சிவாஜியும், பிரபாவும்!!: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி, என்ன தெரியுமா?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -133) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

சிவாஜியும் பிரபாவும்!!: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி என்ன தெரியுமா?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 133)

• முயற்சிகள் தோல்வி.

தமிழ் நாட்டில் ஜானகி இராமச்சந்திரன் தலைமiயிலான மாநில அரசு கலைக்கப்பட்ட பின்னர் கவர்ணர் ஆட்சி நிலவியது. கவர்ணராக இருந்தவர் அலக்சாண்டர்.

அதுவரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கிட்டுவையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறை வைத்தனர்.

கிட்டுவின் மூலமாகப் பிரபாகரனை சமரசப் பேச்சுக்கு கொண்டுவருவதற்கு இந்திய உளவுப் பிரிவான “றோ” மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததே கிட்டு கைதுசெய்யப்பட பிரதான காரணமாகும்.

யார் மூலமாக முயற்சித்தாலும் பிரபாகரன் தன் முடிவிலிருந்து மாறமாட்டார் என்பதை இந்திய அரசு விளங்கிக் கொண்டது.

புலிகள் மூலமாக அழுத்தம் பொடுத்து ஜே.ஆரை பேச்சுக்குக் கொண்டுவரலாம். இந்தியாவை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்த்தலாம் என்ற தந்திரத்தில் இந்திய அரசு வெற்றிபெற்றது.

அதே தந்திரத்தைப் பிரபாகரன் மீது பயன்படுத்தும் போது இந்திய அரசு தோல்வியே கண்டது.

அமைதிப்படை நடவடிக்கைகளின் அழுத்தம், ஏனைய போராளிக் குழுக்களின் நெருக்குதல்கள் காரணமாக பிரபாகரன் இந்தியாவுடன் சமரசத்தை நாடி வந்தேதீருவார் என இந்திய அரசு எண்ணியது. இந்திய உளவுப் பிரிவான “றோ” அதிகாரிகளும் நம்பினர்.

பிரபாகரன் சமரச முயற்சிக்கு முன்வருவாரானால், அவருக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் தொடர்பாளராக இருப்பதற்கே கிட்டுவை வீட்டுக்காவலில் கௌரவமாக நடத்தி வந்தனர்.

இன்னொரு விடயமும் இருக்கின்றது, இந்திய அரசின் நலன் என்பதில் ஒத்த கருத்து இருந்தபோதும், இந்திய அரசின் உளவுப் பிரிவுகள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு இடையே போட்டிகளும், பொறாமைகளும் பூசல்களும் இருந்தன.

இந்திய இராணுவத்துக்கான உளவுப் பிரிவு “றோ” சொல்வதை நம்புவதில்லை. றோ இயக்கங்களைக் கையாண்ட விதம் சரியில்லை என இராணுவ உளவுப் பிரவைச் சேர்ந்தவர்கள் குறைசொல்வர்.

இந்திய மத்திய உளவுப் பிரிவு றோ சொல்வதும் பிழை, இராணுவ உளவுப் பிரிவும் செர்வது பிழை தமக்குக் கிடைத்த தகவலெ சரியென்று கூறிக்கொண்டிருந்தனர்.

இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு ஒரு தெளிவான முடிவு எடுக்கத் தவறியமைக்கு இந்தப் போட்டி பூசல்களும் ஒர காரணம் என்று கூறலாம்.

பிரபாகரனை சமரசத்திற்குக் கொண்டுவருவது யார் என்பதிலும் இந்திய உளவ அமைப்புகளுக்குள் போட்டா போட்டி இருந்தது.

எல்லோருடைய கணிப்பையும் பொய்யாக்கிய பிரபாகரன் அழுத்தத்தின் மத்தியிலான பேச்சுவார்த்தை சரணடைவுக்குச் சமம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதுடன், அழுத்தங்களை உடைக்கும் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தினார்.

இறுதியில் கிட்டு மீதும் நம்பிக்கையிழந்த நிலையில் அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையை எடுத்தது இந்திய அரசு.

சிறைக்குள் போராட்டம்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கிழ் கைதுசெய்தவர்களை விசாரணையின்றி ஒருவருட காலத்திற்குத் தடுத்து வைத்திருக்க முடியும்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பவர்களுக்கு பால், இறைச்சி. கடலை போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட வேண்டும். சாதாரண சட்டத்தின் கீழ் சிறையிலிருப்பவர்களுக்கு அவ்வாறு வழங்கப்படுவதில்லை.

