வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சராக, வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார்! நடந்தது என்ன?! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -134) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 134)

வடகிழக்கில் மோசடி தேர்தலும் பொம்மை அரசாங்கமும்

முன்கூட்டியே முடிவு….

தேர்தலின் பின்னர்தான் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது வழக்கம். தேர்தல் முடிந்த பின்னர்தான் எக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதையும் அறிய முடியும்.

ஆனால். வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அறிவிக்க முன்னரே, அங்கு அதிகாரத்திற்கு வரவேண்டிய கட்சி எது என்பதை இந்திய அரசு தீர்மானித்துவிட்டது.

இந்திய அரசினதும் குறிப்பாக, ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் இலங்கை தொடர்பான கொள்கை சரியானது என்பதை நியாயப்படுத்தவும் கூடிய பொம்மை அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதுதான் பிரதான நோக்கமாக இருந்தது.

அந்தப் பொம்மை அரசுக்கு தன்னை இந்திய வம்சாவளியினராகக் கூறிக்கொண்ட வரதராஜப்பெருமாளையே முதலமைச்சர் ஆக்குவதென்று கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்கூட்டியே முடிவுசெய்திருந்தது.

யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவர் வரதராஜப்பெருமாள். 1982ல் வரதராஜப்பெருமாலும் மற்றொரு விரிவுரையாளரான திருநாவுக்கரசும் இணைந்து நூல் ஒன்றை வெளியிட்டனர்.

அந்த நூலில் இந்தியா ஒர தரகு முதலாளித்துவ அரசு. சோவியத் யூனியன் ஒரு சமூக ஏகாதிபத்தியம். இந்திய அரசும் சோவியத் யூனியனும் தமது நலன்களுக்காக தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்ய முலலுகின்றன என்று கூறப்பட்டிருந்தது.

அக்காலகட்டத்தில் வரதராஜப்பெருமாள் புலிகள் இயக்கத்துடனும், புளொட் இயக்கத்துடனுமே நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருடன் மேலோட்டமான தொடர்புகளை மட்டுமே வைத்திருந்தார்.

தயாபரன், சுகு, ரமேஷ் ஆகியோர் வரதராஜப்பெருமாளை கருத்தரங்குகள், வகுப்புக்கள் போன்றவற்றை நடாத்துவதற்குப் பயன்படுத்தி வந்தனர்.

வரதராஜப் பெருமாளின் நல்ல காலமோ கெட்ட காலமோ மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் நடத்திய கால்மாக்ஸ் பற்றிய கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பின் பின்னர் டக்ளஸ் தேவானந்தவினால் அவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

புத்திஜீவிகளும் கட்சியும்.

பெருமாளை கட்சியில் சேர்த்துக்கொள்வதை ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் பிராந்திய கமிட்டி விரும்பவில்லை. தயாபரன், சுகு, ரமேஷ், செழியன் போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

புத்திஜீவிகளாகத் தம்மைக் கருதிக்கொள்பவர்கள் கட்சிக்குள் இருந்து செயற்பட முடியாதவர்களாவர். இவர்கள் தோழர்களின் முதுகில் சவாரி செய்வதுடன், தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனப்போக்கில் இருப்பர்.

இவ்வாறானவர்களைப் புரட்சிகர அமைப்புக்கள் கட்சிக்கு வெளியே வைத்துப் பயன்படுத்தலாமே தவிர, கட்சிக்குள் வைத்துப் பயன்படுத்தக் கூடாது என்பதே யாழ் மாவட்ட பிராந்தியக் கமிட்டி உறுப்பினர்களின் பலரது கருத்தாக இருந்தது.

கட்சிக்குள் கீழ் மட்டத்திலிருந்து கடுமையான உழைப்பாலும் விசுவாசத்தாலும் முன்னேறிவரும் தோழர்களே கட்சியின் முக்கியமான பொறுப்புக்களை வகிக்க வேண்டும்.

புத்திஜீவிகள் கட்சிக்குள் புகுத்தப்பட்டு அவர்கள் கட்சியின் தலைமையாளர்கள் போல் சித்தரிக்கப்படுவது வெற்றுப் பகட்டாக இருக்குமே தவிர, கட்சியின் கட்டுக்கோப்பையும், கட்சி உறுப்பினர்களின் விசுவாச உழைப்புக்களையும் கட்சியை போர்க்குணமற்ற அமைப்பாக்கிவிடும்.

