பல்கலைக்கழகத்தில் புதைந்து கிடக்கும் சேட்டைகள்!! (கட்டுரை)

‘கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற பழமொழியை ஜீரணித்து, ஜீரணித்து வளர்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காணப்படும் நிலையில், இன்றைய கல்விச்சாலைகள், தன் இனத்துக்கான சாபக்கேடான தளங்களாக மாறி வருகின்றமை கவலைக்குரியதாகவே தென்பட ஆரம்பிக்கின்றன.

இலங்கையில், 1980க்கு முன்னரான அரச நிர்வாகச் சேவைகளில், தமிழர்களை மிஞ்சி எவரும் இல்லை என்ற நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில், வடக்கின் கல்வி நிலையானது, மாகாண மட்டத்தில் ஒன்பதாம் இடத்திலேயே பல வருடங்களாகக் காணப்படுகின்றது.

சீரமைக்கப்பட்ட கல்விச் செயற்பாடுகள் இல்லாமை, பாடசாலை ஆசிரியர்கள் தனியார்க் கல்வி நிலையங்களை மய்யமாக வைத்துக் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம், புலம்பெயரும் சிந்தனைகள் என்பனவே, இவ்வாறான நிலைக்குத் தமிழ் மாணவர்களை இட்டுச்சென்றுள்ளன என்பது மறுப்பதற்கில்லை.

சர்வதேச ரீதியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளே இன்று பெருமளவில் பேசப்படும் விடயங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, மேற்கத்தைய நாடுகளின் மாணவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் பலனாகப் பல்வேறான புதிய தொழில்நுட்ப விடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்யும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான நிலையில், இலங்கையின் கல்விநிலை, மேற்கத்தேய கல்வி நிலையோடு போட்டி போட்டு, ஆராய்ச்சி மாணவர்கள் என்ற தரத்தை எட்ட, நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனினும், இலங்கையின் கல்வி முறைமையானது, ஆசிய நாடுகளில் சிறந்த முறையெனக் கூறப்படுகின்றமையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறான கல்வி நிலையை, மாணவர்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றகரமான பாதைக்கும் எந்த வகையில் நாம் பயன்பாடுள்ளதாக மாற்றிவருகின்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

இலங்கையின் தென்பகுதி மாத்திரமின்றி, சர்வதேசத்தின் அவதானிப்பாளர்களும் வடபுலக் கல்வியியலாளர்களை வியந்து பார்த்தநிலை காணப்பட்டது. ஆனால், இன்று அந்த நிலை மாறி, கல்வி மட்டத்தில் வீழ்ச்சியடைந்து செல்கின்றபோது, அதற்கான காரணத்தைக்கூற மறந்து வருகின்றனர்.

யுத்தத்தின் தாக்கம், மாணவர்கள் மத்தியலான கல்வி நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகப் பல்வேறான கருத்துகளை முன்வைத்தாலும்கூட, மாணவர்கள் மத்தில் வன்மம் நிறைந்த மனோபாவம் அதிகரித்துச் செல்வதற்குக் காரணமாக எது அமைந்துள்ளது என்பதே கேள்வியாகியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நிர்ணயிக்கும் களமாகப் பார்க்கப்பட்டதுடன், தமிழ் புத்திஜீவிகளின் உருவாக்கப் புலமாகவும் கருதப்பட்டது. தற்போது அது, பாலியல் செயற்பாடுகளின் மூலமான பகடிவதைக்கான மய்யப்புள்ளியாகப் பார்க்கப்பட்டு வருகின்றமை துரதிர்ஷ்டவசமே ஆகும்.

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் வாள்களுடன் நடமாட்டம், வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் மோதல் என்ற செய்திகள், இன்று சாதாரண செய்திகளாக மாறிப்போயிருக்கின்ற சூழலிலேயே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப்பீட மாணவர்களின் பாலியல் ரீதியான பகடிவதைகள், தமிழர்களைத் தலைகுனிய வைத்துள்ளன.

கல்விப்புலத்துக்கும் கலாசாரத்துக்கும் பெயர்போன யாழ்ப்பாண மண்ணைப் பிரதிநிதித்துவப்டுத்தும் ஒரு பல்கலைக்கழகத்தில், இவ்வாறான கீழ்த்தரமானச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை, வெறுக்கத்தக்க பல படிப்பினைகளை எமக்குத் தந்துள்ளன எனலாம்.

இச்சூழலில், தமிழர் தம் கல்வியை மேலோங்கச் செய்வதற்கான அடுத்த கட்டச் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளன என்பதே தற்போதைய ஆதங்கமாகும்.

வட மாகாணசபை இயங்கிய காலத்தில், வடபுலத்தின் கல்வி நிலையில் வீழ்ச்சி தொடர்பிலான பாரிய கருத்தாய்வுகள் இடம்பெற்று, கல்வியை மேம்படுத்த எவ்வகையான பொறிமுறைகளைக் கையாள வேண்டும் என ஆராயப்பட்டது.

