பைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது!! (கட்டுரை)

இலங்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு அதிகரித்துவருவது பற்றி அமெரிக்காவின் அக்கறை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ சீனாவுடனான உறவுகளைப் பொறுத்தவரை கஷ்டமான ஆனால், அவசியமான தெரிவுகளைச் செய்யுமாறு இந்துசமுத்திரத்தின் மத்தியில் மூலோபாய அமைவிடத்தில் இலங்கையை வலியுறுத்தினார்.

ஜனாதிபதி பைடன் 2021 ஜனவரி பிற்பகுதியில் பதவியேற்கவிருக்கின்ற அதேவேளை, அடுத்த வருடத்தில் சீனப் பொருளாதாரம் உலக பொருளாதாரத்தையும் விட விரைவாக கொவிட்டிலிருந்து விடுபட்டு மீட்சிபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலைவரத்தை அலசிப்பார்த்து பெரிய வல்லரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு மூலோபாய மாற்றம் குறித்து ஆராய்வது பயனுடையதாக இருக்கும் என்று தெரிகிறது.

சீன உறவுகள் குறித்த அக்கறைகள்

1950 ஆண்டில் சீனாவை இலங்கை அங்கீகரித்து ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இணைவதற்கான உரிமையை ஆதரித்த நாளில் இருந்து சீனாவும் இலங்கையும் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை அனுபவித்து வருகின்றன.

1952 ஆம் ஆண்டில் இலங்கை சீனாவுடன் அரிசி – றப்பர் பரிமாற்ற உடன்படிக்கையொன்றையும் செய்துகொண்டது. ஆனால், 1970 களின் பிற்பகுதியில் சீனா அதன் வர்த்தகத்தையும் முதலீட்டையும் வெளிநாடுகளுக்கு திறந்துவிட்டதில் இருந்து கண்டுவரும் குறிப்பிடத்தக்க உலகளாவிய பொருளாதார உயர்ச்சி, தவிர்க்கமுடியாத வகையில் பெய்ஜிங்கின் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளில் வர்த்தக மார்க்கத்திலான நகர்வுக்கு வழிவகுத்தது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலைவரம் குறித்து சர்வதேச ரீதியாக பல்வேறு அக்கறைகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

சீனாவின் கடன்பொறி பற்றிய அக்கறை சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாகும். இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து இலங்கையின் உட்கட்டமைப்பு செயற்திட்டங்களுக்கு வர்த்தகரீதியிலான கடன்களை வழங்குகின்ற முக்கியமான ஒரு நாடாக சீனா மாறிவிட்டது. இத்தகைய கடன்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை ஒரு கடன்பொறிக்குள் சிக்குகின்றது கூறப்படுகிறது.

இலங்கை சீனக் கடன்பொறியொன்றுக்குள் இல்லை.இறுதியாக பெறக்கூடியதாக தகவல்களின்படி 2018 ஆம் ஆண்டில் இலங்கை சீனாவிடம் பெற்ற வெளிநாட்டுக் கடன் 500 கோடி டொலர்களாகும் (இது நிகர உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6 சதவீதத்துக்கு சமனானது). இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன்களில் சீனாவிடம் பெற்றதையும் விடவும் கூடுதலான கடன்களை நிதிச்சந்தைகள், பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன் வழங்குனர்களிடமே பெற்றிருக்கிறது. கடந்த தசாப்தங்களாக நிகர உள்நாட்டு உற்பத்தியுடன் விகிதாசார அடிப்படையில் நோக்கும்போது பொதுவில் இலங்கையின் உயர்ந்தளவு கடன்கள் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த 30 வருடகால உள்நாட்டுப்போருக்கான செலவைப் பிரதிபலிக்கிறது. போருக்குப் பின்னரான மந்தமான வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு நாணய பெறுமதி வீழ்ச்சியும் இலங்கையை பெரிதும் பாதிக்கிறது.

இரண்டாவது பிரச்சினை இலங்கை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் மீது சீனாவின் மண்டலமும் பாதையும் (Belt and Road Initiative) செயற்திட்டத்தின் பொருளாதார தாக்கத்தடன் சம்பந்தப்படடது. சில ஆய்வாளர்கள் மண்டலமும் பாதையும் செயற்திட்ட முதலீடுகளை அந்த திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்ற நாடுகளுக்கு எந்த பொருளாதார பயன்களையும் தராத ‘வெள்ளை யானை’ என்று வர்ணிக்கிறார்கள்.

