பலாலி: பய­ணத்­துக்கா – பிர­சா­ரத்­துக்கா? (கட்டுரை)

தற்­போ­தைய அர­சாங்கம் தனது பத­விக்­கா­லத்தின் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில், பலாலி விமான நிலை­யத்தை பிராந்­திய விமான நிலை­ய­மாக விரி­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது.

பலாலி விமான நிலையம் பற்­றிய செய்­திகள் இப்­போது ஊட­கங்­களில் அடிக்­கடி வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இங்­கி­ருந்து தென்­னிந்­திய நக­ரங்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, மத்­திய கிழக்கு, அவுஸ்­தி­ரே­லியா, சீனா­வுக்கும் பய­ணங்­களை மேற்­கொள்ள முடியும் என்றும் செய்­தி­களில் கூறப்­ப­டு­கி­றது.

வடக்­கி­லுள்ள மக்­களின் நலன்­க­ருதி, இந்த அபி­வி­ருத்திப் பணி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அர­சாங்கம் கூறு­கி­றது.

பலாலி விமான நிலை­யத்தின் ஊடாக சர்­வ­தேச விமான சேவைகள் இடம்­பெ­று­வது, வடக்கில் உள்ள மக்­க­ளுக்கு மாத்­தி­ர­ மன்றி, அதனை அண்­டிய பகு­தி­களில் உள்ள மக்­க­ளுக்­கான ஒரு வரப்­பி­ர­சாதம் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இதனை இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், நேர­கா­லத்­து­ட­னேயே ஆரம்­பித்­தி­ருக்க முடியும்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி 2015இல் இலங்­கைக்கு வந்­தி­ருந்த போதே, பய­ணிகள் கப்பல் சேவை மற்றும் பலாலி விமான நிலைய விரி­வாக்கம் ஆகி­யன தொடர்­பாக இணக்­கப்பாடு எட்­டப்­பட்­டது.

எனினும், இந்த அர­சாங்கம் தனது பத­விக்­கா­லத்தின் கடைசி நாட்­களை எண்ணிக் கொண்­டி­ருக்கும் போது தான், இந்த திட்­டத்தில் கை வைத்­தி­ருக்­கி­றது.

ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்­கப்­பட்ட பலாலி விமான நிலைய விரி­வாக்கப் பணிகள் முடிந்­ததும், செப்­டெம்­பரில் தென்­னிந்­தி­யா­வுக்­கான விமான சேவை ஆரம்­பிக்­கப்­படும் என்று முன்னர் கூறப்­பட்­டது.

ஒரே மாதத்தில், ஓடு­பாதை விரி­வாக்கம், விமான நிலைய முனைய வச­திகள், சுங்க, குடி­வ­ரவுப் பகு­திகள், ஏனைய உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேற்­கொள்ள முடி­யுமா என்ற கேள்­வியை எழுப்­பா­ம­லேயே இவ்­வா­றான வாக்­கு­று­திகள் கொடுக்­கப்­பட்­டன.

எனினும், கடந்­த­வாரம் பலாலி விமான நிலைய விரி­வாக்கப் பணிகள் தொடர்­பாக ஆராயும் வகையில், அலரி மாளி­கையில் நடந்த கூட்­டத்தில், ஒக்­டோபர் 15ஆம் திகதி, விமான நிலை­யத்தை திறப்­பது என்று முடிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது,

அதற்­குள்­ளா­கவே குடிநீர் இணைப்பு, மின்­சார வசதி, ஓடு­பாதை விரி­வாக்கம், ஏனைய வச­திகள் செய்து முடிக்­கப்­ப­டுமா என்ற கேள்­விகள் ஒரு புறத்தில் இருக்க, இந்த விமான நிலையம் திறக்­கப்­பட்­டதும் இங்­கி­ருந்து சேவைகள் உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கப்­ப­டுமா,- இது வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு பய­னுள்ள ஒன்­றாக இருக்­குமா என்­பதும் சந்­தே­க­மாகத் தான் உள்­ளது.

ஏனென்றால், பலாலி விமான நிலை­யத்தின் முதற்­கட்ட விரி­வாக்கப் பணிகள் முடிந்­தாலும், ஓடு­பாதை நீளம் மற்றும் அங்­குள்ள வச­திகள் கருதி, ஏ–-320 போன்ற பெரிய பய­ணிகள் விமா­னங்­களை இப்­போ­தைக்கு தரை­யி­றக்க முடி­யாது.

இத்­த­கைய விமா­னங்கள் தான், தொலை­தூரப் பய­ணங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. எனவே, இரண்­டா­வது கட்ட விரி­வாக்கப் பணிகள் முடிந்த பின்னர் தான், இங்­கி­ருந்து தொலை­தூரப் பய­ணங்­களைப் பற்றி சிந்­திக்க முடியும். அது­வரை குறுந்­தூர விமான சேவைகள் தான் நடத்­தப்­படும் வாய்ப்­புகள் உள்ளன.

இந்த குறுந்­தூர விமான சேவைகள் வெற்­றி­க­ர­மா­ன­தாக அமைந்தால் மட்­டுமே, அடுத்­த­கட்ட விரி­வாக்கப் பணி­களும், அதன் மூலம் தொலை­தூர விமான சேவை­களும் சாத்­தி­யப்­படும்.

இல்­லா­விடின், வணிக வாய்ப்பு இல்லை என்று கூறி, மத்­தல விமான நிலையம் நெற்­க­ளஞ்­சி­ய­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டது போல, மீண்டும் பலாலி விமான நிலையம், விமா­னப்­ப­டையின் விமா­னத்­த­ள­மா­கவே மாறி விடும்.

எனவே, பலாலி விமான நிலையம் பிராந்­திய விமான நிலை­ய­மாக திறக்­கப்­படும் போது, அது சாத்­தி­ய­மா­ன­ள­வுக்கு வணிக ரீதி­யாக வெற்­றி­க­ர­மா­ன­தாக அமைய வேண்டும்.

அவ்­வாறு வணிக ரீதி­யாக சாத்­தி­ய­மான ஒரு இட­மாக, அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டாமல் போனால், பலா­லியின் சர்­வ­தேச விமான நிலையக் கனவு கருகி விடும்.

இந்த திட்டம் கைவி­டப்­பட்டால், இலங்­கையின் சுற்­றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்­ப­டு­கி­றதோ இல்­லையோ, வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு நிச்­சயம் பாதிப்பு ஏற்­படும்.

ஏனென்றால், வடக்கில் உள்ள மக்கள், 6 மணித்­தி­யா­லங்­களைச் செல­விட்டே, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை அடைய வேண்­டிய நிலையில் இருக்­கி­றார்கள்.

கட்­டு­நா­யக்­கவில் இருந்து 45 நிமி­டங்­களில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலை­யங்­களை சென்­ற­டைந்து விட முடியும். ஆனால் அந்தப் பய­ணத்­துக்­காக, வடக்­கி­லுள்ள மக்கள் அதை­விட எட்டு மடங்கு நேரம் தரை­வழிப் பய­ணத்தை மேற்­கொள்ள வேண்­டி­ யி­ருக்­கி­றது.

பலாலி விமான நிலையம் திறக்­கப்­பட்டால், வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்கு நேரச் செலவும், பணச் செலவும் மிச்­ச­மாகும். அது­மாத்­தி­ர­மன்றி, தரை­வழிப் போக்­கு­வ­ரத்து ஆபத்­துக்­களில் இருந்தும் தப்பிக் கொள்­ளலாம்.

வெளி­நாட்டில் இருந்து வந்து வடக்­கிற்கு சென்ற – அங்கு பய­ணத்தை முடித்துக் கொண்டு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு திரும்­பிய பலர், அல்­லது அவர்­களை வர­வேற்க, வழி­ய­னுப்பச் சென்ற பலர் அண்­மைக்­கா­லங்­களில் அதி­க­ளவில் விபத்­துக்­களில் சிக்­கி­யி­ருக்­கின்­றனர்.

பலாலி விமான நிலையம் ஊடாக பய­ணங்கள் இடம்­பெற்றால், இது­போன்ற ஆபத்­துக்­களை தவிர்க்க முடியும். பலாலி விமான நிலை­யத்தின் முதற்­கட்ட விரி­வாக்கப் பணிகள் முடிந்­ததும், 90இற்கு உட்­பட்ட பய­ணி­களை ஏற்றிச் செல்லக் கூடிய விமா­னங்­க­ளையே சேவையில் ஈடு­ப­டுத்த முடியும்.

இப்­போ­தைக்கு பலா­லியில் இருந்து விமான சேவை­களை ஆரம்­பிக்க இந்­தி­யாவின் இரண்டு விமான நிறு­வ­னங்கள் விருப்பம் வெளி­யிட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

‘எயர் இந்­தியா’ நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான, ‘அலையன்ஸ் எயர் நிறு­வ­னமும், இந்­தி­யாவில் அதி­க­ளவு பய­ணி­களைக் கையாளும் மிகப்­பெ­ரிய விமான நிறு­வ­ன­மான ‘இன்­டி­கோ’வும், பலா­லிக்­கான சேவை­களை ஆரம்­பிப்­ப­தற்கு விருப்பம் கொண்­டுள்­ள­தாக தெரி­கி­றது.

இந்த இரண்டு நிறு­வ­னங்­க­ளிடம், பலா­லிக்­கான பய­ணங்­களை மேற்­கொள்ளக் கூடிய, 72 ஆச­னங்­களைக் கொண்ட ATR 72-600 விமா­னங்கள் இருக்­கின்­றன என்­பது முக்­கி­ய­மான அம்சம்.

இவ்­வா­றான விமா­னங்­களின் மூலம், தென்­னிந்­திய நக­ரங்­க­ளுக்­கான விமானப் போக்­கு­வ­ரத்தை ஆரம்­பிக்க முடியும். அது வணிக ரீதி­யாக வெற்­றி­க­ர­மா­ன­தாக அமையும் என்­பதும் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

குறிப்­பாக, தமி­ழ­கத்தின் சென்னை, மதுரை, திருச்சி போன்ற நக­ரங்­க­ளுக்­கான விமான சேவை­களை ஆரம்­பித்தால், அது வடக்கில் உள்ள மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, தமி­ழ­கத்தில் இருந்து இலங்­கைக்கு சுற்­றுலாப் பய­ணிகள் வரு­வதும் அதி­க­ரிக்கும் என்ற எதிர்­பார்ப்பும் உள்­ளது,

தமி­ழ­கத்­துக்கும் வடக்­கிற்கும் இடையில் மொழி, இன, கலா­சார ரீதி­யான நெருக்­க­மான பிணைப்பும், தொடர்­பு­களும் உள்­ளன. அதை­விட சுற்­றுலா, ஆலய தரி­சனம், திரு­மணம் போன்ற விழாக்கள், மாத்­தி­ர­மன்றி பொருட்கள் கொள்­வ­னவு உள்­ளிட்ட வணிக ரீதி­யான தேவை­க­ளுக்­கா­கவும் நாளாந்தம் வடக்கில் இருந்து பெரு­ம­ள­வானோர் தமி­ழகம் சென்று வரு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில், பலாலி விமான நிலை­யத்தில் இருந்து தமி­ழக விமான நிலை­யங்­க­ளுக்­கான சேவை­களை ஆரம்­பிப்­ப­தற்கே முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்டும். அதுவே, வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்கும், பலாலி விமான நிலை­யத்தின் வணிக ரீதி­யான வெற்­றிக்கும் உத­வி­யாக அமையும்.

ஆனால், தமி­ழ­கத்­துக்­கான நேரடி விமான சேவைகள் எதுவும் பலா­லியில் இருந்து இப்­போ­தைக்கு ஆரம்­பிக்­கப்­படப் போவ­தில்லை என்றே தக­வல்கள் கூறு­கின்­றன.

பெங்­க­ளூரு, கொச்சி, ஹைத­ராபாத், மும்பை ஆகிய இடங்­க­ளுக்­கான விமான சேவை­களே முதற்­கட்­ட­மாக பலா­லியில் இருந்து தொடங்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த விமான சேவைகள், வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்கோ அல்­லது, சுற்­றுலாத் துறைக்கோ பய­னுள்­ள­தொன்­றாக இருப்­ப­தற்கு வாய்ப்­புகள் இல்லை என்றே கூறலாம்.

வடக்கைப் பொறுத்­த­வ­ரையில் சுற்­று­லாத்­துறை வள­ர­வில்லை. இங்­குள்ள சுற்­றுலாத் தலங்கள் வெளி­நாட்டுப் பய­ணி­களின் கவ­னத்தை ஈர்க்கும் படி பிர­சா­ரப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. சுற்­றுலாத் தலங்­களில் வெளி­நாட்டுப் பய­ணி­க­ளுக்­கான அடிப்­படை வச­தி­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

எனவே, பெங்­க­ளூரு, கொச்சி, ஹைத­ராபாத், மும்பை போன்ற நக­ரங்­களில் இருந்து, பலா­லிக்கு வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் வரு­வார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

அது­போ­லவே, இந்த நக­ரங்­க­ளுக்கும் வடக்­கிற்கும் தொடர்­புகள் அரிது.

எனவே, வடக்­கி­லுள்ள மக்­களும் இந்த சேவை­களால் பய­ன­டைய முடி­யாது. இது கடை­சியில் பலாலி விமான நிலையம் வணிக ரீதி­யாக வெற்­றி­க­ர­மா­னது அல்ல என்று முத்­திரை குத்­தப்­ப­டு­வ­தற்கே வழி­வ­குக்கும்.

