புங்குடுதீவு குடிதண்ணீர் பிரச்சினை; பிரதேச சபையில் அமளிதுமளி: கொலை மிரட்டல் குற்றச்சாட்டு..! (உண்மையில் நடந்தது என்ன? -படங்கள்-)

புங்குடுதீவு குடிதண்ணீர் பிரச்ச்சினை; பிரதேச சபையில் அமளிதுமளி: கொலை மிரட்டல் குற்றச்ச்சாட்டு..! (உண்மைகள் நடந்தது என்ன? -படங்கள்-)

புங்குடுதீவில் நீர் விநியோக பணியில் ஈடுபடும் சர்வோதயம் அமைப்பிற்கு எதிராக அவதூறு துண்டுபிரசுரங்களை வெளியிட்ட அமைப்புக்களிற்கு எதிராக பொலிசில் முறையிடுவது, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதென வேலணை பிரதேசசபை சிறப்பு அமர்வில் ஏகமனமாக தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய சிறப்பு அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கிடையிலேயே, பெரும் மோதல் ஏற்பட்டு, பெரும் அமளிதுமளியாகியது.

புங்குடுதீவிற்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் சர்வோதயம் நிறுவனம் தொடர்பாகவும், அதன் குடிநீர் சேவை தொடர்பாகவும் வேலணை பிரதேசசபையின் தமிழரசுக்கட்சி புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

சர்வோதயம் நிறுவனம்- அதிகாரிகளிற்கும், சில பிரதேசசபை உறுப்பினர்களிற்கும் இலஞ்சம் வழங்கியதாக அவர் கூறியிருந்தார். தொலைக்காட்சி நேர்காணலிலும் இதே கருத்தை கூறியதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. ஏனைய பிரதேசசபை உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிரதேசசபை உறுப்பினர் நாவலனின் குற்றச்சாட்டு தொடர்பாக விவாதிக்க விசேட அமர்வு ஒன்றை கூட்ட வலியுறுத்தினர்.

இதையடுத்து கடந்த வாரம் விசேட கூட்டம் கூட்டப்பட்டது. தமிழரசுக்கட்சி புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர் நாவலன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென, தமிழரசுக்கட்சி புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர் வசந்தகுமார் பிரேரணையொன்று சமர்ப்பித்தார். பின்னர் 30ம் திகதி- இன்றைய அமர்வில்- நாவலன் விளக்கமளிக்க வேண்டுமென குறிப்பிட்டு, இன்று விசேட அமர்வு கூட்டப்பட்டது.

இன்றைய அமர்வில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது. கூட்டமைப்பின் புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர்களான வசந்தகுமார், யசோதினி ஆகியோர், புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் சகோதரர் கருணாகரன் குணாளனால் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தினர். டான் தொலைக்காட்சியில் புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர் நாவலன் தெரிவித்த இலஞ்ச குற்றச்சாட்டின் வீடியோ ஆதாரங்களையும் உறுப்பினர்கள் சமர்ப்பித்தனர்.

பெரும் அமளிதுமளியின் மத்தியில், புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர் நாவலன் தவிர்ந்த ஏனைய பத்தொன்பது உறுப்பினர்களும், நாவலனின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, அவரது செயலுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன் அவதூறு பிரசுரம் அச்சிட்ட ஐந்து அமைப்புக்களிற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை புங்குடுதீவு உலக மையம், தீவக சிவில் சமூகம், சூழகம், பசுமைப் புரடசி போன்றவற்றின் பெயரில், புங்குடுதீவு பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் சகோதரர் குணாளன் தான் இத்துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட்தாக பகிரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டது.

சற்று முன்னர் பத்தொன்பது உறுப்பினர்களும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். தமது முறைப்பாடு தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கும்வரை மீண்டும் சபையை கூட்டுவதில்லையென முடிவெடுத்துள்ளதாக அங்குள்ள செய்தியாளரிடம் பிரதேசசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேற்படி கொலை மிரட்டல் குற்றச்சாட்டு வழக்கை பதிவு செய்ய முன்னர், ஊர்காவற்றுறை காவல் நிலையத்துக்கு சென்ற திரு.குணாளனினால், வேலணை பிரதேசசபையின் புங்குடுதீவு உறுப்பினர்களில் ஒருவரான திரு.வசந்தகுமார் என்பவர் மீது “தன்னை முதலில் மிரட்டியது இவரே” என வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக வேலணை பிரதேசசபையின் புங்குடுதீவு உறுப்பினர்களில் ஒருவரும், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியவரென கூறிக் கொள்ளும் திரு.குணாளன் அவர்களின் சகோதரரான, திரு.நாவலன் கருணாகரன் அவர்களிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இந்த குற்றசாட்டு முற்றுமுழுதான பிழை, “பசுமைப் புரட்சி” அமைப்பின் தலைவரே நான், இருந்த போதிலும் எமது அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்துக்கும், எமது அமைப்புக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை”

ஆனால் பலரும் இங்கு (புங்குடுதீவில்) “சமூக சேவையின்” பெயரில் வியாபாரம் செய்கிறார்கள்..நாம் உண்மையை சொன்னால், “கொலை அச்சுறுத்தல், மிரட்டல் விடுக்கிறோம்” என்று கூற வெளிக்கிடுகிறார்கள்..இது எனது சகோதரர் (குணாளன்) அவர்கள், அரசியலில் முன்னுக்கு வந்து விடுவாரோ, எனும் பயத்திலேயே கற்பனையில் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்” எனப் பதில் அளித்தார். (சுமார் இரண்டு மூன்று மணித்தியாலத்துக்கும் மேலாக உரையாடிய இவரின் கருத்தில் “புங்குடுதீவின் முன்னேற்றம், நன்மை” என்பதைக் குறித்து தெளிவுபடுத்தினார்)

