குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை!!. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-5) -வி.சிவலிங்கம்

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை!!. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-5) -வி.சிவலிங்கம்

• ‘கறுப்பு யூலை’ சம்பவங்களின் வடுக்கள் அளப்பரியன.

• அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மாகாவலி துரித அபிவிருத்தித் திட்டத்தில் நிறைவேற்றியிருந்தனர்.

• எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை. மாலைப் பொழுது வந்ததும் தமது குடும்பத்தினரை அருகிலுள்ள காடுகளுக்கு அழைத்துச் செல்வர். பெண்களும், சிறுவர்களும் தூங்கும் வரை ஆண்கள் விழித்திருப்பர்.

தொடரும்…

இலங்கையின் கலாச்சாரத்தில் பௌத்த தத்துவங்கள் தார்மீக சமுதாயத்தை வலியுறுத்துகிறது. ஆனால் ‘ கறுப்பு யூலை’ அச் சமூகத்தின் பிறழ்ச்சிப் பக்கமாக உள்ளது.

சொத்துக்கள் எரிக்கப்பட்டு, கொள்ளை, கொலை, தாக்குதல்கள் என்பன தேசத்தின் சாபம் போல் உள்ளன. பெரும்பான்மைச் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள்  தாக்கப்பட, தமிழர்  பெரும்பான்மைப் பகுதிகளில் சிங்களவர்கள் தாக்கப்பட்டார்கள்.

‘கறுப்பு யூலை’ கலவரத்தின் போது ராஜரட்டை ரைபிள் பிரிவின்   (Rajarate Riffles) இரண்டாவது லெப்ரினன்ட் ஆக பதவி வகித்தேன்.

இந் நிகழ்வுகளின் போது அதன் சாட்சியாகவும் இருந்தேன். அச் சம்பவங்களின் போது அவ் இனக் கலவரத்தைத் தடுக்க ஆர்வமில்லாதவர்களாக பொலீசாரும், ராணுவத்தினரும் காணப்பட்டனர்.

இதனால் நாடு நிரந்தர அழிவிடமாக மாறியது. இருப்பினும் சில நாட்களுக்குள்ளாகவே தேசிய நல்லிணக்கத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அது மட்டுமல்ல, இவ் இனக் கலவரங்கள்  தேசியவாதம் என்ற பெயரால் தனி நபர்கள் கொள்ளையிடவும், தத்தமது லாபங்களைப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுத்தது. உயர் அதிகாரத்தில் இருந்தவர்களின் ஆசீர்வாதத்துடன் பொலீசார் கண்மூடிச் செயற்பட்டனர். இறுதியில் இவற்றை ராணுவமே முழுமையான முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஆனால் முடிவில் இக் கலவரத்தின் பின்னால் செயற்பட்டதாக அடையாளம் காணப்பட்டு சிலர் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டதாக நான் நம்பவில்லை.

‘கறுப்பு யூலை’ சம்பவங்களின் வடுக்கள் அளப்பரியன.

பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு அதிக தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கிற்குச் செல்ல, பெரும்பான்மைத்  தமிழர்கள்  மத்தியில்  வாழ்ந்த சிங்கள மக்கள் சிங்களப் பகுதிகளுக்கும் சென்றனர்.

மேலும் சிலர் வெளிநாடுகளில் குடியேறி தமது அனுபவங்களை வெளிநாடுகளின் கவனத்திற்குக் கொடுத்தனர்.

கடந்த 30 வருடங்களாக ‘ கறுப்பு யூலை’ நிழல்கள் பரவி தமிழர் வாழும் வல்லரசு நாடுகளும் கண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

அத்துடன் தமிழீழக் கோட்பாடும், விடுதலைப் புலிகள் குறித்தும் உலக நாடுகளில் ஒலிக்க வழி வகுத்தது.

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்கு, கிழக்கிலுள்ள காடுகளை அழித்துத் தமிழ்க் குடியேற்றங்களை நிறுவினார்கள்.

