தேசிய கட்சி சின்னங்களில் போட்டியிடும் விபரீத அரசியலை மலையகக் கட்சிகள் கைவிடுமா? (கட்டுரை)

மலையகக் கட்சிகள் தொடர்ந்தும் தேசிய கட்சிகளுடன் பங்காளிகளாகி அவர்களின் தேர்தல் செலவில் அவர்களின் சின்னங்களில் போட்டியிடும் விபரீத அரசியலை இனிவரும் தேர்தல்களிலாவது கை விடுவார்களா? என்பது இன்றைய மலையகத் தமிழர்களின் முக்கிய கேள்வியாகும்.

இவ்வாறான கேள்விகளுக்கு தேர்தலில் போட்டியிட்டு வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்கான ‘எலக்சன் டெக்னிக்குகள்’ பற்றிய நியாயங்களை கட்சிக்காரர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இந்த நியாயங்கள் தேர்தல் அரசியலை மையமாகக் கொண்டவர்களுக்கு சரியாகப் படலாம். சமூக அரசியலை மையமாகக் கொண்டவர்களுக்கு பிழையாகத் தெரியலாம். துரதிர்ஷ்டவசமாக மலையகத்தில் சமூக அரசியல் வளர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகளை கடக்க வேண்டியிருக்கலாம்!

ஒரு சந்தர்ப்பத்தில் பழம்பெரும் கட்சியான இ.தொ.கா தேசியக் கட்சிகளை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. அக்காலங்களில் அக்கட்சியின் தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானுக்கு ‘கிங் மேக்கர்’ என்ற கெளரவமும், அவரது பலத்துக்குரிய ‘பயபக்தியும்’ தேசியக் கட்சிகளிடம் இருந்தன. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவை தேசியக் கட்சிகள் ஒவ்வொரு பொதுத்தேர்தல் முடிவிலும் நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது.

தேர்தல் முடிந்த மறுநாள் பலாலி விமான நிலையத்தை நோக்கி ஆட்சியமைக்க முனையும் கட்சிகளின் ஹெலிகொப்டர்கள் தவறாமல் போய் இறங்கும்! அப்போதெல்லாம் தமிழ்த் தலைவர்கள் தங்களது அரசியல் கோரிக்கைகளைத் தயாரித்துத் தயாராக வைத்துக் கொண்டிருப்பார்கள். தென்பகுதி அரசியல்வாதிகள் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு கேட்கும்போது தங்களின் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். யாழ்ப்பாணம் சென்ற சிங்களக்கட்சிகள் தர்மசங்கடப்பட்டு கொழும்பு திரும்புவார்கள்.

அன்று ஆளுமை நிறைந்த தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், க.பொ. ரத்னம், கு.வன்னியசிங்கம், திருச்செல்வம். டாக்டர் நாகநாதன், மு. சிவசிதம்பரம், ஜி.ஜி. பொன்னம்பலம் சி. சுந்தரலிங்கம் (அடங்காத் தமிழர் முன்னணி) ஆலாலசுந்தரம், ராஜமாணிக்கம், சேர். கந்தையா வைத்தியநாதன், செ. இராஜதுரை என ஒருவருக்கொருவர் தமிழ் மக்களின் அரசியல் எதுவென்று அறிந்தவர்களாக இருந்தார்கள்.

சிங்களக் கட்சிகளிடம் அவர்கள் முன்வைக்கின்ற அரசியல் கோரிக்கைகளே அவர்களையும் அரசியல் கற்றுக்கொள்ள வைத்தன. “இலங்கையில் சிங்கள மக்களின் உண்மையான சுதந்திரம் பிரித்தானியர் ஆட்சியை விட்டுபோனதல்ல. என்றைக்கு சிங்களக் கட்சிகள் தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினரின் ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்கின்றார்களோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் தீர்மானிக்கப்படும்” என்று சிங்கள தீவிரவாதம் சுதந்திரம் பற்றி வியாக்கியானம் எழுதியிருக்கிறது.

