வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)

வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வரும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த வாரம் சுவிஸ்லாந்த்து நாட்டுக்கும் விஜயம் செய்தார்.

சுவிஸில் கடந்த வியாழக்கிழமை (10.10) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில் சார்பில் நடைபெற்ற, வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்றவேளை ஆளுனர், வடக்கின் தற்போதைய நிலைமை, தேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

முதலில் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களையும், அவரது துணைவியாரையும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.திருமதி தயாபரன் ஆகியோர் பொன்னாடை போர்த்து கௌரவிக்க, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரான திரு.திருமதி கிருஷ்ணகுமார் ஆகியோர் சந்தனமாலை அணிவித்து வரவேற்றனர்.

** வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இளங்கோ..

சந்திப்பின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட அனைவரும், தம்மை அறிமுகப்படுத்திய பின்னர், ஆளுநருடன் விஜயம் செய்யும் அவரது செயலாளரும், இலங்கையின் மூத்த சிவில்சேவை அதிகாரிகளில் ஒருவரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான திரு.லட்சுமணன் இளங்கோவன் உரையாற்றினார்.

ஆளுநரின் இந்த விஜயத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்த இளஙகோவன், “அண்மையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணி பற்றியும், அதன் தலைவராக இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் செயற்படவிருப்பது பற்றியும்” தெரிவித்தார்.

“எதிர்வரும் 24ம் திகதியுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவடைய இருக்கின்றது. அடுத்த மாகாணசபைத் தேர்தல் வரை ஆளுனரின் நிர்வாகத்திலேயே வடக்கு மாகாணசபை இயங்கவிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் தன்னால் முடிந்த அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொள்ள ஆளுநர் விருப்பம் கொண்டிருப்பது குறித்து” கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

** “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” தலைவர் சுவிஸ்ரஞ்சன்..

இதனைத் தொடர்ந்து கூட்டத்துக்கு தலைமை தாங்கிய “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள், “மேற்படி சந்திப்பை சிலர் “அரசியல் ஆக்குவார்கள்” எனும் நினைப்பில் நான் ஒன்றியத்தின் சார்பில் செய்யாமல், தனித்தே செய்வதென தீர்மானித்து, முதலில் ஒன்றிய நிர்வாகசபைக்கு தெரிவித்த போது; அவர்களோ “அப்படி இல்லை இதனை நாம் ஒன்றியத்தின் சார்பில் நடத்தினால், ஒன்றியம் ஊடாக பலவிடயங்களை புங்குடுதீவில் அரச நிதியில் செய்யலாம்” எனத் தெரிவித்த போது.. நானும் அப்படியாயின் அனைத்து முக்கியஸ்தர்களும் (நிர்வாகசபை, ஆலோசனைசபை, செயற்குழு உறுப்பினர்களும்) சம்மதம் தெரிவித்தால், அப்படி செய்யலாம்” என்று கூறி எல்லோரிடமும் உரையாடினோம்.

“முதலில் எல்லோரும் சம்மதித்து அதுக்கான ஒழுங்குகளையும் செய்து, நாம் பகிரங்கத்தில் அறிவித்த பின்னர் இரு ஒன்றிய முக்கியஸ்தர்கள் “தமக்கு உள்ள அழுத்தங்களை கூறி” பின்வாங்க முடிவெடுத்தனர். ஆயினும் நாம் “எமது ஊரின் நன்மை கருதி” சந்திப்பை இன்று முன்னெடுத்து உள்ளோம்.

இங்கு அரசியல் முற்றாக தவிர்க்கப்பட்டு உள்ள போதிலும், “அபிவிருத்தி” என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாது தமிழ் மக்களுக்கு “அரசியல் தீர்வு” வழங்க ஆளுநரும் தனது தரப்பில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்தி தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்” என்பதுடன்..

“எமது ஊரான புங்குடுதீவில் முக்கிய பிரச்சசினையே “குடிநீர்” தான் இதுக்கு தீர்வு காண்பதுடன், வீதிகள் திருத்தம், மின்சாரவசதி போன்றவை முழுமையாக இருந்தால், புங்குடுதீவில் தொழிற்சாலைகள் அமைக்கவோ, முதலீடுகள் செய்யவோ பலரும் முன்வருவார் என்றதுடன் எமது உடனடி கோரிக்கையாக “அரச நிதியில்” இருந்து ஐந்து குளங்களை புனரமைத்துக் கட்டித் தர வேண்டுமெனும் கோரிக்கையை “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் முன்வைக்கிறேன் என்றார்.

** வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே..

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்கள், புலம்பெயர் அமைப்புக்களையும், புலம்பெயர் வாழ் தமிழர்களையும் தொடர்ச்சியாக நான் சந்திப்பதன் நோக்கம் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட அல்லது துன்பப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட வேண்டும், வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும், அதற்காக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அங்கு முதலீடுகளை மேற்கொண்டு புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வடமாகாணத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதன் நோக்கமே எனது இந்த விஜயத்தின் நோக்கம் ஆகும்.

ஆயினும் எனது நோக்கத்தையும், எனது பயணத்தையும் தடை செய்யும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சிகள் காரணமாக பயணத்தின் உண்மைத்தன்மையை விளங்காது, சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இருந்தபோதும் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்ற பழமொழிக்கு அமைய எனது எண்ணம் எனது பயணம் தொடரும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பாக அதன் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் கேட்டதற்கிணங்க, உடனடியாகவே புங்குடுதீவு பகுதியில் காணப்படும் ஐந்து குளங்கள் அமைப்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் எனது தாய் நாட்டுக்குத் திரும்பிய பின் செய்து கொடுக்க உள்ளேன். அதேபோன்று குறிகாட்டுவான் வீதி புனரமைப்பதற்கான கோரிக்கைகள் இங்கே முன்வைக்கப்பட்டன. அதனை மத்திய அரசின் உதவியுடன் உடனடியாக செயல்படுத்துவதற்கான திட்டத்தினை முன்நகர்த்த இருக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

** தண்ணீர் அமைப்பு…

இதன்பின்னர் சந்திப்பில் கலந்து கொண்டோரின் கேள்விகள், வேண்டுகோள்கள், குறித்து நீண்ட நேரமாக (சுமார் மூன்று மணித்தியாலத்துக்கும் மேலாக) வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது. குறிப்பாக, “தண்ணீர்” அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட திரு.சுதாகரன், திரு.யோகா மாஸ்ரர் ஆகியோர் “வன்னிப் பிரதேசங்களில், குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளில் தமது அமைப்பின் சார்பில் குழாய்க் கிணறு அமைக்கும் திடடம் குறித்தும், குறிப்பாக மல்லாவி, அக்கராயன் போன்ற மேட்டுப்பகுதிகளுக்கு இரணைமடுக்குள தண்ணீருக்கு வாய்ப்பு இல்லை எனவும், ஆகவே இங்கு குழாய்க்கிணறு அவசியம் எனவும், எமது செயல்பாட்டுக்கு உங்கள் அரச தரப்பில் இருந்து இதுபோன்ற நடவடிக்கைக்கான அனுமதி, உதவிகள் வேண்டுமெனவும்” கேட்டு உரையாடினர்.

இதுகுறித்து தன்னால் முடிந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அனைத்தையும் எழுத்து மூலம் தருமாறும், முடிந்தால் அங்கு நேரில் வந்து சந்திக்குமாறும் ஆளுநர் அவர்களால் பதிலளிக்கப்பட்டது.

அதேபோல் புங்குடுதீவு ஒன்றியத்தின் உறுப்பினர் திரு.சௌந்தரராஜன் “புங்குடுதீவில் குடிநீர், வீதிகள், மின்சார வசதி இருந்தால் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை புங்குடுதீவில் செய்ய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இதுக்கு பதிலளித்த ஆளுநர் தரப்பில் “மின்சார வசதிக்கு (மின்கட்டை, மின்சார இணைப்பு) போன்றவைக்கு தாம் உடனேயே ஏற்பாடு செய்வதாகவும், ஆயினும் மின்விளக்கை அந்தந்த பிரதேச மக்களே போட வேண்டுமெனவும்” தெரிவிக்கப்பட்டது. “இதுக்குரிய உத்தரவாதத்தை தான் தருவதாகவும், தான் அப்பிரதேச மக்களிடம் மின்விளக்கை போடும்படி வலியுறுத்தி கூறுவதாகவும்” சௌந்தரராஜன் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மயிலிட்டி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் “தமது பகுதிகளில் உள்ள காணிகள் விடுவிக்கப்படாமை” குறித்து ஆதங்கமாக முறையிட்ட போது, “அப்பிரதேசத்தில் உள்ள மக்களின் சொந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாக” ஆளுநர் தரப்பால் தெரிவித்த போது, “அப்படியில்லை தனது காணி இன்னும் விடுவிக்கப்படவில்லை” என்பதை சுட்டிக்காட்டி உரையாடினார். “அப்படி இருக்குமாயின், உங்களிடம் உறுதி இருந்தால் உடனடியாக நான் நடவடிக்கை எடுத்து விடுவிப்பேன்” என ஆளுநரால் தெரிவிக்கப்பட்டது.