இதில் ‘காந்தியம்’ என்ற அமைப்பு இம் முயற்சிகளில் முன்னின்று உழைத்துது. இதற்கு அரசில் உள்ள அதிகாரிகளும் உதவினர். அடுத்தடுத்து வந்த

அரசுகள் ‘கறுப்பு யூலை’ இன் அருவருக்கத்தக்க வரலாறுகளைத் துடைக்க முயன்ற போதும் அந்த அடையாளங்கள் இன்னமும் அவற்றை நினைவூட்டி வருகின்றன.

திருநெல்வேலி தாக்குதலுக்குப் பின்னர் சிறிது காலம் அமைதி நிலவிய போதிலும் ஆனையிறவில் ராணுவ வாகனங்கள் மீது 1984ம் ஆண்டு மே 4ம் திகதிய தாக்குதலுடன் அவை மீண்டும் ஆரம்பித்தன.

எமது பயங்கரவாத நடவடிக்கைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சுற்றி வழைப்புகள் ஆகும். இரவில் கிராமங்களைச் சுற்றி வழைத்து, பகலில் வீடு வீடாக தேடுதலை நடத்துவோம்.

இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது ராணுவத்திலுள்ள சில சக்திகள் மக்களைக் கொள்ளை அடித்ததுண்டு. இதனால் சிலர் தண்டனை பெற்றனர்.

இதனால் பயங்கரவாதிகளைக் கைப்பற்றுவதை விட இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதில் எமது பாரிய கவனம் சென்றது. சில சமயங்களில் வீதித் தடைகளைத் திடீரெனப் போட்டு பரிசோதனைகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு ஒரு நாள் இரண்டு பாதுகாப்பு வாகனங்களில் வல்வெட்டித்துறை வீதியால் அப் பகுதிக்குள் சென்றிருந்த போது மூன்று இளைஞர்கள் ராணுவத்தைக் கண்டதும் ஓடினார்கள்.

சந்தேகம் ஏற்பட்டதால் துரத்திய போது இருவர் பிடிபட்டனர். அவர்களை ஏற்றிச் சென்றபோது ஒருவர் வலியினால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதால் பலாலி ராணுவ முகாமிற்கு எடுத்துச் சென்ற போது அவர் 10 நிமிடங்களில் மரணமானார்.

பிரேத பரிசோதனையின் போது அவர் சைனைட் அருந்தியது தெரிய வந்தது.

இதுவே எமது பாதுகாப்பில் ஏற்பட்ட முதலாவது சம்பவமாகும். ஆரம்பத்தில் இவ்வாறான மரணங்களின்போது பிரேத பரிசோதனை நடத்துவதில்லை என அரசு தீர்மானித்திருந்தது.

பின்னர் சர்வதேச அழுத்தங்களால் மீண்டும் தொடர்ந்தது. பயங்கரவாதி ஒருவரைத் துரத்திப் பிடித்த சம்பவம் என்பதாலும், எனது பாதுகாப்பில் இருந்த வேளையில் சைனைட் பாவித்து இறந்தமையாலும் எனது பெயர் அப்போது பிரபலமாகியிருந்தது.

இருப்பினும் அவனை உயிருடன் பிடித்தபோது போதுமான விதத்தில் உடம்பைப் பரிசோதிக்கவில்லையே என்ற கவலை எனக்கிருந்தது.

இதன் பின்னர் பாதுகாப்பிலிருந்த பலர் சைனைட் அருந்தி தற்கொலை செய்தனர். பொதுவாக சைனைட் குப்பிகளைத் தமது கழுத்தில் தொங்கவிட்டிருப்பார்கள்.

பொதுமக்களுடன் கலந்து நிற்கும்போது அதனைத் தமது கக்கத்திற்குள் மறைத்திருப்பார்கள். இருப்பினும் இவர்கள் எமது தாய் நாட்டின் பிள்ளைகளாகப் பிறந்தும் அதனை அழிக்க எண்ணி ஒவ்வொருவராக மரணிப்பது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியே.

இக் காலப் பகுதியில் சில தவறுகளைச் செய்துள்ளேன். அதனையிட்டு தற்போது மனதாரக் கவலைப்படுகிறேன்.

நான் இளமையாகவும், தேசியவாதத்தில் மிதந்துகொண்டிருந்த வேளை எமது நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென மிகவும் உற்சாகமாக தீர்மானித்துச் செயற்பட்டேன்.