இதனால் வரதராஜப் பெருமாள் போன்றவர்களை கட்சிக்குள் கொண்டுவரக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் பிராந்திய கமிட்டி அதைச் செய்யாமல் அவர்களை வெளியே வைத்து கட்சிக் கொள்கைகளிலோ, உறுப்பினர்களின் மீதோ ஆதிக்கம் செலுத்தாமல் பயன்படுத்தி வந்தது.

இவ்வாறான பல்வேறு அணுகுமுறைகளால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கம் தனித்துவமான அமைப்பாகவும் புரட்சிகரக் கட்சி என்று கருதப்படுமளவுக்கு வலிமைபெற்று வந்தது என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

1983க்கு பின்னர் ஆட்கள் சேர்ப்பில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமை காட்டிய தாராளமான போக்குக் காரணமாகவே ஈ.பி.ஆர்.எல்.எஃப் படிப்படியாகத் தனது தனித்துவங்களை இழக்கத் தொடங்கியது.

1983க்கு முன்னர் யாழ் பிராந்திய கமிட்டி உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்ட இடதுசாரித் தோற்றப்பாட்டை பயன்படுத்திக்கொண்ட தலைமை அக் கோட்பாடுகளுக்கு மாறான பாதையில் செல்லத் தொடங்கியது.

அக் கட்டத்தில்தான் வரதராஜப் பெருமாள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்புக்குள் பிரவேசித்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவின் பின்னர் கட்சியின் மத்திய கமிட்டிக்குள் இடம்பிடித்துக்கொண்டார்.

அதன் பின்னர் இந்திய எதிர்ப்பு, சோவியத் எதிர்ப்பு நிலைப்பாடுகளைக் கைவிட்டு, தன்னையொரு இந்திய அரசினதும், இந்தியாவினதும் தீவிர விசுவாசியாகக் காட்டிக்கொண்டார்.

இந்திய எதிர்ப்பாளராக இருந்த ஒருவர் பின்னர் இந்திய அரசின் நம்பிக்கையைப் பெற்று, பொம்மை அரசாங்கத்தின் முதலமைச்சராகவும் மாறியது சாதனைதான்.

திட்டமிட்ட தேர்தல்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வரக்கூடியதாகத் தேர்தலை நடத்துவதற்கு முடிவுசெய்த இந்திய அரசு வடக்கில் போட்டியின்றி அவர்களைத் தெரிவுசெய்யும் நிலையைத் தோற்றுவிக்க நினைத்தது.

வடக்கில் போட்டியின்றித் தெரிவு, கிழக்கில் மட்டும் கண்துடைப்புக்காக ஒரு தேர்தல். வடக்கிலும் கிழக்கிலும் எல்லோரும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டால் தேர்தல் கேலிக் கூத்தாகக் கருதப்படும் அல்லவா.

வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கு ஜனநாயகத் தோற்றப்பாட்டை வழங்கினால்தான் தமது சாதனையான சுட்டிக்காட்ட இந்திய அரசுக்கும் வாய்ப்பாக இருக்கும்.

கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய அமைப்புக்களுடன் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசையும் போட்டியிடச் சம்மதிக்க வைத்தது இந்திய அரசு.

தனக்குரிய அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளவும், இந்திய அரசின் நட்பைப் பெறவும் கிடைத்த சந்தர்ப்பத்தை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் பயன்படுத்திக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிட்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட மறுத்துவிட்டது.

மாகாணசபைத் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினத்தன்று யாழ் நகரில் நடைபெற்ற கூத்து.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் என வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி அமர்க்களமாக அறிவிக்கப்பட்டது.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினத்தன்று யாழ்ப்பாணம் அரச தலைமைச் செயலகத்திற்கு செல்லக் கூடிய பாதைகள் எங்கும் இந்தியப் படையினரும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர்.

யாழ் அரச தலைமைச் செயலகத்தில்தான் (கச்சேரி) வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனுத்தாக்கல் செய்யும் கடைசி நேரம் முடியும் வரை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய செல்லக் கூடாது.

அதனைக் கண்காணிக்கத்தான் கச்சேரிக்குச் செல்லும் பாதைகளில் பயணம் செய்வோர் தடுக்கப்பட்டனர். இந்தியப் படையினர் அவர்களைச் சோதனையிட்டனர்.