அதுபோன்றே அன்று மலையகத்திலும் இணக்க அரசியல் புரிவதற்கு தங்களது அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசும் வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் பேரம்பேசும் அரசியல் கலாசாரம் அன்று எம்மிடம் இல்லாதுபோனது. அத்தோடு ஆளுமைமிக்க தலைவர்கள் குழு இல்லாமலிருந்தது.

அந்தக் கலாசார வழமையே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இருந்தபோதிலும் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கல்லில் நார் உறித்தது போன்று சில காரியங்களை ‘நல்லாட்சி’ அரசாங்கத்தில் செய்து கொண்டனர். 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் பெருந்தோட்டங்கள் உள்ளடக்கப்படாது என்பதைக் குறிக்கும் 33உறுப்புரையை திருத்தம் செய்தமை, பிரதேச சபைகளை ஐந்தாக அதிகரித்துக் கொண்டமை, மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்கிக் கொண்டமை (New Villages Development Authority for Plantation Region) வரவேற்கத்தக்கதாகும்.

இன்றைய நிலையில் மலையகக் கட்சிகளை இனவாத பின்புலம் கொண்ட கட்சிகளே மேய்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமைக்கு எதிர்கருத்து கிடையாது. இதற்கு பொதுக்காரணம் மலையகக் கட்சிகள், இனவாதக் கட்சிகளிடம் இணக்க அரசியல் என்ற எதிர்பார்ப்பில் சரணடைந்து கொண்டிருப்பதாகும். அவர்களிடம் தேர்தல் செலவுக்கான நிதி உதவிகள் பெற்றுக் கொள்வதாகும். அவர்களிடம் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை, அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து உடன்படிக்கைகள் எழுதிக்கொண்டு சுயத்துவத்தை இழந்து நிற்கின்றன. இதேநேரத்தில் மலையகக் கட்சிகள் அனைத்தும் தங்களது ஆதரவாளர்களிடமே நம்பிக்கையிழந்து நிற்கின்றன.

தங்களது அடிப்படை அரசியல் வேலைத் திட்டங்களை பங்காளிக் கட்சியினரிடமிருந்து பெறமுடியாமலிருப்பதால், மக்கள் மத்தியில் விசுவாசத்தை இழந்து நிற்க வேண்டியிருக்கிறது. இந்த அந்நியப்படுதல் என்ற அச்ச உணர்வே தேசியக் கட்சிகளின்பால் இக்கட்சிகளை உந்தித் தள்ளுகின்றன. அத்தோடு மலையகக் கட்சிகள் மக்கள் முன்னால் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் அரசியல் கோரிக்கைகளையும் முன்வைப்பதில்லை. மலையக மக்களும் தங்களது அரசியல் தேவைகள் என்னவென்பதை இன்றுவரை அறிந்தவர்களாக இல்லை.

மலையகக் கட்சிகள் தங்கள் தொழிற்சங்க அங்கத்தவர்களை வாக்காளர்களாக பாதுகாத்து வைத்திருக்கின்றன. இவர்களின் வாக்குகளின் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு தேசியக்கட்சிகளும் காய்க்கும் பழமரங்களை குத்தகைக்கு வாங்கிக்கொள்ளும் வியாபார ஒப்பந்தத்தைப் போன்று வாக்கு வங்கிகளை நிச்சயித்துக் கொள்கின்றன. தங்களது முதலீட்டில் பெறப்படும் ‘எம்பிக்களை’ உடைமைகளாக்கி ஆட்சிக்குள் பாவனைப் பொருளாக வைத்துக் கொள்வதும், அவர்களுக்கு மேலதிகமாக அமைச்சுப் பதவிகளை வழங்கி, தங்களது ஆட்சிக்கான பணியாளர்களாக வைத்துக் கொள்வதும் இப்பெரிய கட்சிகளுக்குப் பழகிப்போன ஒன்று.

