முஸ்லிம் சமூகம்; கற்பிக்க தவறிய பாடம் !! (கட்டுரை)

அரசியல் தொடர்பான விமர்சனம் என்று வரும்போது, நாம் பொதுவாக அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில், வாக்காளர் பெருமக்களின் வகிபாகம் மிகப் பெரியது என்பதையும் பிழையான அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் தெரிவுசெய்திலும், அவர்களுக்குப் பாடம் புகட்டுவதிலும், மக்கள் விடுகின்ற தவறுகளை நாம் பெரிதாகப் பேசுவதில்லை. அவ்வாறாக, முஸ்லிம்களுக்கான அரசியலை சரிபடுத்தும் விடயத்தில், அச்சமூகம் விட்ட தவறுகள் பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது.

ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர், உரிய மாத்திரைகளை உட்கொள்ளாமல் ‘வீட்டில் கண்முன்னே கிடக்கின்ற குளிசைகளில் ஏதாவது ஒன்றைப் போட்டுப் பார்ப்போம்’ என்ற நினைப்பில் மாத்திரைகளை உள்ளெடுத்தால், நிலைமை என்னவாகும் என்பது நாமறிந்ததே. இந்தத் தவறை மட்டுமன்றி, உரிய மாற்று மாத்திரையை உள்ளெடுக்காத விதத்திலான தவறையும், முஸ்லிம் சமூகம் செய்து கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.

‘முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூகத்தை மறந்து செயற்படுகிறார்கள். முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகளை அவர்கள் பெற்றுத்தருவதில்லை. பிச்சைக்காரனின் புண்ணைப்போல, சமூகத்தின் பிரச்சினைகளை நீண்டகாலமாக வைத்திருக்கிறார்கள். பெருந்தேசியத்துக்கு சோரம் போகின்றார்கள். பேரம் பேசும் சக்தியை, தங்களது சுய இலாபத்துக்காகப் பயன்படுத்துகின்றார்கள்…’ போன்ற விசனக் கருத்துகள், முஸ்லிம் சமூகத்திடமிருந்து தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆயினும், தேசியப் பட்டியல் (நியமன) உறுப்பினர்களைத் தவிர, மற்றெல்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களையும், முஸ்லிம் மக்கள்தான் தேர்ந்தெடுக்கின்றார்கள். அதனூடாவே அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளும் அதிகாரங்களும் வந்து சேர்கின்றன. எந்த அரசியல்வாதியும், வானத்தில் இருந்து பதவியோடு குதிப்பதில்லை என்பதை, சமூகம் மறந்துவிடக் கூடாது.

சமூகத் துரோகி, சுயலாபம் உழைக்க அரசியல் செய்பவன், போதைப்பொருள் வியாபாரம் செய்பவன், சபல புத்திக்காரன், ‘இதற்குச் சரிப்பட்டு வரமாட்டான்’ என்று நினைக்கின்ற எல்லா வகையறாக்களுக்குள்ளும் உள்ளடங்குகின்ற அரசியல்வாதிகள் பலரை, தேர்தல் வந்துவிட்டால் மீண்டும் வாக்குப் போட்டுத் தேர்ந்தெடுப்பது அரசாங்கமோ ஏனைய சமூகங்களோ அல்ல. மாறாக, சுரணையற்ற முஸ்லிம் சமூகம் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

எழுத்தறிவு வீதம் மிக உயர்வாகக் காணப்படுகின்ற ஒரு நாட்டில், அன்றாட நடப்புகள் அனைத்தும் உள்ளங்கைக்கு வந்து சேர்கின்ற ஒரு காலச் சூழலில், ‘ஐயோ நாங்கள் ஒன்றும் தெரியாமல் அந்த ஆளுக்கு வாக்களித்து விட்டோம்’ என்று எந்த வாக்காளனாவது கூற முடியுமா? அப்படி உண்மையிலேயே தவறுதலாக வாக்களித்திருந்தால், அடுத்த முறை அந்த அரசியல்வாதிக்கு மேற்படி வாக்காளர் பாடம் கற்பிக்க வேண்டுமல்லவா?