சட்டப்படி வழங்க வேண்டிய உணவு கைதிகளுக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறிப்பிட்ட சிறை நிர்வாகத்தைப் பொறுத்தது.

சென்னை மத்திய சிறையில், அப்போதிருந்த நிர்வாகத்தினர் கைதிகளுக்கான உணவுப் பொருட்களின் பாதியை வெளியே விற்றுவிடுவார்கள்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கிழ் சிறையில் இருக்கும் ஒருவருக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சத்துணவு பாதிகூடக் கிடைப்பது சந்தேகம்தான்.

வாரத்தில் மூன்று நாள் இறைச்சி கொடுக்க வேண்டும் என்றால் இரண்டு நாள் கொடுப்பார்கள். அதுவும் அளவு குறைவாக இருக்கும். பாலில் தண்ணீரைக் கலந்துவிடுவார்கள்.

சிறை நிர்வாகத்தின் ஊழலைக் கண்டிக்க சாதாரண ஆட்கள் பயப்படுவார்கள். வேறுவழிகளில் பாதிக்கப்படலாம் என்று நினைத்து அனுசரித்துப் போய்விடுவார்கள்.

புலிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட போதும் சென்னை மத்திய சிறையினர் தமது வழக்கமான பணியிலேயே நடந்துகொள்ள முற்பட்டனர்.

‘எங்களை மரியாதையாக நடத்து, இல்லாவிட்டால் நாடுகடத்து, எங்களுக்கென்று சட்டப்படி வழங்க வேண்டிய உணவு அளவு, தரம் என்பன மாறாமல் தரப்பட வேண்டும்’ என்று புலிகள் பிரச்சினை கிளப்பினர்.

சிறைநிர்வாகம் பணிந்தது.

முதன் முதலாக சென்னை மத்திய சிறையில் தண்ணி கலக்காத பால் வழங்கப்பட்டது புலிகளுக்குத்தான்.

சிறைக்குள் தனியான ஒரு தொகுதியில் புலிகள் கிட்டு உள்ளிட்ட புலிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறை அதிகாரிகளும் புலிகளைக் கௌரவமாகவே நடத்தினர்.

சிறையில் உள்ள ஒருவர் பலியானாலே, அன்றி தப்பிச் சென்றாலோ சிறையின் மேலதிகாரிகளின் பதவிக்குத்தான் ஆபத்து.

புலிகளிடம் சயனைட் இருக்கலாம் என சிறை அதிகாரிகளுக்கு சந்தேகம். அதனால் புலிகளிடம் முரட்டுத்தனமாக நடக்கப்போக அவர்கள் சயனைட் கடித்துப் பலியாகிவிட்டால் என்ன செய்வது என்று சிறை அதிகாரிகளுக்கு ஒரு பயம்.

சகோதர உணர்வுடன் நடந்துகொண்ட சிறைக்காவலரும் இருந்தனர். ஆனால் மேலதிகாரிகள் பலருக்கு தம் உத்தியோகம் தொடர்பான கவலைதான் பிரதானம்.

கண்டனங்கள்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழ் நாட்டில் இருந்த புலிகள் அமைப்பினர் கைதுசெய்யப்பட்டதை தமிழக அரசியல் கட்சிகள் காட்டமாகக் கண்டித்தன.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சிவாஜிகணேசன்; அப்போது தனிக்கட்சி தொடங்கியிருந்தார். தமிழக முன்னேற்ற முன்னணி என்பது அதன் பெயர்.

தமிழக முன்னேற்ற முன்னணி சார்பாக சிவாஜிகணேசன் விடுத்த செய்தி இது.

“இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் எண்ணற்ற வகையில் தியாகத் தழும்புகளைத் தாங்கியுள்ள விடுதலைக் புலிகளை இந்திய அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கிழ் கைதுசெய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு எதிராகவோ, இந்திய நாட்டின் அமைதிக்கும் எதிராக அவர்கள் நடந்துகொள்ளாத போது. விசாரணையின்றி அவர்களைத் தடுப்புக் காவலுக்கு அனுப்புவது அநீதியானது.

குற்றமற்றவர்களை விடுவிக்கத் தயக்கமின்றியும், தாமதமின்றியும் இந்திய அரசாங்கம் முன்வரவில்லை என்றால் அதன் அரசியல் விளைவுகளுக்கு மத்திய அரசே பொறுப்பாகும்.”

