சுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன நடந்தது? நடக்கப் போவது என்ன?? (படங்களுடன்)

சுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன நடந்தது? நடக்கப் போவது என்ன?? (படங்களுடன்)

கடந்த 1998ம் ஆண்டுமுதல் சுவிஸ் சொலத்தூண் மாநில “தமிழர் நலன்புரிச் சங்கத்தினால்” நடாத்தப்பட்டு வரும் “நாட்டியமயில்“ போட்டி நிகழ்வானது சுவிஸ் புலிகளின் (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு) தனித்து செயலாற்றும் முடிவாலும், தலையீட்டாலும், பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இதில்

சுமார் இருபது வருடமாக, நடாத்தி வந்த “நாட்டியமயில்“ போட்டி நிகழ்வானது தற்போது பெரும் சட்ட சிக்கல்களுக்கும் உள்ளாகி உள்ளது அத்துடன் சுவிஸ் புலிகள் ஏற்பாடு செய்துள்ள “நாட்டியமயில்” நிகழ்வுக்கு உரிய Zofingen மண்டபம் சட்ட சிக்கலை தொடர்ந்து நிறுத்தப்பட்டு உள்ளது. இவை குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு வினவிய போது…,

சுவிஸ் புலிகளெனும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் (தனது பெயரைக் குறிப்பிட விரும்பாது) தகவல் தெரிவித்த ஒருவர், “சுவிஸ் சொலத்தூண் மாநில “தமிழர் நலன்புரிச் சங்கமானது” ஆரம்பத்தில் தனிநபர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அக்கால கட்டத்தில் (புலிகள் உயிருடன் இருந்த காலத்தில்) எம்முடன் இணைந்தே செயல்பட்டனர். ஆரம்பத்தில் இதன் வருமானத்தை புலிகளின் “ரி.ஆர்.ஓ” ஊடாகவே வன்னி மக்களுக்கு, அதாவது அவர்களின் மறுவாழ்வுக்கு செலுத்தி வந்தனர். ஆரம்பத்தில் இதுக்கெனவும் அப்போது சுவிஸ் புலிகளின் பொறுப்பாளராக இருந்த முரளிதரன் அண்ணர் ஊடாகவும் நாம் கடனாக நிதி செலுத்தி இருந்தோம்”.

“இந்நிலையில் தற்போது எமது போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், எம்முடன் இணைந்து செயல்பட்ட இவர்கள் தனித்து செயல்படுவதாகவும், இதன் வருமானத்தை தாமே அபகரிக்க வேண்டுமெனவும் நினைக்கிறார்கள், எமது போராட்டம் மௌனிக்கப்படாமல் இருந்திருந்தால், இவர்களால் இப்படி செய்திருக்க முடியுமா?” எனவும் கேள்வி கேட்டார்.

இதேவேளை “சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கத்தின்” ஆதரவாளரான ரவி என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், “சுவிஸ் புலிகள் சொல்வது முழுப்பொய் எனவும், இதுவோர் தனிப்பட்ட அமைப்பு எனவும், தனிநபர்கள் சிலர் இணைந்தே இது உருவாக்கப்பட்டது எனவும், எமக்கு நிதி தந்ததாகக் கூறுவதே முழுப்பொய் எனவும், முரளிதரன் கடனாக நிதி கொடுத்ததே சொலத்தூண் அம்மன் கோவிலுக்கு தான், அதுவும் அக்கோயில் இப்போதும் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ள போதிலும், கோயில் நிர்வாகம் எப்போதோ இக்கடனை திரும்ப செலுத்தி விட்டனர்.

அத்துடன், சுவிஸ் புலிகளுடன் இணைந்து நாம் செயல்படவில்லை, அவர்களை சேர்ந்த இருவரே எம்முடன் இணைந்து இருந்த போதிலும், நாம் எந்தவொரு அமைப்பு சாராமல், தனித்தே செயல்பட்டு எமது வருமானத்தை மக்களின் மறுவாழ்வுக்கு அளித்து வருகிறோம்.

இதேவேளை எமது அமைப்பின் பெயரும், நிகழ்வின் பெயரும் சட்ட ரீதியாக சுவிஸில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த அமைப்புக்கோ, நிகழ்வுக்கோ உரிமை கோருவது நகைப்புக்கு இடமாக உள்ளது. இதுகுறித்து சுவிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில ஆசிரியர்களையும், மாணவிகளையும் “உங்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தை நாம் காட்டுகிறோம், நீங்கள் கலந்து கொள்ளுங்கள்” என்று வற்புறுத்துவது எதுக்கு??” எனவும்,

“ஏற்கனவே இந்த வழக்குக்காக சுவிஸ் புலிகளினால் ஐம்பதினாயிரம் சுவிஸ் பிரங்குக்கு மேல் தமிழ் மக்களின் பணத்தை செலவழித்து உள்ளனர். இதெல்லாம் யார் பணம்?” எனவும் தெரிவித்தார்.

(இதுகுறித்து “சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கம்” விடுத்துள்ள அறிக்கையையும் அனுப்பி வைத்து உள்ளார். அதனை கீழே இணைத்து உள்ளோம்)

இதேவேளை சுவிஸ் தமிழ் சட்ட நிபுணர்கள் சார்பானவர்களில் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது…
“சுவிஸ் புலிகள் வேறு ஒரு மண்டபத்தில், நிகழ்வை நடத்தலாம், ஆயினும் இதே பெயரில் நிகழ்வை நடத்தினால் நிச்சயமாக சட்ட சிக்கல் ஏற்படும். இதனாலேயே சுவிஸ் புலிகள் “நாட்டிய மயில் & நெருப்பின் சலங்கை” எனப் பெயரிட்டு உள்ளனர். ஆயினும் “நாட்டிய மயில்” பெயரைப் பயன்படுத்தியதாலேயே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இதனை ஏற்பாடு செய்வோர், பங்களிப்பு செய்வோர் குறிப்பாக ஆசிரியைகள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். அவர்களுக்கு அபராத தொகை (பணமாக) தண்டனை விதித்தாலும், அதுவும் குற்றவியல் கோப்பில் இரண்டு வருடத்துக்கு இணைக்கப்படும் என்பது உண்மை” எனவும் தெரிவித்தனர்.

******************************
**அறிக்கை: சுவிஸ் புலிகளின் தமிழ் கலை நிறுவக தலைவர் சங்கர்…

தமிழ்க்கலை ஆசிரியர்களிற்கு வணக்கம்.

எதிர்வரும் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Zofingen மண்டபத்தில் நடைபெறவிருந்த நாட்டியமயில் போட்டி நிகழ்வுகள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் வேறொரு மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதனை ஆசிரியர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

21.04.2019 ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகளிற்குரிய புதிய மண்டப முகவரி நாளை காலை நடைபெறவுள்ள ஆசிரியர், போட்டி நடுவர் ஒன்றுகூடலில் அறியத் தரப்படும்.
தங்கள் புரிந்துணர்விற்கு நன்றி.
நா.சங்கர்

**********************************

*** அறிக்கை: “தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண்”

அறநெறிபிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்…….

சுவிஸ் சட்ட வரைமுறைக்குட்பட்டு கடந்த 1998 ம் ஆண்டுமுதல் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் “நாட்டியமயில்“ போட்டியானது சுவிஸ்வாழ் கலைபயிலும் மாணவரிடையே நன்கு அறிமுகமான நிகழ்வாகும். இது மாணவர்களுக்கு மிகுகலையார்வத்தை ஏற்படுத்தியதோடு அடுத்த தலைமுறை விரிவாக்கத்திற்கும் வித்திட்டது.. இதன்மூலம் கிடைக்கப் பெற்ற நிதியினை தாயக தேசத்தில் வாழும் மக்களின் மறுவாழ்விற்காகவும், மாணவர்களின் கல்விக்காவும் வழங்கிவருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அனைத்துலகத் தமிழ் கலைநிறுவகத்துடன் (IITA) ஒருசில கலை ஆசிரியர்களும், சட்ட நுண்ணறிவற்ற உந்துசக்திகளும் எவ்வாறு இருபது வருடங்களைக் கடந்து சிறப்பாக நடந்துவரும் எமது நிகழ்விற்கு உரிமை கோர முடியும்?

பெற்றோர்களை பேதைகளாக்கி உண்மைகளை மூடிமறைத்த தலைமுறைச் சிந்தனையற்ற அனைத்துலக தமிழ்க்கலை நிறுவக (IITA) நிர்வாகத்தினரதும், ஆசிரியர் சிலரதும் சட்டரீதியற்ற செயற்பாடே மாணவர்களின் நாட்டியமயில் என்னும் நடனப்போட்டி நிகழ்வுக்கான Zofingen மண்டபம் நிறுத்தப்பட்டமைக்கான காரணமாகும்.

இது பல மாதங்களுக்கு முன்னரே IITA நிறுவனத்தினரும், அவர்களுடன் பங்குபற்றவிருந்த ஆசிரியர்களும் எழுத்து மூலமாக அறிந்திருந்தார்கள் என்பதே உண்மை. இறுதி நிமிடம்வரை எங்கள் கதவுகள் உங்கள் குழந்தைகளுக்காகத் திறந்தே இருந்தது.

தமிழர் நலன்புரிச்சங்க (TWA) வருமானம் நாட்டுக்கே என்ற சங்க வரமுறைக்கு முரணான செயற்பாடுகளால் எமது நிர்வாகத்தைவிட்டு விலகிய இருவரின் துணையுடன் புதிய சங்கத்தினை ஆரம்பித்தவர்கள் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கம் தமக்கே உரியதென்று மக்கள் பணத்தில் எமக்கெதிராக வழக்குத் தொடுத்தனர். கடந்த 4 வருடமாக நடைபெறும் வழக்கிற்கான தீர்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை.

பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகிய சொலத்தூண்; தமிழர் நலன்புரிச் சங்கத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டவர்களை வழக்கின் முடிவு வரும்வரை இப்பெயரில் நிகழ்வுகளை நடாத்த வேண்டாமெனவும் வேறுபெயரில், மாணவர்களுக்கு இடையூறு இல்லாது பிறிதொரு மாதத்தில் மாணவர்களுக்கான போட்டி நிகழ்வினை நடாத்துமாறும் கேட்டிருந்தோம். நாம் மட்டுமல்லாது 2017ம் ஆண்டு நாட்டியமயில் போட்டியில் பங்குபற்றிய ஆசிரியர்களும், பெற்றோர்களும் அவர்களுக்கு தங்கள் கருத்தினைத் தெரிவித்திருந்தார்கள்.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட நாம், பெற்றோரின் ஒத்துழைப்புடன் ஆசிரியர்கள் சுதந்திரமாக இயங்கி போட்டியினை நடாத்துமிடத்து சங்கத்திற்குச் சொந்தமான “நாட்டியமயில்”, இசைக்குயில்“ என்ற பெயர்களை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கும் தயாராகவும் இருந்தோம். இதுதொடர்பான ஒன்றுகூடல்கள் பல நடைபெற்றும் ஆக்கபூர்வமான முடிவேதும் எட்டப்படவில்லை.

இவ்வருடம் “நாட்டியமயில்“ என்ற பெயரில் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் போட்டியினை நடத்துவதற்கான அறிவித்தலை வெளியிட்டதும் உரியவர்களுக்கு நாம் நேரடியாக எமது நிலைப்பாட்டினையும், ஆசிரியர்களின் துணைவர்கள் தங்கள் நிலைப்பாட்டினையும் தெரிவித்திருந்தார்கள்.

எமக்குப் போட்டியாக நிகழ்வினை ஏற்பாடு செய்த நிர்வாகத்தினரிற்கும், அதில் பங்குபற்றும் ஆசிரியர்களுக்கும் இதனால் ஏற்படவுள்ள விளைவுகள் தொடர்பாக பலமுறை நேரடியாகவும், சட்டரீதியாகவும் அறிவித்திருந்தோம். சில ஆசிரியர்கள் இந்நிலையினை மாணவர்களுக்கும், பெற்றோரிற்கும் அறிவிக்காதமை வேதனையானதே.

இவை எதனையும் கருத்திற்கொள்ளாது செயற்பட்டதனால் சட்டரீதியாக 7 நாட்களுக்குள் நிறுத்த முடியும் என்ற அடிப்படையில் நிகழ்வுக்கான Zofingen மண்டபம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் Burgdorf மண்டபம் நிறுத்தக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு நாட்டியமயில் என்ற பெயரைத் தவிர்த்து நிகழ்வு நடாத்தலாமென மண்டப நிர்வாகத்திடம் அறிவித்துள்ளோம். அதையும் மீறி நாட்டியமயில் என்னும் பெயரில் நிகழ்வு நடாத்தப்படுமாயின் அம்மண்டபமும் நிறுத்தப்படலாம்.

எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் இதனை உணர்ந்து செயற்படுவீர்கள் எனஎதிர்பார்க்கின்றோம். இதனால் மாணவர்களுக்கும் பெற்றோரிற்கும் ஏற்படும் மனவுளைச்சலை நாம் நன்கறிவோம். பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்புடன் செயற்படாதது மாணவர்களை இந்நிலைக்கு கொண்டு சென்றதை நினைத்து நாம் மனம் வருந்துகின்றோம்.

சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கத்திற்கே உரித்தான நாட்டியமயில் என்ற பெயருக்கும் அதன் சின்னத்திற்கும் எம்மால் ஏற்கனவே காப்புரிமம் பெறப்பட்டுள்ளது. இதனை நன்கு அறிந்தும் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தைப் பொருட்படுத்தாது உதாசீனப் படுத்தியதே இவை அனைத்திற்கும் காரணம். இது தொடராமல் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் சிந்தித்துச் செயற்படுவதே சிறந்தது.

17.04.2019 தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண்.

 

Comments (0)
Add Comment