சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு முதலாம், நான்காம் வட்டாரத்தை உள்ளடக்கிய “பொன்னன் கிணறு” சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாவிப்பதாகவும், அதனை முழுமையாகத் திருத்தி புதிதாக கட்டித் தருமாறும் சுமார் இருபத்தைந்து குடும்பங்கள் கையொப்பமிட்டு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, திருத்தி புதிதாக கட்டிக் கொடுப்பதென தீர்மானித்து கடந்த 28.06.2018, அன்று “சுவிற்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” சார்பாக, புங்குடுதீவு பொன்னன் கிணறை முழுமையாகத் திருத்தி, புதிதாக கட்டிக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியது.

இந்நிகழ்வானது, இன்றையதினம் (04.07.2018) பூர்த்தி செய்யப்பட்டு, அப்பிரதேச மக்களிடம் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டது. இவ்வைபவத்தினை, அப்பிரதேசத்தை சேர்ந்த வயதில் மூத்தவரான திரு.சிவகுரு என்பவர் முன்னின்று நடாத்த, அப்பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்களும் மனமகிழ்வுடன் கலந்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை, புங்குடுதீவில் இப்பிரதேசத்து மக்களினால் வேலணை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட, பிரதேச சபை உறுப்பினரான திரு.வசந்தகுமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திரு.தயானந்தம், மற்றும் அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இந்நிகழ்வில் வைத்துக் கருத்துத் தெரிவித்த திருமதி. த.சுலோசனாம்பிகை அவர்கள், “இக்கிணற்றை இப்பிரதேச மக்கள் குடி தண்ணீருக்கும் பாவிக்கும் நிலை அதாவது தண்ணீர், நன்னீராக மாறி உள்ளதினால், இக்கிணற்றை அனைவரும் நன்றாக பராமரிக்க வேண்டுமெனவும், இக்கிணற்று வேலையை ஒருவாரத்தில் முடித்து தந்த வனோஜன் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி எனவும்” தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், திருமதி.த.சுலோசனாம்பிகை ஆகியோரினால், அப்பிரதேசத்தில் வயதில் மூத்தவரான திரு.சிவகுரு அவர்களிடம் “பொன்னன் கிணற்றை” வைபவ ரீதியாக கையளித்தனர். அத்துடன் ஒன்றிய பிரதிநிதிகளுடன் அப்பிரதேச பொதுமக்களும் இணைந்து அக்கிணற்றின் தண்ணீரில் “பொங்கல்” சமைத்து, அனைவரும் சந்தோசமாக சாப்பிட்டு மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திரு.தயானந்தம் “இக்கிணறானது இப்பிரதேச மக்களுக்கு மிகமுக்கிய தேவையானது, ஆகவே இக்கிணற்றை மீள்புனரமைத்து தந்த சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் “சுவிஸ் ஒன்றியத்தினருக்கும்”, குறிப்பாக அதன் தலைவர் ரஞ்சனுக்கும், இங்கு அதுக்காக அயராது பாடுபட்ட திரு.சண்முகலிங்கம் மாஸ்ரர், சிலோ அக்கா, இப்பிரதேச பெரியவர் திரு.சிவகுரு உட்பட அனைவருக்கும் நன்றி” எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை மேற்படி “பொன்னன் கிணற்றை” மீள்புனரமைப்பு செய்ததின் பின்னர், “அக்கிணற்றின் நீரூற்று அதிகரித்து உள்ளதுடன், அக்கிணற்றின் தண்ணீர், குடிதண்ணீர் போன்று மிகவும் சுவையாக மாறி உள்ளதையும்” அப்பிரதேச மக்கள் வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்து உள்ளதுடன், இதுக்காக “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்துக்கு” குறிப்பாக சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு, தமது நன்றியை தெரிவித்து உள்ளதும்” குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேற்படி “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, புதிதாக கட்டிக் கொடுக்கும் வேலையை மிகவிரைவில் (ஒரு வாரத்துக்குள்) பூர்த்தி செய்து தந்த, திரு.வனோஜன் மற்றும் அவரது குழுவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான அனைத்து நண்பர்களுக்கும் எமது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்படி “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலைக்கான நிதி, மற்றும் கிணறை ஒப்படைக்கும் நிகழ்வுக்கான செலவு, மற்றும் அந்நிகழ்வில் கிணற்று வேலைகளை செய்த மேஸ்திரி திரு.வனோஜன் அவரது குழுவினர் உட்பட உதவி புரிந்த சிலருக்கான கௌரவிப்பு போன்ற அனைத்து செலவையும் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” ஏற்றுள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.

இதேவேளை அண்மையில் தெரிவு செய்யப்பட்ட “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாகத்தின்” முதலாவது நடவடிக்கையாக இந்த செயற்பாடு அமைந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நன்றி…

குறிப்பு..; மேற்படி “பொன்னன் கிணற்று” வேலையை தொடர்ந்து மிகவிரைவில் “மடத்துவெளி பொதுக்கிணறு” புனரமைக்கும் வேலைகளும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” ஆரம்பமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

**மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று இந்நடவடிக்கை ஆரம்பமாக உள்ளது. அவ்வேலை தொடங்கியதும், அந்த ஆறு பேருடைய பெயர் விபரங்களுடன் பகிரங்கத்தில் அறிவிக்கப்படும்.

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
04.07.2018

Comments (0)
Add Comment