யாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன்! நடந்தது என்ன? (படங்கள்)

யாழில் ரெலோவுக்குள் மீண்டும் மோதல்: ரெலோவின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன்! நடந்தது என்ன? (படங்கள்)

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பதை கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, கட்சியின் யாழ்ப்பாண கிளைக்குள் பெரும் பிரளயம் உருவாகியுள்ளது.

ரெலோவின் யாழ் மாவட்ட உறுப்பினர்களிற்கும், கட்சித் தலைமைக்குமிடையிலான சந்திப்பு இன்று (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போதே, வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

ரெலோவின் யாழ்ப்பாண வேட்பாளராக, அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேனை களமிறக்கவுள்ளதாக வெளியிட்டிருந்த செய்தி இன்று உறுதியானது.

ரெலோவின் தலைமைக்குழு, அரசியல் குழு நேற்று வவுனியாவில் கூடியபோது, யாழ் மாவட்ட வேட்பாளர் விவகாரத்தை யாழ் கிளையை கூட்டி அறிவிப்பதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார். எனினும், சுரேன்தான் தமது யாழ் வேட்பாளர் என்பதை சில வாரங்களின் முன்னரே, தமிழ் அரசு கட்சிக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், இன்று ரெலோவின் கடந்த மாநகரசபை வேட்பாளரின் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, வினோநோகரதலிங்கம் ஆகியோருடன், யாழ் மாவட்ட கிளையின் சுமார் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேனை களமிறக்கப் போவதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்தார்.

இதேவேளை, கட்சியின் நீண்டநாள் செயற்பாட்டாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தை தவிர்த்து, அதை சுரேனிற்கு கொடுக்கும் சங்கடமோ என்னவோ, விந்தனை தாஜா பண்ணும் காரியத்தையும் ரெலோ தலைவர் செல்வம் செய்தார்.

“எமது யாழ் மாவட்ட வேட்பாளராக சுரேன் களமிறங்குவார். அதேநேரம், விந்தனை நாம் மறக்கவில்லை. அவருக்கு நாம் முக்கிய கடமையொன்றை வழங்கவுள்ளோம். அடுத்த மாகாணசபையில் அவரை அமைச்சராக்கவுள்ளோம்“ என்றார்.

எனினும், சுரேன் வேட்பாளராகுவதை கூட்டத்திலிருந்த பலர் விரும்பவில்லை.

அவர் யாழிற்கு புதியவர். களத்தில் செயற்படாதவர். அதிக வாக்கை பெற மாட்டார். எமது வேட்பாளர் ஒருவர் குறைந்த வாக்கை பெறுவது கட்சிக்கும், கட்சி செயற்பாட்டாளர்களான எமக்கும் அவமானமாகும். எனவே, வெல்லக் கூடிய பொருத்தமான வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமையை கட்சியின் யாழ் மாவட்ட கிளையிடம் விடுங்கள். நாம் நல்லதொரு வேட்பாளரை பரிந்துரைக்கிறோம்.

விந்தன் கனகரட்ணம் நீண்டகால செயற்பாட்டாளர். உள்ளூராட்சி சபைகளில் நீண்டகாலம் அங்கம் வகித்து மக்களிடம் பரிச்சயமானவர். அவர் வெற்றி பெறுவார். தோல்வியடைந்தால் கூட, குறைந்த வாக்கை பெற்று தோல்வியடைய மாட்டார் என கட்சியின் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர்.

வின்சன், சஜிதரன், உடுப்பிட்டி மோகன், மதுசுதன் உள்ளிட்ட பலர் அதை வலியுறுத்தினர்.

எனினும், சுரேன் வெற்றிபெறக் கூடிய வேட்பாளர், அவரையே களமிறக்கப் போவதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதையடுத்து எழுந்த விந்தன், “நாங்கள் எந்த தனி மனிதருக்கும் எதிரானவர்கள் அல்ல. யாருக்கும் வேட்புமனு வழங்கக்கூடாது என கூறவில்லை. எமது கட்சியின் கௌரவத்தையும், மதிப்பையும் பேணும் விதமாக வாக்கை பெறும் ஒரு பொருத்தமான வேட்பாளரையே களமிறக்க கோருகிறோம். அதை நீங்கள் தடுக்கக்கூடாது.