மற்றுமொருவரால் “முல்லைத்தீவு பிரதேசத்தில் தனது காணியை அடாத்தாக சில தமிழர்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தருவதுடன், அரச காணியை குத்தகைக்கு என்றாலும் ஒப்படைத்தால் நாம் தொழிற்சாலை அமைக்க உதவியாக இருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

“இதனை எழுத்து மூலம் தந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்” என்று ஆளுநர் தரப்பால் தெரிவிக்கப்பட்டதும், உடனேயே எழுத்துமூல கோரிக்கை ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தை சேர்ந்த அன்பர் ஒருவரினால், “இங்கு சுவிஸில் உள்ள இலங்கை தூதுவரலாயத்தில் தமிழில் உரையாடக் கூடிய ஒருவர் எப்போது இருப்பதே, அங்கு கடவுசீட்டு, சான்றிதழ் பெற செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்பதை சுட்டிக்காட்டி உரையாடினார்.

*** யாழில் உள்ள ஆவா குரூப் எனும் வாள்வெட்டுக் குரூப்….

இதனை தொடர்ந்து வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவடடத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்தும், அதிலும் வாள்வெட்டு குரூப்புகள் குறித்தும் நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இவர்களின் பின்னணியில் அரசபடைகள் உள்ளனவா? இல்லாவிடில் அவர்களை அடக்க தயக்கம் எதுக்கு? போன்ற பலகேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இவற்றுக்கு பதிலளித்த ஆளுநர், இவற்றை அடக்க முடியாது என்று இல்லை, அடக்க விடாமல் பார்ப்பவர்கள் சில சட்டத்தரணிகளும், சில அரசியல்வாதிகளும் தான். ஏனெனில் போலீசார் யாராவது ஒரு வாள் வெட்டுக்காரனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முதலே நீதிமன்ற வாசலில் காத்து இருந்து பிணை எடுத்து விடுகிறார்கள்.. அதுமட்டுமல்ல இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால் சிலதை மெல்ல தான் செய்ய வேண்டி உள்ளது. தீவிரவாதிகளை அடக்கியது போல் இதனை செய்ய முடியாது, ஆயினும் நான் பொறுப்பெடுத்ததும் இதில் கவனம் செலுத்துவேன்” எனவும் ஆளுநரால் தெரிவிக்கப்பட்டது.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில் சார்பில் நடைபெற்ற வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற அதேவேளை இச்சந்திப்பானது பிரயோசனமாகவும் ஆரோக்கியமாகவும் அமைந்து இருந்ததென கலந்து கொண்ட அனைவராலும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்… வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு…

*************************************************

(குறிப்பு:- இதேவேளை மேற்படி சந்திப்பு நடைபெற்ற பொழுது, புலிகள் எனக் குறிப்பிடும் சிலரால், நடைபெற்ற சில வேண்டத்தகாத விடயங்கள் குறித்து “அதிரடி” இணையத்தின் சுவிஸ், இலங்கை புலனாய்வு செய்தியாளர்களினால் திரட்டப்படும் செய்திகள் மிகவிரைவில் “அதிரடி”யில் பிரசுரமாகும்..

குறிப்பாக “ரகுபதி, குட்டி, கொலம்பஸ், தீபன் எனும் தீபராஜ், யதி அல்லது வெடிமுத்து என அழைக்கப்படும் யதீஸ்வரன், ரகு அல்லது நிலவன், சுதர்சன், பிரசன்னா, ரமணன், ஜீவன், குட்டியின் அக்காவின் கணவரான இராசதுரை, வைகோ எனும் சிவா, ஈபிடிபி ஆதரவாளர் ஒருவர் போன்ற சிலரின் முழுமையான விபரங்கள் விரைவில் “அதிரடி”யில் பிரசுரமாகும் -“அதிரடி” நிர்வாகம்.)

யாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், “காடையரின்* அட்டகாசமும்… (படங்கள்)

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள் &வீடியோ)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” விளக்கமே இல்லாத கூட்டம்! (முகநூலில் இருந்து -பகுதி-1)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” ஒண்ணுமே புரியலடா சாமி..! (முகநூலில் இருந்து -பகுதி-2)

Comments (0)
Add Comment