சிவாஜியும் பிரபாவும்

சிவாஜி கணேசன் பற்றியும் இந்த இடத்தில் சில சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்ல வேண்டும்.

சிவாஜி கணேசன் நடிப்புலகின் ஒரு பல்கலைக்கழகம் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அற்புதமான நடிகர். இன்னும் பல தலைமுறை நடிகர்களிடம் அவரின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆனால், சிவாஜி கணேசன் ஆழம் தெரியாமல் காலைவிட்ட ஒரு துறை அரசியல். தனது சொந்த வருமானத்தில் பிறரக்குத் தாராளமாகக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

சிவாஜி கணேசன் அப்படியல்ல லேசில் யாருக்கும் கொடுக்கமாட்டார். அரசியலில் கூட தனது சொந்தப் பணத்தை அதிகமாக செலவிட்டதில்லை.

ஈழப் போராளிகள் அமைப்புக்கள் சிவாஜி கணேசனிடம் நிதிதிரட்ட சென்றதுண்டு. அவரையே சந்திக்க முடியாமல் திரும்யதுதான் பலன்.

எம்.ஜி.ஆர். தவிர்ந்த ஏனைய நடிகர்களில் விஜயகாந்த் போராளிகளுக்குத் தனது சொந்தப் பணத்தில் நிதிகொடுக்கத் தயங்கவில்லை.

சிறந்த நடிகரான கமலஹாசனிடம் ஒரு தடவை நிதி கேட்டுச் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர். அப்போது நிதி திரட்டல் பணிகளுக்கு டேவிற்சன் பொறுப்பாக இருந்தார்.

வீட்டுக்குள் கூட துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார் கமல். இது நடந்தது 1985ல்.

கமல் நடித்துப் பாலச்சந்திரன் இயக்கிய ‘புன்னகை மன்னன்’ படத்திலும் ஈழப் போராளிகள் என்றால் ஒழுக்கமில்லாதவர்கள் என்பதுபோல் சித்தரிக்கப்பட்டது.

அப்படத்தில் இலங்கைத் தமிழரான சிலோன் விஜேந்திரன் என்பவரும் நடித்ததுதான் பெரிய கொடுமை.


புன்னகை மன்ன படத்தில் போராளிகளைக் கேவலப்படுத்தும் காட்சிக்கு எதிராக தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. பாலச்சந்தர் வருத்தம் தெரிவித்தார் கமல் அதைக்கண்டுகொள்ளவில்லை.

சிவாஜி கணேசனுக்கு நடிப்புத் தவிர்ந்த ஏனைய துறைகளில் இருந்த ஈடுபாடும் குறைவானதே.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி அவர் போதியவு அறிந்திருக்கவில்லை.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தியது.

இந்திரா காந்தி மீது சிவாஜிக்கு அபார மரியாதை இருந்தது. ராஜீவ் தன்னை மதிக்கவில்லை என்பதால் அவர் மீது கடும் கோபம்.

அதனால் “என் தமிழ் மக்கள்” என்றவொரு படமே நடித்து ராஜீவை மறைமுகமாக வெழுத்து வாங்கினார் சிவாஜி.

பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையைவிட ராஜீவைத் தாக்குவதில்தான் குறியாக இருந்தார் சிவாஜி;.

ஒரு கட்டத்தில் இந்தியப் படை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்த போது ‘தமிழர்களைக் கொல்லுகிறார்கள். அதுதான் அவர்கள் போராடுகிறார்கள்.

புலிகள் நன்றாகச் சண்டை பிடிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தவருக்கு பிரபாகரன் பெயர் நினைவில் இல்லை.

அந்தத் தம்பி…அவர் பெயர்? என்று சிவாஜி தடுமாற, அருகிலிருந்த ராஜசேகரம் “பிரபாகரன்” என்று சொன்னார். “ஆமா பிரபாகரன் அந்தத் தம்பிதான்” என்று முடித்தார் சிவாஜி.

இச் சம்பவத்தை தமிழகச் சஞ்சிகை ஒன்றும் கேலிசெய்திருந்தது. ‘ஜீனியர் விகடன்’ என்று ஞாபகம்.

இது நடந்து சில வருடங்களில் சிவாஜி கணேசன் தனது கட்சியைக் கலைத்துவிட்டு, ஜனதா தளக் கட்சியில் இணைந்தார்.

அப்போது பிரதமராக இருந்த வி.பி. சிங்கின் கட்சிதான் ஜனதா தளக் கட்சி. தமிழ்நாடு ஜனதா தளத் தலைவர் சிவாஜிதான்.

ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும், ரமேசும் இணைந்து சிவாஜயைச் சந்தித்து தமது இயக்கத்தின் கஷ்ட நிலையைக் கூறி நிதியாகவோ அல்லது உணவுப் பொருட்களாகவோ தமது முகாமுக்கு உதவி வழங்குமாறு கேட்டனர்.

அன்புடன் வரவேற்று அக்கறையாக அவர்கள் சொன்னதைக் கேட்டபடி இருந்தார் சிவாஜி.

அவரது முகபாவங்களைப் கவனித்த இருவருக்கும் ‘பெரும் உதவி கிடைக்கப் போகிறது’ என்று சந்தோஷமடைந்தனர்.

எல்லாவற்றையும் கேட்ட சிவாஜி இறுதியாக அவர்களிடம் சொன்னார், “போராளிகளின் கஷ்டத்தைத் தீர்க்கவேண்டியது என் கடமையப்பா கடமை..!

நான் இதை என் தலைமைக்கு உடனடியாகத் தெரியப்படுத்துகிறேன் கவலைப்படாமல் போய்வாருங்கள்”.
கடைசிவரை உதவிகள் எதுவம் செய்யப்படவில்லை.

சிறையில் விசாரணை.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கிழ் கைதுசெய்யப்பட்ட புலிகள் அமைப்பினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும்.

புலிகள் அமைப்பின் இரகசியங்கள், செயற்பாடுகள், அவர்களது இராணுவ உத்திகள் தொடர்பாக விசாரிக்கப்படும்.

இந்த விசாரணையின் மூலம் புலிகளைப் பாதிப்படையச் செய்யப்போகிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகின.

இப்படியொரு திட்டம் இந்திய உளவுப் பிரிவுகளுக்கு இருந்ததோ இல்லையே, அப்படியொரு திட்டம் இருந்தால் அது நடக்கவே கூடாது என நினைத்தனர் தமிழ் நாட்டில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள்.

அத்தகவலை வெளியே பெரிய செய்தியாக்குவதுதான் வழி என்று முடிவுசெய்தனர்.

ஆகஸ்ட் 19, 1988ல் வெளியான திராவிடர் கழகப் பத்திரிகைத் தலைப்புச் செய்தி இப்படியிருந்தது.

“கொடுமை..! வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்கள்”

“காவலில் இருக்கும் புலிகளிடம் விசாரணையாம்”

எனினும் அப்படியான பலவந்த விசாரணைகள் எதுவும் சென்னை மத்திய சிறையில் வைத்த மேற்கொள்ளப்படவில்லை.

வங்கிக் கொள்ளை

தமிழ் நாட்டில் மதுரை வங்கி 1988 ஆகஸ்ட் மாதம் கொள்ளையிடப்பட்டது. 75 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டது.

இக் கொள்ளையைப் புலிகள் நடத்தியிருக்கலாம். இலங்கையில் இந்தியப்படை முற்றுகையிலுள்ள புலிகள் இயக்கத்தினருக்குப் பணம் தேவை என்பதால் மதுரையில் கொள்ளையிட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

தீவிர விசாரணையின் பின்னர் கொள்ளையர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

தமிழ்நாடு விடுதலை இயக்கம்தான் கொள்ளைக்குக் காரணம் என்று தெரியவந்தது. ஆயினும் இக் கொள்ளை நடவடிக்கைகளில் இலங்கைப் போராளிகள் சிலரும் சம்மந்தப்பட்டிருந்தனர்.

புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு பகுதியின் பொறுப்பாளர்களின் ஒரவரான கருணா உட்பட சிலர் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிச் சென்றனர்.

ஆயுதங்களைக் கையாடினால்தான் தண்டனை. விலகுவோர் விலகிச் செல்லலாம்.

ஏனைய இயக்கங்களிலோ புலிகளின் செயற்பாலடுகளுக்கு எதிராகச் செயற்படக் கூடாது என்பதுதான் புலிகளின் விதி. அதனால் கருணா குழுவினர் விலகிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தனியாக இருந்த இக் குழுவினர் தமிழகத் தீவிர அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினர்.

அந்தத் தொடர்புகள் ஊடாக கருணா குழுவும், தமிழ்நாடு விடுதலை இயக்கமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையே மதுரை வங்கிக் கொள்ளையாகும்.

