணக் கூடாத மனோ நிலையிலேயேதான் இருந்தார். அவரது சபையினர் ஒரு விசேட கூட்டத்தை அவசர அவசரமாக கூட்டி ஒவ்வொன்றையும் மிக மிக நுணுக்கமாக ஆராய்ந்தனர். இவைகளைத் தவறென கருத முடியாது. ஏனெனில், மாநகர சபைகூட ஓர் அரச நிறுவனம். அஃது அதற்கென சட்டங்களையும் விதிகளையும் கொண்டுள்ளது. அப்படி இருக்கும்போது அது பிழைகளையும் தவறுகளையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாததல்லவா.

இந்த நிலையில் மட்டக்களப்பு பல்சமய அமைப்பு கடந்த (29 வியாழன்) ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தது. அவ்வமைப்பின் தலைவராக மட்டக்களப்பு ஆயர் அதி.வண கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை பணிபுரிகிறார்.

அக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக விளக்கினார். தான் இந்த உடலுறுப்புக்களை இஸ்லாமியர்களுக்குரிய மையவாடியில் புதைப்பதற்கு விரும்பியிருந்த போதிலும். அங்கும் எதிர்ப்பு தோன்றியது. அதே போன்று மற்றைய சேமக்காலைகளிலும் தோன்றின.

ஓர் அரசாங்க அதிபர் என்ற வகையில், இம்மாவட்டத்தில் வாழுகின்ற அனைத்து மதங்களுக்கிடையேயும், இனங்களுக்கிடையேயும் நல்லெண்ணத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த நான் முயற்சித்து வருகிறேன். இது தனது பணிக் கூற்றில் ஒன்று என அவர் குறிப்பிடத் தவறவில்லை

அவரது கருத்துக்களில் இஃது ஒரு புறமிருக்க மட்டக்களப்பு மக்களின் மத்தியில், ஆர்பாட்டங்களையும், கோசங்களையும் எழுப்பிவிடலாம். மிக இலகுவான வேலை. அதனால், ஏராளமான பிரச்சினைகள் தோன்றும். அப்பிரச்சினைகளை சமாளிப்பது யார்? அப்பிரச்சினைகளுக்குத் தீர்வை யார் காண்பது? பிரச்சினைகளின் தோற்றுவாயாக இருப்பவர்களுக்கு அப் பிரச்சினைகளுக்கான தீர்வும் தெரிய வேண்டுமே! அந்தத் தீர்வையும் அவர்கள் வெளிக் கொணரவேண்டும் அதுதான் இப்போது மட்டக்களப்புக்குத் தேவை. குழப்பலாம், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம். இது நிலையானதா? என்பதை சிந்தித்துத் தெளிவு பெற வேண்டும். எவ்வாறிருப்பினும், அந்தத் தலைப்பகுதிய இந்து மயானத்திலிருந்து மீண்டும் தோண்டியெடுத்துப் பொருத்தமான இடத்தில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஏதாவது முன்னேற்றம் கண்டிருக்கிறதா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். எதிர்ப்பவர்கள் எல்லாவற்றையும் எதிர்க்கலாமா? தீயதை எதிர்க்கத்தான் வேண்டும்! நல்லதையும் எதிர்க்கலாமா? எதிர்ப்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அரசு தந்த இறால் பண்ணைகளையும் எதிர்க்கிறீர்கள், இல்மனைட் தொழிற்சாலையையும் எதிர்க்கிறீர்கள். தீயதை மட்டுமே, உண்மையை உணர்ந்து எதிர்க்க பழக்கப்பட வேண்டும். உங்களுக்கான எதிரிகள் பலமானவர்கள். உங்கள் பலவீனமே, அவர்களை பல சாலியாகி வலம்வர இடம்கொடுக்கிறது. அதற்கு ஈடுகொடுக்கவும் அதிலிருந்து பாதுகாப்பு பெறவும் தயாராகுங்கள் என மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் நடத்த எத்தனை யோவிடயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு மட்டக்களப்பு கடற் தொழில் கூட்டுத்தாபனம் மூடப்பட்டு எத்தனை வருடங்களாகிறது? குருமண்வெளி பாலத்தைக் கட்ட கல் நாட்டி எத்தனை வருடம்? மட்டக்களப்பு போக்குவரத்துச் சபைக்கு வந்த குளிரூட்டிய ”பஸ்கள்” எங்கே?. இவைகளுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் தேவையில்லையா? கல்முனைப் பிரதேச செயலக அந்தஸ்து கேட்கிறீர்கள். உங்களது மாவட்டத்தில் விசாலமாயிருக்கும் வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகங்களை ”இரண்டு இரண்டாக” பிரித்திருக்கலாமே!

வெளிநாட்டிலிருக்கும் பேஸ்புக்காரர்களுக்கு எமது நாட்டின் நிலை தெரிய வேண்டும். அவர்கள் எழுதும் வார்த்தைகள் அக்கிரமம் நிறைந்தவை. இதனால், அரச ஊழியர்களின் மனங்கள் புண்படுவதாக பல்சமய கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

தமிழ் புத்தி ஜீவிகள் ஆர்ப்பாட்டத்திற்கு வராவிட்டாலும் பரவாயில்லை. சமூகத்திற்கு உதவுங்கள், பார்வையாளராக இருக்காதீர்கள்! பங்காளராக மாறுங்கள். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றுத் தோட்டாவாக இருக்கக் கூடாது. அவர்கள் ஒதுங்கக் கூடாது. பாடசாலையின் வருடாந்த விழாக்களில் கலந்து கொள்வதும், மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு சமூகம் கொடுத்து பிற்பகல் 3மணிவரை பேசிப்பேசி காலத்தை கடத்துவதும்தான் தங்களது வேலை என அவர்கள் நினைக்கக் கூடாது.

Comments (0)
Add Comment