இலங்கையின் உட்கட்டமைப்பு செயற்திட்டங்களில் சீனா செய்திருக்கக்கூடிய முதலீடுகளி்ன் கூட்டு மொத்தப் பெறுமதி 2006 க்கும் 2020 ஆகஸ்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1300 கோடி டொலர்களாகும். இது இலங்கையின் 2019 நிகர உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்துக்கு சமனானது.

2013 ஆம் ஆண்டில் முறைப்படி தொடங்கப்பட்ட மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துக்கு முன்னதாக முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் இருக்கின்றன. அத்தகைய சில திட்டங்கள் மற்றைய நாடுகளை விடவும் இலங்கைக்கு பெருமளவு பயன்களைக் கொண்டுவந்திருக்கின்றன.குறிப்பாக சொல்வதானால், கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் கொழும்பு ஆழ்கடல் துறைமுகத்தை தென்காசியாவின் பிரதானமான கப்பல்கள் இடைத்தரிப்பு சரக்கு மாற்று (Transhipment hub) மையமாக மாற்றியிருக்கிறது. கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரம் நவீன சேவைத்துறை வளர்ச்சிக்கும் கொவிட்டுக்கு பின்னரான பொருளாதார மீட்சிக்குமான ஒரு புரட்சிகர திட்டமாக (Game changer) அமையும்.

கொழும்பு துறைமுகம் அதன் கொள்திறனின் வரம்பை (Capacity limits) அண்மிக்கின்ற நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகம் புதிய முகாமைத்தவத்தின் கீழ் இலங்கையின் துறைமுக கொள்திறனுக்கு மேலும் வலுவை கூட்டுவது சாத்தியம். ஆனால், கொழும்பு தாமரைக் கோபுரத்தின் மூலமான பொருளாதார பயன்கள் எவை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், இலங்கையில் நிர்மாணத்திட்டங்களுக்காக சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்ற தளபாடங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் அதிகரித்திருக்கிறது. இலங்கையின் தயாரிப்புத்துறை, தொழில்நுட்பத்துறை மற்றும் உள்நாட்டு தொழில்வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு சீனாவிடமிருந்து வருகின்ற முதலீடுகளின் அடிப்படையில் நோக்குகையில் சீனத் திட்டங்களின் மூலம் பெரிதாக வெளியில் தெரியாத எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன.

அடுத்தது இந்தியாவின் கவலை. இலங்கையில் சீனா ஆழமாகக் கால் பதிப்பது இலங்கையின் சுயாதிபத்தியத்தை மீறுவதுடன் தனது தேசிய பாதுகாப்புக்கும் தென்னிந்திய பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது என்று இந்தியா கவலைப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்துக்கு சீனாவின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் வருகை தந்ததயைடுத்து இந்தியாவும் இலங்கையும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

இமாலயத்தில் இந்தியப்படைகளுக்கும் சீனப்படைகளுக்கும் இடையில் சில்லறைச் சண்டகள் இடம்பெறுவதைத் தொடர்ந்து சீன அரசுக்குச் சொந்தமான நிறுவமொன்றினால் நிருவகிக்கப்படுகின்ற அம்பாந்தோட்டை துறைமுகம் வாணிப / இராணுவ இரட்டைப் பயன்பாட்டுக்கான ஒரு களமாக மாறிவிடும் என்ற கவலை அதிகரித்திருக்கின்றது. இந்தியாவுக்கு அச்சத்தை தணிக்கும் ஒரு முயற்சியாக வெளிநாட்டு கப்பல்களின் துறைமுக வருகைகளையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பையும் இலங்கை கடற்படையே கையாளும் என்று கொழும்பு உறுதியளித்தது.

கிரமமான பாதுகாப்பு பேச்சுவாரத்தைகள், கடற்படை ஒத்திகைகள், இலங்கை ஆமயுதப்படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி ஆகியவற்றி்ன் மூலமாக இலங்கை — இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது.

‘தொற்றுநோய் இராஜதந்திரத்தை’ பயன்படுத்தி இலங்கை போன்ற நாடுகளில் சீனா தனது நலன்களை மேம்படுத்துகிறது என்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. உதாரணமாக, பொம்பியோவின் விஜயத்துக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவின் உறப்பினர் யாங் யீச்சி இலஙகைக்கு வந்து கொவிட் –19 நோயை கையாளுவதற்கு மருத்துவ பராமரிப்பு, கல்வி மற்றும் நீர் விநியோகம் போன்றவற்றுக்கு 9 கோடி டொலர்கள் நன்கொடையை வழங்கியிருகிறார். மேலும், சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு இரு கடன்களை (ஒன்று 2020 இல் பொது பட்ஜெட்டுக்கு ஆதரவாக 50 கோடி டொலர்கள், மற்றது அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கிக்கு 14 கோடி டொலர்கள்) வழங்கியது.