கொள்ளையிட்ட நகைகளில் பெருந்தொகையானவை மீட்கப்பட்டன. கைத்துப்பாக்கிகள், கைக் குண்டுகள் என்பனவும் தமிழகப் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

நேரு சிலைக்கு குண்டு

இந்தியப் படைக்கு எதிரான புலிகள் தீவிர யுத்தம் தமிழகத் தீவிரவாத அமைப்புகளிடம் எழுச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் கத்திபாரா சந்திப்பில் இருந்த நேரு சிலைக்குத் தீவிரவாத அமைப்பொன்று குண்டு வைத்தது. சிலை சேதமாகாவிட்டாலும் நேரு சிலைக்குக் குண்டு வைத்தது என்பது பெரிய செய்தியாகப் பேசப்பட்டது.

ராஜீவ் காந்தியால் திறக்கப்பட்ட சிலை அதுவாகும். எம்.ஜி.ஆர் மரணமடைய முன்னர் கலந்தகொண்ட கடைசி நிகழ்ச்சியும் அந்மச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிதான்.

தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் முன்பாகவும் குண்டுவைக்கப்பட்டது.

இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி பேசும் தலைமைகளுக்கு எதிராகவும் தமிழ் நாட்டில் ஏற்பட்டுவரும் எதிர்ப்பைக் காட்டவே நேரு சிலைக்குக் குண்டுவைக்கப்பட்டதாக அந்தத் தீவிரவாத இயக்கத்தின் முக்கியஸ்தரான பொழிலன் என்பவர் கூறியிருந்தார்.

எனினும் பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டனர்.

இந்திய படையினர் இலங்கையில்

எத்தனைபேர் செத்து மடிந்தாலும்….

இந்தியப் படையை புலிகள் ‘வானரப் படை’ என்று கேலி செய்தனர்.

இந்தியாவிலிருந்து இராவணனை அழிக்க இராமனுடன், வானரப்படை வந்தது உன்று இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

இராவணன் ஒரு தமிழன். அவனை அழிக்கக் கட்டுக்கதைகள் கூறிய ஆரியர்கள் அவன் புகழைக் கெடுத்ததோடு, அவனையும் கொன்றனர் எனத் திராவிடர் கட்சியினர் தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்தனர்.

இராமனின் கொடும்பாவிகளும் தமிழ் நாட்டில் திராவிடர் கழகத்தால் முன்னர் ஒரு காலத்தில் கொளுத்தப்பட்டது.

இந்தியப் படை காலத்தில் புலிகளும் வானரப் படை என கேலிசெய்தனர்.

காட்டில் இருந்து போராடும் தமது உறுதியைத் தெரிவித்தும், இந்தியப் படையைச் சாடியும் புலிகள் வெளியிட்ட கதை இது..,

“ஆயிரம் தோழர்கள்
தீயினுள் போயினர்
ஆயினும் போரது நீளும்-புலி 
ஆடும் கொடி நிலம் ஆளும்.
போரிருள் சூழ்ச்திடும் 
கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும்-கரு
பைகளும் ஆயுதம் ஏந்தும்.

மத்தளம் பேரிகை
கொட்டும் புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும்-வந்த
வானரக் கூட்டங்கள் ஓடும்..!”

இந்தியப் படைக்கு எதிராகப் போரிட்டே தீருவது என்று புலிகள் செய்திருந்த முடிவு பலவீனமாகவில்லை, பலம்பெற்று வருகின்றது என்பது உறுதியானது.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப் உட்பட ஏனைய இயக்கங்கள் புலிகளின் கதை முடிந்தது என்றே கருதின.

‘தனது கடைசி வரலாற்றைப் பிரபாகரன் தன் கையால் எழுதி முடிக்க ஆயத்தமாகிவிட்டார்’ எனக் கருதினர்.

வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் மட்டுமே போட்டி ஏற்பட்டது. வடக்கில் போட்டியே கிடையாது.

எதிர்த்து யாரும் போட்டிபோடவில்லை என்பதால் வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கங்களின் வேட்;பாளர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வேடிக்கை என்னவென்றால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டோரின் பெயர்கள் மக்களுக்குக் கூட உடனடியாகத் தெரியப்படுத்தப்படவில்லை.

அது மட்டுமா?

போட்டியின்றி வெற்றிபெறுவதற்காக செய்த முயற்சிகள், நடந்த நாடகங்கள் எத்தனை? அதில் சுவாரசியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

தொடரும்….

அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்

தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….
Comments (0)
Add Comment