தேசிய கல்விக் கொள்கையின் அவசியத்தை உணர்த்தும் உயர்கல்வி!! (கட்டுரை)

தனி மனித மற்றும் சமூக வளர்ச்சியில் அத்திவாரமாக கல்வியே அமைகின்றது. அதனாலேயே அக் கல்வியின் மகிமையை உணர்ந்த வள்ளுவர் “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என கூறியிருக்கிறார். அந்த வகையில் எமது நாடு குறிப்பாக காலனித்துவ ஆட்சிக்காலத்தின் பின்னரான காலப்பகுதியில் உலகமொழியாகிய ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டிருந்ததால் உலகளாவிய ரீதியில் பேசப்படும் ஒரு நாடாக திகழமுடிந்தது.

சிங்கப்பூரின் ஆரம்பகால வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை பெற்றுக்கொடுத்த பெருமளவு இலங்கைத் தமிழர்கள் ஆங்கில மொழி புலமைத்துவத்துடன் பல்வேறு துறைசார் உயர்கல்வியை பெற்றிருந்தமையினாலேயே வியக்கத்தக்க பங்களிப்பினை அந்நாட்டுக்காக செய்திருக்கின்றார்கள் என்பதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. ஆயினும் துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டின் அக்கால அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபம் கருதி ஆங்கிலமொழி எதிர்ப்புக் கொள்கையை செயற்படுத்தியதனால் தொடர்ச்சியாக எமது நாட்டுக்கு கிடைக்கவிருந்த பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறாமல் போவதற்கும் நாட்டில் பாரிய இன முறுகல் ஏற்பட்டு நாட்டின் பொருளாதார சமூக சரிவினை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

நமது நாட்டின் தேசிய கல்விக்கொள்கையானது பல தசாப்தங்களாக நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியைப் பெற்றுக்கொடுத்தும் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பின்றி வீதிப் போராட்டங்களில் ஈடுபட்டு அதன்மூலம் மேலும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலையச் செய்யும் ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது.

மறுபுறத்தில் வருடாந்தம் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையற்றவர்களாக காலத்தைக் கழிக்க வேண்டிய நிலை இருந்து வந்திருக்கிறது. இவற்றை கவனத்தில் கொண்டு நாட்டுக்கென ஒரு புதிய தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் ஜனாதிபதி, தேவையேற்படின் நாடுதழுவிய ரீதியிலான கருத்துக்கணிப்பையும் நடத்த தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நாட்டின் பல்கலைக்கழக துறைசார் விற்பன்னர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது நாட்டின் கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப்பற்றிய கருத்தினை முன்வைத்திருக்கும் ஜனாதிபதி, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான முறைமையிலான கல்விக்கொள்கையின் அவசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொழிற்சந்தையின் தேவையறிந்து அதனை திறமை மற்றும் தகைமை அடிப்படையில் பூர்த்தி செய்யத்தக்க துறைசார் அறிஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் ஆங்கில மொழி மற்றும் தொழில்நுட்ப அறிவு, தலைமைத்துவ புலமை அற்றவர்களாகவே காணப்படுகின்ற அதேவேளை, அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலைத்துறை சார்ந்த பட்டதாரிகளாகவே இருக்கின்றனர். பட்டம் பெற்றிருந்தும் தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாமைக்கு இதுவே முக்கிய காரணமாகும். ஆகையால் எதிர்வரும் காலங்களில் சகல பட்டதாரிகளுக்கும் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் முன்னணி மொழிகள் பற்றிய புலமைத்துவத்தையும் கணனி உள்ளிட்ட தொழில்நுட்ப அறிவையும் அதனுடன் கூடியதாக தலைமைத்துவ புலமையையும் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி எடுத்துரைத்திருக்கின்றார். அத்தோடு உள்நாட்டு தேவையைப் பொறுத்தவரையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி திறனுடன் கூடிய ஆங்கில மொழியறிவும் பெற்றுக்கொடுப்பதன் மூலம் உள்நாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் சிறந்த சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

அத்தோடு உயர்தரத்தின் பின்னரான தொழில்சார் கல்விப்பயிற்சி, சுற்றுலாத்துறை, விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை ஆகியவற்றை உள்வாங்கும் வகையில் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நேரடியாக தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு மாணவர்களுக்கு கிட்டும். உள்நாட்டு ரீதியிலும் உலகளவிலும் மேற்குறிப்பிட்ட துறைகளில் பெருமளவு தொழில்வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுக்கான தகுதி பெற்றோரின் பெரும் பற்றாக்குறை நிலவி வருகின்றது. ஆகையால் இத்தகைய துறைகள் மீது கவனம் செலுத்தி நமது கல்வியை முன்னெடுக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

சட்டத்துறையானது கற்கைநெறி முடிவில் நேரடியாக தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துறையாக இருந்தபோதிலும் பல்கலைக்கழக பட்டத்தின் பின்னர் சட்டக்கல்லூரியில் தகைமை பெறவேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அடுத்தபடியாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக சட்டக்கல்வி கற்கைநெறி நடத்தப்பட்ட போதிலும் அதில் சித்திபெறுவோரும் சட்டக்கல்லூரியின் நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருப்பதால் அம் மாணவர்கள் தொழில்துறையில் இணைந்துகொள்வது தாமதப்படுத்தப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட ஜனாதிபதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியை கற்கும் மாணவர்களுக்கு சட்டக்கல்லுௗரியில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் நெருக்குவாரங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

மேலும் பல்கலைக்கழகங்களுக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் பெருமளவு நிதியை அப்பல்கலைக்கழகங்களின் கட்டடங்கள் உள்ளிட்ட வெறும் பெளதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக உபயோகப்படுத்துவதற்கு பதிலாக அவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய உயரிய கற்கைநெறிகளை உருவாக்குவதற்கும் கற்றலுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் செலவிட வேண்டுமென சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி இணையத்தள வசதிகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்துகொடுக்கப்பட வேண்டுமென தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது பல்கலைக்கழக நிர்வாகம் என்ற விடயத்துக்கு தம்மை மட்டுப்படுத்திக்கொள்ளாது நாட்டுக்கான சிறந்த கல்விக் கொள்கைளை உருவாக்கி செயற்படுத்துவதிலும் காத்திரமான பங்களிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் கோரியிருக்கின்றார்.

உயர் கல்வித்துறை சார்ந்த விற்பன்னர்களுடனான இந்த சந்திப்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள மேற்குறிப்பிட்ட விடயங்கள் மீது கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை காலதாமதமின்றி எடுக்கும்பட்சத்தில் குறிப்பாக நமது நாட்டின் பட்டதாரிகள் வேலையில்லா பட்டதாரிகள் என பெயர் சூட்டப்படும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் நாட்டின் அதி உயர் கல்வியைப் பெற்றவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய அந்தஸ்தை நிச்சயம் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுவே நமது எதிர்கால சுபிட்சத்திற்கான சிறந்த முன்னகர்வாகவும் அமையும்.

Comments (0)
Add Comment