அந்த வேளையில் இளமைத் துடிப்பும், கடமையில் மதிப்பும், போராடும் உறுதியும், பயிற்சியால் கிடைத்த இறுக்கமும், போருக்கான அர்ப்பணிப்பும் இருந்தன.

விசாரணைகளின் போது சந்தேக நபர்களைத் தாக்குவது வழமையான செயலாக அவ் வேளையில் இருந்தது. இவ்வாறான செயல்களை மூத்த அதிகாரிகள் கண்டிப்பதும் இல்லை.

ராணுவச் சட்டப்படி அவை தண்டனைக்குரிய சட்ட விரோத செயல்களாகும். யாழ்ப்பாண நகரில் நிகழ்ந்த அவ்வாறான சம்பவங்கள் எனது வாழ்நாளில் சிறந்த பாடங்களாகும்.

சட்டத்தையும், ஒழங்கையும் பாதுகாப்பது பொலீசாரின் கடமையாக இருந்த போதிலும் யாழ். குடா நாட்டிற்குள் அவ்வாறு இருந்ததில்லை. மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைமூடி போடுவதுஅவசியம் என்பது சட்டமாகும்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் அது கடைப்பிடிப்பதில்லை. பொலீசாரின் கடமையை ராணுவமே உத்தியோகப்பற்றற்ற விதத்தில் மேற்கொண்டு போக்கு வரத்து விதிகளை மீறிய சிறிய குற்றங்களுக்கும் தண்டனை வழங்கினோம்.

1984ம் ஆண்டில் நான் எனது படைப் பிரிவினருடன் வீதித் தடையைப் போட்டுக் காத்திருந்த போது இரு இளைஞர்கள் தலைமூடி இல்லாமல் வந்தார்கள்.

உடனடியாக வாகனத்திலிருந்து இறங்குமாறு பணித்து சட்டத்தை மதிக்காமல் மீறும் நோக்குடனா அவ்வாறு செய்தீர்கள்? எனக் கேட்டு அடியும் போட்டு அனுப்பினேன்.

அதில் ஒருவர் தனது வலி நிறைந்த நாடியைக் கையால் பிடித்தபடி ‘நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல’எனக் கூறியபோது அவ் வார்த்தை என்னை நிலை குலையச் செய்தது.

அந் நிகழ்வு 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் எனது நினைவலைகளில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் பின்னர் அப்பாவிகளுக்கு எதிராக நான் ஒரு போதும் கை ஓங்கியதில்லை.

அத்துடன் எனது கட்டுப்பாட்டிற்குள்ளிருந்த ராணுவத்தினர் குற்றமற்ற அப்பாவி மக்களை எக் காரணம் கொண்டும் அவதூறு செய்ய நான் அனுமதித்ததில்லை.

நான் தற்போது ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த போதிலும் 2வது லெப்ரினட் பதவியில் இருந்த வேளையில் அந்த இளைஞர்களைத் தாக்கிய குற்றத்திற்காக இப்போது சந்திக்க வாய்ப்புக் கிடைத்தாலும் என்னை மன்னிக்குமாறு ஆயிரம் தடவை கோருவதற்கும் தயங்க மாட்டேன்.

சகோதரனே என்னை மன்னித்துவிடு. நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல என அவ் வேளையில் கூறியபோது அவ் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்ளவில்லையே’ என இப்போதும் கவலைப்படுகிறேன்.

இத்தகைய செயல்களால் எம்மீது பொதுமக்கள் மிகவும் வெறுப்படைந்திருந்தார்கள். இது ராணுவத்தினர் மீது மட்டுமல்ல அது சிங்களவர் மீதான வெறுப்பாகவும் மாற்றமடைந்திருந்தது. இதுவே பல இளைஞர்களை ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், பயங்கரவாதத்தில் இணையவும் தூண்டியது.

1984ம் ஆண்டளவில் இந்திய மத்திய அரசினதும், தமிழ்நாடு அரசினதும் உதவியுடன் தமிழ் நாட்டில் தமிழ் அமைப்புகளுக்கான பயிற்சிகள் முழு வேகத்தில் நடந்தேறின.

விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் பயிற்சி பெற்றன. இந்திய மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு இல்லையேல் இந்த இயக்கங்கள் இவ்வளவு பலமாக வளர்ந்திருக்க முடியாது.

1984ம் ஆகஸ்ட் 11ம் திகதி மன்னாரில் 16 பொலீசாரும், அதே ஆண்டு நவம்பர் 1ம் திகதி 9 ராணுவத்தினர் யாழ்ப்பாணத்திலும் கொலையுண்டார்கள்.

இதன் முக்கிய திருப்பமாக வட பகுதி ராணுவ அதிகாரி கேணல். ஆரியப்பெருமாவுடன் 6 ராணுவத்தினர் 1984ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி நிலக்கண்ணி வெடியில் சிக்கி இறந்த நிகழ்வு இடம்பெற்றது.

கேணல். ஆரியப்பெருமாவின் படை அணியின் பாதுகாப்புக் கமான்டராக நான் செயற்பட்டேன். அவர் மிகவும் முன் கோபமுள்ள, கடுமையான மூத்த அதிகாரியாகும்.

வட பகுதிக் கமான்டராரான அவரின் பாதுகாப்பிற்கு அதாவது அவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது நானே முழுமையான பொறுப்புகளை வகித்தேன்.

அப்போது நான் ஆரம்ப அதிகாரி என்பதால் மூத்த அதிகாரிகள் ஆலோசனைகளை அவ்வப்போது வழங்க வேண்டும். மூத்த அதிகாரிகள் ராணுவ நடமாட்ட விபரங்கள் மற்றும் தேவையான விபரங்களை விளக்குவார்கள்.

ஆனால் கமான்டர் ஆரியப்பெருமாவிற்கு சில வேண்டாத பழக்கங்கள் உண்டு. அதாவது தான் விரும்பும் இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சாரதியிடம் முன்னேற்பாடு இல்லாத பாதைகள் வழியாக வாகனத்தைத் திருப்பிச் செல்வது போன்றனவாகும்.

இதில் மிகவும் ஆபத்தானது எதுவெனில் திடீரென வாகனத்திலிருந்து இறங்கி பாதுகாப்பற்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுகளை வாங்குவது போன்றனவாகும்.

அவருக்கு ஏதாவது நடந்தால் அது என் தலையில் வரும் என நான் எப்போதும் அச்சமடைந்திருந்தேன். இவரது மரணச் செய்தி அறிந்ததும், அவர் தனது பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தியிருந்தால் இவ்வளவு விரைவாக மரணம் சம்பவித்திருக்காது என எண்ணினேன். இவரே தமிழ்ப் பயங்கரவாதத்திற்கு இரையாகிய முதலாவது மூத்த அதிகாரியாகும்.

வெலி ஓயாவை அண்டியுள்ள டொலர், கென்ற் பண்ணைகள் எல்லைக் கிராமங்களை அண்டியனவாகவும், வறுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள குடும்பங்கள் அங்கு குடியேறியிருந்தன.

1984ம் ஆண்டு நவம்பர் 29 ம் திகதி அங்கிருந்த அப்பாவிக் கிராமத்தவர்களான 62 பேர் வயது, பால் என்ற பேதமில்லாது கொடுமையான விதத்தில் கொல்லப்பட்டார்கள்.

இதில் தாயிடம் பால் குடித்துக்கொண்டிருந்த பாலகர், தாய், போன்றவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். இக் கொலைகாரர்கள் ஒருநாள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என எண்ணினேன்.

அருகிலிருந்த கென்ற் பண்ணையில் வாழ்ந்த பல பெண், ஆண், சிறுவர்கள் அச் சம்பவத்தைத் தொடர்ந்து படு கொலை செய்யப்பட்டார்கள்.

இதன் காரணமாக எல்லைப் புற கிராம மக்கள் அந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்தார்கள். இதுவே புலிகளின் இலக்காகவும் இருந்தது. அதனை அவர்கள் முழுமையாகச் சாதித்தார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாண எல்லைகளில் சிங்களக் கிராமங்களை அரசு உருவாக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் இப் படுகொலைகள் மூலமாக அத் திட்டங்களை விடுதலைப்புலிகள் முறியடித்தார்கள்.

அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மாகாவலி துரித அபிவிருத்தித் திட்டத்தில் நிறைவேற்றியிருந்தனர்.

உள்நாட்டில் பாதுகாப்புக் குழுக்களை (Home Guards) உருவாக்கி அவை ராணுவத்துடன் இணைந்து செயற்படும் வகையில் அரச சம்பளங்களை வழங்கி அவர்களது பொருளாதார நலன்களுக்கும் உதவினார்கள்.

இவை ராணுவ அலுவல்களைப் பலப்படுத்துவதாக அமைந்திருந்தன. அரசின் இந்த ஏற்பாடுகளை முறியடிப்பதே புலிகளின் நோக்கமாக இருந்தது.

இதனால் இவ் எல்லைக் கிராம மக்கள் பகல் வேளைகளில் ராணுவ பாதுகாப்புடன் வயல்களில் பணி புரிவதும், இரவு வேளைகளில் ராணுவ பாதுகாப்புடன் தூக்கத்திற்குச் செல்வதும் நாளாந்த நிகழ்வுகளாகின.

இதனால் பெரும் தொகையான ராணுவம் வயல்வெளிகளிலும், குடி மனைகளிலும் பாதுகாப்பை குறைந்த தொகையான ராணுவத்தினர் இப் பணிகளைப் புரிந்தது மேலும் சிக்கலாக அமைந்தது.

விவசாயிகள் எந் நேரமும் தாக்கப்படலாம் என்ற யதார்த்தத்தினை ராணுவ உயர் மட்டத்தினர் கவனத்தில் கொள்ளவில்லை. விவசாயிகள் எவரும் கொல்லப்படாமல் அல்லது கடத்தப்படாமல் இருப்பதை குறைந்த தொகையான ராணுவத்தினரிடம் எதிர் பார்த்தனர்.

சில சமயங்களில் 6 அல்லது 8 ராணுவத்தினர் முழுக் கிராமத்தையும் பாதுகாக்கும் நிலை எனக்கு ஏற்பட்டிருந்தது.

புலிகளால் ஏற்படவுள்ள ஆபத்தை இத்தகைய ஏற்பாடுகளால் நிறுத்த முடியுமென எதிர்பார்ப்பது போலித்தனமானது. அப்பாவிக் கிராமத்தவர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி அளிப்பது என்பது அம் மக்களிடம் அளவிற்கு அதிகமாக எதிர்பார்ப்பது போல் இருந்தது.

இவ்வாறு எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை. மாலைப் பொழுது வந்ததும் தமது குடும்பத்தினரை அருகிலுள்ள காடுகளுக்கு அழைத்துச் செல்வர். பெண்களும், சிறுவர்களும் தூங்கும் வரை ஆண்கள் விழித்திருப்பர்.

பயங்கரவாதத்திலிருந்து தப்பித்துக் கொள்ள காடுகளுக்குச் சென்றவர்கள் நுளம்புக் கடி, பாம்புக் கடி, மலேரியா என பல துன்பங்களைச் சுமந்தனர்.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் இவ்வாறான துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு அதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரச அதிகாரிகள் வழங்கியிருக்க வேண்டும். அதனால் அவர்களது அவலங்கள் என்னை மிகவும் பாதித்திருந்தன.

சில சமயங்களில் நாம் எமது பாவனைக்கென இருந்த மருந்துகள், உணவுப் பொருட்களை அக் கிராமத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது.

இவ்வாறான குடியேற்றங்கள் சிலவற்றிற்குப் பொறுப்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இவர்கள் வேறு உலகில் வாழ்ந்தார்கள். இவர்களுக்குத் தங்களின் பணி என்ன? என்பதைப் புரியாத நிலையில் இருந்தார்கள்.   அந்த மக்கள் எதிர் நோக்கும் இக்கட்டான சூழலைப் புரியாதிருந்தனர்.

தொடரும்

தொகுப்பு : வி. சிவலிங்கம்

தொடரும்…
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….
Comments (0)
Add Comment