வடக்கில் உள்ள மக்­க­ளுக்­காக பலாலி விமான நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தாக கூறு­கின்ற அர­சாங்கம், பலா­லியில் இருந்து தமி­ழ­கத்­துக்­கான விமான சேவை­களை நடத்த தயங்­கு­வது ஏன் என்ற மிகப் பெரிய கேள்வி உள்­ளது,

பலாலி விமான நிலை­யத்­தினால், கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் வருவாய் குறைந்து விடும், ஸ்ரீலங்கன் விமான சேவையின் வரு­மானம் பாதிக்­கப்­படும் என்ற அச்சம் அதற்கு ஒரு கார­ண­மாக இருக்­கலாம் என்ற சந்­தே­கங்கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

இதில், கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் வரு­மானம் பாதிக்­கப்­படும் என்று கூறப்­படும் காரணம் வலு­வா­ன­தல்ல. ஏனென்றால், கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் வரு­மா­னமும், பலா­லியின் வரு­மா­னமும், ஒரே பொதிக்குள் தான் சென்­ற­டையும். எனவே, ஒன்றில் ஏற்­படும் இழப்பு இன்­னொன்­றினால் நிரப்­பப்­படும்.

ஆனால், அடுத்த கார­ணி­யான ஸ்ரீலங்கன் விமான சேவையின் வருவாய் பாதிக்­கப்­படும் என்ற அச்சம் நியா­ய­மா­னது. ஸ்ரீலங்கன் விமான சேவை தினமும் சென்­னைக்கு நான்கு சேவை­க­ளையும், திருச்­சிக்கு இரண்டு சேவை­க­ளையும், கோய­முத்தூர் மற்றும் மது­ரைக்கு தலா ஒரு சேவை­க­யையும் நடத்­து­கி­றது. இவை அதி­க­பட்ச வரு­மா­னத்தைக் கொடுக்­கின்ற சேவைகள்.

அது­மாத்­தி­ர­மன்றி, ஸ்ரீலங்கன் விமான சேவை திருச்சி, சென்னை, மதுரை, கோவையில் இருந்து மத்­திய கிழக்­கிற்­கான பய­ணி­க­ளையும் ஏற்றி வந்து கொழும்பு ஊடாக அனுப்­பு­கி­றது.

பலா­லியில் இருந்து சேவைகள் ஆரம்­பிக்­கப்­பட்டால், சென்னை, திருச்சி, மதுரை, கோவைக்­கான ஸ்ரீலங்கன் விமான சேவையின் பய­ணங்கள் நிச்­ச­ய­மாக குறையும். அது அதிக வரு­வா­யுள்ள இடங்­களை இழப்­ப­தற்கு மாத்­தி­ர­மன்றி, மத்­திய கிழக்­கிற்­கான Transit பய­ணி­களை ஏற்றி வர முடி­யாத நிலை­யையும் ஏற்­ப­டுத்தும்.

அதனை விட, ஐரோப்­பிய நாடுகள், அவுஸ்­தி­ரே­லியா, இடங்­களில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையில் பயணம் மேற்­கொள்­ப­வர்கள் கூட, சென்னை வழி­யாக பலா­லிக்­கான பயணத் திட்­டங்­களை மேற்­கொள்ளக் கூடும். அதுவும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் வரு­மா­னத்தைப் பாதிக்கும்.

சரி, அவ்­வா­றாயின், பலா­லிக்­கான சேவை­களை ஸ்ரீலங்கன் விமான சேவையே ஆரம்­பிக்­க­லாமே என்ற கேள்வி உங்­க­ளுக்கு எழலாம்.

ஸ்ரீலங்கன் விமான சேவை­யிடம் 90 பய­ணிகள் வரை ஏற்­றக்­கூ­டிய சிறிய விமா­னங்கள் இல்லை. அதனிடம் இருப்பது, நடுத்தர உடலமைப்பைக் கொண்ட A-320/ A-321 ரகத்தைச் சேர்ந்த 13 விமானங்களும், நீண்ட உடலமைப்பைக் கொண்ட A-330 ரகத்தைச் சேர்ந்த 13 விமானங்களும் தான் இருக்கின்றன.இவை பலாலியில் தரையிறங்க முடியாது.

பலாலியில் இருந்து சேவையை நடத்த வேண்டும் என்றால், சிறிய ரக விமானங்களை ஸ்ரீலங்கன் நிறுவனம் குத்தகைக்குப் பெற வேண்டும் அல்லது கொள்வனவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை அதற்கு இடமளிக்குமா என்பது சந்தேகம்.

இந்த நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கு வருமானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தால், பலாலி விமான நிலையத்தை, வடக்கிலுள்ள மக்களுக்கான திட்டமாக கூற முடியாது.

கொடுப்பது போல கொடுத்து, பறிப்பது போல பறிப்பது என்று சொல்வார்களே அதுபோலத் தான், அரசாங்கம் நடந்து கொள்கிறது.

அவ்வாறாயின், பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறோம், என்று தேர்தல் பிரசாரங்களில் ஆளும்கட்சியினர் கூறிக்கொள்வதற்கு மாத்திரமா இந்த திட்டம் இருக்கப் போகிறது?

Comments (0)
Add Comment