சம்பளமே இல்லாத 20 வருட வேலைக்காரர்!! (கட்டுரை)

மனித வாழ்க்கையை இன்னும் வசதியாக்கவும், நவீனமாக்கவும், ஸ்மார்ட்டாக்கவும் வந்துவிட்டது வாக்கர் ரோபோ. எந்திரன்கள் வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ‘UBTECH’இன் லேட்டஸ்ட் வரவு இது. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த டெக் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு பலரின் பாராட்டைக் குவித்திருக்கிறது.

வீட்டு வேலைகளைக் கவனிப்பவர்களுக்குக் கொடுக்கும் இரண்டு வருட சம்பளத்தில் இதை வாங்கி விட முடியும். பிறகு இருபது வருடங்களுக்கு சம்பளமே கொடுக்க வேண்டியதில்லை! ஆம்; வாக்கர் ரோபோ 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உங்களுக்காக உழைக்கும். ரோபோ என்ற உணர்வே தெரியாமல் இருப்பதற்காக மனிதத் தோற்றத்தில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். சார்ஜ் குறையும்போது அதுவே உங்களுக்குத் தெரிவிக்கும். அப்போது சார்ஜ் போட்டுவிடுவது மட்டுமே உங்களின் கடமை. மற்றபடி நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை.

மார்பிள் தரை, கார்ப்பெட், மரம் என எதன்மீது வேண்டுமானாலும் இதனால் நடக்க முடியும். அத்துடன் இதன் கைகளை மனிதர்களைப் போல எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். முக்கியமாக வீட்டிலுள்ள அனைத்து வகையான ஸ்மார்ட் டிவைஸ்களையும் துல்லியமாக வாக்கர் ரோபாவால் இயக்க முடியும். முக்கியமாக இதன் கால்களை இடத்துக்குத் தகுந்த மாதிரி பேலன்ஸ் செய்ய முடியும். மனிதர்கள் கூட சில நேரங்களில் கால் தவறி கீழே விழுந்துவிடுகிறார்கள் அல்லது கை தவறி கண்ணாடி டம்ளர்களைக் கீழே போட்டு உடைத்துவிடுகிறார்கள்.

ஆனால், வாக்கர் ரோபோ ஒருபோதும் அப்படிச் செய்யாது. தவிர, மனிதர்களைக் காட்டிலும் வீட்டு வேலைகளை இதனால் சுலபமாக, சரியாகச் செய்ய முடியும். அத்துடன் உங்களை உற்சாகப்படுத்த பியானோ வாசிக்கும், நடனமாடும், குழந்தைகளுடன் விளையாடும். எழுத்து, பேச்சு, சைகை என எந்த வழியில் வேண்டுமானாலும் வாக்கர் ரோபோவுடன் தொடர்பு கொள்ள முடியும்! இதற்குமுன் இவ்வளவு தொடர்புகொள்ளும் வசதியுடன் வீட்டு உபயோக ரோபோக்கள் வெளியானதில்லை.

Comments (0)
Add Comment