ஆனால் அதைவிடுத்து, மீண்டும் அப்பேர்ப்பட்ட வேட்பாளர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கி, மீண்டும் மீண்டும் பிரதிநிதியாகத் தெரிவு செய்வதைப் போன்ற ஓர் அரசியல் மடமை வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை முஸ்லிம்கள், ஒரு தேசிய இனமாக – தங்களது பிரச்சினைகள், அபிலாஷைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றும் உரிமைகளும் சுயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கருதுவார்கள் என்றால், அதற்கு பொருத்தமான அரசியல்வாதிகளைத் தெரிவுசெய்ய வேண்டும். உருப்படியானவர்களை அரசியல் தலைவர்களாக நியமிக்க வேண்டும். இதன்மூலம், காத்திரமான உள்ளக அரசியல் பொறிமுறை ஒன்றைக் கட்டமைப்பது இன்றியமையாதது ஆகும்.

பிழையான பேர்வழிகளை அரசியல்வாதிகளாகத் தேர்ந்தெடுத்து விட்டு, ‘அவர்கள் எம்மைக் கவனிக்கின்றார்கள் இல்லை, சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கின்றார்கள் இல்லை’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? உண்மையில், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத, முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பாடுபடாத அரசியல்வாதிகளின் நடவடிக்கை ஒரு சமூகத் துரோகம் என்றால், அப்பேர்ப்பட்ட நபர்களுக்கு திரும்பத் திரும்ப வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முஸ்லிம் சமூகத்துக்கும், மறைமுகமாக அதில் பங்கிருக்கின்றது.

இது, தேர்தல்கள் நெருங்கிவரும் காலம். எனவே, முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகள், தமது தேசிய மற்றும் பிராந்தியத் தலைமைகளின் கடந்தகாலச் செயற்பாடுகள், வாக்குறுதியை நிறைவேற்றும் தன்மை, மக்கள் நலன்சார்ந்த அரசியல் நகர்வு போன்ற விடயங்களைக் கட்டாயமாக மீள்வாசிப்புச் செய்ய வேண்டுமெனத் தோன்றுகின்றது. இல்லாவிடின், அடுத்த ஐந்து வருடங்கள் முடிவடைகின்ற வேளையிலும், இதேபோன்ற கவலைகளோடுதான் முஸ்லிம் சமூகம் இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளல் நல்லது.

பொதுவாக, அரசாங்கங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசாங்கம், இதில் விஷேடமானது. முஸ்லிம்கள் மீதான இனவாத ஒடுக்குமுறையை மூலதனமாக்கியே ஆட்சியைப் பிடித்த அரசாங்கம், இனவாதத்துக்கு முடிவு கட்டுவதாக முஸ்லிம்களுக்குச் சொன்னது. ஆனால், அப்படியான அபூர்வங்கள் எதுவும் இதுவரை நடக்கவில்லை.

முஸ்லிம் சமூகமும் அதன் அரசியல் தலைவர்களும் சரியில்லை என்றால், அரசாங்கத்தைக் குற்றம் சொல்லியும் பயனில்லை. எனவே, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் வரை அனைத்து ரகமான அரசியல்வாதிகளும், கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்ற கூட்டல் – கழித்தல் கணக்கை, முஸ்லிம் சமூகம் இப்போது கையிலெடுக்க வேண்டியிருக்கின்றது.

கடந்த ஆட்சியின்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், இப்போது பதவிகளைச் சுகிப்பவர்கள், அடுத்த முறை அதிகாரத்தைப் பெற முனைப்பாய் இருப்பவர்கள் என்று எல்லா வகையான முஸ்லிம் அரசியல்வாதிகள், தலைவர்கள், தளபதிகளின் பதிவேடுகளையும் நோக்குங்கள்.

அவர்கள் மக்களுக்கு எப்படிப்பட்ட வாக்குறுதிகளைத் தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் வழங்கினார்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். தேர்தல் மேடைகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் பெரும் வீர முழக்கமாக வழங்கிய உத்தரவாதங்களைத் தொகுத்தெடுங்கள்.

அவற்றில் எவற்றை அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள், எதற்காக குறைந்தபட்சம் முயற்சியாவது செய்திருக்கின்றார்கள் என்பதை உன்னிப்பாக நோக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனமாகவோ அல்லது பகிரங்க வாக்குறுதியாகவோ, ‘ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்த்துத் தருவோம்’ என்று வாக்குறுதியளித்த ஓர் அரசியல்வாதி, பதவியும் அதிகாரமும் தன்னிடம் இருந்த காலத்தில் அதை நிறைவேற்றினார் அல்லது தனது சக்திக்கு உட்பட்ட வரையில் பாடுபட்டார் என்றால், அவருக்கு இன்னும் ஒரேயொரு தடவை வாக்களிப்பதில் நியாயம் இருக்கின்றது.

