ஒழுக்கமற்ற பட்டதாரி பரம்பரையையும் உருவாக்கும் பல்கலைக்கழகங்கள்!! (கட்டுரை)

கிளிநொச்சியில் பல்கலைக்கழக புகுமுக மாணவிகளின் மீது சீனியர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான physical ragging, sexual ragging இன்று மிகப் பரவலான கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்தக் கண்டனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், இது ஒன்றும் புதிய சங்கதியுமல்ல. இதற்கு முன்னரும் இந்த மாதிரி ragging என்ற பேரிலான வன்முறைக்கு எதிராக அங்கங்கே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மாணவர்கள் எதிர்த்திருக்கிறார்கள். புலிகளின் காலத்திலேயே (1993, 94ஆம் ஆண்டுகளில்) இந்த ragging க்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பு நடந்துள்ளது.

அப்பொழுது ராக்கிங்கை எதிர்த்த புகுமுக மாணவர்கள் மாட்டு வண்டிலில் பல்கலைக்கழகத்திற்கு வந்து தமது எதிர்ப்பினை அடையாளப்படுத்த முயன்றனர். இதை எதிர்த்த சீனியர்ஸ் அந்த மாட்டு வண்டிலுக்குத் தீவைக்க முற்பட்டனர். அப்பொழுதும் இது ஒரு பேசுபொருளாகிப் பரவலாக விவாதிக்கப்பட்டது. ஆனாலும் இந்த ragging கலாச்சாரமும் இந்த வன்முறையும் நிற்கவில்லை. அது பகிரங்கமாகவே தொடர்ந்து கொண்டேயிருந்தது.

யுத்தத்திற்குப் பிறகு இது இன்னொரு வடிவத்தில் பரிணாமம் பெற்றது. அப்பொழுதும் எதிர்ப்புக் காட்டப்பட்டது. இந்த எதிர்ப்பை ஆதரித்து அங்கங்கே எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டுமுள்ளது. ஆனாலும் ஆண்டுதோறும் புகுமுக மாணவர்களின் மீது நடத்தப்படும் இந்த வன்முறை முடிவுக்கு வரவில்லை.

இந்த வன்முறையினால் ஒவ்வொரு ஆண்டும் உயிரழப்புகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுகூட ஒரு மாணவி இந்த வன்முறையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலையை நோக்கிச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய தந்தையினால் இது தடுக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்ல, அந்தத் தந்தை துணிச்சலாக மாணவி மீது ragging செய்ய முற்பட்டவர்களைப் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட physical ragging, sexual ragging பற்றியுமான தகவல்களைச் சேகரித்துப் பகிரங்கப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட சீனியர்ஸ்களின் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் முயற்சித்துள்ளார். இது பாராட்டுதற்குரியது.

இதனால் சம்பந்தப்பட்டவர்களுடைய தொலைபேசி இலக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுடைய வாட்ஸப் பயமுறுத்தல்களும் பயன்படுத்திய உரையாடல்களும் குறிப்புகளும் பகிரங்கமாகியிருக்கின்றன. மாணவர்கள் சிலருடைய முகங்களும் பொதுவெளிக்கு வந்துள்ளது. அவர்கள் மேற்கொண்ட வன்முறைக்காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கின்றன. ஆகவே குற்றச்செயல்களுக்கான ஆதாரமும் குற்றவாளிகளின் அடையாளமும் துலக்கமாகியிருக்கிறது.

இதன் மூலமாக இந்தத் தந்தை பல நற்காரியங்களைச் செய்திருக்கிறார். ஒன்று பிள்ளையைப் பாதுகாத்துள்ளார். இரண்டாவது, குற்றவாளிகளை இனங்காட்டியிருக்கிறார். மூன்றாவது, குற்றவாளிகளின் மீதான சட்ட நடவடிக்கைக்கான நிலையை உருவாக்கியிருக்கிறார். நான்காவது, சமூக மட்டத்திலான விழிப்புணர்வுக்குத் தூண்டுதலளித்திருக்கிறார். ஐந்தாவது, குற்றவாளிகளின் பெற்றோர், அவர்களுடைய நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோருடைய பொறுப்புக்கூறலைக் குறித்த கேள்விகளையும் கவனத்தையும் உண்டாக்கியுள்ளார்.

