கம்பாலா பந்தயத்துக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக‌ கம்பாலா விளையாட்டு (எருமை பந்தயம்)
போட்டியை நடத்தி வந்தனர். குறிப்பாக, மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் வடக்கு கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தக்‌ஷின கன்னடா போன்ற கடலோர மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளில் இந்த பந்தயம் பரவலாக நடத்தப்பட்டு வந்தது.

இரு எருதுகளின் உடல்களை ஒரு ஏர் கலப்பையால் ஒன்றாக இணைத்து சகதி நிறைந்த குறுகிய மண்பாதையில் ஜோடி, ஜோடியாக சிலர் விரட்டிச் செல்வார்கள். எந்த எருது ஜோடி முன்னால் ஓடிவந்து, குறிப்பிட்ட இடத்திற்கு முதலில் வந்து சேர்கிறதோ? அதற்கு பரிசு அளிப்பது இந்த பந்தயத்தின் நிபந்தனையாகும்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டைப் போல‌ கம்பாலா விளையாட்டு போட்டிகளுக்கும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று ஓய்ந்தன.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழர்கள் ஒன்று கூடி அறவழியில் போராடி பாரம்பரிய உரிமையை மீட்டதுபோல், கம்பாலா விளையாட்டு போட்டிகளையும் நடத்த கர்நாடக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கடந்த ஆண்டில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

கம்பாலா போட்டி ஏற்பாட்டாளர்கள், விவசாய அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மங்களூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கடந்த 1960-ம் ஆண்டில் மத்திய அரசால் இயற்றப்பட்ட பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் கம்பாலா பந்தயத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில் திருத்தம் செய்ய கர்நாடக மந்திரிசபை தீர்மானித்தது.

கர்நாடக அரசின் சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து இந்திய பிராணிகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ‘பீட்டா’ ஆகிய தொண்டு நிறுவனங்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான தடையை மக்கள் உடைத்ததுபோல் தங்கள் பெயரும் பிரபலமாக வேண்டும் என சிலர் மீண்டும் கம்பாலா பந்தயத்தை நடத்த முயற்சிக்கின்றனர் என மனுதாரர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பீட்டா’ அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, கர்நாடக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம் காலாவதியாகி விட்டதால் வரும் மார்ச் மாதத்தில் கர்நாடக மாநிலத்தின் எந்த பகுதியிலும் கம்பாலா பந்தயங்களை நடத்த கூடாது என்று இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் கம்பாலா பந்தயத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன், இந்த வழக்கின் மறுவிசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments (0)
Add Comment