யாரேனும் அரசியல்வாதிகள், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எதனையும் பெற்றுத்தராமல் தமக்கு விருப்பமான வேலைத் திட்டங்களைச் செய்து கொண்டிருந்தார்கள் என்றால், அவருக்கு இன்னுமொரு முறை வாக்களிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். இன்னும் ஒருசில அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்… அவர்கள், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றிச் சிந்தித்தற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்றால், அவர்களுக்கு வாக்களிப்பது பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமே இல்லை.

ஏனெனில், மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுகின்றவர்கள், முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த விவகாரங்கள் மற்றும் அபிலாஷைகளை கிஞ்சித்தும் சிந்திக்காமல், தமது பதவிக் காலத்தைக் கடத்திய அரசியல்வாதிகளைத் தோல்வியுறச் செய்ய யோசிக்கவே தேவையில்லை. இது, மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற ஏனைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

முதலில், முஸ்லிம் மக்கள் தங்களது அரசியல் கலாசாரத்தையும் பழக்க வழக்கத்தையும் ஆக்கபூர்வமானதாக மாற்றியமைக்க வேண்டும். உணர்ச்சி சார்ந்த, சினிமாப் பாணியிலான அரசியலில் மயங்கிக் கிடக்கக் கூடாது. கொள்கையும் சமூகப் பற்றும் இருப்பவனைப் புறந்தள்ளி, பதவியும் கையில் பணமும் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்குப் பின்னால் போகின்ற கூட்டமாக முஸ்லிம்கள் இருக்கக்கூடாது.

முஸ்லிம் அரசியல்வாதிகளில் அநேகருக்கு, முஸ்லிம் சமூகத்தின் தேசியத் தலைவராக வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. சிலருக்கு பிராந்தியத் தளபதி ஆசையும் உண்டு. அதேபோல், முஸ்லிம் சமூகமும் தலைமைத்துவ மோகத்துக்கு ஆட்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்தியாவில், நடிகர்களின் உருவப்படத்துக்கு பாலூற்றுவது போல, முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தோளில் வைத்துச் சுமப்பதும் கட்டியணைத்து முத்தமிடுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

தமது விருப்பத்துக்குரிய தலைவர், அரசியல்வாதி மிகவும் புத்திசாலி, நல்லவர், வல்லவர் என நினைப்பதும் அவர்களது வார்த்தைகள் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்புவதும் மடமைத்தனமாகும். ‘நம்ம ஆள் எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும்’ என்று நம்பி, மந்திரித்து விடப்பட்டவன் போல அவருக்குப் பின்னால் செல்வது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகும். அத்துடன், அரசியல்வாதிகள் பிழை செய்தாலும், அதைச் சரி எனச் சொல்வது அரசியல் பித்துப்பிடித்ததன் அறிகுறி என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எத்தனையோ வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள். அவற்றில் 99 சதவீதமானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகள்கூட வழங்கப்படாத ஆயிரத்தெட்டு அபிலாஷைகளும் முஸ்லிம்களுக்கு இருக்கின்றன என்பது வேறு விடயம். ஆனால், வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றையாவது நிறைவேற்றாமல், திரும்பத் திரும்ப மக்களின் தலையில் மிளகு அரைக்கின்ற அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும்.

மீண்டும் சொல்கின்றோம்; இது தேர்தல் நெருங்கி வருகின்ற காலம்.
அதாவது, முஸ்லிம்கள் தங்களது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில், தாம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், மக்கள் ஆணையை மறந்துச் செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு உறைக்கும்படி ஒரு பாடத்தைக் கற்பிக்கவும் மட்டுமன்றி, பொருத்தமான அரசியல்வாதிகளைத் தெரிவுசெய்வதற்கும் இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்கப் போகின்றது. இதனை நன்றாகப் பயன்படுத்துவது அவசியம். முஸ்லிம் சமூகம், ‘பிழையான’ ஆள்களை மீண்டும் மீண்டும் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துவிட்டு, தமக்கு ‘சரியான’ விடயங்கள் நடக்கும் என்று அறிவிலித்தனமாக நம்புவது இனியும் நடக்கக்கூடாது. அதுபோல, இன்னுமின்னும் வாக்குறுதிகள் நிறைவேறும் என நம்பியிருந்து ஏமாறும் சமூகமாக அடுத்தத் தலைமுறை முஸ்லிம்கள் இருக்க இடமளிக்கக் கூடாது.

