புலிகளின் தலைவர் பிரபாகரனின், சீருடையை அகற்ற உத்தரவிட்டது சரத் பொன்சேகாவென அதிர்ச்சித் தகவல் (படங்கள் &வீடியோ)

2009 இல் நந்திக்கடலோரத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயிரற்ற உடலை கண்டுபிடித்ததும், அந்த உடலில் இருந்த வரிச்சீருடையை கழற்றுமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உத்தரவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான ஷகி ஹல்லகே.
2009 மே 19ம் திகதி காலை பிரபாகரனின் உடல் நந்திக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் முல்லைத்தீவு முனையில் முன்னேறிய 59வது டிவிசன் படையணியை ஷகி ஹல்லகே வழிநடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய தகவலிலேயே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பிரபாகரனின் உடலில் புலிகளின் வரிச்சீரூடையையுடன் இருக்க அனுமதித்ததற்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை பொன்சேகா கடும் தொனியில் கண்டித்ததாக அவர் தெரிவித்தார்.
பிரபாகரனின் உயிரற்ற உடல் என முதலாவது புகைப்படம் வெளியானபோது, அது புலிகளின் வரிச்சீருடையுடன் காணப்பட்டது. இதை பார்த்த பொன்சேகா கடும் சீற்றமடைந்தார்.

“பிரபாகரனின் உடலை, கோவணத்துடன் மட்டும் காட்டும்படி எமக்கு உத்தரவிட்டார்” என ஹல்லகே குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் இராணுவ முகாமொன்றிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், வரிச்சீருடை அகற்றப்பட்டு சிறிய துணித்துண்டால் இடுப்பின் கீழ் பகுதி மூடப்பட்டு, மீண்டும்  அது கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கருணா, தயா ஆகியோர் அதை அடையாளம் காட்டினார்கள் என அரசாங்கம் புகைப்படம் வெளியிட்ட போது, பிரபாகரனின் உடலில் சிறிய துணியொன்று மாத்திரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments (0)
Add Comment