நீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை..!!

ரெயில்வேயில் நீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன், சிறந்த பணியாளர்களை ஊக்கப்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

ரெயில்வேயில் 13 லட்சம் பேர் ஊழியர்களாக உள்ளனர். ஆனால் அதற்கு ஏற்ற விதத்தில் சேவைகள் இல்லை என்ற புகார் பரவலாக உள்ளது. இதனால் ரெயில்வேயின் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கையில் அந்தத் துறை இறங்கி உள்ளது.

முதலில் முறையான அனுமதியின்றி நீண்டகாலமாக பணிக்கு வராமல் உள்ளவர்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 13 ஆயிரம் பேர் உரிய அனுமதியின்றி நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.

இதேபோன்று நன்றாக வேலை பார்த்து, திறமையாக விளங்குகிற ஊழியர்களை ஊக்கப்படுத்தவும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. இதற்காக ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது பரிந்துரைகளை வழங்கி உள்ளது. இதன்படி புதிய பணி மதிப்பீட்டு முறைகளை பின்பற்றி போனஸ், ஊக்கத்தொகை, கவுரவ பேட்ஜ் ,அளிக்கவும் வழி பிறக்க உள்ளது.

பதவி உயர்வுக்கான அடிப்படையில் மாற்றம் செய்யவும் ரெயில்வே உத்தேசிக்கப்படுகிறது. நல்ல செயல்திறனுக்காக அவர்களுக்கு மேலும் பரிசு அளிக்க முடியுமா என்பதுவும் பரிசீலிக்கப்படும்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியர்களின் பணியை மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக, கடந்த 7 ஆண்டு பணிக்காலத்தில் சிறப்பான 5 ஆண்டுகளை ஊக்கத்தொகை அளிப்பதில் கணக்கில் கொள்ள வேண்டும் என ரெயில்வே குழு சிபாரிசு செய்து உள்ளது.

ஊழியர்களுக்கு சிறந்த வீட்டு வசதி அளிக்கவும் இந்தக் குழு பரிந்துரை செய்து இருக்கிறது. மேலும் ஊழியர்களின் பெற்றோர்களுக்கும் மருத்துவ வசதி, விடுமுறை கால பயணச்சலுகை வசதிகளை அளிக்கவும் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

மேற்படிப்பு படிக்க விரும்புகிற ஊழியர்களுக்கு அதற்கான நிதி உதவியையும் ரெயில்வே அளிக்க வேண்டும் என்று குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கீழ் நிலை ஊழியர்களுக்கு மட்டுமே போனஸ் தரப்படுகிறது. இனி குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

கேங்மேன், டிராக்மேன் பணியில் உள்ளவர்கள் விபத்தின்றி 10 ஆண்டுகள் வேலை பார்த்தால், அதை கவுரவித்து ரொக்கப்பரிசு தரவும், பேட்ஜ் வழங்கவும் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பரிந்துரைகளை தற்போது ரெயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது.

Comments (0)
Add Comment