முகத்திரை தடை நீங்கிவிட்டதா?

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாளன்றே நாட்டில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், நான்கு மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. இதனால், அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழான பாதுகாப்புசார் கெடுபிடிகள் குறையும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வேளையில், அதே விதிமுறைகளின் கீழ் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட முகத்திரை அணிவதற்கான தடையும் நீங்கிவிட்டதா என்பதில் முஸ்லிம்களிடையே தெளிவின்மை ஏற்பட்டிருக்கின்றது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு விட்டதால், அதே சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மேற்படி முகத்திரைத் தடையும் நீங்கிவிட்டது என்று, பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டி, முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் சிலர் முந்திக்கொண்டு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அச்சட்டம் நீக்கப்பட்டாலும், தேசிய பாதுகாப்புக் கருதி மேற்படித் தடை நடைமுறையிலிருக்கும் என்ற கருத்துகளும் வெளியாகியுள்ளன.

இனிமேல், புர்கா மற்றும் முகத்தை மூடும் ஆடைகளை அணியலாமென்று ஒரு பிரிவினரும் இனியும் அணிவது சட்டமுரண் என்று இன்னுமொரு கூட்டத்தாரும் பரவலாக விவாதித்துக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

அதேநேரம், ஒரு சில செய்திகள், குரல்பதிவுகள் வெளியாகியிருந்தாலும்கூட, முகத்திரை அணியும் தடை முற்றாக நீக்கப்பட்டு விட்டது என்று அரசாங்கம் ஓர் ஊடகச் சந்திப்பை நடத்தி இதுவரை அறிவிக்கவில்லை என்றபடியால், முஸ்லிம் பெண்கள், பொது இடங்களில் புர்கா அல்லது நிகாப் அணிவது தற்போது குற்றமா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கின்றது.

ஒவ்வொரு சமூகத்தினதும் ஆடை என்பது, அவரவரது அடையாளமும் உரிமையும் ஆகும். இதை, வெளியிலிருந்து யாரும் தீர்மானிக்க முடியாது. புர்கா, அபாயா உட்பட முஸ்லிம்களின் ஆடை விடயமும் அவ்வாறே நோக்கப்பட வேண்டும். அதனடிப்படையில், அவ்வுரிமைக்காக முஸ்லிம் சமூகம் குரல் கொடுப்பதும் அவசியமாகும். அது வேறு விவகாரம்.

ஆனால், பல்லின நாடொன்றில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஊடுருவியுள்ள ஒரு பின்புலத்தில், நாட்டின் பாதுகாப்பையும் நடைமுறை யதார்த்தத்தையும் முஸ்லிம்கள் விளங்கிக் கொண்டுச் செயற்பட வேண்டியிருக்கின்றது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுவிட்டதால், புர்கா, நிகாப் அணியலாம் என்று சிலர் கருதலாம். ஆனால் உண்மையில், இடைப்பட்ட காலத்தில் அமைச்சர் தலதா அத்துக்கோரள, நிகாப், புர்காவை நிரந்தரமாகத் தடை செய்யும் சட்டமூலமொன்றைக் கொண்டுவருவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தார் என்பதையும் அதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளிக்கவிருந்த நிலையில் ஒரு முஸ்லிம் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய காலஅவாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும், முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது.

அதுமட்டுமன்றி, முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் அரசாங்கம் பலமுறை தெளிவான அறிவித்தல்களை வழங்கியிருந்த போதும், பாடசாலை, அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் (முகத்தை மூடாத) அபாயா அணிந்துசென்ற பெண்கள்கூட, எந்தளவுக்கு அசெகரியங்களை அனுபவித்தார்கள் என்பதை நாம் இன்னும் மறந்துவிடவில்லை.

நிலைமை இப்படியிருக்க, புர்கா, நிகாப் தடை நீங்கியமை குறித்த தெளிவான அறிவித்தல்கள், பாதுகாப்பு, அரச தரப்பிலிருந்து வெளியாகும் வரைக்கும், பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் (புர்கா, நிகாப்) ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பதே தேவையற்ற சிக்கல்களை தவிர்த்துக்கொள்ள இப்போதிருக்கின்ற வழி எனத் தெரிகின்றது.

Comments (0)
Add Comment