மேற்படி சம்பவம் தொடர்பாக வேலணை பிரதேசசபையின் புங்குடுதீவு உறுப்பினர்களில் ஒருவரான திருமதி.யசோதினி சாந்தகுமார் அவர்களிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இதுவோர் தேவையற்ற கேவலமான நடவடிக்கை.. சர்வோதயத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய தேவை என்ன? சர்வோதயத்துக்கும் குடிநீர் பிரச்ச்சினைக்கும் என்ன சம்பந்தம்? உண்மையில் குடிநீர் அனுமதி வழங்கும் அதிகாரம் வேலணை பிரதேச சபைக்கு தான் உண்டு, ஆகவே எமது போராட்டம் அங்கு தான் நடைபெற வேண்டும், இதனை சுட்டிக் காட்டினால் சிலர் புரிந்து கொள்வது இல்லை..”

அத்துடன் நாம் மக்களுக்கு சேவை செய்யவே பொதுநடவடிக்கையில் ஈடுபடுகிறோம், இதுக்காக எம்மை “ஊருக்குள் நடமாடு பார்ப்போம்” என்று மிரட்டுவது, மற்றும் மொட்டைத் துண்டுப் பிரசுரம் விடுவது பிழை… இதுக்காகவே பொலிஸில் முறையிட்டு உள்ளோம்” என்றார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக வேலணை பிரதேசசபையின் புங்குடுதீவு உறுப்பினர்களில் ஒருவரும், கொலை அச்ச்சுறுத்தலுக்கு உள்ளாகியவரென கூறிக் கொள்ளும் திரு.வசந்தகுமார் அவர்களிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “நாம் மக்களுக்கு சேவை செய்யவே பொதுவாழ்வுக்கு வந்தவர்கள், அத்துடன் சர்வோதயம் அமைப்பு, பலருக்கு வேலைவாய்ப்பு உட்பட பல நடவடிக்கையில் ஈடுபடும் போது, தமது தேவைக்காக அவர்களை தரக்குறைவாக விமர்சித்து செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது.. ஒரு விடயத்தை சொன்னால், புரிந்து கொள்ள முடியாமல், கொலை செய்வேன், புங்குடுதீவில் நடமாட விட மாட்டேன் போன்ற அச்ச்சுறுத்தலை விட்டு செயல்படுவது ஏற்புடையது இல்லை” என்றார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக “புங்குடுதீவு உலக மையம்” அமைப்பின் தலைவரான அண்ணா சின்னத்தம்பி எனும் திரு பிள்ளைநாயகம் சதீஷ் அவர்களிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “எமது அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்துக்கும் எமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்த போது..,

“அப்படியாயின் சர்வோதயம் நிலையத்துக்கு முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டதன் காரணம் என்ன?” என்று நாம் கேட்ட போது, “அங்கு சென்ற பின்னரே அந்த துண்டுப் பிரசுரத்தைக் கண்ணுற்றேன், ஆயினும் முதல்நாள் வேறு சிலர் என்னிடம் இதுகுறித்து தெரிவித்த போதும் நான் நம்பவில்லை, ஆயினும் உடனேயே வேலணை பிரதேச தவிசாளர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கு, இந்த துண்டுப் பிரசுரத்துக்கும், எமது அமைப்புக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்தேன்,

ஏனெனில் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள அமைப்புகளில் எமது அமைப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். ஆகவே எமக்கு கடிதம் மூலம் விசாரணைக்கு அழைப்பு வந்த போதும், புங்குடுதீவு உலக மையத் தலைவராகிய நானும், பொருளாளராகிய சபா பரமேஸ்வரனும் நேரில் சென்று, இந்த துண்டுப் பிரசுரத்துக்கும் எமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினோம்” என்கிறார்.

அத்துடன் “உண்மையில் நாம் தண்ணீர் பிரச்ச்சினையை மையப்படுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பதினால், சமூக அக்கறையினால் நாம் கலந்து கொள்ள சென்றோம், ஆயினும் அங்கு வைத்து,,துண்டுப் பிரசுரத்தை நேரில் பார்த்த பின்னரே, அந்த துண்டுப் பிரசுரமானது, எமது அனுமதி இல்லாமல், அநாமேதய பெயரில், ஆதாரமற்ற குற்றச்ச்சாட்டுக்களை கொண்டு இருந்ததினால், அதனை வன்மையாகக் கண்டித்து, அந்த போராட்ட களத்தில் இருந்து விலகிச் சென்றோம்” என்றார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக “தீவக சிவில் சமூகம்” அமைப்பின் முக்கியஸ்தரும், தமிழரசுக் கட்சியின் தீவகப் பொறுப்பாளருமான (நீதிபதி இளஞ்செழியனின் சகோதரரான), திரு.மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்களிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இந்த துண்டுப் பிரசுரத்துக்கும், எமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவிப்பதுடன்.., இந்த பிரச்ச்சினைகளின் மூலகாரணமே “தண்ணீர் பிரச்ச்சினை” தான், ஆயினும் குறிப்பிட்ட பிரதேசத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ஒட்டுமொத்த தீவகமும் எமது ஊர் என்பதைக் கவனத்தில் கொள்ளணும்.. அத்துடன் நீரானது குடி தண்ணீருக்கு வழங்கப்பட்டால், அதனை எல்லா விடயத்துக்கும் பாவித்து, தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தக் கூடாது எனவும்” வலியுறுத்தினார்.
(இதுகுறித்த மேலதிக பதில்களோ, விளக்கங்களோ தரப்படுமாயின் அவையும் பிரசுரிக்கப்படும்..)

Comments (0)
Add Comment