ஆறாவது, பல்கலைக்கழகத்தின் மீதும் அதனுடைய நிர்வாக அலகின் மீதும் பேரவை, மூதவை மீதும் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். ஏழாவது நாட்டில் இந்த மாதிரியான வன்முறைகளுக்கும் குற்றச் செயல்களுக்குமான பதில் என்ன? நடவடிக்கை என்ன என்ற கேள்விகளை உருவாக்கியிருக்கிறார். அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டியதொரு கட்டத்தை உண்டாக்கியுள்ளார். ஒரு சாதாரண தந்தையின் இந்தச் செயல் வரலாற்றுச் சாதனை என்றே சொல்ல வேண்டும்.

இதைப்போல இனியொரு சம்பவம் யாருக்கும் நிகழக்கூடாது. நிகழ முடியாது என்ற அளவுக்கு அவருடைய துணிச்சலான – புத்திபூர்வமான இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. எந்தப் பெரிய அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் செய்யத்துணியாத – செய்திருக்காத காரியத்தைச் செய்திருக்கும் இந்தத் தந்தையும் தந்தைக்கு ஒத்துழைத்த மாணவிக்கும் நாம் பெரும் பாராட்டையும் நன்றியையும் கூற வேண்டும். பல உயிர்களைக் காப்பாற்றிய பெருமை இவர்களுக்குரியது.

ஆனால், இதைக்குறித்து இதுவரையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமோ மாணவர் பிரதிநிதிகளோ வாயே திறக்கவில்லை. உப்புச் சப்பில்லாத உருப்பெறாத அரசியல் அறிக்கைகளை விடுக்கின்ற பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இப்பொழுது இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசத்துணியாமல் தலையை இருளுக்குள் புதைத்திருக்கிறது. அரசியற் கட்சிகள், தலைவர்கள், பிரமுகர்கள் கூட இதைக்குறித்துப் பேசவேயில்லை. ஏன் பல்கலைக்கழக நிர்வாகம் கூட இதைப்பற்றிப் பேசவில்லை. மாணவர்களுக்கு எத்தகைய அறிவுறுத்தல்களையும் விடுத்ததாகவும் இல்லை. இது நல்ல சகுனமல்ல. ஆனால், சமூக மட்டத்தில் இதைக்குறித்த எதிர்ப்பும் கண்டனமும் பரவலாக எழுந்துள்ளது.

இந்த விழிப்புணர்வு நல்ல நம்பிக்கையைத் தருகிறது. நிறுவனங்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், அதிகாரிகள் போன்றதெல்லாம் பெறுமதியற்றுப்போயுள்ளமையே இந்தச் சம்பவமும் காட்டுகிறது. மக்கள் ஒவ்வொரு விடயங்களிலும் மாற்றத்தை விரும்புகிறார்கள். விடுதலையை விரும்புகிறார்கள். புதிய உலகமொன்றை விரும்புகிறார்கள். சுயாதீனமாக அதைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதுவரையில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனப்போராட்டங்களைப்போலவே இந்த physical ragging, sexual ragging க்கும் எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கக் கூடிய சூழல் கனிந்து வருகிறது.

இதேவேளை இந்த physical ragging, sexual ragging க்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுனர் திருமதி சாள்ஸ் பணித்திருக்கிறார். அரசாங்கத்தரப்பிலிருந்தும் உயர் கல்வி அமைச்சர் இதற்கான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது நல்லது. வரவேற்கப்பட வேண்டியது.

இதற்குப் பின்னர் இந்தப்பிரச்சினைக்கு – சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்ற புதுமுக மாணவர்களுக்கான பாதுகாப்பு என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் இதைப்போல கடந்த ஆண்டுகளில் ராக்கிங்கில் ஈடுபட்டு பிடிபட்ட சில மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் வழங்கப்பட்ட தண்டனைகளும் எந்தப் பெரிய மாற்றங்களையும் உண்டாக்கவில்லை.

ஆகவே இறுக்கமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இப்பொழுது வெளியாகியுள்ள தகவல்களின்படி, குற்றவாளிகளாகக் கருதப்படும் மாணவர்களுக்கு எட்டு ஆண்டுகள் வரையில் பரீட்சை எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது சாத்தியமானதா? ஏனெனில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் இதை அனுமதிக்குமா? என்று தெரியவில்லை. இதைக்குறித்து அது விளக்கமளிக்க வேண்டும்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ இந்த விசயத்தில் என்ன மாதிரியான நிலைப்பாட்டில் உள்ளார்? அவருடைய எதிர்கால நடவடிக்கைகள் எப்படியாக அமையும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதேவேளை பகிடி வதையாக ஒரு காலத்தில் இருந்த இந்தச் செயல் இப்போது ஒரு எல்லை மீறிய குற்றச் செயலாக மாறியுள்ளது என்பதைக்குறித்த மதிப்பீடுகளும் கவனப்படுத்தல்களும் அவசியப்படுகின்றன. பல்கலைக்கழக கலாசாரம், மாணவர்களின் ஒருமைப்பாட்டுக்கான செயல் என்ற சப்பைக் கட்டுகள் இங்கே ஆரோக்கியமாக அமையாது. பகிடிவதை செய்பவர்களில் சிலர் எல்லை மீறுவதை பொதுமைப்படுத்த முடியாது என்று கூறுவதும் ஏற்புடையதல்ல. பகிடிவதையால் ஒருத்தரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் போது எந்த சப்பைகட்டுமே எடுபடாமல் போகிறது. பல மாணவர்கள் மன உளைச்சலுக்குள்ளாவதோடு தமது கல்வியை இடைநிறுத்தும் நிலைக்குள்ளாயிருக்கின்றனர். இது அந்த மாணவர்களின் ஆளுமைக் குறைபாடு என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இது எவ்வளவு மோசமான நியாயப்படுத்தல்?

சாதாரணமாக பகிடிவதையே தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும்போது, அது அடுத்த லெவலில் physical ராக்கிங், sexual ராக்கிங் என்று பரிணமிக்கும்போது அதைக்குற்றம் என்றே சொல்ல முடியும். முரண் என்வென்றால் physical ragging, sexual ragging செய்துவிட்டு அடக்குமுறைகளுக்கு, சமத்துவம், சம உரிமை, பெண்ணுரிமை என்று குரல் குடுக்கிறதும் இவர்களாகவே இருப்பதுதான். இவர்கள்தான் பின்னர் அரசியல் அறிக்கைகளை விடுப்பதும் படித்து வெளியேறிய பின்னர் சமூக மட்டத்தில் நிர்வாகப் பொறுப்புகளில் அமர்வதும். இவர்கள் எப்படி ஒரு முன்மாதிரியான சமூகத்தை உருவாக்க முடியும்?

இந்த இடத்தில் நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டும். இந்தப் பல்கலைக்கழகங்களில் இருந்துதான் ஒரு காலம் உன்னதமான பல விடுதலைப்போராளிகள் உருவாகினார்கள். போராட்டத்துக்கான பல பங்களிப்புகள் நடந்திருக்கின்றன.

தமிழ்ப்பகுதிகளில் மட்டுமல்ல, சிங்களப்பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பெருவாரியான மாணவர்கள் ஜே.வி.பியில் இணைந்ததும் ஜே.வி.பிக்கு ஆதரவாக இருந்ததையும் இன்னும் இருப்பதையும் நாம் மனங்கொள்ளலாம்.

அப்படி ஒரு பெரும் பங்களிப்பை வழங்கிய மாணவ சமூகம் இன்று இப்படி கீழ்மை நோக்கிச் சரிந்திருப்பது கவலைக்குரியதே. இந்த மாணவர்கள்தான் அரசியல் ரீதியாக தாம் இன்னொரு சமூகத்தினால் ஒடுக்கப்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு தமக்குக் கீழே உள்ளவர்களை சீனியர்- ஜூனியர் என்ற அடிப்படையில் ஒடுக்க முற்படுவதும் அடக்குவதும் பாலியில் ரீதியாக அவர்களைப் பயன்படுத்த விளைவதும் நடக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?

