சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. இந்நிகழ்வானது, இன்றையதினம் (05.08.2018) பூர்த்தி செய்யப்பட்டு, அப்பிரதேச மக்களிடம் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டது.

இவ்வைபவத்தினை, புங்குடுதீவு பானாவிடை சிவன் ஆலய பிரதமகுரு திரு.ரூபன் சர்மா என்பவர் முன்னின்று நடாத்த, அப்பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்களும் மனமகிழ்வுடன் கலந்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு பானாவிடை சிவன் ஆலய பிரதமகுரு திரு.ரூபன்சர்மா அவர்கள் ஆசியுரை வழங்குகையில் “இன்றைய வறட்சிக் காலத்திலும் இதுபோன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது வரவேற்க்கக் கூடியதே, அந்தவகையில் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்” என்றார்.

மேற்படி நிகழ்வில், உரையாற்றிய ஊர்ப் பெருமக்களான திரு.மதியழகன் மற்றும் திரு.சி.பரமேஸ்வரன் ஆகியோர் தெரிவிக்கையில், “எமது பிரதேசத்தில் சிறுவயது முதல் காணப்பட்டு இடிந்து உருக்குலைந்து போய்க் காணப்பட்ட கிணற்றை மிகத்திறமையாக மீளவும் உருவாக்கித் தந்த புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினருக்கு” நன்றி எனக் குறிப்பிட்டனர்.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை, மற்றும் அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படிக் கிணற்றை புனரமைக்க பங்களித்த புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கும், சுவிஸில் வாழும் “ஊரதீவு, வரதீவு, மடத்துவெளியை சேர்ந்த” ரவி, சண்முகம், குழந்தை, திகில், கணேசராசா, அரிச்சந்திரன் ஆகிய ஆறு பேருக்கும் தமது நன்றி எனவும், அதேபோல் மேற்படிக் கிணற்றை திறம்பட புனரமைத்துத் தந்த திரு.வனோஜன் மற்றும் அவரது குழுவினருக்கும், அதனை சுவிஸில் இருந்து கொண்டே எந்நேரமும் கவனித்து, திறம்பட முடிக்கப் பாடுபட்ட, சுவிஸ் ஒன்றியத் தலைவர் தம்பி ரஞ்சனுக்கும் நன்றி” எனவும்..,

“இதேபோல் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், அடுத்து “கரந்தெளி பொதுக்கிணறும்” புனரமைத்துக் கொடுக்கப்பட உள்ளது என்பதை மனமகிழ்வோடு தெரிவிப்பதுடன், புங்குடுதீவிலுள்ள இதுபோன்ற “மக்களின் நன்மைகள் சார்ந்த” கோரிக்கைகளை எழுத்து மூலம் தந்தால், சுவிஸ் ஒன்றியம் செய்து தருமென நம்புகிறேன்” எனவும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி. த.சுலோசனாம்பிகை அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பல சிரமங்களுக்கு மத்தியில் இக்கிணற்றை நேர்த்தியாக புனரமைத்துக் கட்டித் தந்த வனோஜன் மற்றும் அவரது குழுவினருக்கும், இதுக்கு ஒத்தாசை புரிந்த இப்பகுதி மக்களுக்கும் நன்றி கூறும் இதேவேளை இக்கிணற்றை இப்பகுதி மக்களே பராமரித்து பேணிப் பாதுகாக்க வேண்டுமெனவும்” தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் மேற்படிக் கிணற்றை புனரமைத்து, புதிதாகக் கட்டிக் கொடுத்த கட்டிடக்கலை நிபுணர் திரு.வனோஜன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “உண்மையிலேயே இக்கிணற்றை பலசிரமங்களுக்கு மத்தியிலேயே கட்டி முடித்தோம். இதுக்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி”, அத்துடன் வேலைகளை திறம்பட செய்வதை நோக்கில் கொண்டு, எம்மை இறுக்கிப் பிடிக்கும் “சுவிஸ் ஒன்றியத் தலைவர்” ரஞ்சன் அண்ணர் அவர்கள், எதிர்வரும் காலங்களில் எமது நிலை உணர்ந்து ஒத்துழைப்பு நல்குவாரென நம்புகிறோம்” எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பல சிரமங்கள், இடையூறுகளுக்கு மத்தியில் மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைத்து, புதிதாக கட்டிக் கொடுக்கும் வேலையை மிகவிரைவில் (மூன்று வாரத்துக்குள்) பூர்த்தி செய்து தந்த, கட்டிடக்கலை நிபுணர் திரு.வனோஜன் மற்றும் அவரது குழுவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான அனைத்து நண்பர்களுக்கும் எமது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று இந்நடவடிக்கை ஆரம்பமாகியதும் நீங்கள் அறிந்ததே.

ஒன்றிய தலைமையின் வேன்டுகோளை ஏற்று மடத்துவெளி பொதுக்கிணற்று திருத்தல் பணிக்காக எமது 7ம்; 8ம் வட்டாரம் உறவுகள் ஆறு பேரான.. 1.திரு.கந்தையா கணேசராசா -சூரிச், 2.இராசமாணிக்கம் இரவீந்திரன் -சூரிச், 3.சுப்பிரமணியம் சண்முகநாதன் -சூரிச், 4.விஸ்வலிங்கம் அரிசந்திரதேவன் -ஆராவு, 5.அருணாசலம் திகில்அழகன் -பேர்ன், 6.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) -பேர்ன், ஆகியோர் தலா முந்நூறு சுவிஸ் பிராங் வீதம் பங்களிப்பு செய்ய, மிகுதித் தொகையை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” பொறுப்பெடுத்து, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” இந்த கிணற்று வேலை நடைபெற்றது.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் பொருளாளர் திரு. கைலாசநாதன் (குழந்தை) விடுத்த வேன்டுகோள்களை ஏற்று, எவ்வித மறுப்பும் சொல்லாமல் உதவி செய்த சுவிஸ் வாழ் ஊரதீவு, மடத்துவெளியை சேர்ந்த ஆறு நண்பர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் எமது நன்றிகள் பல..