கட்சி எனக்கு தரும் எந்த உத்தரவாதத்தையும் நான் ஏற்கவில்லை. ஏனெனில், கடந்த காலத்தில் பலமுறை இப்படி கட்சி உத்தரவாதங்கள் தந்தது. அதெல்லாம் காற்றில் பறந்தது. அந்த வலியும், காயமும் இன்னமும் நெஞ்சில் உள்ளது. அதை சாகும் வரையும் மறவாது. நாம் சிறிசபாரத்தினம் என்ற தலைவரை நம்பி போராட வந்தவர்கள். உங்களையெல்லாம் அப்பாவாக நினைத்திருந்தோம். ஆனால், நீங்கள் யாரும் அப்படி நடக்கவில்லை. நான் ஒரு உண்மையான ரெலோ போராளி. எனக்கு இப்படியான வாக்குறுதிகள் தந்து அவமானப்படுத்த வேண்டாம்“ என்றார்.

இந்த விவகாரம் நீண்ட வாதப்பிரதிவாதமாக நடந்து சென்றது. எனினும், சுரேன்தான் தமது வேட்பாளர் என செல்வம் உறுதியாக தெரிவித்தார்.

இதையடுத்து எழுந்த விந்தன் கனகரட்ணம், இன்றிலிருந்து கட்சியின் பொதுக்குழு, மத்தியகுழு, தலைமைக்குழு, அரசியல் குழு ஆகியவற்றில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். எனினும், கட்சியை விட்டு விலகப் போவதில்லையென்றும், இப்படியான குழுக்கள் இருந்தும் பலனில்லை, இனி அவற்றிற்கு என்னை அழைக்க வேண்டாம் என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமுகமற்ற நிலையில் கூட்டம் முடிந்தது.

இதேவேளை, இந்த கூட்டத்திற்கு முன்னதாக, சுரேனின் நியமனத்திற்கு எதிராக பேச வேண்டாமென உறுப்பினர்கள் பலர் திரைமறைவில் வலியுறுத்தப்பட்டதாக சில ரெலோ உறுப்பினர்கள் தமிழ்பக்கத்திடம் சுயாதீனமாக தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே ரெலோ யாழில் சடுதியான பிளவை சந்தித்து, பலவீனமான நிலையில் இருக்கின்ற சமயத்தில், யாழ் மாவட்ட வேட்பாளர் நியமனத்தின் மூலம் சர்ச்சைகள் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

இதேவேளை மேற்படி சம்பவம் குறித்து “அதிரடி” இணையம் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களுடன், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இது உண்மையான சம்பவம் தான் எனவும், ஆரம்பம் முதல் ரெலோ அமைப்பில் உள்ளவர்கள் மதிக்கப்படவில்லை, யாழில் யாரை எமது அமைப்பின் சார்பில் போட்டியிட வேண்டுமென்பதை இங்குள்ளவர்களே (நாமே) தீர்மானிக்க வேண்டுமே தவிர, ரெலோ தலைமை ஏற்கனவே எடுத்த முடிவை எம்மீது திணிக்கக் கூடாது, இதுவோர் திட்டமிடப்பட்ட திணிப்பு” என்றார்.

“அப்படியாயின் நீங்கள் தேர்தல் பிரச்ச்சாரத்தில் ஈடுபடுவீர்களா?” என “அதிரடி” இணையம் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களிடம் கேட்ட போது, “இம்முடிவை தலைமைக்காக ஏற்றுக் கொண்டேமே தவிர, மனவிருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே கடசி என்ற ரீதியில் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவோமே தவிர, மனவிருப்பத்துடன் இல்லை. இத்தேர்தலில் யாழில் ரெலோ அமைப்பு தோல்வியடைந்தால், அதுக்கு ரெலோ தலைமை தான் பொறுப்புக்கூற வேண்டும்” என்றார்.

“நீங்கள் ரெலோவின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளதாக அறிகிறோம். அது உண்மையா?” என “அதிரடி” இணையம் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களிடம் கேட்ட போது, “இன்றிலிருந்து கட்சியின் பொதுக்குழு, மத்தியகுழு, தலைமைக்குழு, அரசியல் குழு ஆகியவற்றில் இருந்து விலகுவதாக தலைமைக்கு முன்பாகவே பகிரங்கமாக அறிவித்து உள்ளேன். இவற்றால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. ஆயினும் நான் ரெலோ உறுப்பினராக என்றும் தொடர்வேன்” எனவும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment