வன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -135) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

வன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 135)

ஜனாதிபதித் தேர்தல்.

மாகாணசபைகளுக்கான தேர்தல்களையடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பமாகின.

வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அல்லாமல், நாடெங்கிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தன.

வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோர் துரோகிகள் எனப் புலிகள் அறிவித்தனர்.

அதுபோலவே ஏனைய மாகாணசபைகளில் போட்டியிட்டவர்களை ஜே.வி.பி துரோகிகளாகக் கணித்து வேட்டையாடத் தொடங்கியது.

தென்னிலங்கையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் ஜே.வி.பி.யினரால் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலும் ஜே.வி.பி.யினரின் அச்சுறுத்தல் மத்தியிலேயே நடைபெறவேண்டியிருந்தது.

1989ஆம் ஆண்டு பெப்ரவரி 3ம் திகதியுடன் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரின் பதவிக்காலம் முடிவடைய இருந்தது. அதனால் 1988ல் டிசெம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்தவர் அன்றைய பிரதமர் பிரேமதாசா.

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மூன்றுபேர் விரும்பினார்கள். பிரேமதாசா, காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி ஆகியோரே அந்த மூவரும்.

இவர்களில் காமினியும் லலித்தும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் சிஷ்யர்கள்.

அவர்கள் இருவரிலி ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராவதையே ஜே.ஆர். விரும்பியதாகக் கூறப்பட்டது.

பிரமேதாசா

பிரமேதாசா ஏறக்குறைய எம்.ஜி.ஆர் மாதிரியான அரசியல்வாதி. கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து படிப்படியாகத் தன் கடும் உழைப்பால் முன்னுக்குவந்தவர்.

இலங்கை அரசியலில் அதுவரை தலைவர்களாக இருந்தவர்கள் அரசியலில் தம்மை நிலநிறுத்திக்கொள்ள தங்கள் குடும்பப் பெருமைகளையும் கற்ற உயர்கல்வியையும் முன்னிறுத்தி தங்கள் தகுதியையிட்டு மக்களை பிரமைகொள்ள செய்யவே முயன்றனர்.

நான் இன்னாருடைய மகள், இன்னாருடைய பேரன், இன்னாருடைய மருமகன் என்று கூறுவதன் மூலமாகத் தங்களைவிடத் தங்கள் குடும்பப் பின்னணியை அவர்கள் நம்பினார்கள்.

அரசியலில் உயர் பதவி வகிப்பதென்பது உயர் குடியில் பிறந்த, உயர் தனவந்தர்கள் மற்றும் கனவான்களின் வாரிசுகளால் மட்டுமே முடியும் என்று கருதப்பட்டது.

மக்களை அறிந்திருப்பதைவிட நான்கு கல்விப் பட்டங்களை அணிந்திருப்பதுதான் நாட்டைக் கட்டியாளும் தகுதி என்பது எழுதப்படாத சட்டம் போல இருந்தது.

இந்த இலக்கணங்கனைப் பிரேமதாசாவினால் உடைக்க முடிந்தது பெரும் சாதனைதான்.

பேராசிரியர் சிவத்தம்பி பிரேமதாசா பற்றிப் பின்வருமாறு கூறியது பொருத்தமானது, “சிங்களத்தில் சிந்தித்து, சிங்களத்தில் பேசும் முதலாவது முதலாவது சிங்களத் தலைமைத்துவம் பிரேமதாசாவால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்த சிங்களத் தலைவர்கள் ஆங்கிலத்தில் சிந்தித்து சிங்களத்தில் பேசினார்கள்”.

பிரேமதாசாவின் பலம் அதுதான். பிரேமதாசாவின் கொள்கைகள், அணுகுமுறைகள் தொடர்பான முரண்பாடுகள் உள்ளவர்கள்கூட, பிரேமதாசாவினால் உருவாக்கப்பட்ட மக்கள் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இன்றுபோல் அல்லாமல் தென்னிலங்கை  அரசியலில்  ஜாம்பவான்கள் பலர் அன்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் இருந்தனர். அந்த மலைகளோடு மோதி முன்னுக்கு வருதல் சேலசுப்பட்ட காரியமா?

பிரேமதாசா உயிருடன் இருந்தபோது அவருக்கு எதிராகக் கடும் நிலைப்பாடு கொண்டிருந்தவர்கள் கூட. இன்று அவரது நிர்வாகம் குறித்து வியந்து பேசுவதும் குறிப்பிடத்தக்கது.

பிரேமதாசா உயிருடன் இருந்தவரை தென்னிலங்கை அரசியல் சூடானதாகவும், விறுவிறுப்பானதாகவும் இருந்தது.

பிரேமதாசா தனது முகாமையும் சுறுசுறுப்பாக வைத்திருந்தார். அதன் காரணமாக அவரது அரசியல் எதிரிகளும் சூடாக இருந்தனர். கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் அல்லவா?

வாழைப்பழத்தில் ஊசி.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த தலைவர்களுள் பிரேமதாசாதான் தமிழ்-முஸ்லீம் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுக்கொண்ட  அரசியல்வாதி.

அதன் அர்த்தம் அவர் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வழங்கத் தயாராக இருந்தார் என்பதல்ல.

தனக்கு முன்பிருந்த சிங்கள அரசியல்வாதிகள் போலவே பிரேமதாசாவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பத்தை தனது ஒட்டுமொத்த அரசியல் நலன்கருதி கைவிட்ட ஒருவராகவே வாழ்ந்துவிட்டுப் போயிருந்தார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜே.ஆர் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார். பிரேமதாசா வழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். வித்தியாசம் அவ்வளவுதான்.

எந்தவொரு அரசியல்வாதியினாலும் சரி அவர் உயிரோடு இருந்தால் என்ன, இறந்தால் என்ன அவரது தகுதியைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது தகுதிக்கு மீறிப் புகழவும் கூடாது.

பிரேமதாசாவின் தலைமைத்துக் காலகட்டத்தில் இந்த அரசியல் தொடர் நிகழ்வுகள் பிரவேசிப்பதால் அவர் பற்றி இத்தனையும் கூறவேண்டி இருந்தது.

இந்தியாவின் ஆர்வம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசா தெரிவாகுவதை இந்திய அரசு விரும்பவில்லை.

காமினிதிசநாயக்கவுடன் கொழும்பிலிருந்த இந்தியத் தூதரத்தற்கு நல்லுறவுகள் இருந்தன. காமினியோ அல்லது லலித்தோ தெரிவாகியிருந்தால் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.

பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவானதை வடக்கு-கிழக்கு மகாணசபையில் ஆளும் அணியாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் விரும்பவில்லை.

ஒரேயொரு தரப்பினருக்கே பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளரானது நல்ல செய்தியாகச் செவியில் பாய்ந்தது. அது புலிகளின் தரப்பு.

புலிகள் எதிர்பார்த்தது போலவும், இந்திய அரசு கலைக்கப்பட்டது நியாயம் என்பது போலவும் பிரேமதாசாவின் தேர்தர் பிரச்சாரம் அமைந்தது.

‘பதவிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில்  இந்திய படையினரை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்’ என்று அறிவித்தார் பிரேமதாசா.

சிறிலங்காச் சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதி வேட்பாளருமான சிறிமாவோ பண்டாரநாயக்காவும் ‘அன்னியர் தலையீடு இல்லாத வடக்கு-கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவோம்’ என்று கூறினார்.

ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு (டி.பி.ஏ) சார்பாக அவர் களத்தில் இறங்கினார்.

மற்றொரு வேட்பாளர் ஒஸி அபய குணசேகர, விஜயகுமாரதுங்கா கொல்லப்பட்ட பின்னர் சிறிலங்கா மக்கள் கட்சியின் தலைவராக செயற்பட்டவர் அவர்தான்.

ஐக்கிய சோசலிச முன்னணி (யூ.எஸ்.ஏ) சார்பாக ஒஸி அபயகுணசேகர தேர்தலில் குதித்தார்.

இந்த மூன்று போட்டியாளர்கள் மத்தியில்தான் மும்முனைப் போட்டி ஏற்பட்டது.

குமார் பொன்னம்பலம்

காட்டில் சந்திப்பு.

டி.பி.ஏ என்று அழைக்கப்படும் ஜனநாயக மக்கள் கூட்டமைப்பில் குமார் பொன்னம்பலமும் பிரதான பங்கு வகித்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க ஒருமுறை பின்வருமாறு கூறினார், ‘எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் சிவப்பு மகனட அநுரா கறுப்பு மகன் குமார்’.

இந்தியப் படையெடுப்பைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தவர் குமார் பொன்னம்பலம். ஜனாதிபதித் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் புலிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கினார் குமார்.

குமாருடன் தமிழ் காங்கிரஸில் இருந்தவர் சட்டத்தரணி மோதிலால் நேரு. அவருக்குப் புலிகளுடன் தொடர்பு இருந்தது.

அநுரா பண்டாரநாயக்க

அதனால் மோதிலால் நேருவின் மூலம் புலிகளுடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்காவும் சம்மதித்தார்.

பிரபாகரனைச் சந்திக்க முடியாது என்பதை முற்கூட்டியே ஊகித்தனர். அதனால் மாத்தையாவை என்றாலும் சந்திக்க வேண்டும். அப்படியென்றால்தான் அந்தச் சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் இருக்கும் என்று கருதினார்கள்.

“வாருங்கள் பார்க்கலாம்” என்று புலிகள் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டதும். அநுராவும், குமாரும் வவுனியா சென்றனர்.

அப்போது வவுனியாவில் இராணுவ உயர் அதிகாரியாக இருந்தவர் டென்சில் கொப்பக்கடுவ. இவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் வேண்டப்பட்டவர்.

வவுனியாவிலிருந்து வன்னிக்காட்டுக்குள் அநுராவும், குமாரும் செல்லுவதற்குரிய ஏற்பாடுகளைச் மறைமுகமாக டென்சில்தான் செய்துகொடுத்தார்.

வன்னிக்காட்டில் புலிகள் அவர்களை வரவேற்றனர். பலத்த உபசரிப்பு. அநுராவுக்கோ இன்ப அதிர்ச்சி.

அப்படியொரு வரவேற்பை அவர் எதிர்பார்க்கவில்லை. நடந்து களைத்துப்போயிருந்த அநுராவுக்கு குடிக்கப் பானம் கொடுத்தனர் புலிகள். வரண்ட நாவை ஈரப்படுத்திக்கொண்டு ஜில் என்று தொண்டைக்குள் இறங்கியது குளிர்பானம்.

கண்டோஸ் சொக்லேட்டும் புலிகளால் கொடுக்கப்பட்டது. குளிராக இல்லாவிட்டால் கண்டோஸ் உருகிவிடும். புலிகளால் கொடுக்கப்பட்ட கண்டோஸ் இறுகிக் குளிராக இருந்தது.

எல்லாமே ஜில்லென்று இருக்கின்றனவே, காட்டுக்குள் மின்சாரம் இல்லை. குளிரூட்டும் வசதிகள் எப்படி இவர்களிடம் இருக்கின்றன? என்று அநுராவுக்கு வியப்பு மேல் வியப்பு.

ஆனால் சந்திப்பு மட்டும்தான் சற்று ஏமாற்றமாகப் போய்விட்டது.

மாத்தையா வரவில்லை.
அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. புலிகளின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையா சந்திக்க வரவில்லை. யோகியும், சங்கரும்தான் வந்திருந்தனர்.

இவர்கள் தமது நிலைப்பாடுகளை விளக்கினர். புலிகள் பங்குபற்றும் பேச்சுக்கள் மூலம் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதையும், இந்தியப் படை வெளியேற வேண்டும் என்பதில் தமக்கு உடன்பாடே என்றும் தெரிவித்தனர்.

அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த யோகி, “நாங்கள் இதைத் தலைவரிடம் தெரிவிக்கின்றோம். முடிவை அறிவிக்கின்றோம்” எனக் கூறினார்.

மாத்தையாவைச் சந்தித்தால் முடிந்த முடிவை உடனே பெறலாம் என இவர்கள் நினைத்திருந்தனர். நேரடியாச் சந்தித்தால் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்பதால் அதனைத் தவிரக்கவே மாத்தையா சந்திப்புக்கு வராமல் இருந்துவிட்டார்.

தென்னிலங்கை அரசியல் தலைவர்களுடனும் புலிகள் பேச்சு நடத்தியுள்ளனர். இன்றுவரைத் தமிழ்க் கட்சிகளும் பேச்சு நடத்திவருகின்றன.

தமிழ்க் கட்சிகள் தாங்கள் யாருடன் பேச்சு நடத்தினாலும் அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்வது வழக்கம். அதன் மூலம் மக்களிடம் ஒருவகையான நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவார்கள். பின்னர் எல்லாம் தோல்வியில் முடிந்ததும் ‘எங்களை ஏமாற்றிவிட்டார்கள்’ என்று புலம்புவார்கள்.

முன்னாள் தலைவர்களிடமிருந்து இந்நாள் தமிழ்க் கட்சிகளும் அதனை மிச்ச சொச்ச மரபாகப் பாதுகாத்து வருகின்றன.

ஆனால் புலிகளைப் பொறுத்தவரை ‘நம்ப நட நம்பி நடவாதே’ என்பதுதான் சிங்களத் தலைவர்கள் தொடர்பான அணுகுமுறையாக இருந்தது.

ஜனாதிபதித் தேர்தலின் போதும் பிரதான வேட்பாளர்கள் புலிகளைப் பயன்படுத்த நினைத்தனர். புலிகளோ அவர்களை பயன்படுத்திக் கொண்டனர். அதேசமயம் அவர்கள் தொடர்பாக மக்களிடம் தவறான நம்பிக்கை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர்.

வன்னிக்காட்டிற்குள் சென்று அநுரா புலிகளைச் சந்தித்ததும், புலிகள் ஆதரவை நாடியதும் அரசியல் ரீதியாகப் புலிகளுக்குச் சாதகமாக இருந்தது.

புலிகள் சிறு குழுவினர். இவர்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சர்வதேச ரீதியில் இந்திய அரசு பிரச்சாரம் செய்தது.

இதற்குத் தக்க பதிலடி கொடுக்கவே புலிகள் சந்திப்புக்கு இணங்கினர்.

பிரேமதாசா இந்தியப் படையை வெளியே போகச் சொல்கிறார். சிறிமாவோ பண்டாரநாயக்கவும் புலிகளைநாடி தன் புத்திரரை அனுப்புகிறார்.

எனவே புலிகளின் பக்கம் நியாயம் இருக்கிறது. புலிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தென்னிலங்கை அரசியல் கட்சிகளே அங்கீகரிக்கின்றன என்பதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகப் பாவித்தனர் புலிகள்.

புலிகளைச் சந்தித்துவிட்டு அநுராவும் குமாரும் கொழும்பு திரும்பினார்கள். புலிகளுக்குத் தனிநாடு கொடுக்க அநுரா இரகசிய உடன்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கதை கட்டத் தொடங்கினர்.

என்ன பேசினோம்.

இதனையடுத்து புலிகளுடன் நடந்த சந்திப்புத் தொடர்பாக அநுராவும் குமாரும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர்.

“செயலற்றுப்போன இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றியோ அல்லது வடக்கு-கிழக்கு நிரந்தர இணைப்பைப் பற்றியோ இச் சந்திப்பில் பேசப்படவில்லை.

தனிநாடு பற்றி பேச்சும் ஆராய்வுக்கு வரவில்லை.

இச் சந்திப்பு முன்னரே ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் புலிகளிடம் இருந்தது.

திருமதி பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், வடக்கு-கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏனைய குழுக்களும் பங்குபற்றுவதன் மூலமே வடக்கு-கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும்.

மற்றொரு தரப்பின் தலையீடின்றி இந்நாட்டில் எமது சொந்தப் பிரச்சினைகளை ஒருவருடன் மற்றொருவர் பேசுவது தவறுகிடையாது.

முன்னர் திரு. குமார் பொன்னம்பலத்துடன் விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளைச் சந்திக்க திரு. அத்துலத்முதலி இணங்கினார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்..” என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் பீடம் விடுத்த அறிக்கை இப்படிக் கூறியது..,

‘சிறிலங்கா ஜனதிபதித் தேர்தலில் நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கப் போவதில்லை’.

ஜனாதிபதித் தேர்தல் பற்றிய செய்திகளுக்குச் சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, அக்காலகட்டத்தில் வடக்கு-கிழக்கில் இடம்பெற்ற சில முக்கி சம்பவங்களுக்குச் செல்லுவோம்.

படுகொலை.

வடக்கு-கிழக்கில் மாகாணசபைக்கான இடைக்கால நிர்வாகத்திற்கு புலிகளால் சிபாரிசு செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிவஞான சுந்தரம். அவர் வயது 65. பின்னர் இவர் பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர்.

புலிகள் பலமாக உள்ளபோது அவர்களை ஆதரித்த சிலர் பின்னர் இந்தியப் படையுடன் நட்பாகி வளைந்து கொடுத்தனர்.

சிவஞான சுந்தரம் துணிச்சலானவர்.

21.10.1988 அன்று யாழ்ப்பாணம் அரியாலையில் திருமலை மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் சந்தோசத்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டுப் பேருந்து மூலம் வீடுதிரும்பிக்கொண்டிருந்தார் சிவஞான சுந்தரம். வல்வைச் சந்தியிலிருந்த இந்தியப் படை சோதனை முகாமில் பேருந்து சோதனையிடப்பட்டது.

இந்தியப் படையினருடன் நின்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் சிவஞான சுந்தரத்தை அடையாளம் கண்டுவிட்டனர்.

பேருந்திலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் முன்பாகவே அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்.

பயணிகள் கண்முன்பே சிவஞான சுந்தரம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தியப் படையினர் அக் காட்சிக்கு மௌனமான சாட்சிகளாக நின்றுகொண்டிருந்தனர்.

காரணம் என்ன?

சிவஞான சுந்தரம் மீது ஈ.பி.ஆர்.எல்.எஃப் பழிதீர்த்துக்கொண்டமைக்குப் பின்னணியில் ஒரு காரணம் இருந்தது.

வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியது. அதற்கேற்ப திட்டம் தீட்டி நினைத்ததை முடித்தனர் என்பதையும் முன்னர் விபரித்தேன்.

அப்போது நடைபெற்ற சதி நாடகம் இப்போது சொல்கிறேன்.

வடக்கில் வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவுசெய்யப்படுவதைத் தடுக்க ஈரோஸ் இயக்கத்தினர் சிலர் இணைந்து முயற்சியில் இறங்கினர்.

சுயேட்சைக் குழு ஒன்றைப் போட்டியிட வைப்பதுதான் நோக்கமாக இருந்தது.

அப்போது பலாலியில் இருந்த இந்தியப் படை மேஜர் பாலகிருஷ்ணர் என்பவர் ஈரோஸ் இயக்கத்தினரைச் சந்திப்பது வழக்கம். மேஜர் பாலகிருஷ்ணர் எம்.ஐ என அழைக்கப்படும் இராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்.

அதேநேரம் இந்திய மத்திய ரிசேவ்ப் பொலிஸ் படையைச் சேர்ந்த சுப்பிரமணியதாஸ் என்பவரும் ஈரோஸ் இயக்கத்தை பொலிஸ் சீருடையில் சென்று சந்தித்துண்டு. ஆனால் அவரும் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.

இந்த இருவரும் சுயேட்சைக் குழுவொன்றைப் வடக்கில் போட்டியிட வைக்குமாறு ஈரோஸ் இயக்கத்திற்கு ஆலோசனை வழங்கினர்.

தம்மை நாடிபிடித்தறியத்தான் அப்படிக் கூறினார்கள் என்பதை ஈரோஸ் உறுப்பினர்கள் தெரிந்திருக்கவில்லை.

சுயேட்சைக் குழுவில் போட்டியிட ஆக்களைத் திரட்டி முடித்து, அச் சுயேட்சைக் குழுவிற்குத் தலைவராகவும் ஒரு முக்கியமானவரைப் போட்டனர்.

அவர்தான் சிவஞான சுந்தரம். பலரும் தயங்கியபோது அவர்தான் துணிச்சலாக முன்வந்தார்.

இத்தகவலை மேஜர் பாலகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணியதாசிடமும் ஈரோஸ் உறுப்பினர்கள் தெரியப்படுத்தினர்.

“அப்படியா நல்ல விஷயமாச்சே என்று இருவரும் பாராட்டிவிட்டுப் போனார்கள்.

தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தினத்தன்று காலையில் தேடினால் சிவஞான சுந்தரத்தைக் காணவில்லை.

நள்ளிரவில் வீடு புகுந்து இந்திப்படை அவரைக் கைதுசெய்து கொண்டுபோனது. நியமனப் பத்திரம் தாக்கல் செய்து முடித்த பின்னரே விடுதலைசெய்தது.

அதன் பின்னரும் சிவஞான சுந்தரம் இந்தியப் படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்தே வந்தார்.

இறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் அவரைச் சுட்டுக்கொன்றது.

(தொடர்ந்து வரும்…)

எழுதுவது அற்புதன்.. தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.

***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….

பிரேமதாச படுகொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னர் எடுக்கப்பட்ட படம்.

Comments (0)
Add Comment