கொரோனா நெருக்கடியில் வேலையின்மையும் வறுமையும்!! (கட்டுரை)

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நெருக்கடி மனிதர்களின் நுகர்வுக் கலாசாரத்தினால் கிடைத்த மகிழ்வான வழ்வின் கற்பனைகளை தகர்த்தெறிந்துள்ளது. உயிர் பிழைத்தலோடு முதலில் தப்பிப்பிழைக்கும் survival life வழிமுறையைத்தேடி தான் வாழும் பிரதேசத்தின் இயற்கை வழங்களை தன் வாழ்விற்காய் ஒழுங்குபடுத்தி பிழைப்பூதிய உற்பத்திகளில் நாட்டம்கொண்டு கிடைக்கும் நேரத்தில் தன்னைச் சூழவுள்ள நிலம், நீர், காடு, கடல், ஆறு, குளம் போன்றவற்றை தன் உடல் உழைப்பையும் மரபுவழிவந்த தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி உணவுற்பத்தியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.முகநூல் மற்றும் யூரியுப் ஊடாக தேவையான அறிவைப் பெற்று சிறுசிறு அளவில் சமையல் அறைத் தோட்டங்களை வீட்டுத்தோட்டம் என்ற வகைப்படுத்தலோடு நடுத்தர வர்க்க மக்கள் மேற்கொள்வதற்கான அழுத்தத்தை இன்றையகால நெருக்கடி தோற்றுவித்துள்ளது. இதனோடு ஆடு, மாடு, கோழி போன்ற மிருக வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். இந்த தொடக்கத்தை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தரப்பினரும் அபிவிருத்திப் பொருளியலாளர்களும் அரசாங்கமும் தமக்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தி முன்னகர்த்தவேண்டும். இதற்கான தேவையும் அவசியமும் உலகளாவிய ரீதியில் உருவாகி வருகிறது.

குறிப்பாக சந்தைத்தோல்வியும் உற்பத்தி நிறுவனங்களின் முடக்கமும் பெருமளவான மக்களின் வேலையிழப்பும் இதற்கான மாற்று வழியை தேடவைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் ஜேர்மனியில் –4.2வீதத்தாலும் பிரான்சில் 8.0வீதத்தாலும் இத்தாலியில் 8.0வீதத்தாலும் ஸ்பெயினில் 12வீதத்தாலும் ஐரோப்பிய யூ னியன் முழுவதிலும் 15 வீதத்தாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அதாவது எதிர் கனிய வளர்ச்சி வீதமே காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2020 ன் முதற் காலாண்டில மொத்த உள்நாட்டுஉற்பத்தி 25வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இக்காலப்பகுதியில் வேலையின்மை 12.6வீதமாக காணப்பட்டது. இது 1940 பின் அமெரிக்காவில் மிக உயர்ந்த வீதமாகும். 6 மாதத்தின் பின் மூடிய பொருளாதாரத்தை திறக்க முற்பட்டாலும் அப்போது 20 மில்லியனுக்கு அதிகமானோர் அமெரிக்காவில் வேலையிழந்திருப்பர். இது உலக நிதி நெருக்கடிக்காலத்தை விட மூன்று மடங்கு அதிகமானதாகும். வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டு 2019 ஆம் ஆண்டு காலப் பொருளாதாரத்திற்கு மீண்டும் வருவது 2022 வரை சாத்தியமானதல்ல என ஆய்வு மதிப்பீடுகள் காட்டுகிறது.

தொழில்நுட்பமும் உற்பத்திக்கட்டுமானங்களும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான நிலை காணப்படுவதால் வளர்ந்து வரும் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கப்படும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, யேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, யப்பான் போன்ற பெரிய நாடுகளினதும் ஏனைய நாடுகளினதும் பொருளாதாரம் கொரோனா நெருக்கடியால் சரிந்துவிட்டது. அந்நாடுகளின் ஏற்றுமதி உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துவிட்டன. பங்குச்சந்தைகள் மூடப்பட்டுள்ளன. பெரிய உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தொழிலாளர் வேலையிழந்துவிட்டனர். உதாரணமாக அமெரிக்காவில் வாரத்தின் ஆரம்பத்தில் 3.3 மில்லியன் மக்கள் வேலையிழந்தனர். அதேவாரத்தின் இறுதியில் 6.6 மில்லியன் மக்கள் வேலை தேடுகின்றனர். அமெரிக்காவின் பங்குச்சந்தை 30வீதத்தால வீழ்ச்சியடைந்து விட்டது. சீனாவின் வாகன விற்பனை 86வீதத்தாலும் அமெரிக்காவின் மோட்டார் கார் விற்பனை 40வீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

உலகின் எல்லா நாடுகளின் ஏற்றுமதி- இறக்குமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இது அரச வரி வருவாயிலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லாத்துறைகளிலும் எல்லா மட்டங்களிலும் தொழில்புரிந்த தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

முடக்கலின் பின் இந்தியாவில் 120 மில்லியன் மக்கள் முழுமையாகவோ பகுதியளவிலோ வேலையிழந்துள்ளனர். இதில் 91.3 மில்லியன் சிறுவியாபாரிகளும் 17.8 மில்லியன் நாளாந்த தொழிலாளர்களும் 18.2 மில்லியன் சுயதொழில் செய்வோரும் வேலையிழந்துள்ளனர். முதற் காலாண்டில் மாத்திரம் 27வீதமானோர் வேலையிழந்துள்ளனர்.

அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நான்கு மடங்கு உயர்வாகக் காணப்படுகிறது. ஆசிய பசுபிக்கின் 9 வலுவான நாடுகளில் வேலை இழப்போர் வீதம் ஆரம்ப காலத்தை விட இரட்டிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் வேலைவாய்ப்பு சேவைத்துறைகளான சுற்றுலா, போக்குவரத்து, வங்கி, ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரம், கல்வி போன்றவற்றில் கொரோனாவுக்கு முன்னர் அதிகளவாக காணப்பட்டது. இப்போது உற்பத்தி முடக்கலும் சமூக இடைவெளியின் பின் வேலையின்மை அதிகளவில் ஏற்பட்டுள்ளது. ஆசிய பசுபிக் நாடுகளில் முன்னைய காலத்துடன் ஒப்பிடும்போது வேலையிழப்பு இரட்டிப்பாக காணப்படுகிறது. உதாரணமாக அவுஸ்திரேலியாவில் 3வீதம். மேலும் யப்பானில் 2 வீதத்துக்கு மேலும் தென்கொரியாவில் 4வீதத்துக்கு மேலும் நியுசிலாந்தில் 3வீதத்துக்கு மேலும் காணப்படுகிறது. இலங்கை போன்ற சிறியதும் வளர்ந்து வருகின்ற நாடுகளில் முறைசாராத தறைகளில் வேலையின்மை வீதம் 15வீதமாக உயர்ந்து செல்கின்றது. இது நெருக்கடி காலத்தின் பண்பாக இருப்பது சாதாரணமானது. இருந்தபோதும் இப் போக்கிலிருந்து விடுபட அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி பல பக்கத்திலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.

முறைசாராத துறையாக கருதப்படும் கிராமிய விவசாயத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் உரமானியங்களை மானிய விலையில் தங்குதடையின்றி வழங்கும் சந்தர்ப்பங்களில் கிராமிய உழைப்பின் பயன்பாடு உச்ச நிலையை அடைய வாய்ப்பு கிட்டுகிறது.

உழைப்பிற்கு பதிலாக யந்திரப்பாவனை படிப்படியாக அறிமுகம் செய்யப்படுவதால் கிராமிய வேலையின்மையும் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது.

நிலம் பண்படுத்தல், களை நாசினிப் பயன்பாடு, அறுவடை யந்திரப்பயன்பாடு, முற்றாக கிராமிய உழைப்பை வேலையின்மைக்குள் தள்ளுகின்றது.

ஏற்கனவே பெற்ற கடனுக்காக இலங்கை 3.2 ரில்லியன் டொலரை 2020 டிசம்பருக்குள் செலுத்தவேணடும் என கடன் வழங்கிய நாடுகள் காலக்கெடு விதித்துள்ளன. இந்த நிலையில் மீள் எழுச்சிக்காக அரசு முதலிடுவது மற்றும் மத்திய வங்கி வழங்கும் கடன் சலுகைகள் என்பது எவ்வாறு வேலை வாய்ப்பை வழங்குவதற்கான சூழலை உருவாக்கும். மீள் எழுச்சியின் ஊடாக வேலை இழந்தவர்களுக்கு வேலை வழங்குவது எவ்வாறு சாத்தியமாகும், சிறிய நடுத்தர கைத்தொழில் நிறுவனங்கள முழுமையாக செயலிழந்துள்ளன. இலங்கையில் 47 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். கொழும்பு பங்குச்சந்தையிலிருந்து 4 பில்லியன் டொலர் வெளியேறியுள்ளது. உலக வங்கியின் மதிப்பீட்டில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகிறது என மதிப்பிட்டுள்ளது.

இலங்கை கடனுக்கான வட்டியாக தனது வருமானத்தில் 65வீதத்தை செலுத்தவேண்டியுள்ளது. மூடப்பட்ட கட்டுநாயக்கா மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 244 கைத்தொழிற்சாலைகள் மீள தொழிற்படுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான மீள் எழுச்சி செயற்பாடே வேலை வாய்ப்பை உருவாக்கும் என நம்பப்படுகிறது. எவ்வாறாயினும் விரைவாக மீள் எழவேண்டும் இல்லையேல் வறுமையையம் பட்டினிச்சாவையும் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை மக்கள் உணரவேண்டும்.

Comments (0)
Add Comment