அதற்கான கணினி மயப்படுத்தப்பட்ட பொறிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த சர்வேஸ்வரனால், நேரடியாக ஒவ்வொரு வலயங்களுக்கும் சென்று மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அந்த நிலையானது, சிறந்த முன்னேற்றத்துக்கு வாய்ப்பான தளமாக நோக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரதும் தற்போதைய நிலை, அவர்களுக்கான கூடிய கவனம் செலுத்தும் வழிவகைகள் தொடர்பில், அப்போது ஆராயப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த அந்தத் திட்டம், வட மாகாணசபையின் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக்காலம் நிறைவுற்றதும் கலாவதியாகி விட்டமை வேதனைக்குரியதே.

ஏனெனில், தமிழர்களின் கல்வித் திட்டமிடல்களில் ஒரு சிறந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாயின், அதை அரசியலாகவே பார்க்கின்ற மனோபாவம் தற்போதும் தமிழ் அதிகாரிகள் மத்தியில் காணப்படுகின்றது.

இதன் ஒரு வெளிப்பாடே, வட மாகாண சபையின் கல்வி அமைச்சால் எடுக்கப்பட்ட இத்திட்டமும் ஆகும். சர்வேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட அந்தக் கல்வித் திட்டமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், அது இன்று, வட மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பாக இருந்திருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

ஆகவே, சீரான கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்காத வரையில், வடபுலத்தின் கல்வி நிலையை உயர்த்துவதென்பது கடினமாக இருந்திக்கும் என்ற கருத்துகள் நிலவும் காலத்திலேயே, பல்கலைக்கழக மாணவர்களின் வன்மத்தனமான பகடிவதைகள் இன்று உச்சம் பெற்றுள்ளன.

வெறுமனே கல்வியிலிருந்து இடைவிலகியவர்கள்தான், சமூகத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற பார்வையுடன் அவர்களுக்கான பல்வேறு கல்வித்திட்டங்களை முன்வைத்து, பாடசாலை இடைவிலகலைக் குறைத்து, தொழிற்பயிற்சி நெறிகளை வழங்கிவரும் நிலையிலேயே, சிறந்த கல்விச் சமூகத்தின் வருகைக்காகப் பல்கலைக்கழகத்தைப் பார்த்த தமிழ் சமூகம், இவ்வாறான கீழ்த்தரமான பகடிவதைகள், சமூகத்தின் இருப்புக்கும் அச்சமூகத்தின் எழுச்சிக்கும் பங்கமாகவே அமைகின்றது.

வெறுமனே மாணவர்களை மாத்திரம் குற்றஞ்சுமத்துவது என்பதற்கப்பால், பல்கலைக்கழக கல்விசார் அலுவலர்களின் நிலைகள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. மாணவ, மாணவிகளின் பெறுபேறுகளுக்காகத் தமக்கு ஏற்றாற்போல் செயற்படத் தூண்டும் விரிவுரையாளர்கள் தொடர்பிலும், பல புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டிய தேவைகள் தற்போது எழுந்துள்ளன.

ஒரு மாணவியின் தற்கொலை முயற்சியால் விழித்துக்கொண்ட பெற்றோரின் துணிகரச் செயற்பாடு, எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவுள்ள அனைத்து மாணவர்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக எண்ண வேண்டுமாயின், தற்போது பகடிவதையில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்குமப்பால், பல்கலைக்கழகத்துக்குள் நடக்கும் திரை மறைவுச் சேட்டைகளும் வெட்டைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

அப்போதுதான், எதிர்கால மாணவச் சமூகம், அச்சமற்ற முறையில் பல்கலைக்கழகத்தில் கற்றலுக்காகச் செல்லும் என்பதற்கப்பால், சிறந்த ஆளுமையுள்ள கல்விச்சமூகமும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்படும் என்பதே யதார்த்தம்.

அவ்வாறான நிலைப்பாடு முன்னெடுக்கப்படாது விட்டால், தமிழ் அரசியல் தலைமைகள், இனி வருங்காலத்தில் பல்கலைக்கழ மாணவர்கள் மீது நம்பிக்கை வைப்பது தேவையற்ற விடயம் என்பது மாத்திரமின்றி, அவர்கள் தமிழர் அரசியலில் தேவையற்ற செல்லாக் காசுகளாகவும் சமூகத்தின் விசக் கிருமிகளாகவுமே கருதப்பட வேண்டிய சூழல் உருவாவது தவிர்க்க முடியாது.

எனவே, சிறந்த கல்விச் சூழலையும் அதனோடு இணைந்து, ஒழுக்கம், வாழ்வியல் நெறிகளைப் புகட்டும் இடமாகப் பாடசாலைகள் மாத்திரமின்றி, பல்கலைக்கழகங்களும் மாறவேண்டும்.

ஆக்கபூர்வமான மாணவச் சமூகத்தை வடக்கில் உருவாக்க, ஒன்றிணைந்த பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணக் கல்வி வளர்ச்சியை முதலிடத்துக்குக் கொண்டு வருவதற்கான புதிய பாதையாகவும் அவற்றை அமைக்க வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.

Comments (0)
Add Comment