அதேவேளை, அமெரிக்கா கொவிட் உதவியாக 60 இலட்சம் டொலர்களை வழங்கியிருக்கிறது. அத்துடன் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றறுமதிச் சந்தையாகவும் அமெரிக்கா தொடர்ந்து விளங்குகிறது. இலங்கை கடற்படைக்கு 2 கரையோரக் காவல்படைக் கப்பல்களையும் பயிற்சியையும் வழங்கியதன் மூலம் இலங்கையின் கடற்பிராந்திய கண்காணிப்பு ஆற்றலை மேம்படுத்தவும் அமெரிக்கா உதவியிருக்கிறது.

அமெரிக்கா, சீனாவுடன் சமநிலை உறவுகள்

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜோ பைடனை வாழ்த்திய இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவருடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார். ஆனால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரும் தொழில்நுட்பப் போரும் 2021 ஆண்டிலும் அதற்கு அப்பாலும் தொடரக்கூடிய சாத்தியத்துக்கு மத்தியில், இலங்கையின் சொலலும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று பைடன் நிருவாகம் எதிர்பார்க்கக்கூடும்.

பெரிய இராணுவமொன்றைக் கொண்டிராத சிறிய அரசு என்ற வகையில் இலங்கை, சிங்கப்பூரினதும் நியூசிலாந்தினதும் வெற்றிகரமான நிலைப்பாட்டை பின்பற்றி பெரிய வல்லரசுகளுடனான உறவுகளில் கண்டிப்பான அணிசேராக் கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும். மேலும், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய முதலீட்டாளர்களின் சந்தேகங்களையும் அச்சத்தையும் நீக்கவதற்கு ஔிவுமறைவற்றதும் சந்தை நலன்கருதி கொள்கைகளை பின்பற்றவேண்டும்.

கொவிட்டுக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கிய முதலீடுகள் முக்கியமானவையாக இருக்கும்.இந்தியாவின் அச்சங்களைப் போக்குவதற்கு இந்தியா மற்றும் மாலைதீவுடன் கடல் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை செய்வதற்கான சாத்தியம் குறித்து இலங்கை பரிசீலித்துப்பார்க்கலாம். இத்தகைய கொள்கை நகர்வுகள் வர்த்தகம் மற்றும் பிராந்திய கடல்சார் ஒழுங்குமுறை ஆகிய துறைகளில் அமெரிக்காவுடன் பெருமளவுக்கு சுமுகமாக இலங்கை பணியாற்றவதற்கு வசதியாக அமையும்.

அத்துடன் தொற்றுநோய்க்கு பின்னரான பொருளாதார மீட்சிக்கு உதவும் ஒரு பிரதான சக்தியாக சீனாவையும் கையாளமுடியும்.

சீனாவுடனான விவகாரங்களை பொறுத்தவரை, வெளிநாட்டுக் கடனுதவியை அடிப்படையாகக்கொண்ட உறவுமுறையில் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடடின் மீது தனிக்கவனம் செலுத்தும் உறவுமுறையொன்றுக்கு இலங்கை மாறவேண்டும். எதிர்கால நிகழ்சசி நிரலில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகாக கைத்தொழில் வலயத்திற்கு சீன முதலீடுகளை கவருவதற்கான நடவடிக்கைகள், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சந்தை நுழைவுரிமையை உறுதிப்படுத்தக்கூடிய இரு தரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (இதன் மூலமாக தற்போது சீனாவுக்கு அனுகூலமாக இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கமுடியும்), உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்த சீனாவிடமிருந்து தொழில்நுடப உதவி கிடைப்பதை ஊக்குவித்தல் ஆகியவை உள்ளடங்கியிருக்கவேண்டியது அவசியமாகும்.

சிறந்த உட்கட்டமைப்பு திடடங்களும் ஆற்றல் விருத்தியும் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் மூலமாக இலங்கை பயன்பெறக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கும்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சீனக்கடன் பொறி ஆபத்தையும் குறப்பதற்கு இலங்கை கடன்வழங்குநர்களுடன் செயற்படா நிலையில் உள்ள கடனுதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்; கடன்பெறுகை மற்றும் கடன் முகாமைத்துவ முறையை மேம்படுத்தவேண்டும்; விவேகமான பெரும்பாக பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளவேண்டும்.

Comments (0)
Add Comment