இந்திய அணித் தலைவரின் வரலாற்றுச் சாதனை…!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட 6 ஒருநாள் தொடரில் விளையாடியது. போட்டிகள் முடிவில் இந்திய அணி 5-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கப்டன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 129 ரன்கள் எடுத்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது 35-வது சதமாகும். மேலும் இந்த தொடரில் அவரது மூன்றாவது சதமாகும்.

நேற்றைய போட்டியில் அவர் 62 ரன்களை கடந்த பொழுது இருநாடுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

முன்னதாக கடந்த 2013-14ல் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா 491 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த சாதனையை கோலி தற்போது முறியடித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் அடித்த 129 ரன்களின் மூலம் இந்த தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடிய அவர் 558 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்த போது கோலி இரண்டு கட்ச்கள் பிடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பிடிக்கும் 100வது கட்ச் ஆகும்.

ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 30வது வீரர் கோலி ஆவார்.

இதன்மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ், சவுரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.

இந்த பட்டியலில் இலங்கை அணியின் மஹேல ஜெயவர்தன 218 கட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

அஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (160 கட்ச்கள்) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மொகமது அசாருதீன் (156 கட்ச்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கள் 140 கட்ச்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

Comments (0)
Add Comment