14 வது ஆண்டு பிறந்த தினத்தில் “அதிரடி” இணையத்தின், தாயக உறவுகளுக்கான “சமூகநல” உதவி திட்டங்கள்..! (படங்கள்)

14 வது ஆண்டு பிறந்த தினத்தில், “அதிரடி” இணையத்தின் தாயக உறவுகளுக்கான சமூகநல உதவி திட்டங்கள்..! (படங்கள்)

“அதிரடி” இணையமானது 15 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் “அதிரடி”யின் தாயக உறவுகளுக்கான சமூகநல உதவி திட்டத்தின் கீழ், வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிகுந்த வறுமைகோட்டுக்கு உட்பட்ட ஆண்டு 4 தொடக்கம் ஆண்டு 10 வரை கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அதிபர் திரு. வி.தர்மகுலசிங்கம் தலைமையில் வழங்கி வைத்தது.

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சத்தின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), ஏற்பாடு செய்த ஆசிரியர் காண்டீபன் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்வில் உரையாற்றிய அதிபர் அவர்கள் “மிகுந்த பின்தங்கிய கிராமமான மெனிக் பாமில் பெரும்பாலான பெற்றோர் கூலி வேலை செய்வதால், சீரான வருமானமின்றி மிகுந்த சிரமத்தின் மத்தியில் வாழ்வதால், பல சமயங்களில் புத்தகம்,கொப்பி வாங்க முடியாமல் பெற்றோர்கள் மிகுந்த கஷ்ரப்படுவதால் இந்த உதவி மாணவர்களுக்கும், ஏன் பெற்றோர்களுக்கும் மிக பெரிய உதவியாகும்” என்றார். அத்துடன் “அதிரடி”க்கும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன் “அதிரடி”யின் பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

அடுத்து உரை யாற்றிய சந்திரகுமார் (கண்ணன்) அவர்கள்; “அதிரடி” இணையம் அதிரடியாக செய்திகளை வெளியிட்டு மக்களின் அவலங்களை வெளிகொணர்ந்து, தன் பணியை நிறுத்தி விடாமல் தன்னால் முடிந்த உதவிகளையும் மக்களுக்காற்றி மற்ற ஊடகங்களுக்கு முன் மாதிரியாக திகழ்வது பாராட்டுக்குரியது என்றார். அந்த வகையில் மிகவும் கஷ்ரப்படும் இந்த பாடசாலை மாணவர்களை தெரிவு செய்து கற்றல் உபகரணங்கள் வழங்கியமை மிகுந்த பாராட்டுக்குரியது” என்றார்.

அத்துடன் “அதிரடி”க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும், “அதிரடி”யின் அதிரடியான பணி தொடரவும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

அத்துடன் ஓயார் சின்னக்குளத்தில் வசிக்கும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவிக்கு அவரது வறுமை நிலையை கருத்திற் கொண்டு அவரது தாயார் கேட்டு கொண்டதிற்கிணங்க பாடசாலை பாதணியும், காலுறையும் “அதிரடி” இணையத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் சுந்தரபுரத்தில் இரு சீறுநீரகமும் பாதிப்படைந்த சந்திரன் என்ற குடும்பஸ்தரும் அவரது 3 பிள்ளைகளும் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்த நிலையில், மனைவியும் புற்றுநோயால் தை மாதம் மரணித்து விட சாப்பாட்டுக்கே மிகுந்த கஷ்ரப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில், சிலர் சிலநேரம் செய்யும் உதவிகள் மூலம் வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு ஒரு மாதத்திற்கு போதுமான அரிசி 10கிலோ, மா 5 கிலோ, சீனி, தேயிலை, அங்கர், டின்மீன், பிஸ்கட், பருப்பு, கிழங்கு என உலர் உணவு பொதியும் வழங்கி வைக்கப்பட்டது

அவர்களுக்கு மாதாமாதம் உலர் உணவு பொதி கிரமமாக வழங்க வேண்டி தேவை உள்ளதால் “அதிரடி” இணையம் இதனை இந்த மாதத்திலிருந்து ஆரம்பித்து வைத்துள்ளது. தொடர்ந்து மாதாமாதம் வழங்க கூடியவர்கள் “அதிரடி” இணையத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு வழங்கிட வேண்டும் என்று அந்த குடும்ப தலைவர் கேட்டுக் கொண்டார்.

Comments (0)
Add Comment