வேட்பு மனுச்செய்வதற்குப் பணம் செலுத்த வேண்டும். அதனால் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு மேல் பணம் வைத்திருந்தோர் நிலை படு திண்டாட்டமாகிவிட்டது. அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டார்கள்.

வேறு சிலரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்யத் தேவைப்படுவதைவிட குறைந்தளவு பணத்தை மட்டும் வைத்தவிட்டு மீதியை எடுத்துக்கொண்டு அப்பாதையில் பயணம் செய்ய அனுமதித்தனர்.

மீன்வியாபாரிகள்.

மீன் வியாபாரிகள் சிலர் யாழ் கச்சேரிக்கு செல்லும் பாதையொன்றில் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய எவ்வளவு பணம் தேவையோ அதைவிடக் கூடுதலாகவே அவர்களிடம் பணமிருந்தது.

உடனே அவர்கள்மீது இந்தியப் படைக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களுக்கும் கடும் சந்தேகம் வந்துவிட்டது. துருவித் துருவிக் கேள்விகள் கொடுத்தார்கள்.

மீன் வியாபாரிகள் போல் புலிகள் இயக்க ஆதரவாளர்கள்தான் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்திருக்கிறார்களோ? என்பதுதான் சந்தேகம்.

படாதபாடுபட்டு தாங்கள் மீன்வியாபாரிகள்தான் என்பதை நிரூபித்தனர்.

அப்படியிருந்தும்கூட மீன் வியாபாரிகளிடமிருந்த பணத்தை பறித்து வைத்துக்கொண்டுதான் அவர்களைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

புலிகள் தேர்தலை நிராகரித்தனர். ஆனால் மாகாண சபைக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் வை வரவிடாமல் தடுக்க, சுயேட்சைக் குழுக்கள் என்ற பெயரில் புலிகள் தங்கள் ஆதரவாளர்களை தேர்தலில் நிறுத்தக்கூடும் என்று இந்திய அரசும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்வும் சந்தேகித்தன.

அதனால் தம்மை மீறி யாருமே கச்சேரிக்கு சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் கடும் கண்காணிப்புச் செய்தனர்.

இக் கூத்தின் பின்னர்தான் வடபகுதியில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஆயினும் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டதுதான் மற்றொரு வேடிக்கை.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இரகசியம் காக்கப்படுவதாகக் கூறப்பட்டது. உண்மையில் பட்டியலை நிரப்ப வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர ஏனையோர் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள்.

சிலர் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளானவர்கள். பட்டியலை வெளியிடத் தயக்கம் காட்டியதற்கு அதுவும் ஒரு காரணம்.

யாழ்ப்பாணம் மானிப்பாயிலிருந்த சமூகவிரோதப் பேர்வழியான தங்கன் (சுதாகர்) என்பவரைப் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அந்த ஆசாமியும் மாகாணசபை உறுப்பினராக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியானவர்களில் ஒருவர்.

வடக்கில் போட்டியின்றி வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டதால், கிழக்கில் மட்டும் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கிழக்கில் தேர்தல்

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், அங்கு தமது விருப்பு வெறுப்பின் படியே தேர்தலை நடத்தி முடிக்க இந்திய அரசு முடிவு செய்தது.

வாக்காளர்களுக்கான அட்டைகளை விநியோகிக்கும் பொறுப்பு ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கங்களுக்கு வழங்கப்பட்டது.

வாக்குச் சாவடிகள் முன்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தினர் ஆயுதபாணிகளாக நிறுத்தப்பட்டிருந்ததை இந்திய பத்திரிகை நிருபர்களே நேரில் கண்டனர்.

இந்து, அந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் கிழக்கில் நடந்தத மோசடித் தேர்தல் என்பதை வெளிப்படுத்தும் செய்திகளும் தகவல்களும் பிரசுரமாகியிருந்தன.

‘இந்து’ பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.

“கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இலட்சம் அகதிகள் இன்னமும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை. இந்தியாவிலும் இலங்கையின் வடமாகாணத்திலும் தங்கியுள்ள கிழக்கு மாகாண அகதிகள் வாக்களிக்க வசதி செய்யப்படும் என இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

அகதிகளின் வாக்குகள் வேறுயாராலோ போடப்பட்டன. திருகோணமலையில் உள்ள அகதிகள் கூட வாக்களிக்க இயலவில்லை” என்பது இந்துவின் படப்பிடிப்பு.

