‘விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

கர்நாடகத்தில் 2-வது நாள் பிரசார பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, “விவசாயிகள் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை” என குற்றம் சாட்டினார்.

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு 4 நாட்கள் பிரசார பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். பல்லாரி மாவட்டத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

2-வது நாளான நேற்று அவர் கொப்பல் மாவட்டம் குஸ்டகியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடைபெற்ற பா.ஜனதா அரசு, இங்கு ஊழலில் உலக சாதனை படைத்தது. அப்போது எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய மூன்று முதல்-மந்திரிகளை இந்த மாநிலம் கண்டது. ஊழல் புகாரில் 4 மந்திரிகள் பதவியை இழந்து சிறைக்கு சென்றனர்.

ஆனால் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்து ஊழல் ஒழிப்பு பற்றியும், பா.ஜனதாவை ஆதரிக்குமாறும் பேசுகிறார். மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை எங்கள் கட்சி நடத்தி இருக்கிறது. மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் எங்கள் கட்சியின் ஆட்சி நிறைவேற்றி உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். சொன்னபடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால் நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் இளைஞர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி கூறினார். இதுவரை ஒரு பைசா கூட டெபாசிட் செய்யவில்லை. இப்போது கருப்பு பணத்தை பற்றி மோடி பேசுவதே இல்லை. மாறாக இதுதானே காங்கிரஸ், அதுதானே காங்கிரஸ் என்று காங்கிரஸ் கட்சி பற்றி பேசுகிறார்.

விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். அதனால் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இதை மோடி ஏற்கவில்லை. மாறாக பெரிய தொழில் நிறுவனங்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் நலனில் மோடிக்கு அக்கறையே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments (0)
Add Comment