அரசியல் கட்சிகளின் எடுப்பார் கைப்பிள்ளைகளாகிய பிறகு, இவர்கள் மக்களின் அரசியல் கோரிக்கைகள் கருதி அரசிடம் பேரம்பேசும் சக்தியை இழந்துவிடுகிறார்கள். அரசிடம் தட்டிக்கேட்கும் சுயத்துவ பலத்தை இழந்து நிற்கின்றார்கள்.

இந்த நிலையில் தேசியக் கட்சிகளிடம் இணைந்து அரசியல் புரிந்துவரும் முஸ்லிம் கட்சிகள், மக்களின் அரசியல் கோரிக்கைகளிலிருந்து ஒருபோதும் விலகிக்கொள்வதில்லை. முஸ்லிம் தலைமைகள் தேசியக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வந்தாலும், அரசு அவர்களின் நிலைப்பாடுகளுக்கு பயந்தே செயல்படுகின்றன. சமீபத்தில் பயங்கரவாத அமைப்பொன்றின் செயற்பாட்டுக்கு எதிராக சில அமைச்சர்களின் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனித்தபோது, அவர்கள் இன ஐக்கியத்துடன் ஒன்று சேர்ந்து பதவி இராஜினாமா நடவடிக்கையெடுத்தபோது அரசுக்கு அது அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

அவ்வாறான ஒருமித்த அரசியல் நாகரீகமும், பண்பாடும் மலையகக் கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள், சொந்த மக்களே வருத்தப்படுமளவுக்கு பிளவுபட்டிருக்கிறார்கள். இவர்களின் ஒற்றுமையின்மை காரணமாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், சம்மேளனத்துக்கு ஆதரவாக செயல்படும் அரசுக்கு எதிராகவும் செயல்பட முடியாத நிலையே காணப்படுகிறது. பெரிய கட்சிகளிடம் இக்கட்சிகள் அரசியல் கைதிகளாக இருந்து வருகின்றன என்பதே உண்மை. இதன் காரணமாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன. தேசிய மட்டத்தில் கேலிக்கூத்தாக மாறியிருக்கின்றன.

200 ஆண்டு காலமாக மறுக்கப்பட்டுவரும் உழைப்புக்கேற்ற சம்பளத்தைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாமல், அவமானப்பட்டு, அரசையும், கம்பெனிகளையும் எதிர்க்க முடியாமல், திராணிகெட்டு அந்த மக்களின் பிச்சை சம்பளத்தில் 233ரூபாய் சந்தாப்பணத்தைப் பிடிப்பது எவ்வளவு மனிதாபிமானமற்ற செயலாகும்? இவ்வளவு தூரம் சீரழிந்து கேடுகெட்டுப்போயும் தொழிலாளர்கள் பேசாமடைந்தையாக இருக்கும்போது யாரை நொந்துக்கொள்வது? இந்த நிலைமையிலும் சந்தாப்பணத்தை உயர்த்திக் கொள்வதில் சில மாதங்களில் ஏனய தொழிற்சங்கங்களும் முன்வரலாம்.

மலையகக் கட்சிகாரர்கள் தேசியக் கட்சிகளின் சின்னங்கள் மூலம் போட்டியிட்டு, அரசுடன் உண்ணிகளாக ஒட்டிக் கொண்டிருக்கின்றார்கள். உரிமைகளைப் பற்றி பேசிவருகின்றார்கள். அவர்கள் ஆளுங்கட்சிகளின் இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் என்று ஒருமுறை நுவரெலியா மாவட்ட எம்.பியொருவர் கண்டனம் தெரிவித்ததும் கடந்தகால வரலாறாகும். இன்றைக்கும் அரசியலில் இருக்கும் அவர் கம்பெனிகளால் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்க முடியாது, கம்பெனிகள் பாவம்! அவை நஷ்டத்தில் கஷ்டப்படுகின்றன என்று சத்தமிடுகின்றார். தொழிலாளர்களுக்கு வீடுகளைக்கூட சொந்தமாக வழங்கக்கூடாது. குத்தகைக் காலம் வகுத்தே கொடுக்க வேண்டும் என்றும் பேசப்படுகிறது.

