கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை..!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிமருதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 22). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் விஜயலெட்சுமி(19) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் விக்னேஷ் தனது மனைவி விஜயலெட்சுமியை தனது பெற்றோர் வீட்டில் தங்கவைத்து விட்டு பெங்களூருக்கு சென்று விட்டார்.

விக்னேசின் தந்தை ஆதிமூலம், தாய் மாரியம்மாள் ஆகிய 2 பேரும் சேர்ந்து மருமகள் விஜயலெட்சுமியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்தனர்.

இதனால் கடந்த சில நாட்களாகவே விஜயலெட்சுமி மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று இரவும் அவர்கள் விஜயலெட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஜயலெட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பரவி எரியத்தொடங்கியது. இதில் விஜயலெட்சுமி வலி தாங்கமுடியாமல் அலறித்துடித்தார்.

அவரது அலறல் சத்தம்கேட்டு வீட்டில் இருந்த மாமனார், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் விஜயலெட்சுமி மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டனர்.

இதில் விஜயலெட்சுமி உடல் முழுவதும் கருகி பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் விஜயலெட்சுமி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து விஜயலெட்சுமியின் தந்தை வெங்கடேசன் வரஞ்சரம் போலீசில் புகார் செய்தார். புகாரில் என் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி அவரது சாவிற்கு காரணமான ஆதிமூலம், மாரியம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றார்.

திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.மல்லிகாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Comments (0)
Add Comment