இதைக்குறித்து கவிஞர் தர்மினி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் நம் கவனத்திற்குரியவை. “சமுதாயம் நாகரிகமடைந்து வர வர, பண்பட்ட குணங்களைக் காட்ட வேண்டும். சீனியர்கள் இது தான் பல்கலைக்கழகத்தின் கலாசாரம் என்று ராக்கிங் பற்றி முதலாமாண்டு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இதில் என்ன கலாசாரமிருக்கிறது – பண்பாடு இருக்கிறது? தங்களை விட வலிமையிலும் வயதிலும் குறைந்தவர்களை, சீனியர்கள் என்ற அதிகாரத்தை வைத்துத் தம் மனவக்கிரங்களைத் தீர்க்கிறார்கள். பல்கலைக்கழக வளாகங்களில் கண்டால் மிரட்டுவது தண்டனைகளை வழங்குவது. வதைப்பது என்பதைத்தாண்டி,வீடுகளுக்குப் போய் வதைப்பது,கைபேசிகளில் வதைப்பதும் எனச் சீனியர்களது அதிகாரம் வளாகச் சுவர்கள் தாண்டியவை.

நண்பர்களாகப் பழகத்தான் பகடிவதையென்றால், சமமாக மரியாதையாகப் பழகாதவரோடு எப்படி நட்பாக முடியும்? இவர்கள் படித்து முடித்துப் பெறப்போகும் பதவிகளில் கூட இதே மேலதிகாரி என்ற ஆணவத்தின் வதை தான் தொடரும். பாலியல் சொற்களாலும் நடவடிக்கைகளாலும் பெண்களை வதை செய்வது ஆழ்மனதின் பெண்வெறுப்பும் ஆபாசங்கள் மீதான வேட்கையும் தான்.

இந்த ராக்கிங் வக்கிரங்களுக்காகப் பயந்து ஒளிந்து படிப்பை நிறுத்தித் தற்கொலை செய்பவர்களுக்கு, இதையெல்லாம் எதிர்ப்பதற்குக் கல்வி நிலையங்கள் கற்பிக்கவேண்டும். பாலியற்சொற்களை – செய்கைகளை பகிடிவதைகளாக்குபவர்களைப் பார்த்து முதலாமாண்டு மாணவர்கள் ஏன் பயந்து சாகவேண்டும்? ஏன் வெட்கப்படவேண்டும்?”

இதேவேளை இந்தப் பகிடி வதைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டியவை என்ன என்பதைப்பற்றி எழுத்தாளரும் பல்கலைக்கழக விரிவுரையாளரும் மாணவ ஆலோசகராக, தலைமை மாணவ ஆலோசகராக, தற்போது சிரேஸ்ட மாண ஆலோசகராகக் கடையாற்றிக் கொண்டிருப்பவருமான அம்ரிதா ஏயெம் பின்வருமாறு தெரிவிப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

1998இன் 20ம் இலக்க பகிடிவதைத் தடைச் சட்டம் – (பொலிஸ் நிலையங்களுக்கு புகார் செய்யப்பட வேண்டும்.)

1994இன் 24ம் இலக்க தண்டனைச் சட்டம்

“ஆணைக்குழு சுற்றறிக்கை இல. 919 ” , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.

போன்ற பல சட்டங்கள் இருக்கின்றன.

பிணையில் வெளிவராத பத்து வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படல், இதன் மூலம் தண்டனை பெற வாய்ப்பிருக்கிறது. பொலிஸ் மா அதிபர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுத் தலைவர், உயர் கல்வி அமைச்சர் நேரடியாக கடுமையான நடிவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தயிருக்கின்றார்கள்.

பொலிஸ் மா அதிபர் நேரடியாகவே அறிவுறுத்தற் கடிதம் அனுப்பியிருக்கின்றார்.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, நேரடியாக ஒன்லைன் மூலம் முறையிடக்கூடிய போட்டல் ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றார்கள்.

இவையெல்லாம் இருந்தும் கட்டுப்படுத்த முடியாததற்க பல காரணங்கள் இருக்கின்றன.

