ரபேல் விமான ஒப்பந்தத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை – பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு..!!

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி 4 நாள் யாத்திரையை தொடங்கினார். அவர், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்கவில்லை என சாடினார்.

முதல்-மந்திரி சித்த ராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு உள்ள கொசப்பேட்டில் 4 நாள் ‘ஜனாசீர்வாத் யாத்திரை’யை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கிப் பேசினார். அவர் மீண்டும் ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தை எழுப்பி, மத்திய அரசை ஆவேசமாக தாக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு ரபேல் போர் விமான பிரச்சினை நாட்டின் மிகப்பெரிய ஊழல் பிரச்சினையாக உள்ளது.

பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகருக்கு சென்றார். அங்கு அவர் தனிப்பட்ட முறையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றினார்.

முதலில் ரபேல் போர் விமான ஒப்பந்தம், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் என்ற ராணுவ பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதுதான் இந்திய விமானப்படைக்கு கடந்த 70 ஆண்டுகளாக விமானங்களை கட்டமைத்து வழங்கியது.

பெங்களூரு இன்றைக்கு இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறது என்று சொன்னால், அதற்கு இந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ஒரு காரணம். ஆனால் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெங்களூருவில் இருந்தும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் பறித்து, தன் நண்பருக்கு கொடுத்து விட்டார்.

பிரதமர் மோடியிடம் நாங்கள் 3 கேள்விகளை எழுப்பி உள்ளோம். இன்னும் பதில் இல்லை மோடி அவர்களே, நீங்கள் என்ன அடிப்படையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து பறித்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை உங்கள் நண்பருக்கு அளித்தீர்கள்? பெங்களூரு இளைஞர்களின் எதிர்காலத்தை ஏன் பறித்தீர்கள்? இதை ஏன் உங்கள் நண்பரின் நலனுக்காக செய்தீர்கள்?

இரண்டாவது கேள்வி, உங்கள் புதிய ஒப்பந்தத்தில் ரபேல் போர் விமானத்தின் விலை அதிகமா அல்லது குறைவா?

மூன்றாவது கேள்வி, இந்தியாவின் ராணுவ மந்திரி கோவாவில் மீன் வாங்கிக்கொண்டிருந்தபோது, பாரீசில் எப்போது இதற்கான முடிவு எடுத்தீர்கள்? ராணுவத்துறைக்கான மத்திய மந்திரிகள் குழுவிடம் அனுமதி பெற்றீர்களா, இல்லையா?

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மோடி ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அவர் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

தேர்தலின்போது மக்களுக்கு வாக்களித்தபடி, பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய கூட்டணி அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர தவறி விட்டது.

மோடி ஊழல் பற்றி பேசுகிறார். ஆனால் இந்த மாநிலத்தில், ஊழலில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு சாதனை படைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments (0)
Add Comment