மேற்படி “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலைக்கான நிதி, மற்றும் கிணறை ஒப்படைக்கும் நிகழ்வுக்கான செலவு, மற்றும் அந்நிகழ்வில் கிணற்று வேலைகளை செய்த மேஸ்திரி திரு.வனோஜன் அவரது குழுவினர் உட்பட உதவி புரிந்த சிலருக்கான கௌரவிப்பு போன்ற அனைத்து செலவையும் சுவிஸில் வாழும் ஊரதீவு, மடத்துவெளி பகுதியை சேர்ந்த ஆறு நண்பர்களும், “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமும்” ஏற்றுள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.

மேற்படி “மடத்துவெளிப் பொதுக்கிணறு” புனரமைப்பு வேலை குறித்து, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இதுபோன்ற நிகழ்வுகள் வரவேற்கக் கூடியது எனவும், ஏனெனில் ஒன்றியத்தின் நிதியை, ஒருபகுதியில் மட்டும் பெருமளவில் செலவழிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிவித்தவுடன், “நாமும் பங்களிப்பு செய்கிறோம்” என்று கூறி உடனடியாகப் பங்களிப்பு வழங்கிய நண்பர்களான ரவியண்ணர், சண்முகம் அண்ணர், திகில், அரிச்சந்திரன், கணேசராசா, குழந்தை ஆகியோரின் செயல்பாடு வரவேற்கக் கூடியது” எனவும்,

“அதேபோல் நாம் எந்தவொரு முற்பணமும் வழங்காத போதிலும், எம்மீது கொண்ட நம்பிக்கையில் பல சிரமங்கள், இடையூறுகளுக்கு மத்தியிலும், நான் வழங்கிய அழுத்தங்களையும் பொறுத்துக் கொண்டு, மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மிகைத்திறமையாக மீள்புனரமைத்து, புதிதாக கட்டிக் கொடுக்கும் வேலையை மிகவிரைவில் (மூன்று வாரத்துக்குள்) பூர்த்தி செய்து தந்த, கட்டிடக்கலை நிபுணர் திரு.வனோஜன் மற்றும் அவரது குழுவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான அனைத்து நண்பர்களுக்கும் எமது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் நன்றி” எனவும்,

அத்துடன் பல்வேறு வழிகளிலும் எமக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும், ஆயினும் இந்த வாழ்த்துக்கு உரியவர்கள், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் உறுப்பினர்களான, சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களையே சாரும் எனவும், ஆகவே அவர்களுக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகசபை” சார்பில் நன்றி” எனவும்,

இதேவேளை ஊரில் உள்ள எமது மக்களும் இதனைப் பராமரித்துப் பயன்படுத்தி, பலன்பெற வேண்டுமெனவும்” சுவிஸ் ஒன்றியத் தலைவர் திரு.ரஞ்சன் அவர்கள் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் தெரிவு செய்யப்பட்ட “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாகத்தின்” இரண்டாவது நடவடிக்கையாக இந்த செயற்பாடு அமைந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நன்றி…

இதேவேளை சுவிஸ் வாழ் புங்குடுதீவுப் பெருமக்களே, நீங்களும், “சுவிஸ் ஒன்றிய” அங்கத்தவராக உங்களை உடன் இணைத்துக் கொள்வதுடன், சந்தாதாரராக உள்ளோர் தமது இவ்வருடத்துக்கான சந்தாப் பணத்தை உடன் செலுத்தி (வருட முடிவுவரை காத்திருக்காமல்) “ஊர் நோக்கிய சேவையில்” எம்முடன் இணைந்து செயல்படுமாறு பணிவன்பான, உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

“நேரியவழியில் ஊருக்காக ஒன்றிணைவோம்,
ஒன்றிணைந்து ஊருக்காக செயல்படுவோம்”..

*** குறிப்பு..; மேற்படி “மடத்துவெளிப் பொதுக்கிணற்று” வேலையை தொடர்ந்து மிகவிரைவில் புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி பொதுக்கிணறு” புனரமைக்கும் வேலைகளும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” ஆரம்பமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி “கரந்தெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமத்து தருமாறும், மூன்று வட்டார மக்களும் பாவிக்கக்கூடிய இக்கிணறானது இடிந்து போய்க் காணப்படுவதுடன், அந்த கிணற்றுப் பகுதி, மிகவும் புதர்கள் அடங்கி காட்டுப் பிரதேசம் போன்று காணப்படுவதாகவும், ஆகவே இதனை புனரமைத்துத் தந்தால் இப்பிரதேச மக்கள் நன்மை அடைவார்களென” சுமார் நாற்பது குடும்பத்தினர் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இந்நடவடிக்கை ஆரம்பமாக உள்ளது. அவ்வேலை தொடங்கியதும், விபரங்களுடன் பகிரங்கத்தில் அறிவிக்கப்படும்.

(இத்துடன் கடந்த மாதம் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” புனரமைத்துக் கொடுக்கப்படட “பொன்னன் கிணற்றின்” இன்றைய நிலை குறித்த வீடியோவையும் இணைத்துள்ளோம்)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
05.08.2018

Comments (0)
Add Comment