மீண்டும் அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி வரிச் சலுகை !! (கட்டுரை)

அரச துறையில் உயர் பதவிகளில் காணப்படும் ஊழியர்களுக்கு, வாகன இறக்குமதி வரி விலக்களிப்பு வழங்கப்படுவது, தற்போது மீண்டும் அதிகளவில் பேசப்படும் விடயமாக அமைந்துள்ளது. தேர்தல் காலம் நெருங்கி வருவதால், பொதுத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி வரி விலக்களிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொடுக்க, நிதியமைச்சு முன்வந்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. சில உயரதிகாரிகளுக்கு 22 மில்லியன் ரூபாய் வரையில் வரி விலக்களிப்பு வழங்குவதற்கு இதனூடாக பிரேரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.

இலங்கையில் வாகன இறக்குமதி வரி விலக்களிப்பு என்பது, பல காலமாக விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வரும் விடயமாக அமைந்துள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகள், அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், இதர உயர் பதவி வகிக்கும் அரச அதிகாரிகளுக்கும் அசாதாரணமான வகையில் அனுகூலத்தை வழங்குவதாக இது அமைந்துள்ளது. இவர்களால் வரிகளை செலுத்தக்கூடிய வசதி காணப்பட்ட போதிலும், கஷ்டப்பட்டு உழைக்கும், தனியார் துறையில் பணியாற்றி வரி செலுத்துவோரின் வரிப் பணத்தை செலுத்தும் நிலையில் இவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுவது பல மட்டங்களில் விமர்சிக்கப்பட்ட விடயமாக அமைந்திருந்தது.

இலங்கையில் அரச துறையில் தொழில் வாய்ப்பு கவர்ச்சிகரமாக அமைந்திருப்பதற்கு இந்த வாகன இறக்குமதி வரி விலக்களிப்பு வழங்கப்படுவதும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. போதியளவு நிதி கையிருப்பில் இல்லை என தெரிவித்து, பொது மக்களுக்கு மோட்டார் வாகனங்கள் கொள்வனவு மீதான வரியை அரசாங்கம் அதிகரித்த வண்ணமுள்ளது. அதேவேளை, பொதுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. அரச துறையில் சுமார் ஒரு மில்லியன் ஊழியர்கள் வரை காணப்படுவதுடன், இவர்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையினால், வெளிநாட்டு பணப்பரிமாற்றம் பேணப்படுவது பாதிக்கப்படாதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அரசாங்க உரிமையாண்மையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக நஷ்டமீட்டி வரும் நிலையில், இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த இழப்புகளுக்கு எவ்விதத்திலும் பொறுப்புக்கூறாத நிலையில், வரி செலுத்துவோரின் பணமே தொடர்ந்தும் விரயமாக்கப்படுகின்றது. இந்நிலையில் இவ்வாறான இழப்புகளை பதிவு செய்யும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறான சலுகைகள் வழங்கப்படுவது, எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்காது.

இந்நிலையில், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி செலுத்துகின்றனர். இவர்களுக்கு எவ்விதமான வரி விலக்களிப்பு அனுமதிகளும் வழங்கப்படுவதில்லை. நஷ்டமீட்டும் அரச துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்காக வழங்கப்படும் சலுகைகளை நிவர்த்தி செய்வதற்காக வருமானத்தைத் திரட்ட வேண்டிய அழுத்தமும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர் மீது மறைமுகமாக சுமத்தப்படுகின்றது.

இந்த அரச துறை வாகன இறக்குமதி வரி விலக்களிப்பினூடாக மோசடி, ஊழல்கள் இடம்பெறுவதாகக்கூட குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் இவ்வாறான வாகன இறக்குமதி வரி விலக்களிப்பு அனுமதிகள், வசதி படைத்த பொது மக்களுக்கு சொகுசு வாகனங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்காக மீள விற்பனை செய்யப்படுகின்றன.

2017இல் பொது மக்களின் நலன் கருதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 100 அங்கத்தவர்கள் தமது வாகன இறக்குமதி வரி விலக்களிப்பு அனுமதியை தனியார் தரப்பினருக்கு விற்பனை செய்திருந்ததை அறிந்து கொள்ள முடிந்தது. 2015 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட இவ்வாறான வாகன இறக்குமதி வரி விலக்களிப்பு அனுமதி காரணமாக, திறைசேரிக்கு சுமார் 7 பில்லியன் ரூபாய் இழப்பு நேரிட்டதாக மதிப்பிட ப்பட்டிருந்தது.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் அக்காலப் பகுதியில் நிதி அமைச்சராக திகழ்ந்த ரவி கருணாநாயக்க தமது உரையில், அரச ஊழியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்படும் வரி விலக்களிக்கப்பட்ட வாகன இறக்குமதி சலுகையை இடைநிறுத்துவதாக முன்மொழிந்திருந்தார். 2012 முதல் 2015 வரையான காலப்பகுதியில் இந்தச் சலுகை வழங்கப்பட்டிருந்தமை காரணமாக அரசாங்கத்துக்கு 147 பில்லியன் ரூபாய் இழப்பு நேரிட்டதாகவும், இது அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்ததுடன், மோசடியான வகையில் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ரூ. 147 பில்லியன் என்பது, உரமானியமாக வழங்கப்படும் தொகையிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகமான தொகையாக அமைந்துள்ளது. உரமானியமாக வருடாந்தம் 40 பில்லியன் ரூபாய் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சமுர்த்தி ஒதுக்கீடு என்பது வருடாந்தம் 30 பில்லியன் ரூபாயாகும். இந்நிலையில், இந்த நிதியைக் கொண்டு, பெருமளவான இதர அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியும். சர்வதேச நாடுகளிலிருந்து பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்தவுள்ள நிலையில், வாகன இறக்குமதிகளுக்கு வழங்கப்படும் இந்த வரிச் சலுகை முறையை மீண்டும் நடைமுறைக்குக்கொண்டு வருவது என்பது, நாட்டின் பொருளாதாரத்துக்கு மேலும் இழப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

இந்த வரிச்சலுகையை அரசாங்கம் வழங்குமாயின், வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை நிவர்த்தி செய்வதற்காக மாற்று புதிய வரிகளை அறிமுகம் செய்து, அல்லது ஏற்கெனவே காணப்படும் வரிகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும். இதனால் ஏற்கெனவே வரி செலுத்திய வண்ணமுள்ள நாட்டின் சாதாரண மக்களுக்கு மேலும் சுமையாக அமையும்.

தனியார் துறைக்கு பெருமளவில் வழங்கப்படும் இந்த வாகன இறக்குமதி வரிச்சலுகை ஊடாக ஏற்படும் வரி வருமான இழப்பின் சுமார் 82 சதவீதம் மறைமுகமாக சாதாரண மக்களிடமிருந்து அறவிடப்படுகின்றது. அதாவது, அரசியல்வாதிகள் அடங்கலாக அரச துறை உயரதிகாரிகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை, சாதாரண மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

இந்த வரிச்சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டிய தகைமை வாய்ந்த அரச அதிகாரிகள் காணப்பட்ட போதிலும், சாதாரண குடிமகன் ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், அரசாங்கம் அரசியல்வாதிகள், உயர் மட்ட அதிகாரிகளுக்கு பொது மக்களின் நிதியில் சலுகைகளை வழங்குவது, தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் உத்திகளாக அமைந்துள்ளதாகவே குறிப்பிட வேண்டும்.

Comments (0)
Add Comment