அ) பெரும்பான்மையின மாணவர்களுக்கு அவர்களின் தாய்ச் சங்கம் (அரசியல் கட்சி) பகிடிவதையை பாடமாக வகுத்துக் கொடுத்திருக்கின்றது. அதாவது முதலாவது வாரமிருந்து அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? கிளர்ந்தெழும், முறைப்பாடு செய்யப்போகும், நடவடிக்கை எடுக்கப்போகும் அதிகாரிகளை, ஆசிரியர்களை எவ்வாறு அடக்குவது? காயம்பட்ட, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை எவ்வாறு மறைப்பது? முறையிடாமல் தடுப்பது? என்றெல்லாம் அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுகின்றன. இது மிக நீண்டகாலமாக அரசாங்கத்திற்கும் தெரியும். ஆனால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

ஆ) நமது மொழி பேசுபவர்களுக்கு ஒரு முறைமை இல்லை. ஆனால் மிகக் குருரம் இருக்கிறது. அடுத்த முறை வரப்போகும் தங்களின் ஜூனியர்களுக்கு இதனை விட பாரதூரமான அடாத்துக்களை செய்வதற்கு தங்களின் மீது செய்யப்பட்ட துஸ்பிரயோகங்களை பொறுத்துக் கொண்டிருப்பார்கள். முறைப்பாடு செய்யவும் மாட்டார்கள். இது இடம்பெயர்க்கபட்ட பழிவாங்கல் முறைமை.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆரம்பத்தில் முறைப்பாடு செய்வார்கள். ஆனால் காலக்கிரமத்தில், அந்த முறைப்பாடுகளை அவர்களே நீக்கிக் கொள்வார்கள். அதற்குப் பின்னால் திரிந்த அதிகாரிகளும், ஆசிரியர்களும்தான் மக்குப்பட்டம் கட்டுவார்கள்.

பகிடிவதை செய்த மாணவர்களுக்கு தண்டனை கொடுத்து அதற்குப் பின்னால் உருவாகும் ”அன்கொம்போட் சோன்” ஐ எந்த நிருவாகமும் விரும்புவதில்லை.

இதுபோன்ற பல காரணங்களால்தான் பகிடிவதையை அடக்க முடியாததாக இருக்கின்றது.

உலகத்திலே பகிடிவதை மிக மிக மோசமாகவுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அது இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இந்த மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் என்ற உங்கள் நம்பிக்கைகளை நினைத்து எனக்கு சிரிப்பாக இருக்கிறது. கண்துடைப்புக்கு பிறகு தண்டனை என்பது இருக்காது.

ஏனெனில் எல்லாத் தரப்பாரும் குற்றமிழைக்கப்பட்டவனைவிட, குற்றவாளியால் உருவாகும் ”அன்கொம்போட் சோன்” யிற்கு பயந்து எல்லாவற்றையும் மறைத்து, மறந்துவிடச் செய்வார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவனின் அல்லது பாதிக்கப்பட்டவளின் வலி மாறப்போவதுமில்லை. அதைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லை. இது தொடரத்தான் போகின்றது.

ஆகவே ஒழுக்கமற்ற, பண்பாடற்ற சோ கோல்ட் படித்த பட்டதாரி பரம்பரையை உருவாக்கி வெளியுலகுக்கு தயாரித்து அனுப்புவதில் மிகப் பெரும் பங்கு எமது நாட்டின் பல்கலைக் கழங்கங்களுக்கு இருக்கின்றது.

பல்கலைக் கழகங்களில் பண்பாடு ஒழுக்கம் அறம் எல்லாமே பெரும்பாலும் செல்லாக் காசுகள்தான். இதெல்லாம் பேசுபவனை அப்படி நடப்பவனை ஏதோ வேற்று கிரக வாசிகளைப் போல ஏனையவர்கள் பார்ப்பார்கள். அப்படித்தான் இருக்கின்றது எமது பல்கழைக் கழக பார்த்தீனிய சூழல்.

இதை மாற்றி அமைப்பதே நமது பொறுப்பாகும்.

Comments (0)
Add Comment