கருத்துக் கணிப்பு எடுத்துக்காட்டும் சமயோசித அரசியலின் அவசியம்!! (கட்டுரை)

அரசியல் என்பது பொதுமக்களுடனான ஒருவகை கொடுக்கல் வாங்கல் எனலாம். சமூகத்தில் சாதாரண ஒரு மனிதனாக வாழ்ந்த ஒருவனை தமது இறைமையால் தேர்ந்தெடுத்து, அவனுக்கு மக்கள் பிரதிநிதி எனும் நாமத்தை சூட்டி, சமூகத்தில் உயரிய அந்தஸ்தையும் எண்ணற்ற வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்கும் மக்கள், அதற்கு ஈடாக அவன் அல்லது அவள் நேர்மையான மக்கள் பணியில் ஈடுபட வேண்டுமென எதிர்பார்க்கின்றார்கள். அந்த எதிர்பார்ப்பு எந்தளவிற்கு நிறைவேற்றப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அந்த அரசியல்வாதிக்கும் அவனைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குமிடையிலான உறவு தீர்மானிக்கப்படுகின்றது. மறுபுறத்தில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் அளவிற்கே அம்மக்களினதும் நாட்டினதும் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கையில் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருக்கும் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகளாக களமிறங்கவிருக்கும் அரசியல்வாதிகள் பற்றிய ஒரு காத்திரமான மக்கள் கணிப்பொன்று சில வாரங்களுக்கு முன் நடந்தேறியிருக்கின்றது.

25 பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய குழுவொன்று யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வடக்கு வாழ் தமிழ் மக்கள் களமிறங்கப்போகும் போட்டியாளர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியப்பாட்டை பற்றியே இந்த ஆய்வு நடாத்தப்பட்டிருக்கின்றது.

இக்கருத்துக் கணிப்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய, அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ஷ ஆகியோர் மீது வடபுல மக்கள் கொண்டிருக்கும் மதிப்பீட்டை வெளிப்படுத்தும் அளவிலேயே இக்கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டிருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மீது அம்மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இக்கருத்துக் கணிப்பில் 39 சதவீதத்திற்கும் அதிகமான விருப்பத்தினை மைத்திரிபால சிறிசேனவே வென்றிருக்கின்றார்.

அதற்கு அடுத்தபடியாக வடக்கு மக்களின் 10.12 சதவீத ஆதரவை ரணில் விக்ரமசிங்க வென்றெடுத்திருக்கின்றார்.

இக்கணிப்பின்போது கோட்டாபே ராஜபக்விற்கு 06 சதவீதமான வாக்குகளே கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சாத்தியப்பாட்டை கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுள் கடந்த நான்கரை வருடமாக மைத்திரிபால சிறிசேன வடக்கு மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளையும் அவர்களது தேவைகளையும் புரிந்து செயற்பட்டிருக்கும் பின்னணியில் அவருக்கான மக்கள் ஆதரவே அவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல்களின் போதும் பொதுத் தேர்தல்களின் போதும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை அம்மக்கள் மத்தியில் ஏற்படும் வகையில் வாக்குறுதிகளை கொடுத்து, அவற்றை சரிவர நிறைவேற்றாத அனுபவத்தைப் பெற்றிருக்கும் மக்கள், 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அம்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றத்தக்க முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்திருக்கின்றமையே இத்தகைய மக்கள் ஆதரவு அவருக்கு கிடைப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலத்தில் வட பகுதியில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், சுதந்திரமான சூழலை உருவாக்குதல், யுத்தத்தின்போது அரச படையினரால் கைப்பற்றபட்ட நிலங்களில் ஏறத்தாள 80 சதவீதத்திற்கும் அதிகமான நிலங்களை மீண்டும் மக்களிடம் கையளித்தல், இராணுவ நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த வட பகுதியில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஸ்தாபித்தல், காணாமற்போனோரை கண்டறியும் காரியாலயத்தை ஸ்தாபித்தல், வரலாற்றின் முதற்தடவையாக ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாக செயற்படும் அதிகாரத்தை கொண்டிருக்கும் வட மாகாண ஆளுநர் பதவியில் ஒரு தமிழரை அமர்த்தி, அவர் மூலமாக வடபுல மக்களின் பெருமளவு முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்துவரும் அதேநேரத்தில், நிறைவேறாத எதிர்பார்ப்புகளாக இருந்து வந்த வடமராச்சி குடிநீர் திட்டம், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் ஆகிய இரு பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன்,

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தியின் மூலம் அப்பகுதி மீனவ சமுதாயத்தினருக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டுவந்த வாழ்வாதார வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், இராணுவத்தை கொண்டு நல்லிக்கணபுரம் போன்ற வீடமைப்பு திட்டங்களை உருவாக்கியதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முருகானந்தா மற்றும் வட்டகச்சி ஆகிய பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டிடங்களை துரிதமாக நிர்மாணித்துக் கொடுத்தல் என எண்ணற்ற சேவைகளை அம்மக்களுக்காக மனமுவந்து செய்துவரும் அதேவேளை, இதுவரை காலமும் இந்த நாட்டில் ஆட்சிபீடம் ஏறிய அரச தலைவர்களில் மிக அதிகமான தடவைகள் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு அம்மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டார் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது வடபுல மக்களின் இந்த அதிகபட்ச விருப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அப்பதவியில் அமர்த்துவதற்கு குறிப்பாக வடபுல தமிழ் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பேராதரவுக்கான தமது மறுமொழியாக மைத்திரிபால சிறிசேனவின் இந்த அர்ப்பணிப்பு அமைந்திருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு அரசியல் யாப்பு ரீதியாக பெற்றுத்தருவதாக கூறப்பட்ட அரசியல் தீர்வை அடைய முடியாது போனதற்கு மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் மூலம் அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் ஆளுந்தரப்பிற்குமிடையே ஏற்பட்ட விரிசலும் அதையடுத்து தொடர்ந்து நிலவிய முறுகல் நிலையுமே காரணமாக அமைந்தது.

நல்லாட்சி அரசாங்கமானது அதன் உறுதிமொழியை காப்பாற்றும் வகையில் கண்ணியமாக நடந்துகொண்டிருப்பின் பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் பூரண ஆதரவையும் பெரும்பான்மையும் பெற்று தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வினையும் அதிகாரப் பகிர்வினையும் பெற்றுக்கொடுக்கும் புதிய அரசியல் யாப்பினை யதார்த்தமாக்கக்கூடியதாக இருந்திருக்கும். ஆயினும் அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அசமந்தபோக்கும் அரசியல் தீர்வுக்காக இதயசுத்தியுடன் அரசு செயற்படவில்லை என்பதை உணர்ந்து அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசியல் அழுத்தத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொடுக்கத் தவறியதனாலுமே கைக்கு எட்டிய அரசியல் தீர்வு வாய்க்கு எட்டாது போய்விட்டது.

எவ்வாறாயினும் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் மனப்பூர்வமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவற்றை அரசியல் இலாபம் பாராது தீர்த்து வைக்கத்தக்க உண்மையான உணர்வைக்கொண்ட அரச தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் அதற்கான பலமும் ஒன்றுதிரட்டப்பட்ட தமிழ் சமூகத்தின் வாக்குகளுக்கு இருக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்து செயற்படுவதன் மூலம் குறிப்பாக தமிழ் மக்களுக்கு இதை விட சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கான சமயோசித அரசியல் காய் நகர்த்தலை மேற்கொள்ள வேண்டிய தருணமே இன்று மீண்டும் தமிழ் சமூகத்தின் முன் உருவாகியிருக்கின்றது.

Comments (0)
Add Comment