அரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு..!!

அரியானா மாநிலம் கூர்கானை சேர்ந்தவர் அருண்கேவாட். இவருடைய மனைவி முன்னிகேவாட்(வயது 25). கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக கணவரும், ராம்சிங் என்ற உறவினரும் அங்கு உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பிரசவ வார்டுக்கு சென்றபோது அங்கு இருந்த பெண் டாக்டர் மற்றும் நர்சு அருண்கேவாட்டிடம் ஆதார் அட்டையை கொடுக்கும்படி தெரிவித்தனர்.

தன்னிடம் ஆதார் அட்டை இல்லை என்று கூறிய அருண்கேவாட் ஆதார் எண்ணை அவர்களிடம் தெரிவித்தார். ஆதார் அட்டையை பிறகு கொண்டு வருவதாகவும் கூறினார்.

ஆனால் அந்த பெண் டாக்டரும், நர்சும் “ஆதார் அட்டை கொண்டு வந்தால்தான் சிகிச்சைக்கு உள்ளே அனுமதிக்க முடியும்” எனக்கூறி முன்னிகேவாட்டை பிரசவ வார்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்கேவாட், உறவினரிடம் மனைவியை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு ஆதார் அட்டையை எடுப்பதற்காக வீட்டுக்கு சென்றார்.

பின்பு சிறிது நேரத்திலேயே முன்னிகேவாட்டுக்கு வலி ஏற்பட்டதால் அவருக்கு பிரசவ வார்டு வளாகத்திலேயே அழகான குழந்தை பிறந்தது.

டாக்டர் மற்றும் நர்சின் இந்த மனிதாபிமானமற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவர் சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் மற்றும் நர்சை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment