கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட, சுவிஸ் தூதரக அதிகாரி.. (முழுமையான விபரம்)

கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட, சுவிஸ் தூதரக அதிகாரி.. முழுமையான விபரம்…

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என சுவிஸ்இன்போ என்ற செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பெண் ஊழியரை திங்கட்கிழமை கடத்தியவர்கள் இரண்டு மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர் என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளதுடன் எழுத்துமூல பதிலொன்றை வழங்கியுள்ளதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தூதரகம் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு தூதரக பணியாளரை அச்சுறுத்தினார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த விடயத்தை இலங்கையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது, இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான உடனடி விசாரணைகளை கோரியுள்ளோம் என சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சுவிட்சர்லாந்திற்கான இலங்கை தூதுவரை சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு விளக்கம் கோருவதற்காக அழைத்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க உள்ளார்..

இதேவேளை கடத்தல் சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹெனிஸ் வோல்கர் நெடிர்கூரன், இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க உள்ளார். நாளையதினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் வெள்ளைவான் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பிலயே பிரதமருடன், சுவிட்சர்லாந்து தூதுவர் பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றி வரும் பெண் ஒருவர் நேற்று வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அந்தப் பெண்ணிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி, தற்பொழுது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படும் நிசாந்த சில்வா பற்றி விசாரணை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்ட பெண் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகம், குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், “அரசாங்கத்தை அசௌகரியத்தில் ஆழ்த்தும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம்” எனவும் அந்தப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்து தூதுவர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க உள்ளார்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை…

ராஜபக்ச அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்சவினரை விமர்சித்தவர்களுக்கு எதிராக கடும் ஒடுக்குமுறை ஏற்படுத்தப்படலாம் என அச்சம் அதிகரித்து வருவதாக அமெரிக்காவில் வெளியாகும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதுடன் அவரது செல்போன் தரவுகளை தருமாறு கட்டாயப்படுத்தியுள்ள தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது முன்கூட்டிய எச்சரிக்கையாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுவிஸர்லாந்தில் அண்மையில் தஞ்சம் கோரிய அரச அதிகாரிகளான இலங்கையர்கள் பற்றிய தகவல்களும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாதுகாப்பு குறித்து அஞ்சி நாட்டில் இருந்து வெளியேறியவர்களுக்கு உதவியவர்களின் பெயர்களும் அவரது தொலைபேசியில் இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே தினத்தில் ஜனாதிபதி ராஜபக்ச இலங்கை குற்றவியல் புலனாய்வு விசாரணை திணைக்களத்தின் 700க்கும் மே்றபமட்ட அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளார்.

மேலும் ஒரு செய்தி நிலையம் சோதனையிடப்பட்டதுடன் விசாரணைகளுக்காக தமது கணனிகளை வழங்குமாறு செய்தியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வெறுக்க தக்க பேச்சு தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி ராஜபக்சவின் செய்தி தொடர்பாளரிடம் கேட்ட போது, “சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த உண்மை அறிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக” கூறியுள்ளார்.

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி…

அதேவேளை சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தி ஆண்கள் பல மணி நேரம் வைத்திருந்தனர் எனவும், இதனை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவோம் என அவரை விடுதலை செய்யும் முன்னர் அச்சறுத்தியதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்சவினரின் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை நடத்திய நபர் பற்றி தகவல்களை கண்டறிய அந்த ஆண்கள் கவனம் செலுத்தியுள்ளனர். குறித்த புலனாய்வு அதிகாரி கடந்த ஞாயிற்றுக் கிழமை குடும்பத்துடன் சுவிஸர்லாந்துக்கு தப்பிச் சென்றார்.

இந்த நபர்கள் ராஜபக்சவுடன இணைந்துள்ளவர்களா? அல்லது பிரபலமான அரசியல் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு அமைய செயற்படும் நபர்களா? என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த நிலையில், சுவிஸ் தூதரக ஊழியரின் கடத்தல் தொடர்பாக கேள்விகளுக்கு பதிலளிக்கவும் ததூதரக ஊழியர்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதங்களை வழங்கவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்று சுவிஸ் தூதுவரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

https://www.swissinfo.ch/eng/diplomatic-incident-_swiss-embassy-worker-kidnapped-and-threatened-in-colombo-/45397440?fbclid=IwAR3I8PCtsaDq1359uIMb3m5SYsUMUytWBcxQDMotZz6M2VetEzHzuWjBQN8

https://www.srf.ch/news/p/angestellte-von-schweizer-botschaft-entfuehrt?ns_source=mobile&srg_sm_medium=wa

Comments (0)
Add Comment