சஞ்சுவான் முகாமில் துப்பாக்கி குண்டு காயமடைந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது..!!

ஜம்முவில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குண்டுகளால் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ராணுவ மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஜம்மு நகரின் புறநகர்ப் பகுதியான கென்னி என்ற இடத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் அதிகாலை அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ் இ மொகமது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

தீவிரவாதிகளுடனான சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே, தீவிரவாதிகள் தாக்குதலின் போது துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை ராணுவத்தினர் மீட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த பெண்மணி கூறுகையில், என்னையும், எனது குழந்தையையும் காப்பாற்றிய ராணுவ டாக்டர்களுக்கு நன்றி என்றார்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், துப்பாக்கி குண்டுகள் பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற கடுமையாக போராடினோம். அவருக்கு பிறந்த பெண் குழந்தை எங்களது குழுவினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment