“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள் &வீடியோ)

“பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கூட்டம் நடத்தப்பட இருந்த மண்டபத்துக்கு அருகே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர் அமைப்புக்களையும், புலம்பெயர் வாழ் தமிழர்களையும் தொடர்ச்சியாக நான் சந்திப்பதன் நோக்கம் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட அல்லது துன்பப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட வேண்டும், வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும், அதற்காக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அங்கு முதலீடுகளை மேற்கொண்டு புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வடமாகாணத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதன் நோக்கமே எனது இந்த விஜயத்தின் நோக்கம் ஆகும்.

ஆயினும் எனது நோக்கத்தையும், எனது பயணத்தையும் தடை செய்யும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சிகள் காரணமாக பயணத்தின் உண்மைத்தன்மையை விளங்காது, சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இருந்தபோதும் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்ற பழமொழிக்கு அமைய எனது எண்ணம் எனது பயணம் தொடரும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பாக அதன் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் கேட்டதற்கிணங்க, உடனடியாகவே புங்குடுதீவு பகுதியில் காணப்படும் ஐந்து குளங்கள் அமைப்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் எனது தாய் நாட்டுக்குத் திரும்பிய பின் செய்து கொடுக்க உள்ளேன். அதேபோன்று குறிகாட்டுவான் வீதி புனரமைப்பதற்கான கோரிக்கைகள் இங்கே முன்வைக்கப்பட்டன. அதனை மத்திய அரசின் உதவியுடன் உடனடியாக செயல்படுத்துவதற்கான திட்டத்தினை முன்நகர்த்த இருக்கின்றேன்.

இதேவேளை ஒன்றியத்தின் உறுப்பினரான திரு.சௌந்தரராஜன் கருத்துக்கு இணங்க, “வீதி விளக்குகள் பொருத்துவதற்காக” புங்குடுதீவு பிரதேசத்தின் அப்பகுதி மக்கள் அதற்கான மின்விளக்குகளை பெற்றுத் தருவதாக என்னிடம் உறுதி அளித்தனர். அந்த மின்விளக்குகளை இலவசமாக போடுவதற்குரிய மின்கம்பம், மின்சாரவசதி போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த தயாராக இருக்கின்றேன்.

கடந்த காலங்களில் வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்வதற்கு யார் காரணம் என்று தெரியாதோர் பலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து இருப்பது வேடிக்கைக்கு உரியது. ஒரு மாகாண சபை நடைபெறுகிறது அதன் முதலமைச்சர் தலைவராக இருந்தார். அவரின் கீழே அனைத்து அபிவிருத்திகளும் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வந்தன. அந்த நிதி திரும்பிப் போனதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு கூறவேண்டும்? என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்

கடந்த காலங்கள் பற்றி நான் மீண்டும் மீண்டும் பேசுவது பொருத்தமற்றது எனது காலத்தில் என்ன செய்ய வேண்டும்? குறைந்த காலத்தில் இந்த வடமாகாண மக்களுக்கு தகுந்த அபிவிருத்தி செய்ய வேண்டும், அதற்காகவே இந்த பயணத்தை தொடங்கினேன். எந்த இடர்கள் வந்த போதும் எனது முயற்சி தளராது எனது பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதற்காக புலம்பெயர்ந்து வாழும் உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் எனக்கு பலமாக பக்கபலமாக இருக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

முதலீட்டாளர்களை அன்போடு எனது தாய் நாட்டுக்கு அழைக்கின்றேன் உங்கள் பகுதிகளில் உங்களுக்கு, உங்கள் ஊரில் நீங்கள் உதவி செய்யுங்கள் நீங்கள் நேரடியாக செய்யுங்கள். அதற்கு நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றேன்.

இங்கு கருத்து வெளியிட்ட புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான பரிசோதனைகள் வேண்டும், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் ஆளுநரின் பங்களிப்பு அவசியமானது. அத்துடன் புங்குடுதீவு ஒன்றிய தலைவராக எமது ஊரின் முக்கிய பிரச்சினையான “குடிநீர் பிரச்சினைக்கு”, தீர்வு காண உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

அதேபோல் வடமாகாண மக்களின் அபிவிருத்தி தொடர்பில் அவர் கொண்டிருந்த அக்கறையினை நாங்கள் வரவேற்கிறோம், தவறான பிரச்சாரங்கள் தவறான போராட்டங்களினால் மக்களின் அபிவிருத்தி பாதிக்கப்படுவது மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த கூட்டம் “புலிகள்” என்று கூறிக் கொள்ளும் சிலரின் தரக்குறைவான ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மண்டபத்தில் குறிப்பிட்ட நேரம் வரையே கலந்துரையாடலுக்கு அனுமதி அளித்த சுவிஸ் போலீசார், பின்னர் சுவிஸ் பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸாரின் ஏற்பாட்டில் வேறு ஒரு பகுதியில் குறித்த கூட்டம் நீண்ட நேரமாக வாதப் பிரதிவாதங்களுடன் நடாத்தப்பட்டது..

தகவல்& படங்கள்… வடமாகாண ஆளுநரின் செய்திப்பிரிவு..

*** (சுவிஸில் நடைபெற்ற வடமாகாண ஆளுனருடனான சந்திப்பின் போது.. ஆளுநர் ஆற்றிய உரை குறித்த வீடியோ, மற்றும் கலந்து கொண்டோரினால் தொடுக்கப்பட்ட கேள்விகள் சந்தேகங்கள் உட்பட சந்திப்பின் விபரமான செய்திகள் யாவும் படங்கள், வீடியோக்களுடன் விரைவில் பிரசுரமாகும்)

யாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், “காடையரின்* அட்டகாசமும்… (படங்கள்)

Comments (0)
Add Comment