மலையக கட்சிகள் பேரம் பேசியே முடிவு எடுக்க வேண்டும்!! (கட்டுரை)

இந்த நேரத்தில் மலையக கட்சிகள் நிதானத்துடனும் தூரநோக்குடனும் பேரம் பேசலில் இறங்கினால் மட்டுமே எதனையாவது சாதிக்க முடியும். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50சத வீதத்திற்கும் மேலாக வாக்குகளைப் பெற வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. இதனால் சகல சிறுபான்மைகட்சிகளின் ஆதரவு மட்டுமே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறப்போகிறது’

‘1931ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் அடிப்படை ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டாகப் பதிவாகியுள்ளது. டொனமூர் ஆணைக்குழு பரிந்துரை செய்த சில சீர்திருத்தங்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்தின. சர்வசன வாக்குரிமை என்னும் அவரது சிபாரிசு இந்த வாய்ப்பை வழங்கியது.

எனினும் வாக்களிப்பு இனரீதியிலேயே இடம்பெற்றது. 1936இல் நடைபெற்ற இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் சார்பில் கோ. நடேசஐயரும் (12,866) தலவாக்கலையில் இருந்து எஸ். வைத்தியலிங்கமும் (8,708வாக்குகள்) வெற்றிபெற்றனர். இத்தேர்தலில் பதுளை, பலாங்கொடை, நுவரெலியா தொகுதிகளில் போட்டியிட்ட வீ.ஏ. சோமசுந்தரம், சி. வேலுப்பிள்ளை, எஸ். இராமையா ஆகியோர் மிக சொற்ப வாக்குகளாலேயே தோல்வியுற்றனர்.

இத்தேர்தலில் வாக்களிக்கும் தகைமை பெற்றோர் தொகை 1,45,000பேராகும். இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விடயம், இடதுசாரித் தலைவர்களான என். எம். பெரேராவும், ஆர்.எஸ். குணவர்தனவும் வெற்றிபெற தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளும் காரணமாக இருந்தது. இடதுசாரி கொள்கையாளர்கள் தொழிலாளர்களை அணுகிய விதம் அவர்கள் மீது காட்டிய அனுதாபம் அவர்களுக்காக போராட்டங்களை நடாத்திய பாணி பெருந்தோட்ட மக்களைப் பெரிதும் கவர்ந்தன.

இதன் காரணமாகவே சுதந்திரத்துக்குப் பின்னரான இராண்டாவது பொதுத்தேர்தலிலும் இடதுசாரி சக்திகளின் செல்வாக்கு உயர்ந்து காணப்பட்டது. இது டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு அபத்தமானது. பின்னடைவைத் தந்தது. 1948ஆம் ஆண்டு 1.4.(1) பிரஜா உரிமைச் சட்ட செயற்பாடுகள் தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளுக்கு ஆப்பு வைத்தது. இச்சட்டத்தினால் இந்திய வம்சாவளியினர் தமது குடியுரிமை, வாக்குரிமை இரண்டையும் இழக்கலாயினர்.

இதுவரை இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்நாட்டுப் பிரஜைகளாக சகல உரிமைகளையும் பெறக்கூடியவர்களாக இருந்தனர். உண்மையில் இந்த வாக்குரிமை குடியுரிமை பறிப்பு ஒரு பழி தீர்க்கும் படலமே ஆகும். இந்த சதி பிற்காலத்திலும் தொடரவே செய்தது. டி.எஸ் சேனநாயக்கவைப் போன்றே அட்சிபீடமேறிய எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாராயக்கவும் எஞ்சியிருந்த சில அரசியல் உரிமைகளையும் பறித்தெடுத்தார்.

இவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்?

இந்திய வம்சாவளித் தமிழர்கள் அரசியல் ரீதியில் உரிமைகளைப் பெற்று பலம் அடையக்கூடாது என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பு. அது தேசிய ரீதியில் சிங்கள மேலாதிக்கவாதத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்று அத்தலைவர்கள் பயந்தார்கள். தீவிரவாத பெளத்த போக்காளர்கள் இவ்வாறான ஒரு அச்சத்தை வெளிப்படுத்தினார்கள். பெளத்தமதம் தவிர்ந்த பிரிதொரு மதப்பிரிவினர் ஜனநாயக பண்பியலை நிர்ணயம் செய்வதில் பாத்தியதைக் கொள்வதை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மேலோட்டமாக அரசியலை அடிப்படையாகக் கொண்ட அச்சம் போல் இதுதோன்றினாலும் அடித்தளத்தில் இனவாதத்தின் வெளிப்பாடாகவே இது அமைந்தது.

இந்திய வம்சாவளி சமூகத்தின் இனரீதியான பெருக்கம் எதிர்காலத்தில் நிர்வாக ரீதியிலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் சில பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் எச்சரித்தன. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டே இனச் செறிவைக் கூறுபோடவும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தேசிய அபிவிருத்தி என்ற போர்வையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

1953இல் குடிசன மதிப்பீட்டின்படி இந்திய வம்சாவழித் தமிழர் சிங்கள மக்களுக்கு அடுத்த பெரும்பான்மை இனமாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதுதேசிய ரீதியில் ஓர் எச்சரிக்கை உணர்வை விதைக்கவே செய்தது. ஆனால் 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நிலை மாற்றமடைந்து இந்திய வம்சாளித் தமிழர்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டனர்.

இது எப்படி நடந்ததாம்? இந்த இடைக்காலத்தில் மலையகத்தில் குடிசன அதிகரிப்பு ஏற்படவில்லையா? இங்கே தான் ஆட்சியாளர்களின் திருகு தாளங்கள் மறைந்து நிற்கின்றன. இந்திய அரசோடு மனிதாபிமானமற்ற ரீதியில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமா- /சாஸ்திரி நாடு கடத்தல் ஒப்பந்தம் இவற்றுள் முக்கியமானது. இவ்வொப்பந்தப்படி இலட்சக்கணக்கானோர் இந்தியா திரும்பலானார்கள்.

அடுத்தது, மலையக சமூகப் பிரிவினருக்கு மட்டுமே பிரத்தியேகமாக அமுல் செய்யப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை முறைமை சொற்ப பணத்துக்கும் அற்ப சலுகைக்குமாக பல ஆண்களும் பெண்களும் இதற்குப் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டனர்.

இனி அவ்வப்போது இடம்பெற்ற மலையக மக்களுக்கெதிரான வன்முறைகள். இதனால் உயிரிழப்புகள் உடைமை இழப்புகள் இடம் பெயர்வுகள் ஏற்பட்டன. கணிசமானோர் மலையகத்தைக் கைவிட்டு வடக்குக்கு ஓடிப் போனார்கள். இத்துடன் குடிசன மதிப்பீடு என்பது பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரை ஏனோ தானோவென்ற ரீதியில் நடத்தப்பட்டது. இவ்வாறான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளினால் மலையக சமூகத்தின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படலானது.

இவ்வளவு செய்தும் கூட அரசியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒர் தேசிய இனமாக இன்று மலையக சமூகம் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இம்மக்களில் பெரும்பான்மையினர் தேயிலை, இறப்பர், தென்னை தோட்டங்களில் தொழில்புரியும் நிலையே இன்னும் காணப்படுகின்றது. பாரிய ஆளணி வளத்தைக் கொண்ட ஒரு தொழிற்றுறையே இந்தப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை. இத்துறை இன்றும் அந்நியச் செலாவணியை பெற்றுத்தருவதில் இன்று நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அத்துடன் தேசிய ரீதியில் வாக்கு வங்கிகள் மூலம் ஆட்சியதிகாரம் கொள்வோரை அடையாளப்படுத்தக்கூடிய அந்தஸ்தும் பெற்றுள்ளது. இருந்தபோதும் இம்க்களின் வாழ்வியலில் காலத்துக்கேற்ற மாற்றம் ஏற்படவில்லை. இதற்கான வேலைத்திட்டங்கள் ஏதுமின்றி வெறுங்கையுடன் வந்து வாக்குறுதிகளை மட்டும் வழங்கிவிட்டு வாக்கு வங்கியைக் கபளீகரம் செய்யும் காரியங்கள் மட்டுமே காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றது.

இன்று 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு தயாராகி வருகின்றது. தேசிய கட்சிகள் யாவும் மலையக மக்களின் வாக்குகளைப்பெற பல்வேறு உத்திகளைக் கையாள ஆரம்பித்துவிட்டன. பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைக் கூறிக்கொண்டு தம்மை நியாயவாதிகளாக நிலை நிறுத்தப் பார்க்கின்றன.

இந்த நேரத்தில் மலையக கட்சிகள் நிதானத்துடனும் தூரநோக்குடனும் பேரம் பேசலில் இறங்கினால் மட்டுமே எதனையாவது சாதிக்க முடியும். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50சத வீதத்திற்கும் மேலாக வாக்குகளைப் பெற வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. இதனால் சகல சிறுபான்மைகட்சிகளின் ஆதரவு மட்டுமே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறப்போகிறது. இதில் மலையக மக்களின் வாக்குகளும் கணிசமானவை. இத்தருணத்தை மலையக கட்சிகள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன?.

எழுத்து மூலமான பேரம் பேசல் மூலம் மட்டுமே எதுவும் சாத்தியமாகும்.

இதேவேளை களமிறங்கியுள்ன வேட்பாளர்களிடம் மலையக அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சித்தாந்தங்கள், கோட்பாடுகள், கர்ஜனைகள் எதுவுமே மலையக மக்களைப் பொறுத்தவரை கறிக்குதவாத ஏட்டுச்சாரமாகவே இருக்கும்.

மலையக மக்களைப் பொறுத்தவரை எந்தவொரு தேசிய கட்சியும் இதய சுத்தியுடன் நடந்து கொண்டிருந்ததற்கான சாட்சிகள் இல்லை. கட்சி அரசியலை முன்னிறுத்தி கறிவேப்பிலையைப் போல ஒட்டுமொத்த சிறுபான்மைக் கட்சிகளும் நடத்தப்பட்டு வந்திருப்பதே கடந்தகால வரலாறு.

எனவே எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பது, ஓரணியில் திரட்டுவது என்பது சவாலுக்குரிய சங்கதியாகவே இருக்கப் போகிறது. இந்த ஜனாதிபதித் தேர்தல் மிகமிக முக்கியமாக அமையப் போகிறது. அந்த வகையில் விழப்போகும் ஒவ்வொரு வாக்கும் பேரம் பேசலின் பெறுமானமாக அறுவடையை அள்ளித்தரவேண்டும். அதுவே மலையக புத்திஜீவிகளின் எதிர்பார்ப்பு.

Comments (0)
Add Comment