சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவரின் வீரமக்கள் தின செய்தி..!

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவரின் வீரமக்கள் தின செய்தி..!

(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக, இன்றையதினம் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை, 4552 Derendingen. எனுமிடத்தில், “சுவிஸ் வீரமக்கள் தின” நிகழ்வு எளிமையான முறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் “புளொட்” தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்த்தன் அவர்கள் அனுப்பி வைத்த அறிக்கை இது..)

எமது கட்சியானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான யூலை ,13,ம் திகதிமுதல் எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான யூலை 16ம் திகதி வரையான காலத்தை வீரமக்கள் தினமாக பிரகடனப்படுத்தி போராட்டத்தில் உயிர்நீத்த கழகக்கண்மணிகள், தலைவர்கள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து வருகிறது .

புலம்பெயர் நாடுகளிலே குறிப்பாக சுவிஸில் கடந்த 30ஆண்டுகளாக இங்குள்ள தோழர்களாகிய உங்களாலும் ஆதரவாளர்களாலும் தொடர்ச்சியாக வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருவதோடு வீரமக்கள் தினத்தை முன்னிட்டு சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான போட்டி பரீட்சை, கலைநிகழ்வுகளை நடாத்தி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசில்களையும் சான்றிதல்களையும் வழங்கி வருகின்றீர்கள்.

அதுமாத்திரமன்றி வீரமக்கள் தினத்தை முன்னிட்டு இலங்கையிலே போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்களுக்கும் கழக தோழர்களின் குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவிகளையும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான உதவிகளையும் வழங்கி அவர்களின் துன்ப துயரங்களிலே தாங்கள் பங்கெடுப்பது வரவேற்கத்தக்கதுடன் தங்களது இத்தகைய செயற்பாடுகள் மறைந்தவர்களின் நினைவுகளையும் அவர்களின் இலட்சியங்களையும் தாங்கள் சுமந்து நிற்கின்றீர்கள் என்பதையே வெளிக்காட்டி நிற்கின்றது.

இந்த நல்லாட்சி அரசாங்கமானது ஆட்சிக்கு வந்தவுடன் நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென பலர் நினைத்தார்கள். அதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் கூட செய்யப்பட்டிருந்தன.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய பேரவை அமைக்கப்பட்டு அதற்குள் 4,5 குழுக்கள் இருந்தன. அதில் ஒன்றில் தலைவராகக் கூட இருந்தேன். இவ்வாறு பல முயற்சிகள் எடுக்கப்படடிருந்த காலத்தில் கூட எங்களைப் பொறுத்தவரை நியாயமான தீர்வுகள் எட்டப்படாவிட்டாலும், அவற்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கினோம்.

எங்களால் முடிந்தளவு ஒரு நியாயமான அறிக்கையை எம்முடைய குழுவுடன் இணைந்து வழங்கினோம். இவ்வாறான விடயங்கள் நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சர்வதேச அழுத்தங்களினால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் கொண்டு வரப்பட்ட நடவடிக்கைகளாக இருக்கின்றமையால் நியாயமான தீர்வு கிடைக்குமென எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எனினும், வழமை போன்று குறித்த நடவடிக்கைகளெல்லாம் தற்போது கைவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், “இன்னும் 2 வருடங்களாலேயே தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கும். ஆனால், இந்த அரசாங்கத்தினால் அல்ல” என பிரதமர் கூட அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறினார்.

அதாவது, எதிர்வரும் அரசாங்கத்தினாலேயே தீர்வு கிடைக்குமென்பதையே பிரதமரின் இந்தக் கருத்தினூடாக வலியுறுத்தியுள்ளார். ஆகவே, இனியும் தீர்வு கிடைக்குமென எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல.

ஆயினும் இந்த முயற்சிகளை நாங்கள் குழப்பி விட்டதாக ஆகிவிடக் கூடாது. என்பதற்காக நாம் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றோம்.

மறைந்தவர்களின் நினைவுகளையும் அவர்கள் கொண்ட இலட்சியங்களையும் சுமந்தபடி தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கி ஒன்றுபட்டு பயணிப்போம்.

திரு.த.சித்தார்த்தன்,
யாழ். பாராளுமன்ற உறுப்பினர் மற்றும்
தலைவர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

சுவிஸில் மிகச்சிறப்பாக நடைபெற்ற, “புளொட்” அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வு தொடர்பான செய்தி “படங்கள் வீடியோக்களுடன்” விரைவில் தொடரும்…

Comments (0)
Add Comment