வீடு வீடாகச் சென்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் இயக்க உறுப்பினர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

“நீங்கள் வாக்களிக்க வரமறுத்தால் உங்களைப் புலிகள் ஆட்களாகவே கருதுவோம்” என்று துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள்.

அப்படியிருந்தும் போதிய வாக்காளர்களைத் திரட்ட முடியவில்லை. அதனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் உறுப்பினர்களே வெகுதுரிதமாகச் செயற்பட்டு வாக்குச் சீட்டுக்களில் முத்திரை குத்தி பெட்டிகளுக்குள் கட்டுக்கட்டாகத் தள்ளி முடித்தார்கள். இதனை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிருபரே குறிப்பிட்டிருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் உறுப்பினர்கள் இடையே சுவாரஸ்யமான போட்டியே நடந்தது. யார் கூடுதலாகக் கள்ள வாக்குப் போடுவது என்பதுதான் போட்டி.

கள்ள வாக்குப் போடும் விடையத்தில் ஈ.என்.டி.எல்.எஃப்பை விட ஈ.பி.ஆர்.எல்.எஃப இயக்கத்தினருக்கு அதிக வாய்ப்பு இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்டது.

கொழும்பிலிருந்து இறக்குமதியான தேர்தல் அதிகாரிகள் பலர் செய்வதறியாது தகைத்து நின்றனர்.

மட்டக்களப்பில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரியிடம் ஈ.பி.ஆர்.எல்.எஃப உறுப்பினர்கள் வாக்குச் சீட்டுக்கட்டொன்றைக் கொடுத்து “என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள் நீங்களும் குத்துங்க” என்று தள்ளிவிட்டார்.

ஆறுகோடி ரூபாய்.

தேர்தலை முன்னிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கங்களுக்கு இந்திய அரசால் பெருந்தொகையான பணமும் வழங்கப்பட்டது.

வர்ண வர்ண சுவரொட்டிகளை தமிழ் நாட்டில் அச்சிட்டு விமானம் மூலம் கொண்டுவந்து சேர்த்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

கிட்டத்தட்ட ஆறுகோடி ரூபாய் தேர்தல் செலவுக்காக ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு இந்திய அரசால் கொடுக்கப்பட்டது. இத்தகவலை தமிழகத்திலிருந்து வெளியான ‘விடுதலை’ பத்திரிகையும் பெரிதாக பிரசுரித்தது. இந்திய அரசு அச் செய்தியை மறுக்கவில்லை.

(இலங்கையிலும், இந்தியாவிலும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினரால் பலருடைய பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் பற்றி நமக்கு கிடைத்துள்ள ஆவணங்கள் இந்தியப் படைக் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இடமிருந்த பணப் பழக்கத்தை உறுதிசெய்கின்றன.)

மட்டக்களப்பு பகுதியில் 83 வீதமானோர் வாக்களிக்கப்பட்டதைக் கேட்டதும் செய்தியாளர்களுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.

காலை 7 மணிமுதல் மாலை 4 மணி வரையே வாக்களிப்பு நடைபெற்றது. எங்குமே மந்த கதியில்தான் வாக்குப் பதிவு இடம்பெற்றது. அப்படியிருக்க 83 வீதமானோர் எங்கிருந்து தோன்றினர் என்பது ஆச்சரியமாக இருந்தது.

கிழக்கு மாகாணத் தேர்தலை ஜனநாயகத் தேர்தலாகச் சித்தரிக்க இந்திய அரசு தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டது.

வடக்கு-கிழக்கு மாகாண அரசாங்கம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் வடக்கு-கிழக்கு முதலாவது பொம்மை அரசாங்கத்தை இந்தியா உருவாக்க முடிந்தது.

முதன் முதலில் இலங்கைத் தேர்தலில் மாபெரும் மோசடித் தேர்தல் என்ற சாதனையையும் முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தியது. தேர்தல் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்தான்.

அதன் பின்னர் வடக்கு-கிழக்கில் இடம்பெற்ற எத்தேர்தலும் ஜனநாயக ரீதியான தேர்தலாக இடம்பெற முடியவில்லை என்பதும் உண்மை. முதற் கோணல் முற்றும் கோணல் என்பது இதுதானோ?

மாலைகளும் மரியாதைகளும்.

வடக்கு-கிழக்கு மாகாண அரசாங்கத்தின் முதலமைச்சராக வரதராஜப் பெருமானை நியமிப்பது என முன்கூட்டியே இந்தியா முடிவுசெய்திருந்தது அல்லவா.

அதன் பிரகாரம் தேர்தலுக்குப் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயலாளர் நாயகம் க. பத்மநாபாவிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தது இந்திய அரசு.

பத்மநாபாவுக்கு அடுத்த நிலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற சீனியர் உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பில் இருந்தனர். ஆயினும் இந்திய அரசின் கண்டிப்பான கட்டளையின்படி வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக முடிசூட்டப்பட்டார்.

மாலைகள்-மரியாதைகள்- மட்டற்ற பாதுகாப்புக்கள் மத்தியில் வரதராஜப் பெருமாள் தமிழ் மக்களின் தலைவர் என்ற பிரம்மை தோற்றுவிக்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவராகவும் வரதராஜப் பெருமாள் கருதப்பட்டார்.

“வடக்கு-கிழக்கில் அமைதி திரும்பிவிட்டது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அரசாங்கம் பதவிக்கு வந்துவிட்டது. புலிகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள்” என்று இந்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரசாரச் சாதனங்கள் மூலம் பிரசாரம் செய்தது.

வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் பெருமாளிடம் ஒரு நிருபர் கேட்டார். ‘புலிகளால் உங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட மாட்டாதா?

பெருமாள் அந்த நிருபரைப் பார்த்து கேலியாகச் சிரித்துவிட்டுச் சொன்னார்.

“புலிகளா? அவர்கள் சிறு குழுவாகக் காட்டுக்குள் திரிகிறார்கள். எங்களுடன் பேச விரும்பினால் வந்து பேசலாம். இல்லாவிட்டால் அவர்களை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

துரோகிகளைத் தண்டிப்போம்.

மாகாணசபைத் தேர்தலையடுத்து ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பன வரவிருந்தன.

தேர்தல்களில் போட்டியிடுவதும், பதவிகளைப் பெறுவதும் இனத்துரோகம் ஆகும். அவ்வாறனவர்களை என்றோ ஒருநாள் தண்டித்தே தீருவோம் என்று புலிகள் அறிக்கை ஒன்றை விடுத்தனர்.

போரில் பலியான தமது உறுப்பினர்களின் நினைவாகவே அறிக்கை விடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது இதுதான்,

நெஞ்சில் நிலைத்த தியாகிகளின் நெஞ்சை உருக்கும் நினைவு நாள் இது.

உடல்களாய் விழாமல், காற்றோடு காற்றாக கரைந்த உயிர்களை எண்ணுகிறோம்.

எத்தனை போர்க்களங்களில் படைகளை எதிர்கொண்டவர்கள்.

வசந்த காலங்களில் சாய்ந்த மரங்கள். அவர்களை மறக்கமாட்டோம்.

அவர்களின் இழப்புக்கள் எதற்காக?
மாகாணசபைக்கா?
பாராளுமன்றில் இடம்பெறவா?
மாலைகள் தோள் சுமக்க தேர்தலில் உலாவரவா?
மந்திரிகளாகவா?
எங்கள் முன்னோடிகளே..! உங்களைச் சடலங்களாக்கி எங்களுக்கு உயிர் தந்தீர்களே, நாங்கள் உங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம்.

தேர்தல் சந்தையில்  தமிழீழத்தை விலைபேசும் வியாபாரிகளை எங்கள் தேசம் மன்னிக்காது. என்றோ ஒருநாள் தண்டித்தே தீருவோம்…!

இதோ..! உங்கள் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் எடுக்கும் ஆணை, எங்கள் உயிரும் தமிழீழத்திற்கே.. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, புலிகளுக்குச் சாதகமான சூழல் தென்னிலங்கையில் உருவாகும் அறிகுறிகள் தெரிந்தன.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பிரேமதாசா தெரிவானார்.

வேட்பாளரானதும் பிரேமதாசா அறிவித்தார்.

“இந்தியப் படையை இங்கிருந்து வெளியேற்றுவோம்”

(தொடர்ந்து வரும்)

 அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்

தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….
Comments (0)
Add Comment