இவற்றுக்கெதிராக மக்களிடமிருந்தோ, மக்களின் பிரதிநிதிகளிடமிருந்தோ ஆக்ரோஷமான எதிர்ப்பும் கண்டனக் குரலும் இதுவரையிலும் எழும்பவில்லையே! இனி வரப்போகும் மாகாணசபைத் தேர்தலில் சொந்த சின்னத்தில் மலையகக் கட்சிகள் போட்டியிட்டு தங்களது சுயத்துவத்தையும், சுய பலத்தையும் காட்டுவதற்கு முன்வருவார்களா? என்பதே நமது தன்மானத்துக்குரிய இன்றைய அரசியல் எதிர்பார்ப்பாகும்.

ஜனாதிபதித் தேர்தல் பற்றி இன்று மலையக மக்களிடம் அன்றிருந்த அக்கறை இன்றிருப்பதாகத் தெரியவில்லை. ஜனாதிபதியாக எவர் வந்தாலும் ஒன்றுதான். அவர்கள் எல்லோருமே மலையகத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி ஒரே கருத்தையே கொண்டவர்கள் என்றொரு அபிப்பிராயத்தை கடந்த காலம் கட்டியெழுப்பி இருக்கிறது. ஏனெனில் நிலப்பங்கீடு, வீடமைப்பு என்பன எதிர்காலத்தில் எப்படி அமையும் என்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது.

மலையகக் கல்வி நிலையை உயர்த்துவதற்கு கணித, விஞ்ஞானப் பாடசாலைகள், மத்திய தேசியக் கல்லூரிகளை உருவாக்கம் இன்றைக்கும் பேச்சளவிலேயே உள்ளது. மலையக மக்களை பெருந்தோட்டக் கூலிகளாகவே வைத்துக் கொள்ளவேண்டும். மலையகப் பிரதேசங்களில் இளைய பரம்பரையினருக்கு தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய தொழில் பேட்டைகளை மலையகப் பிரதேசங்களில் உருவாக்கக்கூடாது. தேயிலை, இரப்பர், முள்ளுத்தேங்காய் தோட்டக் கூலி வேலைகளுக்கே கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை வலுவாகவே உள்ளது.

அவர்கள் மத்தியில் சமூக மாற்றங்கள் நடைபெறக்கூடாது. பெருந்தோட்டங்களை தேசிய ரீதியாக கிராமங்களாக்கக் கூடாது. பெருந்தோட்டங்களை உள்ளூராட்சிக்குள் உள்வாங்கக்கூடாது. உள்ளூராட்சிப் பணத்தை செலவிடக்கூடாது. பெருந்தோட்டங்கள் விடயத்தில் ‘பிரத்தியேக சட்டத்திட்டங்களே’ இருக்க வேண்டும். இந்த நாட்டில் பெருந்தோட்டத்துறை என்ற பிரத்தியேகச்சொல் பிரித்தானியர் காலத்திலிருந்தே பேணப்பட்டு வருகின்றது. அந்த அரசியல் வழமையை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுவான தேசிய நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது.

இவ்வாறு அரசியலில் இன்று வரை ஓரங்கட்டப்பட்ட பிரஜைகளாக இருக்கும் எமக்கு இனத்தின் அமைப்புக்களாக தலைமைகள் உருவாகும் போதுதான் உரிமைக்கான குரல் ஒலிக்க முடியும். இனத்தின் பிரதிநிதித்துவம் சொந்தக் கட்சி சின்னங்களின் மூலம் தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் உரிமைக் குரல் எழுப்பும் போதுதான் நாங்கள் ஒரு தேசிய இனத்துக்குரிய அரசியல் அங்கீகாரத்தை அடையமுடியும்.

Comments (0)
Add Comment